பிரதான பக்கம் arrow கட்டுரைகள் arrow திலீபன் ஆக்கிரமிப்புக்கு எதிரான குறியீடு - சிறப்புக் கட்டுரை
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English

திலீபன் ஆக்கிரமிப்புக்கு எதிரான குறியீடு - சிறப்புக் கட்டுரை அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Monday, 26 September 2005

இன்றைய உலகின் இயங்கு திசையுடன் இணைந்து தமிழ்த் தேசிய இனமானது தனது இலட்சிய இலக்கினை நோக்கி மிக வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது.

இந்தப் போராட்ட நகர்வில் அசையும் அசையாச் சொத்துக்களின் இழப்புக்களும் பெறுமதிமிக்க மனித இழப்புக்களும் ஏற்பட்டாலும் இந்த இழப்புக்கள் யாவற்றையும் இது அசாத்திய மன உறுதியுடன் தாங்கிக் கொண்டு அழுகைக்கும் விம்மல்களுக்குமிடையே அடுத்த சந்ததியின் எதிர்கால நலன்களை மனந்திருத்தி மென்மேலும் உறுதிபெற்று முன்னோக்கிச் சென்று கொண்டிருக்கின்ற தமிழீழத் தேசிய விடுதலைப் போராட்டம் அவ்வப்போது ஏற்படுகின்ற திருப்புமுனைகளுடாக முன்னிலும் வேகமாக ஒரு பாய்ச்சலில் தடைகளைக் கடந்து முன்நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.

தமிழீழப் போராட்ட வரலாற்றில் பல திருப்புமுனைகள் இருந்தாலும் 1987ம் ஆண்டு இந்திய அமைதிப் படையின் வருகையினூடாக ஏற்பட்ட திருப்புமுனையானது தமிழீழ மக்களின் விடுதலைப்பற்றை மேலும் உறுதி கொள்ள வைத்ததுடன் போராட்டத்தைப் பலப்படுத்தி நகர்வுகளை முன்னெடுக்கும் உந்து சக்தியையும் ஏற்படுத்தியது.

உலகுக்குக் காந்தியம் போதித்துக் கொண்டு அதே வேளையில் தனது வல்லரசுப் பசிக்கு தீனி போட முயல்கின்ற இந்தியா இந்தியாவின் வரையறுக்கப்பட்ட எல்லைக் கோட்டுக்குள் வாழ்கின்ற தேசிய இனங்களின் எழுச்சிகளை மழுங்கடிக்கச் செய்து அல்லது கொன்றொழித்து வருகின்ற அதேவேளை ஈழத்தமிழர்களின் உரிமைகளுக்கு குரல் கொடுப்பதாக அல்லது விடுதலைப் போராட்டத்திற்கு ஒத்துழைப்புக் கொடுப்பதாக ஒரு பொய்த் தோற்றத்தை ஏற்படுத்திக் கொண்டு தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தை வேரோடு பிடுங்கியெறிவதற்காக அமைதிப்படை என்ற போர்வையில் தனது இராணுவத்தை நேரடியாக தமிழீழப் பிரதேசங்களில் கொண்டு வந்து இறக்கியது.

 
இந்த அமைதிப்படை வெறும் மாயமான் என்று அறியாத தமிழீPழ மக்கள் இவர்களை மாவிலைத் தோரணங்கட்டி மகரகும்பங்களுடன் வரவேற்றது உண்மைதான். நாட்கள் சென்றன. சிறீலங்கா இராணுவ அடாவடித்தனங்களும் சிங்களக் குடியேற்றங்களும் முன்னிலும் பல மடங்கு வீரியம் பெற்றன. அமைதிப்படை அமைதியாக இருந்தது. தமிழீழ மக்கள் யாருடனும் கலந்து கொள்ளாமல் தமிழீழ மக்கள் சார்பில் இந்தியாவும் சிறீலங்காவும் செய்த ஒப்பந்தம் அப்படியே இருந்தது. அற்ப சொற்ப சலுகைகளைக் கொண்டு ஒப்பந்தச் சரத்துக்களைக் கூட ஸ்ரீலங்கா அரசு அப்பட்டமாக மீறிய போதும் அமைதிப்படை அமைதியாக இருந்தது. ஆயுத ஒப்படைப்பு நடைபெற்ற பின்பு தமிழீழ மக்களின் பாதுகாப்புக்கு இந்திய உத்தரவாதம் அளித்த பின்பும் கைதுகள் நடைபெற்றன.

அகிம்சைப் போர்வைக்குள் பதுங்கிக் கொண்ட இந்தியாவை சர்வதேசத்தின் முன் தோலுரித்துக் காட்ட வேண்டிய காலம் வந்த போது இதுவரை காலமும் சிறிலங்கா ஆயுதப் போராட்டக் களத்தில் முன்னின்ற திலீபன் அகிம்சைப் போரில் குதித்தான்.

சிங்களக் குடியேற்றங்களை நிறுத்துதல், தமிழ்க் கிராமங்கள் பள்ளிக் கூடங்களில் நிறுவப்பட்டிருந்த இராணுவ முகாம்களை அகற்றுதல், சிறீலங்கா காவல்துறை நிலையங்களை நிறுவுதலை நிறுத்துதல், போன்ற கோரிக்கைகளை முன்வைத்து சாகும்வரை உண்ணா நோன்பை திலீபன் ஆரம்பித்தான். தார்மீகமே உலகை உய்விக்கும் வேதமென்று உருப்போட்டுக் கொண்டிருந்த இந்தியாவுக்கு எகதிராக திலீபன் சாகும்வரை சாத்வீகப் போர் புரிந்தான்.

நல்லை மணல் வீதியில் குவிகின்ற மக்கள் வெள்ளத்தின் நடுவே பன்னிரு நாட்களாக ஒரு துளி நீரும் அருந்தாது சிறுகச் சிறுகச் சாவைத் தழுவிக் கொள்கின்ற போதும் அமைதிப்படை அமைதியாக இருந்தது. இந்தியாவின் சாத்வீக முகம் கிழிந்தது. அதன் உண்மையான விகார முகம் தெரியத் தொடங்கிய போது மக்கள் கொதித்தெழுந்தனர். தங்கள் பொய்முகம்  தெரியத்தொடங்க இந்திய அமைதிப்படையும் உள்ளுக்குள் கொதிக்கத் தொடங்கியது.

சர்வதேசங்களில் எல்லாம் இந்தியா பற்றிய போலி முகத்திரை கிழிந்து தொங்கியது. ஆத்திரமுற்ற இந்தியா தான் வந்த உண்மையான நோக்கத்தை நிறைவேற்றத் தொடங்கியது. முன்னரை விட மக்கள் கோரமாகத் தாக்கப்பட்டனர். அவலங்கள் அலைச்சல்கள் ஒவ்வொரு வீட்டு முற்றத்திலும் ஒவ்வொரு இராணுவ முகாம். ஒரே நேரத்தில் உலகின் 4வது மிகப்பெரிய இராணுவத்துடனும் சிறீலங்கா இராணுவத்துடனும் போர்.

ஆனாலும் இரண்டு வருட கால இடைவெளிக்குள் இந்தியப்படைகள் வந்த பாதைகளால் திரும்பி ஓடத் தொடங்கினர். இது தமிழீழ மக்களின் உறுதிக்கும் விடுதலை நேசிப்புக்குமான எடுத்துக் காட்டு இந்தியாவையே நம்பியிருந்த மக்களுக்கு இந்தியாவின் உண்மை நோக்கை அம்பலப்படுத்தி இந்தியாவை வெற்றி கொள்ள வைத்தது திலீபன் என்னும் மகத்தான போராளியின் அந்த அகிம்சை யாகம்தான்.

இன்றைக்கு தமிழீழத்தில் 'திலீபன்" என்னும் சொல் ஒரு விடுதலைப் போராளியின் பெயராக மட்டும் இல்லாமல் ஆக்கிரமிப்புக் கெதிராக போர்க்குணாம்சத்தின் குறியீடாக நிற்கிறது.

 - கஜன் -

ஊரெழுவில் ப+த்தகொடி

 

யாழ். மாவட்டத்திலுள்ள ஊரெழு என்னும் அழகிய பனை மரங்கள் கொஞ்சி விளையாடும் கிராமத்தில் ஆசிரியர் திரு. இராசையா தம்பதிகளின் கடைசி மகனாகப் பிறந்த பார்த்தீபன் வாழ்வின் ஆரம்பத்திலேயே மிகவும் துர்ப்பாக்கியசாலியாக இருந்துவிட்டார். பத்து மாதம்வரை அன்புப்பால் ஊட்டி சீராட்டி பாராட்டி வளர்த்த அன்னையின் அரவணைப்பை பத்தாவது மாதம் முடிவில் பறிகொடுத்து விட்டார் திலீபன். பிஞ்சுக் கால்களை ஊன்றி அந்தக் குழந்தை தத்தித்தத்தி நடக்க வேண்டிய பருவத்தை கொஞ்சி மகிழ்;ந்த அன்னை நெஞ்சில் மகிழ்வோடு பார்க்க முடியாமல் சாவினுள் வீழ்ந்து விட்டார்.

தாய் இறந்தபோது அக்குடும்பத்தின் மூத்த மகனான இளங்கோவிற்கு வயது ஒன்பது மட்டுமே. பெண் குழந்தைகள் இல்லாத காரணத்தாலும் இளங்கோ சிறுவயதுப் பையன் என்பதாலும் பார்த்தீபனின் தந்தை இராசையா ஒரு பள்ளி ஆசிரியர் என்பதாலும் குழந்தை பார்த்தீபனைக் கவனிக்க வீட்டில் யாரும் இல்லை.

ஊரெழுவில் இருந்து ஒரு மைல் தொலைவில் உள்ள கரந்தன் என்ற சிற்றூரில் பார்த்திபனின் அம்மாவின் தாயும் சிறியதாயான இராசலட்சுமியும் வசித்துவந்தனர். பார்த்திபனின் பாட்டி வயதானவர் என்பதால் அவரின் சிறிய தாயாரான இராசலெட்சுமியிடம் பார்த்திபனைக் கொண்டு சென்று விட்டுவிட்டு வந்தார் இராசையா அவர்கள்.

பிஞ்சுப் பருவத்தில் அன்னையை இழந்த பார்த்தீபன் சிற்றன்னையின் அணைப்பில் வளரத் தொடங்கினார். இராசையா ஆசிரியரும் பார்த்திபனின் சகோதரர்களும் ஒவ்வொரு விடுமுறை நாட்களிலும் பார்த்திபனைப் பார்த்துவிட்டு வருவார்கள். அவருக்கு ஒன்றரை வயதான போது சகோதரர்கள் அல்லது தந்தை அவரைப் பார்க்கவரும் போது தானும் அவர்களுடன் வரப்போவதாகக் காலைக் கட்டிக்கொண்டு அழுவார். அடம்பிடிப்பார். ஆனால் அவருக்கு இரண்டு வயதான போது அவரை ஒரேயடியாக வீட்டுக்கு அழைத்துவந்துவிட்டார் தந்தை.

உரும்பிராய் சைவத்தமிழ் வித்தியாலயத்தில் தான் படிப்பித்துக் கொண்டிருக்கும் போது கைக்குழந்தையையும் கூடவே அழைத்துச் செல்வார் தந்தை.

மூன்று வயதில் அவனை உரும்பிராயில் இருந்த பாலர் பாடசாலை ஒன்றில் தந்தையார் சேர்த்து விட்டார். உரும்பிராய் சைவத்தமிழ் வித்தியாலயத்திற்கு மிக அண்மையிலேயே இப்பள்ளி இருந்தது. பாலர் பாடசாலை முடிந்ததும் அப்பாடசாலைக்கு முன்பாக உள்ள பலசரக்குக் கடையில் தகப்பனுக்காகக் காத்துக்கொண்டிருப்பார் பார்த்திபன். உரும்பிராய் விநாயகர் ஆலயத்துக்கு முன்பாக உள்ள அந்தப் பலசரக்குக் கடையின் உரிமையாளர் பார்த்தீபனுக்காக நாளும் இனிப்பு வழங்குவார்.

அவர் வளர வளர அவரால் தந்தைக்கும் சகோதரர்களுக்கும் பிரச்சனைகள் குறைய ஆரம்பித்தன. தன்வேலைகள் தானே கவனிக்கும் பக்குவத்தை அவர் மிகச் சிறுவயதிலேயே பெற்றுவிட்டார்.

பாலர் கல்வியை முடித்துக் கொண்ட பார்த்தீபனை தான் கல்வி கற்பித்துக் கொண்டிருந்த உரும்பிராய் சைவத்தமிழ் வித்தியாலயத்திலேயே ஆரம்பக் கல்வி கற்பிப்பதற்காக சேர்த்துவிட்டார்.

சில வருடங்களின் பின் தந்தை இராசையாவிற்கு இடம்மாற்றம் வந்தது. அவர் உரும்பிராய் சந்திரோதய வித்தியாலயத்திற்கு மாற்றப்பட்டார். தனித்து நின்ற பார்த்திபனையும் அங்கேயே கொண்டுபோய்ச் சேர்த்துவிட்டார். சிறுவயதிலேயே அவர் படிப்பில் புலியாக விளங்கினார். ஐந்தாம் வரை தனது வகுப்புக்களில் முதலாவதாகவே வந்தார். ஒரு வருடத்தில் படித்து முடிக்க வேண்டிய பாடங்களை எல்லாம் இரண்டு மூன்று நாட்களில் இரவு பகலாக இருந்து வாசித்து முடித்துவிடுவார். சின்னவயதில் இருந்தே அறிஞர்களின் நூல்களை விரும்பி வாசிக்கத் தொடங்கினார். சிறுவயதிலேயே அவருக்கு ஆஸ்த்துமா நோய் இருந்தது. குளிரில் மூச்சு விட முடியாமல் திணறுவார். அடிக்கடி அவரை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்வார் தந்தை.

சிறுவயதில் இருந்தே வானொலிப் பெட்டியைப் பக்கத்தில் வைத்துக் கொண்டு துடுப்பாட்ட வர்ணனை கேட்பதில் பார்த்தீபனுக்கு அதிக விருப்பம் இருந்தது. சில சமயம் சாப்பாட்டில் கூட அக்கறையின்றி அதைக் கேட்டுக் கொண்டு இருப்பார். ஐந்தாம் வகுப்புப் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த அவர் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் சேர்ந்து படிக்க ஆரம்பித்தார். ஒரே தடவையில் க.பொ.த பரீட்சையில் சித்தியடைந்தார். அப்போது இரவு பகலாக ஓய்வு உறக்கம் இன்றி படித்ததன் காரணமாக அவரது கண்கள் பாதிக்கப்பட்டன.

அப்போது யாழ் ஆஸ்பத்திரியில் கண்வைத்திய நிபுணரான டாக்டர். திருமதி கண்ணுத்துரையிடம் அவர் சிகிச்சை பெற்றார். அவர் ஒவ்வொரு நாளும் நீண்ட நேரம் படிக்கக் கூடாது என்று அறிவுறுத்தியது மட்டுமன்றி கண்களுக்கு கண்ணாடியையும் சிபாரிசு செய்தார். அதிலிருந்துதான் அவர் கண்ணாடி அணியத் தொடங்கினார். இதன் காரணமாக முதலாம் தடவையில் அவரால் க.பொ.த உயர்தரவகுப்பில் சித்தியடைய முடியாமல் போய்விட்டது. இரண்டாம் தடவை திறமையாகச் சித்தியடைந்த அவருக்கு யாழ். பல்கலைக் கழக வைத்திய பீட மாணவனாகப் படிப்பதற்கு அழைப்பு வந்தது. அதை ஏற்க மறுத்து விடுதலைப் போராட்டத்தில் குதிக்க அவர் முடிவு செய்தார்.

1974ம் ஆண்டு தை மாதம் யாழ். நகரில் நடைபெற்ற நாலாம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் மிகவும் ஆர்வத்துடன் கலந்துகொண்டார். ஆனால் தமிழ் இனத்தின் துரோகி ஒருவரின் கட்டளை மூலம் ஒன்பது அப்பாவித் தமிழர்கள் அங்கு அவர் கண் முன்னால் கொல்லப்பட்டதைக் கண்டு பார்த்தீபனின் இதயம் துடிதுடித்தது.

தமிழன் சுதந்திரமாக வாழவேண்டும் என்ற விடுதலைத் தாகம் அந்தச் சிறுவயதில் அவர் நெஞ்சில் நெருப்பாகப் பற்றத்தொடங்கியது.

யாழ். இந்துக் கல்லூரியில் பயிலும்போது படிப்பிலும் விளையாட்டிலும் மிகவும் திறமைசாலியாக விளங்கினான். விளையாட்டுத்துறையின் தலைவனாகவும், சிறந்த சதுரங்க விளையாட்டு வீரனாகவும் திகழ்ந்தார்.  1977ம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற இனக்கலவரத்தில் யாழ்ப்பாணம் நோக்கி வந்த தமிழ் அகதிகளுக்கு தன்னாhல் முடிந்த உதவிகளைச் செய்தார். அப்போது அவருக்கு வயது 13. அந்த இனக்கலவரம் திலீபனின் நெஞ்சில் சுதந்திர தாகத்தை வெகுவாகக் குழப்பத் தொடங்கியது. அந்த வயதிலேயே விடுதலைப் புலிகளின் அதிரடித் தாக்குதல்களை மானசீகமாக மகிழ்ச்சி ததும்ப வரவேற்றார் திலீபன்.


தமிழ்த் துரோகி துரையப்பா கொலை செய்யப்பட்டபோது ஆனந்தக் கூத்தாடியவன் திலீபன். தமிழ் மக்கள் கொடுமையான முறையில் கொலை செய்யப்பட்டதைக் கண்டு அவர் மனம் தவித்தது. தமிழ் மக்களைக் காப்பதற்காக தன் உயர்கல்வியை உதறித்தள்ளிய திலீபன் விடுதலை இயக்கத்தில் சேர்ந்து தமிழ் மண்ணுக்காகப் போராடத் தீர்மானித்தார். தமிழ் மக்களைக் காப்பதற்காக அல்லும் பகலும் போராடிக் கொண்டிருந்த தமிழ் இனத்தின் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களுடன் எப்போதாவது இணைய வேண்டும் என்பதே அவரின் கனவாகவும் இலட்சியமாகவும் இருந்தது.

தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களை தன் மானசீகக் குருவாக வைத்துக் கொண்ட பார்த்திபன் 1983ம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உறுப்பினராகச் சேர்ந்தான். ஆரம்பத்தில் கப்டன் பண்டிதருடன் இணைந்து பரப்புரை வேலைகளைக் கவனித்து வந்த அவர் பின் மானிப்பாய் வட்டுக்கோட்டைப் பகுதிப் பரப்புரைப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். 1983ம் ஆண்டின் கடைசிப் பகுதியில் தமிழ்ப் பகுதியில் பரப்புரை வேலைகளில் ஈடுபட்ட விடுதலைப் புலிகளுக்கு தலைக்கு மேல் ஆபத்து இருந்தது என்பது எல்லோருக்கும் தெரியும். இந்த ஆபத்து இராணுவத்திடம் இருந்து மட்டுமல்ல வேறு பல வழிகளிலும் உண்டு. இவைகளை எல்லாம் எதிர்நீச்சல் போட்டு தன் பணியில் வெற்றி கண்டவர் திலீபன்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் யாழ். பிராந்தியத் தளபதியாகக் கடமையாற்றிய கேணல் கிட்டு அண்ணா திலீபனின் செயல்திறனிலும் அயராத முயற்சியிலும் நம்பிக்கை வைத்தார். கடமை கண்ணியம் கட்டுப்பாடு உறுதி உழைப்பு எல்லாவற்றிலுமே திறமையாகத் திகழ்ந்த திலீபன் அவர்களை தமிழீழ விடுதலைப் புலிகளின் யாழ். மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளராக நியமிக்கும்படி தேசியத் தலைவர் அவர்களிடம் பரிந்துரை செய்தார் கேணல் கிட்டு. திலீபன் அந்தப் பொறுப்புக்கு நியமிக்கப்பட்டபின் தமிழீழ விடுதலைப் புலிகளின் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம் ஆரம்பமாயிற்று.

திலீபன் தமிழ் மக்களை அரசியல் மயப்படுத்துவதற்காக அல்லும் பகலும் உழைத்த அதேவேளை தளபதி கிட்டுவுடன் இணைந்து பல தாக்குதல் திட்டங்களையும் வகுத்தார். அநேகத் தாக்குதல்களில் தானே நேரடியாக ஆயுதம் ஏந்திப் போராடினார்.

பலமுறை இராணுவத்திடம் பிடிபட்டுத் தப்பினார். வல்வையில் ஏற்பட்ட விடுதலைப் புலிகள் - இராணுவ நேரடி மோதல் ஒன்றில் வயிற்றில் குண்டு பாய்ந்து சத்திரசிகிச்சைக்கு ஆளாக்கப்பட்டார்.

'களத்தில்" என்ற மாதப்பத்திரிகை நடத்தி தன் எண்ணங்களை எழுத்துருவில் வடித்தார். இயக்கக் கொள்கைகளை மிக எளிதாக மக்களுக்கு விளங்கவைத்தார். கட்டுரைகளை எழுதும் போது அது மக்களுக்குப் புரியக் கூடியதாக இருக்க வேண்டும் என்பதில் மிகக்கவனமாக இருப்பார்.

திலீபனின் முயற்சியினால் பல உப அமைப்புக்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் பண்ணையில் விளைந்து அதிக பலனைக் கொடுக்கத் தொடங்கின. அவற்றில் சில:
1. தமிழீழ விடுதலைப் புலிகளின் மாணவர் இயக்கம்
2. தமிழீழ மகளிர் அமைப்பு
3. சுதந்திரப்பறவைகள் அமைப்பு
4. தமிழீழத் தேசபக்தர் அமைப்பு
5. தமிழீழ விழிப்புக்குழுக்கள்
6. கிராமியநீதிமன்றங்கள்
7. சுதேச உற்பத்திக்குழுக்கள்
8. தமிழீழ ஒளி ஒலி சேவைக் கட்டுப்பாட்டுச் சபை
9. தமிழர் கலாச்சார அவை
மற்றும் சில தொழிற்சங்கங்களும் திலீபனால் அமைக்கப்பட்டு மிகத்திறமையாக செயற்பட்டு வந்தன.
 


karan
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2009 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..