 தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுவினருக்கும் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்குக்கும் இடையேயான சந்திப்பு எதிர்பார்க்கப்பட்டதுபோல நேற்று நடைபெறவில்லை.
பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்திக்கும் நோக்குடன் கடந்த சில தினங்களாக
புதுடில்லியில் காத்திருந்த கூட்டமைப்புக் குழுவினர் நேற்று அங்கிருந்து
சென்னை திரும்பினர்.
பொருத்தமான வேறு ஒரு வேளையில் இந்தச் சந்திப்புக்கு ஒழுங்குசெய்யப்படும்
என்று புதுடில்லியில் இந்திய அரசு அதிகாரிகள் தமிழ்க் கூட்டமைப்பு
எம்.பிக்களிடம் தெரிவித்தனர் என்று கூறப்படுகிறது.
பிரதமர் மன்மோகன் சிங்கிடம் கையளிப்பதற்காக கூட்டமைப்பு எம்.பிக்கள்
தயாராக வைத்திருந்த மகஜர் ஒன்று நேற்றுப் புதுடில்லியில் இந்திய அரச
அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டது என்றும் தெரிவிக்கப்படுகிறது.
மாவை சேனாதிராஜா கருத்து
இதேவேளை இந்தியப் பிரதமரைச் சந்திப்பதற்கான முயற்சிகள் தொடர்ந்து
முன்னெடுக்கப்படும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற
உறுப்பினர்களில் ஒருவரான மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை மன்மோகன் சிங் சந்திக்காதது இலங்கைப்
பிரச்சினையில் தலையிட இந்தியா விரும்பவில்லை என்பதன் சமிக்ஞையே என்று
ஊடகவியலாளர்கள் சிலர் கூறுவது பற்றிக் கேட்டபோது அது ஊடகவியலாளர்களின் கருத்து எங்களுடைய கருத்து அல்ல என்று தெரிவித்தார் மாவை சேனாதிராஜா.
இலங்கை இனப்பிரச்சினையில் நேரடியாக இந்தியா தலையிடும் என்று நாங்கள்
உடனடியாக எதிர்பார்க்கவில்லை.
நோர்வேயுடனான ராஜதந்திர நடவடிக்கைகளுக்கு
இந்தியா ஆதரவு தெரிவித்து இயங்கிவருவது எமக்குத் தெரியும்.
அப்படி
நேரடியாகத் தலையிடுவதானால் இப்படியான சந்தர்ப்பத்தில், அது எவ்வாறான
நடவடிக்கைளாக இருக்கவேண்டும் அல்லது அவர்களுடைய இராஜதந்திர நடவடிக்கைகள்
எவ்வாறு அமையவேண்டும் என்பது பற்றி நாங்கள் மீண்டும் பேசலாம் என்பதுதான்
எங்களுடைய கருத்தாக இருக்கிறது.
கேள்வி: பிரதமரைத் தவிர எதிர்க்கட்சித் தலைவர் அத்வானி, முன்னாள் பிரதமர்
வாஜ்பாய் போன்றவர்களைச் சந்திப்பீர்கள் என எதிர்பார்க்கப்பட்டதே...?
மாவை: எங்களுடைய நேரம், அவகாசம் போதாமலிருக்கும் காரணத்தால் அவர்களைச் சந்திக்க முடியவில்லை.
கேள்வி: பிரதமரைச் சந்திக்க முடியாத நிலையில் உங்களுடைய முயற்சி முழுவெற்றிபெறவில்லை என்று கூறமுடியுமா?
மாவை: வெற்றி பெறவில்லை என்று சொல்லமாட்டோம். அதற்கான முயற்சிகள் தொடரும்.
நாங்கள் மீண்டும் இந்தியா வந்து பலரைச் சந்திப்பதற்கு எங்களுடைய
திகதிகளைப் பொருத்தமாகப் பார்த்திருக்கிறோம்.
அதில் ஒரு தவறும் இல்லை.
அவர்களை நிச்சயமாகச் சந்திப்போம். தமிழகத்திலே பல கட்சிகளைச்
சந்தித்துள்ளோம். இன்னும் சந்திக்கவுள்ள தலைவர்கள் பலர் உள்ளனர்.
கேள்வி: இலங்கை திரும்பமுன்னர் தமிழக முதல்வரையும், எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதாவையும் சந்திக்கும் திட்டம் உள்ளதா?
மாவை: நாங்கள் அதற்கான முயற்சி எடுப்போம். ஏற்கனவே, முதலமைச்சருக்குத்
தமிழ்நாட்டிலிருந்து செய்தி அனுப்பியுள்ளோம். நாங்கள் டில்லியில் இருந்து
திரும்பியதும் அவரைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்படும் என்றுதான்
நம்புகிறோம். என்றார் மாவை சேனாதிராஜா.
நெருடல் இணையம்
|