பிரதான பக்கம் arrow கட்டுரைகள் arrow போர் தீவிரமாகப் போகும் நாளும் அதனை ஒத்திவைப்பதற்கான பிரயத்தனங்களும்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English

போர் தீவிரமாகப் போகும் நாளும் அதனை ஒத்திவைப்பதற்கான பிரயத்தனங்களும் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Saturday, 23 September 2006

sized_eelanaatham-logoவடக்கு கிழக்கு தமிழர் தாயகத்திலும் தென்னிலங்கையிலுமாக ஒட்டுமொத்தமாக இலங்கைத்தீவு முழுவதும் நாளாந்தம் படுகொலைகளும் ஆட்கடத்தல்களும் இடையறாது நடந்து வருகின்றன.

கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக தொடரும் இந்த பயங்கரவாதத்தில் பலியாகிக் கொண்டிருப்பவர்கள் அனைவரும் தமிழ் பேசும் மக்களேயாவர்.

இதில் இருந்து இதற்கான சூத்திரதாரிகள் யார் என்பதை தெளிவாக அடையாளம் கண்டுவிட இயலும். இதனைத் தமிழ் மக்கள் புரிந்துகொள்வதற்கு எந்த விசாரணைக்குழுக்களும் தேவையில்லை.

நாளாந்தம் ஐந்து அல்லது ஆறு பேர் என்ற கணக்கில் தமிழினக் குறைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இது கடந்த திங்களன்று அம்பாறையில் பத்து முஸ்லீம் இளைஞர்கள் வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவத்துடன் ஒரு திருப்புமுனையையும் கண்டிருக்கின்றது.

வழமையாக முஸ்லீம்கள் மீது மேற்கொள்ளும் எல்லா விதமான வன்முறைகளுக்கும் விடுதலைப்புலிகளைப் பொறுப்பாளிகள் ஆக்கித்தப்பிக் கொண்ட சிறிலங்கா பாதுகாப்புத்துறை இம்முறை அதில் அவ்வளவுக்கு வெற்றி பெறவில்லை.

அம்பாறையில் நடந்த படுகொலைகளுக்கு ஆணித்தரமான முறையில் முஸ்லீம் மக்களாலும் குறிப்பாக காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமாலும் சிறிலங்கா விசேட அதிரடிப்படை மீது குற்றம் சுமத்தப்பட்டுவிட்டது.

திருகோணமலையில் கடந்த மாதம் முஸ்லீம்கள் சிறிலங்கா இராணுவத்தின் எறிகணைத் தாக்குதலில் கொல்லப்பட்டதற்கு தெளிவான ஆதாரங்கள் இருந்தும் அதனை வெளிப்படுத்துவதில் முஸ்லீம் தரப்பு காட்டிய அசமந்தப்போக்கை இம்முறை கைவிட்டிருப்பது ஆரோக்கியமானதாகும்.

இது விடயத்தில் சிறிலங்காவின் இராணுவப்பேச்சாளர் பிரசாத் சமரசிங்கவினால் விடுதலைப்புலிகளால் தான் இவ்வாறான படுகொலைகளை செய்யமுடியும் என்று சப்பைக்கட்டு கட்டத்தான் முடிந்திருக்கின்றது. 2001ஆம் ஆண்டு பொதுத்தேர்தலின் போது கண்டி உடத்தலவின்னவில் 18 முஸ்லீம் இளைஞர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு அப்போது சிறிலங்காவின் பிரதிப்பாதுகாப்பு அமைச்சராக இருந்த அனுருத்த ரத்வத்த மற்றும் அவரின் புதல்வர்கள் மீது சாட்டப்பட்ட குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டது போல வலுவான நிரூபனங்கள் அம்பாறை படுகொலைக்கும் கிடைத்திருக்கின்றன.

ஏற்கனவே, திருகோணமலையில் அக்ஷன் பெய்ம் என்ற சர்வதேச தொண்டு நிறுவனப் பணியாளர்களின் படுகொலையில் சர்வதேச கண்டனங்களுக்கும் நிதிக்குறைப்பு நெருக்கடிக்கும் சிறிலங்கா அரசு உள்ளாகி இருக்கின்றது. அவ்வாறே இந்த விடயத்தையும் முஸ்லீம்கள் வெளிப்படுத்தி சர்வதேச சங்கடத்துக்குள் அரசை கொண்டு செல்வார்களா என்பது முக்கிய வினாவாகும்.

ஏனெனில், சிறிலங்கா அதிகளவு இராணுவ உதவிகளைப் பெறும் நாடுகளில் முஸ்லீம் நாடொன்றும் இருக்கின்றது. சர்வதேச ரீதியாக இருக்கக்கூடிய முஸ்லீம் அமைப்புக்கள் இவற்றை விவகாரமாக்கினால் சிறிலங்கா நிச்சயம் மேலும் நெருக்கடிக்குள் தள்ளப்படும் என்பதில் சந்தேகமிருக்காது.

வழமைபோன்று முஸ்லீம் மக்களை பிரதிநிதித்துவம் செய்வதாக கூறிக்கொள்ளும் கட்சிகள் அரசாங்கத்திடம் இருந்து சலுகைகளைப் பெற்றுக்கொள்ளும் நோக்கத்துடன் இது விடயத்தில் நடந்து கொள்ளுமாக இருந்தால் தொடர்ந்தும் பாதிக்கப்படப்போவதும் ஏமாற்றப்படப் போவதும் முஸ்லீம்களாகவே இருப்பார்கள்.

இப்போது அரசுக்கு வெளியே இருந்து அதனை வழிநடத்த முயலும் ஜே.வி.பி. இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துக் கொண்டு பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகளின் பக்கம் திரும்பியிருக்கின்ற பின்னணியில் இந்த விவகாரத்தை முக்கியப்படுத்துதல் வேண்டும்.

படுகொலைகளும் தமிழ் இளைஞர்கள், வர்த்தகர்கள் என்போரின் கடத்தல்களும் தொடர்ந்து வரும் சூழலில் இலங்கைத்தீவு புரிந்துணர்வு உடன்பாட்டுக்கு உள்ளேயே ஒரு பெரும் போருக்குள் தள்ளப்பட்டிருக்கின்றது.

சிறிலங்கா அரசு விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளைக் கைப்பற்றி வெற்றி விழாக்களை கொண்டாடி வரும் நிலையில் விடுதலைப்புலிகள் கடுமையான பதில் நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ளக்கூடும் என்று சர்வதேசம் அச்சப்படுவது போல் தெரிகின்றது.

அதன் வெளிப்பாடாகவே இரு தரப்பையும் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தை ஒன்றுக்கு கொண்டு செல்ல பிரயத்தனப்படுகின்றது.

ஆனால், சிறிலங்கா அரசோ புரிந்துணர்வு உடன்படிக்கையை மதித்து அதன்படி செயற்பட தயாராக இல்லை.

கைப்பற்றப்பட்ட சம்ப+ர் போன்றவற்றை கைவிடத் தயாராக இல்லை.

மேலும் பிரதேசங்களைக் கைப்பற்றும் நடவடிக்கையை மேற்கொள்ளப் போவதாகவே கூறிக்கொண்டிருக்கின்றது.

இதனால் விடுதலைப்புலிகளும் தமது நிலைப்பாட்டில் கடுமையாக இருக்கத் தீர்மானித்திருக்கின்றார்கள்.

கடைசியாக நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் அரசியல்துறை பொறுப்பாளர் புரிந்துணர்வு உடன்படிக்கையை நூற்றுக்கு நூறுவீதம் அமுல்படுத்தினாலே பேச்சுவார்த்தையை நடத்த இயலும் என்று தெரிவித்திருக்கின்றார்.

கடந்த நான்கரை மாதங்களாக அதனை அமுல்படுத்துதில் அக்கறை காட்டாத சிறிலங்கா அரசு, இனிமேல் இதனைச் செய்யப் போவதில்லை.

ஆதலால், தவிர்க்க இயலாத ஒரு பெரும் போர் இலங்கைத்தீவில் மூளப்போகின்றது என்பது தெளிவானது.

இதனை இன்னும் சற்றுக் காலத்துக்கு ஒத்திவைக்கும் முயற்சியில் தான் சர்வதேசம் இனிமேல் ஈடுபடமுடியுமே தவிர போரைத்தடுத்து நிறுத்தும் காரியத்தை அதனால் செய்யமுடியாது.

போரை ஒத்தி வைப்பது கூட எவ்வளவுக்கு சாத்தியப்படும் என்பதை அறுதியிட்டுக் கூறமுடியாது.

இம்மாத முடிவுக்குள் இலங்கைக்கு வரவுள்ள நோர்வே அபிவிருத்தி அமைச்சர் எரிக் சோல்ஹெய்மின் வருகையும் எந்தளவுக்கு இதனை முன்னெடுக்கும் என்று கூறமுடியாத நிலையே இருக்கின்றது.

கடந்த ஜனவரியில் எரிக் சோல்ஹெய்ம் மிகப்பெரும் நிழல்யுத்தம் நடந்து கொண்டிருந்த சூழலில் தான் இலங்கைக்கு வந்தார்.

அதன் விளைவாக குறித்த காலப்பகுதிக்கு அமைதியான சூழ்நிலை நிலவியது.

ஆனால், அது போன்ற நிலைவரம் இப்போது இல்லை. சிறிலங்கா அரசு பிரதேசங்களைக் கைப்பற்றும் அளவுக்கு இன அழிப்;பை மேற்கொண்டிருக்கின்றது.

இந்த நிலையில் தான் அது தொடர்ந்தும் இருக்கின்றது.

அதனால், எரிக்சோல்ஹெய்மின் இலங்கை வருகை எவ்வளவுக்கு வெற்றி அளிக்கும் என்று கூற முடியாது.


- ஈழநாதம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2009 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..