|
ஐக்கியத்துக்கான அழைப்புடன் பிரியாவிடை பெற்றார் அனான் |
|
|
|
Saturday, 23 September 2006 |
 ஐக்கிய நாடுகளுக்கான தனது இறுதி உரையையாற்றியுள்ள கொபி அனான், மனித உரிமை துஷ்பிரயோகம், மதப்பிரிவினை, மோசமான மோதல்கள் மற்றும் நீதியற்ற உலக பொருளாதாரத்துக்கு எதிராக உலக நாடுகளை ஐக்கியப்படுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
அனான் தனது உரையில் பல விடயங்கள் குறித்து சுட்டிக்காட்டியுள்ளார்.
மத்திய கிழக்கு சமாதான முயற்சிகள், ஈரானின் அணுசக்தித் திட்டம் மற்றும் சூடான் விவகாரம் குறித்து அனான் கவனம் செலுத்தியுள்ளார்.
பலஸ்தீனியர்கள் தொடர்ந்தும் ஆக்கிரமிப்பின் கீழ் வாழும் வரை நாளாந்த
விரக்திக்கும் அவமானத்துக்கும் உட்படும் வரை இஸ்ரேலியர்கள் குண்டு
வெடிப்பிற்கு உள்ளாகும் வரை சகலரும் தீவிர உணர்விற்குட்படுவார்கள் என
அனான் தெரிவித்துள்ளார்.
பலஸ்தீன- இஸ்ரேலிய மோதலை முடிவுக்குக் கொண்டுவர தவறுகின்றமையும் இஸ்ரேலின்
40 வருட ஆக்கிரமிப்பும் ஐக்கிய நாடுகளின் பெருமையை பாதிப்பதாகவும் அதன்
பக்கச்சார்பின்மை குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளதாகவும் அனான்
தெரிவித்துள்ளார்.
ஏனைய மோதல்களை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு ஐக்கிய நாடுகள்
மேற்கொண்டுள்ள முயற்சிகளை அது பாதிக்கும் எனவும் அனான் குறிப்பிட்டுள்ளார்.
ஈராக், ஆப்கானிஸ்தான் மோதலை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான முயற்சிகள்
பாதிக்கப்படும். அந்த மக்களுக்கு ஐக்கிய நாடுகளின் உதவி அவசரமாக
தேவைப்படுகின்றது என்றும் அனான் தெரிவித்துள்ளார்.
கொபி அனான் கடந்த தசாப்தத்தில் அபிவிருத்தி, பாதுகாப்பு மற்றும்
சட்டத்தின் ஆட்சி என்பவை முன்னேற்றம் கண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
எனினும், பலர் இன்னமும் பயங்கர மோதல்களில் சிக்கியுள்ளனர். பயங்கரவாதம்
குறித்த அச்சம் நாகரிகங்களுக்கும், மதங்களுக்கும் இடையிலான மோதலை
அதிகரித்துள்ளது எனவும் அனான் குறிப்பிட்டுள்ளார்.
மனித உரிமைகளை கட்டுப்படுத்த பயங்கரவாதம் பயன்படுகின்றது என்றும் கொபி அனான் தெரிவித்துள்ளார்.
உலகமயமாக்கல் செல்வந்தர்களையும் ஏழைகளையும் மேலும்
அந்நியப்படுத்துகின்றது. இதன் காரணமாக நாங்கள் உலகத்தின் பிரிவினைகளால்
சர்வதேச சமூகம் என்ற கருத்தே கேள்விக்குறியாகும் சூழ்நிலையை
எதிர்கொள்கின்றோம் என்றும் அனான் தெரிவித்துள்ளார்.
டார்பூரில் காணப்படும் சூழ்நிலை பற்றியும் அனான் கவலை வெளியிட்டுள்ளார்.
ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் வீடுகளிலிருந்து விரட்டப்படுவதும் கொலை
செய்யப்படுவதும் பாலியல் வன்முறைகளும் தொடர்வதையும் அவர்
சுட்டிக்காட்டியுள்ளார்.
அனான் தழுதழுத்த குரலில் தனது பணி குறித்து சுட்டிக்காட்டியுள்ளார்.
கடினமான ஆனால் சவால் மிக்க எதிர்பார்ப்பு நிறைந்தது தனது பணியென அனான் குறிப்பிட்டுள்ளார்.
அனைவரும் ஒன்றிணைந்து மலைகளின் உச்சிக்கு சில கற்களை நகர்த்திக் கொள்வோம்.
சில எமது பிடியிலிருந்து தவறி விழுந்துள்ளன எனக் குறிப்பிட்ட அனான்,
எதிர்காலம் குறித்து பொதுவான நம்பிக்கையுடன், பிடிவாதமான நம்பிக்கையுடன்
எனது இடத்தை மற்றுமொருவருக்கு அளிக்கின்றேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.
ThinaKural
|