|
சர்வதேச சமூகத்துக்கு `பயங்கரவாதம்' பற்றிப் பாடம் நடத்தும் ஆட்சியாளர்! அகநிலையில் புலிகள் இயக்கத்தில் பல தவறுகள் இருக்கலாம். அது தமிழ்த்தேசத்தின் அகப்பிரச்சினை. அவ்வகப் பிரச்சினையைத் தீர்க்கும் ஆற்றலும், சக்தியும் தமிழ்த்தேசத்திற்கு நிறையவே உண்டு. சிங்கள தேசத்திற்கு அதைப் பற்றிய கவலை வேண்டியதில்லை அண்மைக்காலமாக ஸ்ரீலங்காவின் ஆட்சியாளர்களுக்கு பயங்கரவாதம் பற்றி வகுப்பெடுக்கும் பைத்தியம் ஆரம்பித்து விட்டது. கதிர்காமரின் கொலையைத் தொடர்ந்து தான் இப் பைத்தியம் முற்றத் தொடங்கியிருக்கிறது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கொழும்பில் இராஜதந்திரிகளை அழைத்து பயங்கரவாதம் பற்றி பெரிய வகுப்பொன்றினை எடுத்தார். தற்போது ஜனாதிபதி ஐக்கிய நாடுகள் சபையில் உலகத் தலைவர்கள் மத்தியில் வகுப்பொன்றினை எடுத்திருக்கின்றார்.
இந்த வகுப்புகளில் கலந்து கொண்டவர்கள் மந்த புத்தியுள்ளவர்களோ என்னவோ? எவ்வளவு தெளிவாகப் படிப்பித்துக் கொடுத்தும் அவர்கள் அதுபற்றிக் கணக்கெடுக்காமல் சமாதானம், சமாதானமென்றே சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஜனாதிபதியும், பிரதமரும் இவ்வளவு தூரம் பிரயாசைப்பட்டும் ஐரோப்பிய யூனியன் புலிகளைத் தடை செய்யவில்லை. அமெரிக்கா, தமிழர் புனர்வாழ்வுக் கழகம் அமெரிக்க சட்ட திட்டங்களுக்கமைய செயற்படுவதால் அவ்வமைப்பு தமது நாட்டில் இயங்கலாமெனக் கூறியிருக்கின்றது. இங்கிலாந்து வேறு பெயரில் செயற்படுமாறு கேட்டுக் கொண்டதற்கிணங்க தமிழர் புனர்வாழ்வுக் கழகம் வேறு பெயரில் அங்கு இயங்கிக் கொண்டிருக்கின்றது. புலிகளின் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் லண்டனில் தனது கடமைகளைச் செவ்வனே செய்து கொண்டிருக்கிறார். இணைத்தலைமை நாடுகள், சொல்லிலோ செயலிலோ சமாதானத்திற்கெதிராக செயற்பட வேண்டாமென கடும் தொனியுடன் கூறியிருக்கின்றன. "மருண்டவன் கண்களுக்கு இருண்டதெல்லாம் பேய்" என்பதைப் போல தமிழ்த் தேசத்திலுள்ள நபர்கள், அமைப்புகள், ஊடகங்களெல்லாம் பேரினவாதிகளுக்கு புலிகளாகத் தெரிகின்றன. எதிர்காலத்தில் தமிழ்த் தேசத்தின் செடிகள், கொடிகள், மிருகங்களெல்லாம் புலிகளாகத் தெரியலாம். ஒரு வகையில் தர்க்க ரீதியாகப் பார்க்கின்ற போது இந் நினைப்புகள் சரியானவையென்றே கருதுகின்றேன். ஒரு மக்கள் கூட்டம் ஒரு தேசமாக வளர்ச்சியடையத் தொடங்கிய பின் அதன் போராட்டத்தை மனிதர்கள் மாத்திரம் நடாத்துவதில்லை. அத்தேசத்தின் மரங்கள், கொடிகள், மிருகங்கள், பறவைகள், அமைப்புகள், ஊடகங்கள் என்பனவும் இணைந்தே நடாத்தும். இதனால் அத்தேசத்தின் அடையாளமென எதனைக் கண்டாலும் எதிரிகளுக்கு உதறல் எடுத்து விடுகின்றது. தமிழ்த் தேசத்தைப் பொறுத்தவரையிலும் கூட இதுவே நிகழ்ந்திருக்கின்றதென்று நான் நினைக்கின்றேன். மந்த புத்தியுள்ள உலகத் தலைவர்களும், இராஜதந்திரிகளும் இந்தப் பயங்கரவாதம் பற்றிய வகுப்பினைத் தெளிவாகப் புரிந்து கொள்ளா விட்டாலும் நான் நன்றாகவே புரிந்து கொண்டிருக்கின்றேன். அவர்கள் வெளிநாட்டுக்காரர்கள்; புரிந்து கொள்வதில் கடினநிலை ஏற்பட்டிருக்கலாம். நான் இலங்கைத் தீவைச் சேர்ந்தவன், அதுவும் இந்தப் பேய்களெல்லாம் உலாவும் வடகிழக்கினைச் சேர்ந்தவன். (பேய்கள் இன்று வட கிழக்கையும் தாண்டி கொழும்பு உட்பட தென்னிலங்கையிலும் பரவியிருப்பதோடு மட்டுமல்லாமல் உலகெங்கும் கூட பரவியிருப்பது வேறு கதை). இதனால் இந்தப் பயங்கரவாதம் பற்றிய அறிவும், அனுபவமும் எனக்கு நிறையவே உண்டு. நெடுந்தீவு குமுதினிப் படகுப் படுகொலையையும், நாகர்கோவில் சிறுவர்கள் படுகொலையையும்,வீட்டில் ஷெல் விழுந்து தமிழ் எழுத்தாளர் நெல்லை. க.பேரனின் குடும்பம் முழுமையாக அழிந்ததையும், நாச்சிமார் கோவிலடியில் மணவீட்டில் ஷெல் விழுந்து மணமகன் இறந்ததையும் நேரில் கண்டவன். எனது கிராமத்தில் ஹெலி வட்டமிட்டு சுட்டுக் கொண்டிருந்தபோது எனது இரண்டு வயது மகள் "பேய் வருகுது, பேய்வருகுது" என கத்திக் கொண்டு குசினியில் புகைக்கூட்டுக்குள் பதுங்கி ஒளிந்து கொண்ட நிகழ்வுகளையும் அனுபவரீதியாகக் கண்டு கொண்டவன். கொழும்பு வந்து பல வருடங்கள் கழிந்தும் இந்த அனுபவ அறிவினை நான் மறக்கவில்லை. கொழும்பில் கிடைத்த அனுபவங்களும் எதையும் மறக்க விடவில்லை. ஒரு அரசாங்க உத்தியோகத்தனென்ற அடையாளத்துடன் கொழும்பில் வசிப்பதற்கான எல்லா ஆதாரங்களும் இருந்தும் நடுநிசியில் நித்திரையால் எழுப்பப்பட்டு பொலிஸ் கூண்டுக்குள் தள்ளப்பட்டவன். திருடர்கள் மட்டும் இருக்கிற கூண்டுக்குள் அப்பா இருக்கின்றாரேயென எதுவும் அறியா வயதுடைய எனது மகள் என்னைப் பார்த்து அழுத போது நானும் கலங்கியிருக்கின்றேன். அடுத்தநாள் நான் விடுதலையான போது எனது நண்பன் கூறினான்."நீ அவமானப்பட்டதாக நினைத்து விடாதே...உன் தேசம் தான் அவமானப்படுத்தப்பட்டிருக்கின்றது". எதிரிகள் வழங்கிய கூட்டுத் தண்டனையின் விளைவுதான் இது. "தேசத்தின் அடையாளங்களை நாங்கள் சுமக்கும்வரை பேய்களாகத் தோன்றுவது தவிர்க்க முடியாதது" என்றான் அவன். எனவே, ஜனாதிபதியையும், பிரதமரையும் விட பயங்கரவாதம் பற்றிய அனுபவமும்,அறிவும் எனக்கு அதிகம் இருக்கின்றதென்றே நான் நினைக்கின்றேன். எனக்கு மட்டுமல்ல; என் தேசத்திலுள்ள மனிதர்கள், மரங்கள், கொடிகள், மிருகங்கள், வீடுகள் எல்லாவற்றுக்கும் இந்த அனுபவம் இருக்கின்றது. ஏனெனில் கூட்டுத் தண்டனையின் விளைவை அவையும் அனுபவித்திருக்கின்றன. எனவே, இந்த அடக்கு முறைகளை எதிர்த்து அவைகளும் போராடுகின்ற போது நான் முன்னர் கூறியது போல தமிழ்த் தேசத்தின் எதிரிகளுக்கு தமிழ்த் தேசத்தின் அடையாளங்களெல்லாம் பேய்களாகத் தெரிவதில் வியப்பேதுமில்லை. இனி நான் ஜனாதிபதி ஐக்கிய நாடுகள் சபையில் தெரிவித்த கருத்துகளுக்கு என் தேசத்தின் நிலை நின்று சில கருத்துகளைக் கூற விழைகின்றேன். முதலாவது கருத்து: "புலிகள் பயங்கரவாதிகள்" அம்மா, ஜனாதிபதி அவர்களே! ஒரு வரலாற்று ரீதியாக அடக்கு முறைக்குள்ளாக்கப்பட்ட சமூகத்திற்காகப் போராடுபவர்கள் பயங்கரவாதிகளென்றால் பலஸ்தீன விடுதலைக்காக போராடிய யசீர் அரபாத் பயங்கரவாதியா? தென்னாபிரிக்க விடுதலைக்காகப் போராடிய நெல்சன் மண்டேலா பயங்கரவாதியா? இந்திய சுதந்திரத்திற்காகப் போராடிய சுபாஸ் சந்திரபோஸ் பயங்கரவாதியா? அவர்களையும் பயங்கரவாதிகளென்றுதான் அப்போது அடக்கியவர்கள் கூறினார்கள். இந்தப் பயங்கரவாதி யசீர் அரபாத்தைத்தான் நீங்கள் கைலாகு கொடுத்து வரவேற்றீர்கள். இன்னோர் பயங்கரவாதியான நெல்சன் மண்டேலாவைக் கட்டியணைத்து முத்தம் கொடுத்தீர்கள். அவர்களைப் பார்க்கின்ற போது அவர்கள் விடுதலைப் போராளிகளாக உங்களுக்குத் தெரிகின்றார்கள். ஆனால் தமிழ்த் தேசத்தை அடக்குபவராக நீங்கள் இருப்பதனால் புலிகள் உங்களுக்குப் பயங்கரவாதிகளாகத் தெரிகின்றார்கள். தமிழ்த் தேசத்தின் போராட்டம் நீண்ட வரலாற்றினைக் கொண்டது. அருணாசலம், இராமநாதன், ஜீ.ஜீ.பொன்னம்பலம், செல்வநாயகம் என பல தலைவர்கள் தலைமையேற்று நடாத்திய போராட்டத்தினை இன்றைய கட்டத்தில் பிரபாகரன் பொறுப்பேற்றிருக்கின்றார். போராட்டத்தின் வளர்ச்சிக்கேற்ப எதிரிகளுக்கு அவர் ஆயுதத்தால் பதில் சொல்கின்றார். இந்தவகையில் புலிகள் இன்றைய கட்ட தமிழர் அரசியலை நகர்த்தும் தமிழ்த்தேசத்தின் பிரதிநிதிகள். சுருக்கமாகச் சொன்னால் இன்றைய கட்டத்தில் தமிழ்த்தேசத்தின் முகவர்கள் அவர்கள். ஏனையவர்களைவிட இவர்களுக்குள்ள பிரதான மதிப்பு யாதெனில் எந்தச் சூறாவளிக்குள்ளும் விலைபோகாதவர்கள் அவர்கள். சிங்கள தேசத்தின் பார்வையில் புலிகள் பயங்கரவாதிகள். ஆனால் தமிழ்தேசத்தைப் பொறுத்தவரை அவர்கள் விடுதலைப் போராளிகள். புலிகள் இயக்கம் சிங்கள தேசத்திற்கு ஒரு பயங்கரவாத இயக்கம். ஆனால் தமிழ்த்தேசத்திற்கு அது ஒரு விடுதலை இயக்கம். அகநிலையில் புலிகள் இயக்கத்தில் பல தவறுகள் இருக்கலாம். அது தமிழ்த்தேசத்தின் அகப்பிரச்சினை. அவ்வகப் பிரச்சினையைத் தீர்க்கும் ஆற்றலும், சக்தியும் தமிழ்த்தேசத்திற்கு நிறையவே உண்டு. சிங்கள தேசத்திற்கு அதைப் பற்றிய கவலை வேண்டியதில்லை. தமிழ்த்தேசம் சந்திக்கும் புறநெருக்கடி இந்தப் பேரினவாத ஒடுக்குமுறைதான். இந்தப் புற ஒடுக்குமுறையினைப் பொறுத்தவரை புலிகள் விலைபோகாத போராளிகள். புலிகளின் இருப்பில்தான் தமிழ்த்தேசத்தின் இருப்பே தங்கியுள்ளது. புலிகள் தோல்வியுற்றால் அது புலிகளின் தோல்வியல்ல. தமிழ்த்தேசத்தின் தோல்வி. இவ்வுண்மை தமிழ் மக்கள் மத்தியிலிருக்கும் புலியெதிர்ப்புக் குழுக்களுக்துத் தெரியாவிட்டாலும் கூட தமிழ்த்தேசத்தின் எதிரிகளுக்கு நன்றாகவே தெரியும் இதனால்தான் தமிழ்த்தேசத்தின் எதிரிகள் தமிழ்த்தேசத்தைத் தோற்கடிப்பதற்கு புலிகளைத் தோற்கடிக்க விரும்புகின்றனர். ஜனநாயகம், பன்மைத் தன்மையென தமிழ்த் தேசத்தின் எதிரிகள் கூக்குரலிடுவதெல்லாம் தமிழ்த் தேசத்தைப் பலப்படுத்துவதற்காகவல்ல. மாறாக பலவீனப்படுத்துவதற்காகத்தான். இங்கு ஜனநாயகம் பற்றியும் சிறிது கூறுவது நல்லதென்றே நினைக்கின்றேன். ஜனநாயக உரிமைகளென்பவை ஜனநாயக கடமைகளுடன் தொடர்புபட்டவை. கடமைகளைச் செய்யாமல் உரிமைகளை அனுபவிக்க முடியாதென்பது தான் உரிமைகள் பற்றிய அடிப்படை விதி. இக் கடமைகள் அக் காலகட்டத் தேவைகளுடன் தொடர்புபட்டவை. போராட்ட காலத்தில் உரிமைகள் போராட்ட காலக் கடமைகளுடன் தொடர்புடையவை. போராட்ட காலத்தில் போராட்ட காலக் கடமைகளை மேற்கொள்பவர்களுக்குத் தான் மக்களால் உரிமைகளை வழங்க முடியும். போராட்ட காலக் கடமையென்பது போராட்டத்திற்கு விசுவாசமாகவிருந்து போராட்டப் பணிகளைச் செய்வது தான். இவர்களுக்கு மட்டுமே உரிமைகளை வழங்க முடியும். சுருக்கமாகக் கூறினால் போராடுபவர்களுக்கு மட்டுமே உரிமைகளை வழங்க முடியும். போராட்டத்தை எதிர்ப்பவர்களுக்கு உரிமைகளை வழங்க முடியாது. அவ்வாறு வழங்கினால் போராட்டம் பலவீனமடையும். போராட்டம் பலவீனமடைந்தால் தமிழ்த்தேசம், அதன் அரசியல் அபிலாஷைகள் எல்லாமே பலவீனமடையும். மொத்தத்தில் முழுத் தமிழ்த் தேசமுமே அடிமைத்தனத்திற்குள்ளாக நேரிடும். போராடும் மக்கள் இன்று மிகத் தாராளமாகவே உரிமைகளை அனுபவிக்கின்றார்கள். அவர்களுக்கான ஊக்குவிப்பு தேசத்திற்குள் மட்டுமல்ல தேசத்திற்கு வெளியேயும் நிறைய இருக்கின்றது. அடுத்த கூக்குரல் பன்மைத்தன்மை பற்றியது. எந்த அரசியல் எண்ணக்கருவின் பயன்பாடும் நான் முன்னர் கூறியது போல அந்தக் காலகட்ட அரசியல் தேவைகளுடன் தொடர்புபட்டவை. ஒரு அரசியல் எண்ணக்கரு இருக்கின்றதென்பதற்காக பொருத்தமில்லாத காலகட்டத்தில் அதனைப் பயன்படுத்த முடியாது. தமிழ்த்தேசத்தின் இன்றைய காலகட்டத் தேவை தமிழ்த்தேசத்தின் அரசியல் அபிலாஷைகளை ஒன்றாகத்திரட்டி புலிகளென்ற ஏக இயக்கத்தின் மூலம் முன்னே தள்ளுவது தான். இன்று ஏக இயக்கமாக இருப்பதால் தான் வெளிநாட்டு உளவுப் பிரிவுகளோ, எதிரியின் உளவுப் பிரிவுகளோ போராட்டத்திற்குள் நுழைய முடியாமல் தடுமாறுகின்றன. பன்மைத் தன்மைக்கான கூக்குரல் கூட தமிழ்த் தேசத்தின் மாறுபட்ட கருத்துள்ளவர்களை போராட்டத் தலைமைக்குள் சேர்ப்பதற்காகவல்ல, மாறாக இந்த உளவு நிறுவனங்கள் தங்களது நிகழ்ச்சி நிரல்களை நகர்த்துவதற்கான தளங்களை அமைப்பதற்குத் தான். மொத்தத்தில் தமிழ்த் தேசத்தைப் பலவீனப்படுத்துவதற்குத்தான். இன்று உலகில் ஏனைய விடுதலைப் போராட்டங்களை விட தமிழ்த் தேசப் போராட்டம் முதன்மை நிலையில் இருப்பதற்குக் காரணம் வெளிநாட்டு உளவாளிகளின் ஊடுருவல் இல்லாமை தான். இந்த வலிமைத் தன்மையை உடைப்பதற்காகத் தான் பன்மைத் தன்மையென்ற கூக்குரல் எழுப்பப்படுகின்றது. ஆனால், தமிழ்த் தேசிய இயக்கத்தில் முதல் மட்ட நிலையில் மட்டும் தான் ஏகத்தன்மை இருக்கின்றது. இரண்டாம் மட்ட நிலையில் பன்மைத் தன்மைக்கு இடம் கொடுக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உருவாக்கம் இதற்கு நல்ல உதாரணம். புரிந்துணர்வு உடன்படிக்கைக்குப் பிறகு ஏனைய இயக்கங்களில் செயற்பட்ட பலர் புலிகளுடன் இணைந்து செயற்படுகின்றார்கள். புலிகளின் சொந்த உறுப்பினர்களுக்கில்லாத கௌரவமும், மரியாதையும், ஊக்குவிப்பும் அவர்களுக்கு கொடுக்கப்படுகின்றது. அவர்கள் மிகவும் சுதந்திரமாக தங்கள் தங்கள் தளங்களிலிருந்து கொண்டு பணிகளைச் செய்கின்றார்கள். எனவே, தமிழ்த் தேசத்தில் ஜனநாயக உரிமைகளும், பன்மைத் தன்மைகளும் இல்லையெனக் கூறிவிட முடியாது. போராட்ட காலத் தேவைக்கேற்ப அது ஒழுங்கமைக்கப்பட்டிருக்கின்றதென்றே கூறலாம். ஒரு வகையில் போராட்ட காலமென்பது அத்தேசத்தைப் பொறுத்தவரை ஒரு அவசரகால நிலைதான். ஒரு அரசில் அவசர கால நிலையின் போது அக்காலத் தேவைக்கேற்ப உரிமைகள், பன்மைத் தன்மை என்பவற்றை ஒழுங்கமைப்பது எந்தளவுக்குத் தவிர்க்க முடியாததோ அதேபோல போராட்ட காலத்திலும் இவ்வொழுங்கமைப்புகள் தவிர்க்க முடியாதவை. விடுதலை கிடைத்த பின்னர் உலக விழுமியங்களுக்கேற்ப தமிழ்த் தேசமும் நடந்து கொள்ளும். அப்போது அதற்கு எந்தவித ஆட்சேபனையும் இருக்கப் போவதில்லை. முடிவாக, தமிழ்த் தேசத்தின் எந்த ஒழுங்கமைப்புகளும் தமிழ்த் தேசத்தின் நலன்களிலிருந்து உருவாக வேண்டுமே தவிர, எதிரிகளின் நலன்களிலிருந்து உருவாகிவிட முடியாது.
சுப்பிரமணியம்
|