|
வெறிச்சோடிக் கிடக்கும் "மூலோபாய" திருகோணமலை |
|
|
|
Sunday, 24 September 2006 |

திருகோணமலை சந்தைப் பகுதியில் ஐந்து மாதங்களுக்கு முன்பாக சிறிலங்கா
இராணுவத்தினரால் குவிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான சிங்களவர்கள், தமிழர்களை
வெட்டியும் குத்தியும் தீயிலிட்டும் வேட்டையாடப்பட்ட கோர நிகழ்வுக்குப்
பின்னர் இன்னமும் அங்கே இயல்பு வாழ்க்கை திரும்பவில்லை.
100 மீற்றருக்கு ஒரு இராணுவ சோதனைச் சாவடி இருப்பதால் வசிக்கின்ற மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அஞ்சுகின்றனர்.
மக்கள் நடமாட்டமும் இல்லை. வெளியாட்கள் வருகையுமில்லை என்பதால் வர்த்தக நிறுவனங்கள் வருவாயிழந்து நிற்கின்றன.
விடுதி உரிமையாளர்கள் வெற்று அறைகளை திறந்து வைத்துக் கொண்டும்
விடுதிகளையே மூடிவிட்டும் வெறிச்சோடிய வீதிகளை வேடிக்கை பார்க்கும் அவலம்.
இதுதான் திருகோணமலையில் நிலைமை.
திருகோணமலையின் வெல்கம் பே விடுதி உரிமையாளர் ரோகித டி சில்வா கூறுகிறார்.
சர்வதேச அரச சார்பற்ற நிறுவனத்தின் பிரதிநிதிகள் இங்கு பணியாற்றி வந்த
நிலையில் எமது விடுதிகள் நிறைந்திருந்தன. இயல்பு நிலைமை காலத்தில்
விடுதியின் அறைகள் நிறைந்திருக்கும். இப்போது எதுவும் இல்லை.
தங்கியிருக்கும் சிலருக்கும் கூட மீன் போன்ற பொருட்களை சிலாபத்திலிருந்து எடுத்து வருவது கடினமாக உள்ளது என்கிறார்.
திருகோணமலையின் பாடசாலைகளில் அகதிகள் நிறைந்து இருக்கின்றனர்.
திருகோணமலையின் அண்மித்த கிராமங்களைச் சேர்ந்த மக்கள் இங்கே வாழ்க்கை
நடத்துகின்றனர்.
100 மீற்றருக்கு ஒரு சோதனைச் சாவடி காவல்துறை, ஊர்காவல் படை மற்றும் இராணுவத்தினர் நிறைந்து நிற்கின்றனர்.
வீதிகளில் செல்லும் ஒவ்வொரு உந்துருளியும் ஈருருளியும் கழற்றி சோதனையிடப்படாத அளவில் சோதனையிடப்படுகின்றன.
19 பேர் தீயிலிட்டும் வெட்டியும் குத்தியும் படுகொலைச் சம்பவம் நடந்த
சந்தைப் பகுதியில் எவரும் இல்லை. 36 கடைகள் எரிந்த சுவடும் அப்படியே
உள்ளது. எதுவும் மாறவில்லை.
"நட்ட ஈடு கோரினோம். கடனுதவி வழங்கக் கேட்டோம். ஆனால் எதுவும்
நடக்கவில்லை. ஏப்ரல் மாதம் தொடக்கம் வங்கிகளிலும் கடன் தொகை
குறைக்கப்பட்டுவிட்டது. பிரதான நிறுவனங்கள் கடன் வசதியையே நிறுத்தியும்
விட்டன" என்கிறார் திருகோணமலை மாவட்ட வர்த்தகர் சம்மேளனத் தலைவர்
இராஜாராம்மோகன்.
"ஏற்கனவே நிதிப் பிரச்சனைகளால் தவித்துக் கொண்டிருக்கும் வர்த்தகர்களால்
இனியும் மூன்று மாதங்களுக்கு மேல் முகம் கொடுக்க முடியாது" என்கிறார் அவர்.
கடைகள் அனைத்தும் மாலை 4 மணிக்கே மூடப்பட்டு விடுகின்றன. அதன் பின்னர் பாலைவனம் போல் திருகோணமலை வீதிகள் மாறிவிடுகின்றன.
மாலை தொடங்கியதும் தனியார் பேரூந்து சேவைகளும் நிறுத்தப்பட்டு விடுகின்றன.
திருகோணமலையின் மீன் வர்த்தகம் முற்றாக முடங்கிப் போயிருக்கிறது.
குறிப்பிட்ட சில மணிநேரங்கள் மட்டுமே மீன்பிடிக்க அனுமதிக்கப்பட்டாலும்
மீனைக் கொண்டு வருவதற்கும் ஏகக் கெடுபிடிகள்.
அங்கிருந்து பல மீனவர்கள் மன்னார் மற்றும் தமிழகம் நோக்கி அகதிகளாகச் சென்றுவிட்டனர்.
திருகோணமலை- ஹபரணை வீதியில் நாளாந்தம் 1,000 முதல் 2 ஆயிரம் வரையிலான
வாகனங்கள் சென்று வந்தன. இப்போது 200 வாகனங்கள் கூட செல்வதில்லை என்று
சிறிலங்கா காவல்துறையினர் கூறுகின்றனர்.
லொறிகளில் கொண்டு செல்லப்படும் அனைத்துப் பொருட்களும் இறக்கி சோதனையிடப்படுகின்றன. இதுவும் ஒரு முக்கியம் காரணமாக உள்ளது.
ஆனால் திருகோணமலையில் அரச செயலாளராக உள்ள இராணுவ அதிகாரியாக இருந்த றஞ்சித் செல்வா கூறுகிறார்.
மூதூரிலிருந்து இடம்பெயர்ந்திருந்த முஸ்லிம்களும் சிங்களவர்களும்
திரும்பிவிட்டனர். விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தலால் தமிழர்கள் மட்டும்
மீளக் குடியேறவில்லை என்கிறார்.
தமிழ் மக்களோ தங்களது பாதுகாப்புக்கு உத்திரவாதம் இல்லாமையினால்தான் மீளக் குடியேற முடியவில்லை என்று விளக்கமளிக்கின்றனர்.
திருகோணமலை நகரின் மூலை முடுக்கெல்லாம் கூட மக்கள் நடமாட்டம் ஏதுமில்லாத
பாலைவனமாக இருப்பதால் இப்போது வெட்ட வெளியாக வெளிச்சமிட்டு நிற்கிறது..
ஆம் இது "மூலோபாயம்" மிக்க தமிழர்களின் தலைநகரமாம் திருகோணமலைதான்.
|