பிரதான பக்கம் arrow ஆசிரியர் தலையங்கம் arrow கடல்கோள் நிவாரண இலட்சணம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English

கடல்கோள் நிவாரண இலட்சணம் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Tuesday, 27 September 2005

கடல்கோளினால் பாதிக்கப்பட்ட நாடுகளில் மேற்கொள்ளப்பட்டுவரும் புனர்வாழ்வு மற்றும் புனர்நிர்மாணப் பணிகளை ஒருங்கிணைப்பதற்கான ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தின் விசேட தூதுவரான முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பில் கிளின்டன் தலைமையில் வாஷிங்டனில் உலகவங்கி தலைமையகத்தில் கடந்த வாரம் கடல்கோள் நிவாரணப் பணிகள் தொடர்பான உலகளாவிய கூட்டமைப்பின் கூட்டமொன்று நடைபெற்றது.

அதில் கலந்து கொண்டு உரையாற்றிய இலங்கை ஜனாதிபதி திருமதி குமாரதுங்க பாதிப்புக்குள்ளான நாடுகளின் புனர்நிர்மாணத்தில் தொடர்ந்து அக்கறை காட்டுமாறு சர்வதேச சமூகத்துக்கு அழைப்பு விடுத்திருந்தார். அத்துடன், அவர் இலங்கையில் புனர்நிர்மாணத்தில் ஈடுபட்டுள்ள அரசாங்க சார்பற்ற தொண்டர் நிறுவனங்கள் அவை பொறுப்பேற்றுக் கொண்ட பணிகளைப் பூர்த்தி செய்ய வேண்டுமென்றும் வேண்டுகோள் விடுத்தார். கடல்கோள் பாதிப்பு நாடுகளின் மக்களின் அவலங்களைப் போக்குவதற்காக உலகம் பூராவுமிருந்து கருணையுள்ளம் கொண்டவர்களினால் வழங்கப்பட்ட நிதிகளுக்கு என்ன நடந்திருக்கிறது என்று இலங்கை மக்கள் கேட்கிறார்கள் என்றும் அந்தக் கூட்டத்தில் திருமதி குமாரதுங்க தெரிவித்தார்.

இலங்கை மக்கள் கிளப்பும் கேள்வி குறித்து வாஷிங்டனில் ஜனாதிபதி நினைவூட்டிய வேளையில், இலங்கையில் கடல்கோள் நிவாரணப் பணிகள் தொடர்பில் கணக்காய்வாளர் நாயகம் எஸ்.சி.மாயாதுன்ன கடந்த வாரம் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பித்திருந்த இடைக்கால அறிக்கையொன்றில் வெளியிடப்பட்டிருக்கும் விபரங்கள் திருமதி குமாரதுங்கவின் அரசாங்கம் புனர்நிர்மாணப் பணிகளை எந்த இலட்சணத்தில் கையாண்டிருக்கிறது என்பதை உலகிற்கு அம்பலப்படுத்துவதாக அமைந்திருக்கிறது. 2004 டிசம்பர் தொடக்கம் 2005 ஜூன் வரையான காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட கடல்கோள் நிவாரணம் மற்றும் புனர்வாழ்வுப் பணிகள் தொடர்பிலான அந்த அறிக்கையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்கென்று கிடைக்கப்பெற்ற வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு நிதிகள் கையாளப்பட்டதில் இடம்பெற்ற மிகப் பாரதூரமான முறைகேடுகள் சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றன.

6 முக்கிய பகுதிகளுக்கென கிடைக்கப்பெற்ற 116 கோடி 80 இலட்சம் டொலர் வெளிநாட்டு உதவியில் 15 கோடி 80 இலட்சம் டொலர்கள் மாத்திரமே செலவிடப்பட்டிருக்கிறது. அதாவது இந்த வெளிநாட்டு உதவியில் 13.5 சதவீதம் மாத்திரமே செலவு செய்யப்பட்டிருக்கிறது. 20 நிறுவனங்களினால் சேகரிக்கப்பட்ட 427 கோடி 70 இலட்சம் ரூபா உள்நாட்டு நிதியில் 157 கோடி 60 இலட்சம் ரூபா, அதாவது 37 சதவீதம் மாத்திரமே செலவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த உள்நாட்டு நிதியில் 269 கோடி 20 இலட்சம் ரூபா 18 நிறுவனங்களின் பொறுப்பிலேயே இன்னும் இருக்கிறது. சமூக சேவைகள் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட 384 அரசாங்க சார்பற்ற தொண்டர் நிறுவனங்கள் கடல்கோளினால் நிர்மூலஞ் செய்யப்பட்ட சொத்துக்களை மீளக் கட்டியெழுப்புவதற்காக 132 கோடி 10 இலட்சம் டொலர்களை வழங்குவதற்கு இணங்கிய போதிலும், அது தொடர்பான புரிந்துணர்வு உடன்படிக்கைகளைக் கைச்சாத்திடுவதில் காண்பிக்கப்பட்ட தாமதத்தால் இந்த உதவிகளை பயன்படுத்த முடியாத நிலைமை ஏற்பட்டிருக்கிறது என்று கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. உதவிகளைப் பெறுவதற்கு உரித்து அற்றவர்களுக்கு நிதியுதவிகள் வழங்கப்பட்ட விவகாரத்தில் மிகவும் மோசமான முறைகேடுகள் இடம்பெற்றிருக்கின்றன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்கென அனுப்பி வைக்கப்பட்ட இலட்சக்கணக்கான ரூபா பெறுமதியான அவசர நிவாரண உதவிப் பொருட்கள் மாயமாகியிருந்த பல சந்தர்ப்பங்கள் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது.

மத்திய வங்கியின் ஊடாக நாட்டுக்குள் பிரவேசித்த அரசாங்க சார்பற்ற தொண்டர் நிறுவனங்களின் நிதிகள் பற்றிய விபரங்களை வெளிப்படுத்துவதற்கு அந்த வங்கி மறுத்திருந்ததாகவும் கணக்காய்வாளர் நாயகத்தின் திணைக்கள அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. கடல்கோள் அனர்த்தம் நேர்ந்து இன்றுடன் சரியாக 9 மாதங்கள் உருண்டோடி விட்டன. இன்னமும் ஆயிரக்கணக்கான மக்கள் தற்காலிக வாழ்விடங்களிலேயே மிகவும் கஷ்டமான நிலைமைகளின் கீழ் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையில் வெளியிடப்பட்டிருக்கும் விபரங்கள் நிவாரணப் பணிகளையும் புனர்வாழ்வு மற்றும் புனர்நிர்மாணப் பணிகளையும் அரசாங்கம் எந்தளவு சீர்கேடான முறையில் கையாண்டிருக்கிறது என்பதை அம்பலப்படுத்துகிறது.

இலங்கை நினைவுக்கெட்டிய அதன் சரித்திரத்தில் முன்னென்றும் இல்லாத வகையிலான மனிதாபிமான நெருக்கடியை எதிர்நோக்கிய இந்த கடல்கோள் இயற்கை அனர்த்தத்தின்போது அரச நிருவாக இயந்திரம் எந்தளவுக்கு பொறுப்புணர்ச்சியுடன் செயற்பட்டிருக்கிறது என்பதை நோக்கும் போது பெரும் வேதனையாக இருக்கிறது.


thinakkural
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2009 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..