|
கதிர்காமரின் படுகொலைக்குப் பின்னர் அவசர அவசரமாக அமுல்படுத்தப்பட்ட அவசர காலச் சட்டம் காரணமாகத் தமிழ் மக்கள் தொடர்ந்து துன்புறுத்தலுக்கும், சோதனைக் கெடுபிடிகளுக்குமுள்ளாகின்றனர்.
தமிழர்களின் வாழ்விடங்கள் சிங்களப் படைகளினால் சுற்றி வளைக்கப்பட்டுத் தேடுதல் நடாத்தப்படுகின்றது. போர் நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்திடுவதற்கு முன்னர் உள்ள சூழலையே இது வெளிக்காட்டுகின்றது. இவ்வாறான சூழல் தற்போது போர் நிறுத்தம் நடைமுறையிலுள்ளதா? என்ற கேள்வியை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் போர் நிறுத்த உடன்படிக்கையின் பிரகாரம் சோதனைக் கெடுபிடி சுற்றி வளைப்புத் தேடுதல் நடவடிக்கைகள் எதனையும் மேற்கொள்ள முடியாது. ஆனால் தற்போது மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் பாரிய போர் நிறுத்த மீறலாகும். அதேவேளை படையினர் ஆக்கிரமிப்புப் பகுதி யில் அரசியல் பணிகளை மேற்கொண்டு வந்த விடுதலைப் புலிகள், தேசவிரோதக் கும்பல்கள் மற்றும் படைத்தரப்பினர் நிராயுத பாணிகளான விடுதலைப்புலிகள் மீதும், அரசியல் பணிமனை மீதும் இலக்கு வைத்து மேற்கொண்டு வந்த தாக்குதலையடுத்துத் தற்போது தமது பணிகளை இடை நிறுத்தித் தமது நிருவாகப் பகுதிக்கு வந்து விட்டனர். இது போர் நிறுத்த உடன்படிக்கை அமுலில் உள்ளது என்பதை அர்த்தமற்றதாக்கிவிட்டது. ஏனெனில் படையினர் கட்டுப்பாட்டுப் பகுதியில் போராளிகள் தமது அரசியல் பணிகளை முன்னெடுக்கின்ற போதும். படைத் தரப்பும், போராளிகளும், புரிந்துணர்வைப் பேணுகின்ற போதும், நம்பிக்கை வலுவடையும். அது சமாதானத்திற்கான சூழலை உறுதியாக்கும். ஆனால் இன்று நிலமை அவ்வாறு இல்லை. படையினர் ஆக்கிரமிப்புப் பகுதியிக்குள் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இது ஒரு புறமிருக்கச் சில வேளைகளில் படையினர் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு ஒரு அவசர தேவை. அல்லது உறவினர் வீட்டிற்குப் போராளி ஒருவர் சென்று நின்றிருந்தால் தற்போது படையினர் கிராமம் கிராமமாக நடாத்திவரும் சுற்றி வளைப்புத் தேடுதல் நடவடிக்கைக்குள் சிக்க வேண்டி வரும். அவ்வாறு இவர் போராளி எனப் படைத் தரப்பிடம் அடையாளப்படுத்தினால் அல்லது படைத்தரப்பு இனங்கண்டு கொண்டால் கைது நடவடிக்கையை மேற்கொள்ளாமல் விடுவார்களா? உண்மையில் சாதாரண இளைஞர்களே கைது செய்யப்படும் நிலையில் ஒரு போராளியாகவிருந்தால் நிச்சயம் படையினர் கைது செய்தே தீருவர். இவ்வாறான நிலையில் போர் நிறுத்தம் பேணப்படுகின்றது என்று கூறுவதில் அர்த்தமில்லை. உடன்படிக்கையில் குறிப்பிடப்பட்ட விதிமுறைகளைக் கடைப்பிடிக்காது முரண்பாடாகப் படைத்தரப்பு மீறி நிற்பது நல்லிணக்கத்தை ஏற்படுத்தாது. எனவே போர் நிறுத்தம் முறையாக அமுல்;படுத்தப்படுமாயின் பேச்சுவார்த்தைக்கான சூழலை உருவாக்க முடியும். கடந்த காலங்களில் போர் நிறுத்தம் பலவீனப்பட்டுப் போவதற்கும், இயல்பு நிலை சீர்குலைவுக்கும் காரணம் படைத்தரப்பினரின் விரோத மனப்பான்மையுடன் கூடிய செயற்பாடுகளே ஆகும் அத்துடன் அரசின் கட்டுப்பாடுகளுக்குட்பட்டவர்களாகவோ, அல்லது அரசின் உத்தரவுகளைச் செயற்படுத்துபவர்களாகவோ அவர்கள் காணப்படவில்லை. படைத்தரப்பு உடன்படிக்கைக்கு முரணான நடவடிக்கைகளைச் செய்துவிட்டுத்திட்டமிட்டு சோடிக்கும் புனை கதையை அரச தரப்பு நிரூபிக்கவே முயன்றதே தவிர படைத்தரப்பு மீது எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. எதிர்காலத்தில் சமாதான நகர்வுகள் எவ்வாறு அமையப் போகின்றது என்பது ஜனாதிபதித் தேர்தலின் பெறுபேறுகளும் அதில் வெற்றிபெறும் வேட்பாளரது நகர்வுகளைப் பொறுத்தே அமையப்போகின்றன. எவர் வெற்றி பெற்றாலும் தமிழ் மக்களது உரிமைகளை வழங்குவதற்கான தீர்வு முறைகளை முன்னெடுக்க வேண்டியது தார்மீகக் கடமை. இதற்கு முன்னர் போர் நிறுத்தம் முறையாக அமுல்;படுத்தப்பட வேண்டும் இயல்பு சூழல் ஏற்படுத்தப்பட வேண்டும். போராளிகள், படையினர் கட்டுப்பாட்டுப் பகுதியில் அரசியல் பணியில் ஈடுபடுவதற்கான சூழலை உருவாக்க வேண்டும். இது பிரதான விடயம் இவற்றைக் கவனத்திற்கொள்ளாது சமஸ்டி அடிப்படையில் தீர்வுகாண்பதாகப் பேசுவதோ ஆரோக்கியமானதாக அமையாது. அதே நேரம் படைத்தரப்பினர் அவசர காலச் சட்டம் என்ற போர்வையில் தமிழ் மக்கள் மீது கெடுபிடிகளை மேற்கொள்வதும் நிறுத்தப்பட வேண்டும். இல்லாதுவிடின் போர் நிறுத்தம் என்ற ஒன்று அமுலில் உள்ளதா? என்பது கேள்விக்குறியே.
eelanatham
|