|
யாழ்ப்பாணக் குடாநாட்டு மக்களைப் பட்டினிச் சாவிலிருந்து காப்பாற்றுமாறு சர்வதேச சமூகத்திடம் தமிழ்க் கூட்டமைப்பு விடுத்திருந்த அவசர வேண்டு கோளுக்குக் கிடைத்துள்ள பிரதிபலிப்பு நம்பிக்கையளிப்பதாக அமையவில்லை.
மக்கள் எதிர்கொண்டுள்ள இந்த அவலங்களை முடிவுக்குக் கொண்டுவரக் கூடிய ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எதுவும் முன்னெடுக்கப்பட்டதாகவும் தெரியவில்லை. இவ்விடயத்தில் அரசாங்கத்தின் அணுகுமுறை, உள்நோக்கத்துடன் அரசு செயற்படுகின்றதா என்ற சந்தேகத்தையே ஏற்படுத்துவதாக அமைந்திருக்கின்றது.
யாழ்ப்பாணக் குடாநாட்டை பிரதான நிலப்பரப்புடன் இணைக்கும் ஏ-9 பாதை மூடப்பட்டுள்ளமைதான் குடாநாட்டில் இன்று உருவாகியுள்ள மனித அவலங்களுக்கும், பட்டினி நிலைமைக்கும் பிரதான காரணம். 2002 பெப்ரவரியில் கைச்சாத்திடப்பட்ட போர்நிறுத்த உடன்படிக்கையின்படி பொதுமக்களின் நலன்கருதியே இந்தப் பாதை திறந்து வைக்கப்பட்டது. இருந்த போதும், கடந்த ஆகஸ்ட் 11 ஆம் திகதி குடாநாட்டில் யுத்தம் வெடித்த போது படையினரால் மூடப்பட்ட இந்தப்பாதை இன்று வரை திறக்கப்படவில்லை.
குடாநாட்டுக்கான மக்கள் போக்குவரத்துக்கும் அத்தியாவசியப் பொருட்களைக் கொண்டு செல்வதற்கும் பயன்படுத்தப்படும் இப்பாதை மூடப்பட்டிருப்பது - போர்நிறுத்த உடன்படிக்கையை அப்பட்டமாக மீறும் ஒரு செயற்பாடு என்பதில் சந்தேகமில்லை. போர்நிறுத்த உடன்படிக்கையைத் தொடர்ந்தும் நடைமுறைப்படுத்துவதில் உறுதிப்பாட்டுடனிருப்பதாகக் கூறிக்கொள்ளும் அரசாங்கம், அதன் முக்கிய அம்சங்களில் ஒன்றாகவுள்ள `ஏ-9' பாதையைத் திறந்துவிடும் விவகாரத்தில் பகிரங்கமாகவே தன்னுடைய எதிர்ப்பை வெளிப்படுத்துகின்றது!
"யாழ். குடாநாட்டுப் போக்குவரத்துக்காக `ஏ-9' பாதையைத் திறந்துவிடுவதற்கு அரசாங்கம் உடன்படமாட்டாது" எனத் தெரிவித்திருக்கும் அமைச்சரும் பாதுகாப்புத்துறை பேச்சாளருமான கெஹலிய ரம்புக்வெல மாற்றுப் பாதை தொடர்பான யோசனைகள் எதனையும் புலிகள் முன்வைத்தால் அது தொடர்பாக ஆராய்வதற்கு அரசு தயாராகவிருப்பதாகவும் அறிவித்திருக்கின்றார்.
ஏ-9 பாதையைத் திறக்காமலிருப்பதற்கான அரசு தரப்பு நியாயத்தையும் அமைச்சர் விளக்கியிருக்கின்றார். "விடுதலைப்புலிகள் `ஏ-9' பாதையைத் திறக்க வேண்டுமென அடம்பிடிப்பதற்குக் காரணம், மக்களிடமிருந்து வரி என்ற பெயரில் பணம் பறிப்பதற்கேயாகும். இதனால், பொது மக்கள் பெரும் நெருக்கடியை எதிர்கொள்கின்றார்கள். எனவே, ஏ-9 பாதையைத் திறப்பதற்கு அரசு தயாராகவில்லை". இது தான் அமைச்சர் ரம்புக்வெல மூலமாக வெளிப்படுத்தப்பட்டுள்ள அரசாங்கத்தின் நிலைப்பாடாகும்.
அதாவது, புலிகள் வரி வசூலிப்பதைத் தடுப்பது தான் ஏ-9 பாதையை மூடிவைத்திருப்பதற்கு அரசாங்கம் கூறும் ஒரே காரணம்!
ஆனால், இதற்காக அரசாங்கம் முன்வைத்துள்ள மாற்று யோசனை - அரசாங்கத்தின் உள்நோக்கம் தொடர்பில் சந்தேகங்களை ஏற்படுத்துகின்றது. ஏ-9 பாதைக்குப் பதிலாக பூநகரி - சங்குப்பிட்டி ஊடான கடல்வழிப் பாதையைத் திறப்பதற்கு தாம் தயாராகவிருப்பதாக அரசாங்கத் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. அரசாங்கத்தின் இந்த அறிவிப்பு முரண்பாடுகளைக் கொண்டிருப்பதால் அரசின் நோக்கத்தில் சந்தேகங்களை எழுப்புவதாகவே அமைந்துள்ளது.
ஏ-9 பாதையைப் போலவே பூநகரி - சங்குப்பிட்டி பாதையும் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியூடாகத்தான் செல்கின்றது. ஏ-9 இல் புலிகள் வரி வசூலிப்பார்கள் எனக் கூறும் அரசாங்கம், பூநகரி - சங்குப்பிட்டிப் பாதையைப் பயன்படுத்தும் போது மட்டும் புலிகள் வரி வசூலிக்கமாட்டார்கள் என்ற உறுதிப்பாட்டைப் பெற்றிருக்கின்றதா?
புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு முரணாக ஏ-9 பாதையை மூடிவைத்துள்ள அரசாங்கம், அதற்காகக் கூறியுள்ள காரணம் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை. அரசாங்கம் ஏதோ உள்நோக்கத்துடன் செயற்படுகின்றதா என்ற கேள்வியையே இது எழுப்புகின்றது.
அதேவேளை, குடாநாட்டுக்கும் பிரதான நிலப்பரப்புக்குமிடையேயான போக்குவரத்துக்கு ஏ-9 பாதையே இலகுவானதும், சுலபமானதுமாகும். பூநகரி - சங்குப்பிட்டி பாதையானது ஒரு கடல் வழிப்பாதையாகும். உணவுப் பொருட்களுடனான லொறிகள், அம்புலன்ஸில் நோயாளர்களை அனுப்பிவைத்தல் போன்ற தேவைகளுக்கு இது பொருத்தமானதல்ல.
ஆக, ஏ-9 பாதைக்கு மாற்றாக பூநகரிப் பாதையை அரசாங்கம் சிபாரிசு செய்வதன் பின்னணியிலுள்ள மர்மம் அரசாங்கத்துக்கு மட்டுமே புரியக் கூடியது. இதற்காக அரசாங்கத் தரப்பில் தெரிவிக்கப்படும் நியாயங்கள் ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இல்லை!
இதேவேளை, யாழ். மாவட்ட ஆயர் வண.பிதா தோமஸ் சௌந்தரநாயகம் ஏ-9 பாதை உடனடியாகத் திறக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு அவசர வேண்டுகோள் ஒன்றை முன்வைத்திருக்கின்றார். இப்பாதை உடனடியாகத் திறக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும், அவர் தன்னுடைய கடிதத்தில் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.
யாழ்ப்பாணத்துக்குத் தேவையான உணவுப் பொருட்களுடனான லொறிகள் ஏ-9 பாதையூடாகவே அனுப்பப்படுகின்றது. பெற்றோல் போன்ற எரிபொருட்களும் இப்பாதையூடாகவே செல்கின்றது. நோயாளர்கள் அம்புலன்ஸ் மூலமாக இப்பாதையூடாகவே வவுனியாவுக்கோ, கொழும்புக்கோ அனுப்பி வைக்கப்படுகின்றார்கள். யாழ்ப்பாணத்தின் விவசாயப் பொருட்கள் இப்பாதையூடாகவே கொழும்புக்கு அனுப்பப்படுகின்றன. இவற்றைவிட தினசரி ஆயிரக்கணக்கான மக்கள் தமது தேவைகளுக்காக இப்பாதையைப் பயன்படுத்துகின்றார்கள்.
இந்தக் காரணங்களைக் குறிப்பிட்டுள்ள யாழ். ஆயர், ஏ-9 பாதையை உடனடியாகத் திறந்துவிட வேண்டும் என வலியுறுத்தியிருக்கின்றார். ஏ-9 ஐத் திறந்துவிடுவதற்கு விடுதலைப்புலிகள் இணக்கம் தெரிவித்துள்ளார்கள் என்பதையும் ஆயர் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆக, ஏ-9 ஐ மூடி வைத்துள்ளமைக்குப் போலியான காரணங்களைச் சொல்வதை அரசாங்கம் இனிமேலாவது தவிர்த்துக்கொள்ள வேண்டும். மக்களுடைய அவல நிலையை உணர்ந்து இந்தப் பாதை உடனடியாக திறக்கப்படுவதற்கான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையும் அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும்!
இல்லையெனில் மக்கள் மீது தேவையற்ற அழுத்தங்களை அரசாங்கம் திணிக்கின்றது என்ற கருத்து வலுவடைவதைத் தடுக்க முடியாது போய்விடும். அத்துடன், மக்களுடைய இந்த பாரிய மனிதாபிமானப் பிரச்சினையைக் கூட தீர்க்க முடியாதுள்ள அரசாங்கம், இனநெருக்கடிக்கு நிரந்தரத் தீர்வு எனக் கூறிக்கொள்வது அர்த்தமுடையதாகவும் இருக்காது.
Thinakkural
|