 இலங்கையில் தற்போது கடைப்பிடிக்கப்பட்டு வரும் யுத்தநிறுத்த ஒப்பந்தத்தை இன்னும் பலம்மிக்கதாக மாற்றியமைக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டியதோடு இனப்பிரச்சினைக்கான தீர்வானது பேச்சுவார்த்தைகள் மூலமான சமாதானத்தீர்வாக அமையவேண்டும்
என இந்திய பாராளுமன்ற கபினட் உறுப்பினரும் இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சருமான மணி சங்கர் அய்யர் தெரிவித்தார்.
இலங்கையின் முன்னாள் பிரதமரான எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்கவின் 47
ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு இலங்கைக்கு விஜயம் செய்திருந்த மணி சங்கர்
அய்யர் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று
ஆற்றிய நினைவுப் பேருரையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
மேலும் அவர் அங்கு உரையாற்றுகையில் கூறியதாவது;
வன்முறைகள் மேலும் வன்முறைகளுக்கே இட்டுச்செல்லும்.இலங்கை பிரச்சினையை
தீர்க்க ஒரே வழி சமாதான பேச்சவார்த்தைகள் மூலமான இணக்கப்பாடேயாகும்.
அண்மையில் இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு இலங்கைக்கான இந்தியத்
தூதுவர் நிருபமா ராவ் கூறியதை இங்கு நான் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.
அதாவது இப்பிரச்சினையை தீர்ப்பதற்கு ஒரு தீர்வுத்திட்டத்தை உருவாக்க தேசிய
இணக்கப்பாடொன்றை எட்டுவதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகளை நாம்
வரவேற்கிறோம்.
ஐக்கிய இலங்கைக்குள் உச்சபட்ச அதிகார பகிர்வு என்னும்
அரசாங்கத்தின் நிலைப்பாடு வரவேற்கக்கூடியது.
இலங்கையின் இறையாண்மை மற்றும்
ஆட்புல ஒருமைப்பாடு என்பனவற்றை இந்தியா என்றுமே மதித்துச் செயற்படும்
என்று கூறியிருந்தார்.
ஐக்கிய இலங்கைக்குள் உட்சபட்ச அதிகார பகிர்வு மூலமான தீர்வொன்றை காண்பதே
இப்பிரச்சினைக்கான சிறந்த தீர்வாக அமையும்.
அனைத்து மக்களினதும்
அபிலாஷைகள் உறுதிப்படுத்தப்பட்ட தீர்வாக இது
அமையவேண்டும்.
அரசியல் ஜனநாயகப் பன்முகத்தன்மை என்பன குறித்த எமது
அனுபவங்களை நாம் இலங்கையுடன் பரிமாறிக்கொள்ள என்றுமே தயாராக
இருக்கின்றோம்.
இலங்கையும் இந்தியாவும் பலவழிகளிலும் பிணைப்புக்களை
கொண்டிருக்கும் நாடுகளாகும்.
பூகோள ரீதியாக கலாசார ரீதியாக, சமய ரீதியாக என
பல்வேறு ரீதியிலும் நாம் பல ஒற்றுமைகளையும் கொண்டுள்ளோம்.
பல்மொழி பல்கலாசார மக்கள் வாழும் நாடுகள் எமது தெற்காசிய நாடுகளாகும்.
உலகில் முதலாவது இந்து நாடு இந்தியா.
இரண்டாவது பெரிய இஸ்லாமிய நாடும்
இந்தியாவேயாகும். மிகப்பழைமையான கிறிஸ்தவ நாடும் எமதே. புத்த பகவானையும்,
குரு நாணக்கையும் இன்னும் பல அவதார புருஷர்களையும் இவ்வுலகிற்கு தந்ததும்
இந்திய நாடேயாகும்.
அனைவரும் அனைத்து இன மக்களும் ஒன்றாக வாழக்கூடிய சக்தியை நாம்
கொண்டிருக்கிறோம்.
ஆசிய நாடுகளின் இலக்கு ஒற்றுமையை நோக்கியதாக இருக்க
வேண்டும். 19ஆம் நூற்றாண்டு ஐரோப்பியர்களுடையது.
20ஆம் நூற்றாண்டு
அமெரிக்கர்களுடையது.அதுபோல இந்த 21ஆம் நூற்றாண்டு ஆசிய நாட்டவர்களான
எமக்குரியது.
தெற்காசிய நாடுகளுக்குள் ஒருமித்த இணக்கப்பாடொன்றினை எட்டுவதன் மூலம் எமது இலக்குகளை அடைய நாம் முயற்சிக்க வேண்டும்.
நேற்øறய இந்த நினைவுப் பேருரைக்கு விசேட அதிதியாக இந்தியத் தூதுவர்
நிருபமா ராவும் கலந்து கொண்டார்.
மேலும் அமைச்சர்களான அநுரா
பண்டாரநாயக்கஇநிமல் சிறிபால டீ சில்வா ஆகியோருடன் மேல் மாகாண முதல்வர்
அலவி மௌலானா உட்பட்ட பல பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டிருந்தனர்.
இன்று இந்தியா திரும்பும் மணி சங்கர் அய்யர் நேற்று மாலை ஜனாதிபதி மகிந்த
ராஜபக்ஷவை சந்திக்க ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டிருந்தமையும் இங்கு
குறிப்பிடத்தக்கது.
நெருடல் இணையம்
|