|
 செப்ரெம்பர் 26 ஆம் நாள் தமிழின வரலாற்றில் நீங்காத இடம்பிடித்த நாள், தம்மினத்தின் தேசிய ஆன்மாவை உசுப்பிவிட்ட நிகழ்வு நடந்த நாள்.
அனுபவத்திரட்சியும் ஆளுமை வீச்சும் கொண்ட அற்புத மனிதர்களான கேணல் சங்கரும் திலீபனும் இம்மண்ணை விட்டு அகன்ற கரிநாள்.
அணு
ஆயுத வல்லரசான இந்தியாவுடன் போரிட முன், அவர்களின் தேசியத் தந்தை காந்தி
வழியை கடைபிடித்தவன்தான் இந்த பார்த்தீபன்.
ரூபாய் நோட்டில் காந்தியை
வழிபடுபவர்கள் அவரின் அகிம்சைக் கோட்பாட்டினை இன்னமும் கடைபிடிப்பார்கள்
என்று கற்பிதம் கொண்டது திலீபனின் எதிர்பார்ப்பாக இருந்தது.
ஆயுதச் சமரில் மட்டுமல்ல அகிம்சைப் போரிலும் தாம் சளைத்தவர்கள் அல்ல என்று
உலகுக்கு உரத்தும் கூறியவர்கள்தான் புலிகள்.
பிராந்திய வல்லாதிக்க நலனைக்
காக்க, சிறிலங்காவுக்கு இந்தியா அளித்த விட்டுக் கொடுப்புக்களின் அதியுச்ச
நிகழ்வாகவே திலீபனின் மரணத்தைக் கருதலாம்.
உலக ஆயுதப் போராட்ட வரலாற்றில்
எதிரியின் சிறைக்கு வெளியே மக்கள் முன்னிலையில் அகிம்சைப் போர் நிகழ்த்தி
உயிர் துறந்த ஒரு வன்முறைப் போராளி திலீபனாகத்தான் இருக்க முடியும்.
சிறிலங்காவின் அழைப்பின் பேரில் இலங்கை வந்து புலிகளைச் சந்தித்த முன்னால்
ஐரிஸ் போராளி மார்ட்டின் மக்கினசின் சக தோழன் 'பொபிசான்ட்ஸ்" எதிரியின்
சிறையிலேயே உண்ணாவிரதமிருந்து மடிந்தான்.
போராட்ட சரித்திரத்தில் புதிய
வரலாறு படைத்துக் கொண்டிருப்பவர்கள்தான் புலிகள்.
ஒரு மனிதனிடம்
இழப்பதற்கு ஆயிரம் விடயங்கள் உண்டு.
சுற்றார், உற்றாரையும் இழக்கலாம்.
சேர்த்து வைத்த பொருள் மற்றும் பண்டங்களையும் இழக்கலாம்.
ஏன்
தன்மானத்தையும் கூட சிலர் இழக்கலாம்.
ஆனால் தன்னுயிரை இழக்க எவரும்
விரும்பமாட்டான். மரண பயம் மனிதனோடு இணைந்த ஒன்று.
இலட்சியத்திற்கான தனது உடலை வருத்தி இன்னுயிரை சிறுகச் சிறுக இழக்கும் ஒரு
மனிதனை எந்தவிதமான மானுடவியல் வரையறைகளுக்கும் அப்பாற்பட்டதொரு உன்னத
ஜீவனாகக் கொள்ளலாம்.
திலீபனின் இலட்சியத் தீ, அவனது உடலைச் சிறிது சிறிதாக
அரித்து, உயிர்ப்பூவை வெளித்தள்ளும்போது அவனைச் சூழவிருந்த மக்கள் கூட்டம்
எழுப்பிய ஓலங்கள், விம்மி வெடித்த நெஞ்சுக்கூடுகள், பிரபஞ்ச ஆத்மாவைக்
கிழித்தெறிந்து ஏற்படுத்திய அதிர்வலைகள், மகாத்மா காந்தியையும் தலைகுனிய
வைத்திருக்கும்.
தமிழீழப் போராட்ட வரலாற்றில் மிகவும் குறிப்பிடத்தக்க இன்னுமொரு
மனிதர்தான் கேணல் சங்கர்.
தனது புலமைசார் பொறியியல் துறையினை
போராட்டத்துக்கு அர்ப்பணித்த இலட்சிய மானிடன். இவரின் சகோதரனான கரன்
என்பவரே பலாலி முகாமில் சிறை வைக்கப்பட்ட போது சயனைட் உட்கொண்டு சாவினைத்
தழுவிக் கொண்ட பன்னிரு வேங்கேகைகளில் ஒருவர்.
அத்துலத் முதலியின்
கபடத்தனத்தால் பலாலியிலிருந்து கொழும்புக்கு கொண்டு
செல்லப்பட்டவிருந்தபோது தலைவனின் ஆணையை ஏற்று அண்ணன் கரனுக்கு சயனைட்
குப்பி கொடுத்தவரும் இந்த சங்கர்தான்.
குடும்ப உறவினைவிட இலட்சியமே பெரிதெனப் போற்றிய வரலாற்று புருஷர் இவர்.
தலைவனின் கனவினை நிறைவேற்ற, தமிழனுக்கென்று ஒரு தனி விமானப் படை அமைத்திட
கால்கோள் இட்டவரும் இவரே.
கிளைடரில் தொடக்கப் புள்ளி இட்டு இன்று
கிபீருடன் மோதும் வல்லமை பெற்றுள்ளது இந்த வான்புலிப் படை. இதன் முழுப்
பரிமாணமும் இறுதிப் போரிலேயே வெளிப்படும்.
இந்த ராஜகீரிகளின் வரவினை
எதிரிகளும் பிராந்திய நலன்சார் கூட்டங்களும் திகைப்புடன்
எதிர்பார்க்கின்றனர்.
தம்பியின் இலட்சியக் கனவுக்கு அண்ணன் சங்கர்
அத்திவாரமிட்டு, ஆழ ஊடுருவும் புறமுதுகுக் கோழைகளால் வீழ்த்தப்பட,
அண்ணனின் பணியைத் தொடர்ந்த தம்பி, அப்படையின் முழுப்பரிமாணத்தையும் நிறைவு
பெறச் செய்துள்ளார்.
அண்ணன் பாதை போட, தம்பி நகரத்தையே நிர்மாணம் செய்துள்ளார்.
போராடக் கற்றலும் கற்பதற்காக போராடுதலுமே இவர் வழிமுறiயாகும்.
ஆச்சரியக்குறிகள் முற்றுப் புள்ளியாக மாறும் காலத்திலேயே இவர்களின்
இலட்சியம் நிறைவேறும். வாழ்விற்கான அர்த்தங்களைத் தேடியலைபவர்கள்
இவர்களின் வாழ்க்கையைத் தம்முடன் உரசிப் பார்த்தாலே புத்தொளி பிறக்கும்.
இலட்சிய நோக்கினை நிறைவேற்றும் பாதையில் முன்பு பலர் உண்ணாநிலைப்
போராட்டத்தைக் கடைப்பிடித்தாலும் அதை முழுமை பெறச் செய்ததுடன் அதாவது நீர்
அருந்தாமல் தனது இன்னுயிரைத் துறந்தது வரலாற்றில் திலீபனாகத்தான் இருக்க
முடியும்.
இந்திய வல்லரசுடன் மோதும் ஆத்ம பலத்தைக் கொடுத்ததும் இவனது இழப்பே.
சோசலிசப் போராட்டத்தில் மட்டுமல்லாது தேசிய விடுதலைப் போரிலும் ஒட்டுமொத்த
மக்கள் புரட்சிக்கான புதிய பரிமாண வடிவம் இணைந்துள்ளதென்பதை உரத்த குரலில்
செய்தி சொன்னவனும் இவனே.
மலரும் தமிழீழத்தை வானத்திலிருது திலீபன் மட்டுமல்ல, சங்கரின்
வான்பறவைகளும் தரிசிக்கத்தான் போகின்றன. திலீபன் கண்ட மக்கள்
புரட்சிக்கனவினை நிஜமாக்க தலைவனால் உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கும்
மக்கள் படையணியே வாழும் சான்றாகும்.
உலகப் போராட்ட வரலாறுகளில் பதிவு செய்யப்பட்ட அனைத்துக் கொடூரங்களும்
எம்மண்ணில் மீளவும் நிறைவேற்றப்படுகின்றன. எல்சல்வடோர் நாட்டில் நிகழ்ந்த
வீதிப் படுகொலைகள், சிறிலங்கா அரசால் தற்போதும்
கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளது. திலீபனின் மக்கள் புரட்சிக்கான கொதிநிலை,
உச்சகட்டத்தை அடைந்துவிட்டது. தன்னியல்பான பொங்குதமிழ் எழுச்சி வடிவம்,
நிறுவனமயப்பட்ட மக்கள் புரட்சியாக வெடிக்கும் காலம் கனிகிறது.
சிறுசிறு சம்பூர் சலசலப்புகளில் மனம் சோர்வடையாமல் இறுதி நிகழ்விற்காக நம்மை தயார்படுத்தலே திலீபனுக்கு நாம் செலுத்தும் காணிக்கை.
நன்றி:- சி.நிதீபன்-
|