பிரதான பக்கம் arrow Karuna Antharangam arrow இலக்கு வைக்கப்படும் பூநகரி
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English

இலக்கு வைக்கப்படும் பூநகரி அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Sunday, 01 October 2006
sized_poonakari-mapஇலங்கை நிலைமை குறித்து எதுவுமே தீர்மானிக்க முடியாத நிலை தோன்றியுள்ளது. சமாதான முயற்சிகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கான வாய்ப்புகள் கிட்டியுள்ள போதிலும் புதிய, புதிய நிபந்தனைகள் மூலம் சண்டைக்கான முனைப்புகளே காட்டப்படுகிறது.

புலிகள் மிகவும் பலவீனமாகி விட்டார்களென்ற நினைப்பிலேயே அரசின் பல்வேறு செயற்பாடுகளும் அமைந்துள்ளதால் புதிய, புதிய நிபந்தனைகளை விதிப்பதன் மூலம் அரசு சமாதான முயற்சிகளை தொடர்ந்தும் நெருக்கடிக்குள் தள்ளிக் கொண்டிருக்கிறது.

விடுதலைப் புலிகளது நடவடிக்கைகளும், அவர்கள் பலவீனமடைந்துள்ளது போன்றதொரு தோற்றப்பாட்டை அரசுக்கும் இனவாதிகளுக்கும் ஏற்படுத்தி வருவதால் அவர்களும் புலிகளை சந்தர்ப்பம் பார்த்து மடக்கும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

poonakari-map அண்மைக் கால கடும் சமர்களின் மத்தியில் மீண்டுமொரு முறை பேச்சுகளுக்கான வாய்ப்பு கிட்டியுள்ளது. இரு தரப்பும் நிபந்தனையின்றிப் பேச ஆயத்தமாயிருப்பதாக இணைத் தலைமை நாடுகளின் கூட்டத்தின் முடிவில் நோர்வே அனுசரணையாளர்கள் வெளியிட்ட அறிவிப்பு இலங்கை அரசுக்கு கடும் சீற்றத்தை ஏற்படுத்தியது.

முன்னைய காலங்களில், புலிகளின் பலம் குறித்த அச்சத்தில் நிபந்தனையற்ற பேச்சுகளுக்குத் தயாராயிருந்த இலங்கை அரசு, தற்போது விடுதலைப் புலிகளுக்கு மட்டுமன்றி நோர்வே அனுசரணையாளர்களுக்கும் இணைத் தலைமை நாடுகளுக்கும் நிபந்தனைகளை விதித்து வருகிறது.

விடுதலைப் புலிகள் பெரிதும் பலவீனமடைந்து விட்டதாகக் கருதும் அரசும் இனவாதிகளும், மீண்டுமொரு பேச்சுவார்த்தையென்பது புலிகள் தங்களை மீண்டும் கட்டியெழுப்ப வழங்கப்படும் சந்தர்ப்பமென்றே கருதுகின்றன.

இதனாலேயே புலிகள் ஏற்றுக் கொள்ள முடியாத நிபந்தனைகளை முன் வைப்பதன் மூலம் அவர்களை சமாதானப் பேச்சுக்களுக்கு வராது செய்வதன் மூலம் மீண்டும் யுத்தத்தை நடத்தி புலிகளை மேலும் மேலும் பலவீனமாக்கி, இனப் பிரச்சினைக்கு தாங்கள் விரும்பும் தீர்வைத் திணித்து விடலாமென அரசு கருதுகிறது.

தற்போதைய நிலையில் புலிகளுடன் சமாதானப் பேச்சுகளை ஆரம்பியுங்களென கூறுவோரையெல்லாம் கடும் சினத்துடன் பார்க்கும் இலங்கை அரசும் இனவாதிகளும், புலிகளுக்கெதிரான யுத்தத்திற்கு ஆதரவு வழங்குவோரையெல்லாம் அரவணைத்து வருகிறது.

போர் நிறுத்த உடன்பாடு அமுலிலிருக்கையிலும் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு பணியில் ஈடுபடுகையிலும் இலங்கையில் கடும் சமர் நடைபெறுகிறது. தினமும் நடைபெறும் தாக்குதல்கள் போர் நிறுத்த மீறல்கள் மற்றும் படுகொலைகள் குறித்து கண்காணிப்புக் குழு வெளியிடும் அறிக்கைகள் அரசினதும் இனவாதிகளினதும் கடும் கண்டனத்துக்குள்ளாகிறது. இதனால் கண்காணிப்புக் குழுவின் அறிக்கைகளும் ஒரு பக்கச் சார்பாகி வருகிறது.

கடந்த இரு மாதங்களில் இரு நூறுக்கும் மேற்பட்ட அப்பாவிப் பொது மக்கள் கொல்லப்பட்டதாகக் கூறும் கண் காணிப்புக் குழு தனது அறிக்கையில் இவற்றுக்கெல்லாம் இரு தரப்புமே காரணமெனப் பொதுப்படையாக கூறி தான் தப்பப் பார்க்கிறது.

நிழல் யுத்தம் தொடங்கி அது படுகொலைகளாக மாறி பின் நிஜப் போர் வெடித்த போதும் கண்காணிப்புக் குழு மௌனம் சாதித்தது. போர் நிறுத்த உடன்பாடு இன்று முற்று முழுதாக முடிவுக்கு வந்துள்ள நிலையிலும், இந்த நிலைமைக்கு காரணமானவர்களை வெளியுலகுக்கு அம்பலப்படுத்தாது கண்காணிப்புக் குழு மௌனம் சாதிக்கிறது.

யாழ். குடா நாட்டுக்கான தரை வழிப் பாதை மூடப்பட்டுள்ளது. இந்தத் தரை வழிப் பாதையை (ஏ9) திறக்க மறுக்கும் அரசு இதற்குப் பதிலாக பூநகரி-சங்குப்பிட்டி கடல் வழிப் பாதையை திறக்க முற்படுகிறது. ஆனால், புலிகள் இதற்கு சம்மதிக்கவில்லை.

`ஏ9' பாதையை திறப்பதன் மூலம் புலிகளுக்கு பெருமளவு வரி கிடைக்கும் என்பதால் அதனைத் தடுக்கும் நோக்கிலேயே அப்பாதையைத் திறக்க அரசும் படைத் தரப்பும் மறுத்து வருகின்றன. அத்துடன், அந்தப் பாதையை திறப்பதாயின் குடா நாட்டின் மீது மீண்டும் தாக்குதலை நடத்தமாட்டோமென்றும் `ஏ9' வீதியூடான பயணத்தின் போது வரி அறவிடப்படமாட்டாதெனவும் புலிகள் உத்தரவாதமளிக்க வேண்டுமென அரசு புதிய நிபந்தனை விதித்துள்ளது.

இதனைப் புலிகள் ஒரு போதும் ஏற்றுக் கொள்ள மாட்டார்களென்பதால் `ஏ9' பாதையை திறக்க வேண்டிய தேவையேற்படாதென அரசு கருதுகிறது. `ஏ9' பாதை மூடப்பட்ட போது திருகோணமலை துறைமுகம் புலிகளின் முற்றுகைக்குள்ளிருந்தது.

இதனால் `ஏ9' பாதையை மூடுவதாயின் குடா நாட்டின் கடல் வழி விநியோகப் பாதையை உடனடியாகத் திறக்கவேண்டிய அவசர தேவை அரசுக்கு ஏற்பட்டது. ஆனாலும், சம்பூரில் நிலைகொண்டிருந்த புலிகள் திருமலைத் துறைமுகத்தின் செயற்பாடுகளை முற்று முழுதாக முடக்கியிருந்ததால் திருமலைத் துறைமுகத்தை இந்த முற்றுகையிலிருந்து மீட்டு குடா நாட்டுக்கான கடல் வழி விநியோகத்தை உடனடியாக ஆரம்பிக்க வேண்டிய அவசர நிலை அரசுக்கு ஏற்பட்டிருந்தது.

இதையடுத்தே `ஏ9' பாதையை மூடிய அரசு உடனடியாக சம்பூர் மீது படையெடுத்து அதனைக் கைப்பற்றி திருமலைத் துறைமுகம் மீதான புலிகளின் முற்றுகையை நீக்கி தற்போது திருமலைக்கும் யாழ்.குடாநாட்டுக்குமிடையிலான கப்பல் போக்குவரத்தை நடத்துகிறது.

இதேநேரம் `ஏ9' பாதையை மூடிய போதும் பூநகரி மற்றும் கல்முனைப் பகுதிகளிலிருந்து விடுதலைப் புலிகள் தொடர்ந்தும் யாழ்.குடா நாட்டில் பலாலி இராணுவத்தளம், காங்கேசன்துறை கடற்படைத் தளம் உட்பட அனைத்துப் பகுதிகள் மீதும் ஆட்லறி ஷெல் தாக்குதலை நடத்தி வருகின்றனர். இது படையினருக்கு மிகப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி வருகிறது.

`ஏ9' பாதையை எவ்வேளையிலும் திறக்க தாங்கள் தயாரெனக் கூறி வரும் புலிகள் இதற்கான உத்தரவாதத்தை போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவிடமும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திடமும் வழங்கியுள்ளது. முகமாலை மற்றும் அதனை அண்டிய பகுதிகள் மீது தாக்குதல்களை நிறுத்துவோமெனவும் உறுதியளித்துள்ளனர்.

ஆனால் `ஏ9' வீதியை மூடி மாற்று வழியைத் திறக்கச் செய்வதன் மூலம் புலிகளுக்கு நெருக்கடிகளை ஏற்படுத்த அரசு முயல்கிறது. இதனால், தான் `ஏ9' வீதியை திறப்பதாயின் குடாநாட்டின் மீதான தாக்குதல்களை உடனடியாக நிறுத்துவோமென்றும் வரி அறவிடமாட்டோமெனவும் புலிகள் உத்தரவாதமளிக்க வேண்டுமென அரசு கூறியுள்ளது.

புலிகள் இதற்கு ஒரு போதும் இணங்கமாட்டார்களென அரசுக்கும் படையினருக்கும் தெரியும். அதேநேரம், புலிகளின் தற்போதைய ஆட்லறி தளம் பூநகரியில் உள்ளதால், பூநகரியிலிருந்து குடா நாட்டில் படைத் தளங்களுக்கு ஏற்படும் அச்சுறுத்தலைத் தடுக்க அரசுக்கு இரு வழிகளுள்ளன. அத்துடன் பூநகரி சங்குப்பிட்டி - கேரதீவு பாதையை திறக்கச் செய்வதன் மூலம் மற்றொரு இலாபத்தை பெற முடியுமென அரசு கருதுகிறது.

அதாவது, சங்குப்பிட்டிக்கும் கேரதீவுக்குமிடையில் குறுகிய கடற்பிரதேசமுள்ளதால் `ஏ9' வீதி மூடப்பட்டிருந்தால் வர்த்தகர்கள் சங்குப்பிட்டி-கேரதீவு கடல் வழியாக குடா நாட்டுக்குள் பொருட்களை கொண்டு செல்லாது கொழும்பிலிருந்து கடல் வழியாக யாழ் குடா நாட்டுக்கு பொருட்களை அனுப்ப முனைவர். இதன் மூலம் புலிகள் வரி அறவிடுவதை தடுக்க முடியுமென அரசு கருதுகிறது.

இதை விட பூநகரிப் பாதையை திறப்பதென்றால் அப்பகுதி பாதுகாப்பான பிரதேசமாயிருக்க வேண்டும். அவ்வாறு பாதுகாப்பு பிரதேசமாக வேண்டுமானால் புலிகளின் ஆட்லறி நிலைகளை அங்கிருந்து அகற்ற வேண்டும். அவ்வாறு அகற்றும் பட்சத்தில் குடாநாட்டு, படைமுகாம்கள், பலாலி படைத் தளத்திற்கான புலிகளின் ஆட்லறி தாக்குதல் அச்சுறுத்தல் இல்லாமல் போய் விடும்.

இது ஒரு வழி. இதை விட, புலிகள் பூநகரி ஊடான பாதையை திறக்கா விட்டால் பூநகரியை இலக்கு வைத்து பாரிய படை நடவடிக்கையொன்றை மேற்கொள்வது. இதன் மூலம் பூநகரியை கைப்பற்றி விட்டால் குடா நாட்டுக்கான புலிகளின் ஆட்லறி தாக்குதல் அச்சுறுத்தலை இல்லாது செய்யும் அதே நேரம் பூநகரியை கைப்பற்றுவதன் மூலம் பின்னர் ஆனையிறவை கைப்பற்றுவது சுலபமெனவும் படையினர் கருதுகின்றனர்.

ஆனையிறவுப் பிரதேசமே யாழ்.குடாநாட்டின் பாதுகாப்புக்கான கோட்டையாகும். ஆனையிறவை மீண்டும் கைப்பற்றுவதன் மூலமும் பூநகரியை மீண்டும் கைப்பற்றுவதன் மூலமும் குடா நாட்டின் மீதான புலிகளின் அச்சுறுத்தலை நீக்குவது மட்டுமன்றி புலிகளின் கட்டுப்பாட்டிலிருக்கும் கிளிநொச்சிக்கும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்த முடியுமெனவும் அரசும் படைத் தரப்பும் கருதுகின்றன.

அதேநேரம், புலிகளுடனான அடுத்த கட்டப் பேச்சில் புலிகளின் பலத்தை எந்தளவுக்கு குறைக்க முடியுமோ அந்தளவிற்கு அவர்களைப் பலவீனப்படுத்தி அவர்களது பேரம் பேசும் ஆற்றலை வெகுவாகக் குறைக்க வேண்டுமென்பதில் அரசு தீவிர கவனம் செலுத்துகிறது. அதற்காக அரசு சில நடவடிக்கைகளை மேற்கொள்ள முனையும்.

`ஏ9' வீதிக்கு மாற்றாக பூநகரி ஊடான பாதையைத் திறப்பது குறித்து பரிசீலிப்போமென அரசு தரப்பு கூறி வருவதால் அவர்கள் பூநகரியில் மிகுந்த கவனம் செலுத்தி வருவது தெளிவாகிறது. இதனால், பூநகரி ஊடான பாதையை திறக்க புலிகள் முன் வராவிட்டால் பூநகரியை கைப்பற்ற படையினர் பாரிய நகர்வொன்றை மேற்கொண்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

ஏனெனில் திருமலைத் துறைமுகம் மீதான புலிகளின் முற்றுகையை விடுவிக்குமுன்னர், அரசு சம்பூர் குறித்து தீவிர கவனம் செலுத்தியதுடன் அங்கிருந்து புலிகள் விலக வேண்டுமென்றும் கூறி வந்தது. அதே போன்றதொரு சூழ்நிலை தற்போது பூநகரிப் பகுதிலும் ஏற்பட்டுள்ளது.

இதேநேரம், சம்பூரில் இராணுவத்தினர் பாரிய நடவடிக்கையை ஆரம்பிக்கு முன்னர் சம்பூரிலிருந்து தங்களது ஆட்லறிகளை பின் நகர்த்த தாங்கள் தயாராயிருந்ததாகவும் அது தொடர்பாக தாங்கள் கண்காணிப்புக் குழுவுடன் பேச்சுகள் நடத்திக்கொண்டிருக்கையிலேயே பாரிய படை நகர்வு மேற்கொள்ளப்பட்டதாகவும் புலிகள் கூறியிருந்தனர்.

இதனால், இம்முறை கூட `ஏ9' தரை வழிப் பாதைக்குப் பதிலாக பூநகரி ஊடான சங்குப்பிட்டி-கேரதீவு பாதையைத் திறக்க புலிகள் சம்மதித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

பூநகரிப் பாதையை புலிகள் திறக்க சம்மதித்தால், முகமாலையிலிருந்து `ஏ9' வீதியூடாக ஆனையிறவை நோக்கி படைநகர்வொன்றை மேற்கொள்ளவும் அரசு முயலக் கூடும்.

முகமாலைப் பகுதியிலும் எழுதுமட்டுவாளிலும் தொடர்ந்தும் மோதல்கள் நடப்பது போன்றதொரு தோற்றப் பாட்டை அரசும் படையினரும் ஏற்படுத்தி வருகின்றனர். தினமும் இங்கு மோதல்கள் நடப்பதாகவும் புலிகள் தொடர்ச்சியாக ஆட்லறி ஷெல் மற்றும் மோட்டார் குண்டுகளை ஏவி வருவதாகவும் படைத் தரப்பு கூறுகிறது.

`ஏ9' பாதையை திறக்காமல் விடுவதாயின் இப் பகுதியில் தினமும் மோதல்கள் நடப்பது போன்றும் படையினர் மீது புலிகளே தாக்குதல் நடத்துவது போன்றதொரு தோற்றப்பாட்டை ஏற்படுத்த வேண்டும்.

அதற்கேற்ப குடா நாட்டின் ஏனைய பகுதிகளிலிருந்து தினமும் முகமாலை மற்றும் பளைப் பகுதிகளை நோக்கி பலத்த ஷெல் மற்றும் பல்குழல் ரொக்கட் தாக்குதல்கள் நடத்தப்படுவதுடன் முகமாலைக்கும் பளைக்குமிடையில் புலிகளின் நிலைகள் மீது தொடர்ச்சியாக தாக்குதல்களை நடத்தி அவர்களை அப்பகுதியில் பலவீனமடையச் செய்ய வேண்டிய தேவையும் படையினருக்குள்ளது.

இதனால் தற்போதைய சூழ்நிலையில் புலிகளுடன் பேச்சுக்கு செல்ல முன்னர் அவர்களைப் பலவீனப்படுத்தி, பேரம் பேசும் ஆற்றலைக் குறைக்கத் தேவையான அனைத்து முயற்சிகளிலும் அரச தரப்பு ஈடுபடும். அதற்காக, பேச்சுக்கு முன்னர் வடக்கில் அவர்கள் பாரிய படை நடவடிக்கையொன்றில் கூட இறங்கலாம்.

இதேநேரம், போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவும் மிகவும் பலவீனமடைந்திருப்பதாலும் அவர்கள் மீதும் அரசு கடும் நெருக்கடிகளை ஏற்படுத்துவதாலும், நடைபெறும் போர் நிறுத்த மீறல்கள் குறித்து கண்காணிப்புக் குழுவும் ஒப்புக்காக அறிக்கையை வெளியிட்டு விட்டு பேசாமலிருந்து விடும்.

புலிகளின் பலமும் பலவீனமுமே அடுத்து வரப் போகும் நிகழ்வுகளைத் தீர்மானிக்கப் போகிறது. படைத் தரப்பு எங்காவது பாரிய தோல்வியொன்றை சந்திக்கும் வரை அரசு தரப்பின் யுத்த மோகமும் பேச்சின் மீதான வெறுப்பும் குறையப் போவதில்லை.

இதனால் அடுத்த சுற்றுப் பேச்சுக்கு புலிகள் பலமான நிலையிலா அல்லது மிகவும் பலவீனமாகவா செல்லப் போகிறார்களாலென்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

-விதுரன்-
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2009 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..