உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English

இயல்வது வேட்கை! அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Tuesday, 03 October 2006

நீங்கள் ஒரு பேருந்தில் பயணம் செய்கிறீர்கள். அமர்ந்து பயணம் செய்வதற்கு இருக்கை கிடைப்பதாக வைத்துக் கொள்வோம். சில இருக்கைகளே சன்னலொரமாக உள்ளன. ஒரு சன்னலொர இருக்கை கிடைக்காதா என்று தான் பார்ப்பீர்கள், அதுதான் இயல்பு. சன்னலோரத்தில் உட்கார்ந்தால் காற்று வரும், வெளியே வேடிக்கை
பார்க்கலாம், வெற்றிலையை போடுகிறவர் என்றால் அவ்வப்போது எச்சில் துப்பலாம், அவ்வளவுதானா?

பேருந்தில் இல்லாமல், வானூர்தியில் பயணம் செய்வதாகக் கொள்வோம் வானூர்தியில் சன்னல் மூடப்பட்டிருக்கும் என்பதால் வெளிக்காற்று உள்ளே வீசாது, எச்சில் துப்பவும் முடியாது. வேடிக்கை பார்க்கும் காரணம் கூட பெரிய அளவுக்குப் பொருந்தாது. ஆனால் வானூர்தியிலும் கூட சன்னலொர இருக்கத்தான்
விருப்பப்படுவர்.

ஏன்? ஏனென்றால் மனிதன் தடைபட்டிருக்க விரும்புவதில்லை. வேறு வழியின்றி தடைப்பட்டிருக்க நேர்ந்தாலும் திறந்த வெளி;க்கு முடிந்த வரை நெருங்கியிருக்கவே விரும்புகிறேன். சிறை வாழ்க்கையில் நான் கவனித்த ஒரு செய்தி சன்னல் போன்ற கம்பிக் கதவுக்கு அருகே, மிக அருகே இருக்கத்தான் சிறைப்பட்ட மனிதன்
ஆசைப்படுவான். கம்பிக்கதவுக்கு மறுபக்கத்திலும் கூட சிறைதான் என்றாலும், கொட்டடியின் குறுகிய அடைப்புக்கு வெளியே சுதந்தர உலகம் இருப்பது போன்ற உணர்வு!


மனிதன் என்ன, விலங்கும் கூட அடைப்பட்டிருக்க ஆசைப்படாது. விலங்கு என்ன? செடி, கொடிகளும் கூட அறைக்குள் வளர்க்கப்பட்டால் வெளியே தலையை நீட்டத்தான் பார்க்கும்.


ஆம், விடுதலை வேட்கை என்பது உயிரின் இயற்கை. விடுதலையை மறுப்பவர்கள் இந்த இயற்கையை நசுக்க முயல்கிறார்கள். காவல் துறையினரும், சிறைத் துறையினரும் மிக அதிகமாய் மிருக வெறி கொள்வது அவர்களிடம் சிறைப்பட்டிருக்கும் கைதி தப்பியோடும் போதுதான்! தப்பியோட முயன்று பிடிபட்டவர்களைக் கேட்டுப் பாருங்கள் - எத்தகைய மிருகத்தாக்குதலை அனுபவித்தோம் என்று சொல்வார்கள்.


நானும் என் தோழர்கள் மூவரும் ஒரு முறை காவல்துறை வழிக் காவலிலிருந்து தப்ப முயன்று தோற்றோம். பிடிபட்ட பின் என்ன நடத்திருக்கும் என்பதை நீங்கள் ஊகித்துக் கொள்ளுங்கள். மையச் சிறைக்குத் திரும்பியபின் சிறைக் காவலர்களும் அதிகாரிகளும் எங்களைப் பார்த்த பார்வை, கேட்ட கேள்வி, நடத்திய முறை
எல்லாம,; நாங்கள் மனிதர்களாகச் சென்று கொடிய விலங்குகளாகத் திரும்பி வந்தாற் போலிருந்து. முன்பு எங்களிடம் நட்பாகப் பழகிய சில காவலர்கள் கூட நாங்கள் ஏதோ அவர்களுக்கு இரண்டகம் செய்து விட்டாற் போல் எங்களைப் பார்த்தார்கள்.


“நீங்களா இப்படிச் செய்தீர்கள்?”
“நீங்கள் இப்படிச் செய்வீர்கள் என்று நான் நினைத்துக் கூட பார்க்கவில்லையே!

“உங்களை எவ்வளவு நம்பினோம், நீங்கள் இப்படிச் செய்து விட்டீர்களே?”
நாங்கள் ஒரே ஒரு பதில் தான் சொன்னோம் : “எங்கள் கொள்கைப்படி செயல்பட்டோம், வேறு ஒன்றுமில்லை”
ஒரே ஒரு காவலர் மட்டும் மற்றவர்களிடமிருந்து மாறுபட்டவராக இருந்தார். அவர் அவர்களைப் பார்த்துச்
சொன்னார் :
“இவர்கள் தப்பிச் செல்ல முயன்றதில் வியப்பே இல்லை. அப்படிச் செய்யாமல் இருந்தால் தான்
வியப்படைவேன்.”
மற்றவர்கள் அதிர்ந்துப் போய்க் கேட்டார்கள் :
“ஐயோ, ஏன் இப்படிச் செய்தீர்கள்?”
“ஆமாம். இதுதான் உண்மை. கொள்கை கிடக்கட்டும,; கொள்கை. கைதி என்றால் என்ன பொருள் தெரியுமா?”
“என்ன பொருள்?”
“தப்பிச் செல்ல முயல்கிறவன், என்று பொருள்.”
“எப்படிச் சொல்கிறீர்கள்?”
“அப்படி ஒரு பொருள் இருப்பதால் தான், கைதியை வெளியே விடாமல் அறைக்குள் அடைத்துப் ப+ட்டி
வைக்கிறோம். கைதி தப்பிச் செல்ல முயல மாட்டான் என்றால் தாழ்ப்பாளும் ப+ட்டும் எதற்கு? சிறைக்கு உயர்ந்த
மதிலும், மதிலுக்கு மேல் மின்சாரம் ஓடும் கம்பியும் எதற்கு? இருபத்து நாலு மணி நேரக் கட்டுக்காவல் எதற்கு?
நீயும் நானும் எதற்கு?”

மற்றவர்கள் வாயடைத்துப் போக, அவர் சொன்னார்:
“கைதிகள் தப்ப முயல்வது இயல்பு, என்பதால் தான், நமக்கு வேலை கிடை;ததுள்ளது. இல்லையென்றால் நமக்குவேலையும் இல்லை, சம்பளமும் இல்லை. கைதியை மேய்க்கிற வேலை இல்லை யென்றால் மாடுமேய்க்கப் போக வேண்டியது தான். இதோ இவர்கள் தப்ப முயன்றால் இ;ன்னும் நாலு பேருக்குக் காவலர் வேலை கிடைக்கப் போகிறது. காவலை வலுப்படுத்த வேண்டும் அல்லவா?”

விடுதலை வேட்கை மனித இயல்பு என்பதை விதிவிலக்கான அந்த ஒரு காவலர் தன் சக காவலர்களுக்கு விளக்கிய விதம் இது. அப்படியானால் சிறைப்படுத்தலே கூடாதா?

சிறைப்படுத்தலும் சிறை நிறுவனமும் தேவைப்படாத ஒரு காலம் என்பது எட்டாத் தொலைவிலிருக்கும் கனவே, இன்றைய உலகில் சிறையற்ற சமூகம் எதுவுமில்லை, எல்லாத் தேசங்களிலும் சிறைகள் உள்ளன. முதலாளியம் ஆனாலும், சோசலிசம் ஆனாலும், சிறை உண்டு. மன்னராட்சி ஆனாலும், மக்களாட்சி ஆனாலும,;
சிறை உண்டு.

வேறு வகையில் பார்த்தால், சிறை என்னும் நிறுவனம் நாகரிக வளரர்ச்சியின் விளைபயனாகும். மாறுகால் மாறுகை வாங்குதல், கழுவிலேற்றுதல், சிரச் சேதம் செய்தல், கண்ணைத் தோண்டுதல், கையை வெட்டுதல், போன்ற கொடிய உடல் வதைத் தண்டனைகளுக்கு மாற்றாகத்தான் சிறைப்படுத்தல் எனும் தண்டனை முறை
பிறந்தது.

சிறைப்படுத்தல் என்பதே தண்டனை தான்! அது குற்றமிழைத்த ஒருவரைக் குறிப்பி;ட்ட ஒரு காலத்துக்கு குறிப்பிட்ட எல்லைக்ககுள் கட்டுபடுத்தி வைப்பதைக் குறிக்கும். அந்த அளவுக்கு அவரது விடுதலை வேட்கையை அது கட்டுப்படுத்தும்.

ஆனால் சிறைப்படுத்தல் என்பது கொடுமைப்படுத்துவதாகவும், விதைப் பதாகவும், வரம்பின்றி நீண்டு செல்வதாகவும், இருக்கும் போது அங்கே மனிதத் தன்மை சிதைக்கப்படுகிறது. காட்டுவிலங்கியல்பு மீள்கிறது. சட்டங்களும் அதிகாரங்களும் மனிதனின் விடுதலை வேட்கையை மறுக்கவும் ஒழிக்கவும் உரிமை படைத்தவை அல்ல. அவை அப்படிச் செய்ய முனைவது மனித மீறல். இந்த மீறலை ஒழித்தல் மனிதக் கடமை. (முற்றும்)


தியாகு - நன்றி மனிதம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..