|
இன்று வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ் மக்கள் சொல்லொணாத் துயரில் மூழ்கி நிற்கிறார்கள். பட்டினிச் சாவால் மக்கள் தங்கள் உயிர்களை இழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள்.
இந்த மக்களின் அவல நிலையை இன்று இனவாதக் கட்சிகளான ஜே.வி.பி.இ சிஹல உறுமய,
தேசப்பற்றுள்ள இயக்கம் என்பன சிறிதும் கருத்தில் எடுத்துக் கொள்ளாது நிழல்
யுத்தம் பாரிய யுத்தமாக முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என பெரும்பான்மை
இனச் சிங்களச் சகோதரர்கள் மத்தியில் பிரசாரம் செய்து வருகிறார்கள். இதனை
அரசாங்கமோ, ஐக்கிய தேசியக் கட்சியோ மற்றும் தமிழ்க் கட்சிகளோ
விரும்பவில்லை.
சமாதானப் பேச்சுவார்த்தைகளை மீண்டும் மிக விரைவில் ஆரம்பிக்க பொதுஜன
ஐக்கிய முன்னணியும் ஐக்கிய தேசியக் கட்சியும் ஒரு ஒருமைப்பாட்டுக்கு வந்து
இதய சுத்தியுடன் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண முன்வர வேண்டும்.
கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம் செய்வதில் ஏதோரு பலனுமில்லை.
நேற்று அண்ணல் காந்தி மகாத்மாவின் ஜனன தினம். அண்ணல் காந்தி அகிம்சை
முறையிலேயே தனது வாழ்நாள் பூராக வாழ்ந்து நின்றார்.
அந்த மகானின் தெய்வ
வாக்கியங்களை இன்றும் உலக நாடுகளின் தலைவர்கள் அனைவரும்
ஏற்றுக்கொண்டார்கள்.
இது இலங்கை நாட்டுத் தலைவர்களுக்கு விதி விலக்கல்ல.
மனிதாபிமான அடிப்படையில் வடபகுதி யாழ்ப்பாணத்தில் வாழும் மக்கள் பட்டினிச்
சாவைத் தவிர்க்க அரசாங்கம் விடுதலைப்புலிகளுடன் ஏ-9 பாதையைத் திறந்துவிட
முன்வர வேண்டும்.
விட்டுக்கொடுத்துச் செயற்படும் தன்மையை இரு பகுதியினர்
மத்தியிலும் காணப்பட வேண்டும்.
இனவாதக் கட்சிகள் பேரின மக்களான எமது
சிங்களச் சகோதரர்களைத் தங்கள் சொந்த நலனுக்காக வீண் பிரசாரங்களால் ஏமாற்றி
வருகிறார்கள்.
விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையுடன் நாம் ஒரு தாய் பெற்ற
மக்களாக வாழ முன்வரவேண்டும்.
ஒருவரின் சுதந்திரத்தை இன்னுமொருவர் எதிர்ப்பதென்பது அசாதாரணமான
விடயமாகும். எல்லோரும் இன்புற்று வாழ இந்நாட்டில் சமாதானம் மலர வேண்டும்.
இன்றைய ஜனாதிபதி மிக விரைவில் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துச்
செயற்படுவார் எனும் நம்பிக்கை ஒளிக்கீற்று ஒன்று புத்திஜீவிகள் மட்டத்தில்
நம்பிக்கையுள்ளது.
அரசியலில் சுயநலம் தலைதூக்கினால் அதன் துன்ப பலன்களை
நாட்டு மக்களே அனுபவிக்க வேண்டும்.
இன்று நாட்டில் விலைவாசிகள் நாளுக்கு
நாள் உயர்ந்து கொண்டே போகின்றன.
வர்த்தக நடவடிக்கைகள் மந்த கதியில்
காணப்படுகின்றது.
ஆட்கடத்தல், கொலை, சூறைகள், பாலியல் வல்லுறவுகள் தொடர்ந்தும் இடம்பெற்றுக்
கொண்டிருக்கின்றன.
வேலியே பயிரை மேய்கின்றதா எனும் சிந்தனை ஊகிப்புகளும்
மக்கள் மத்தியில் எழுந்துள்ளன.
இவை எல்லாவற்றிற்கும் ஒரு சிறந்த
முடிவினைக் கண்டடையக் கூடிய திறமைகள் அனைத்தும் இன்றைய ஜனாதிபதியிடம்
நிறைய உண்டு.
தனது திறமைகளை ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து
செயற்பட்டால் இனப்பிரச்சினைக்கு நிபந்தனையற்ற பேச்சுவார்த்தைகள் மூலம் ஒரு
தீர்வினைக் கண்டடைய நிறைய வாய்ப்புகள் உண்டு.
தமிழ் மக்கள் சிங்களச்
சகோதரர்களின் பகைவர்கள் அல்லர்.
இனவாதம் பூண்டோடு இலங்கைத் திருநாட்டிலே
ஒழிக்கப்பட வேண்டும் என்பதனை சிங்கள, தமிழ், முஸ்லிம், பறங்கியர் என்ற
அனைத்து மக்களும் விரும்புகிறார்கள்.
புத்த பெருமான், அண்ணல் காந்தி, அன்னை தெரேசா போன்றவர்கள் வழியில் நாடு
அகிம்சை வழியில் வெற்றியைக் காண அரசியல் தலைவர்கள் மத்தியில் ஓர் ஒற்றுமை
காணப்பட வேண்டும். புல்லைக் கிழிக்க கத்தி, கோடரி தேவையில்லை.
இன்றைய
ஜனாதிபதி துணிவுடன் செயற்பட்டு அனைத்துக் கட்சிகளையும் அரவணைத்து நாட்டில்
சமாதானத்தைக் கொண்டு வர முயற்சிக்கிறார் என்பதனை மக்கள் அறிவார்கள்.
இதற்கு இடையூராக நிற்பவர்கள் இதற்குத் தடைக் கற்களாக நிற்கிறார்கள்.
அடாவடித்தனமான கைதுகளாலும் கடத்தல்களாலும் பாதிப்படைந்து நிற்கும் ஒரே
சமூகம் தமிழ் இனம் மட்டுமேயாகும்.
இரக்கம், காருண்யம் சமய குருமாரால்
போதிக்கப்பட வேண்டும். பௌத்த குருமார்களின் பங்கு இதில் முக்கியத்தைப்
பெறுகின்றது.
ஒரு இந்துவாகப் கௌதம புத்தபிரான் போதித்த போதனைகள் தர்ம
சிந்தனைகள், இரக்கம், காருண்யம் மிக்கவை.
இதனை பௌத்தர்கள் மட்டுமல்ல
அனைத்து இனமத மக்களுமே ஏற்றுக்கொள்ள வேண்டும்.
இயேசு பிரான், நபிகள்
பிரான் மற்றும் இந்து சமய நாயன்மார்கள் அனைவரும் காந்தி சமாதானம் பற்றியே
நிறையப் போதித்துச் சென்றார்கள்.
இன்று இலங்கையில் அரசியல் சூழ்நிலைகள் குழப்பம் கண்டநிலையில்
காணப்படுகிறது. அரசாங்கம் கலைக்கப்படலாம்.
கொழும்பு மாநகர சபை
கலைக்கப்படலாம் என வதந்திகள் பரப்பப்படுகின்றன.
இன்று எமது கொழும்பு மாநகர
சபை 53 உறுப்பினர்களுடைய ஒற்றுமையுடன் தொடர்ந்து முன்னெடுத்துச்
செல்லக்கூடிய வாய்ப்புகள் நிறைய உண்டு.
இவையெல்லாம் வதந்திகளால் மக்கள்
மனங்களை குழப்பிவிடக்கூடாது என்பது எமது பிரார்த்தனைகளாக அமைய வேண்டும்.
எமது நாட்டில் சமாதானம் மலர வேண்டும். பேச்சுவார்த்தைகள்
இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண முன்னெடுத்துச் செல்லப்பட வேண்டும்.
காலம் தாழ்த்தாது பொதுஜன ஐக்கிய முன்னணியும் ஐக்கிய தேசியக் கட்சியும்
இணைந்து நாட்டில் சமாதானத்தைப் பேச்சுவார்த்தைகளை இதய சுத்தியுடன்
நிறைவேற்றி வைக்க முன்வர வேண்டும்.
இந்நாட்டு மக்கள் ஒன்றுபட்டால் உண்டு
வாழ்வு. எம்முடன் ஒற்றுமை நீங்கின் அனைத்து மக்கள் மத்தியிலும் தாழ்வு
நிலையே எதிர்காலத்தில் காணப்படும் என்பதில் எதிர்காலம் பதில் சொல்லும்.
நன்றி:- வேலணை வேணியன்
|