பிரதான பக்கம் arrow கட்டுரைகள் arrow ஆயுதங்களுடன் அலையும் கொள்ளையர்களால் அச்சத்தில் உறைந்து போயுள்ள வவுனியா
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English

ஆயுதங்களுடன் அலையும் கொள்ளையர்களால் அச்சத்தில் உறைந்து போயுள்ள வவுனியா அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Wednesday, 04 October 2006
ஆட்கொல்லி ஆயுதங்களுடன் அலைந்து திரியும் கொடிய கொள்ளைக் கூட்டமொன்று நள்ளிரவு வேளை வீட்டுக் கதவுகளை உடைத்துக் கொண்டு உட்சென்று கெட்ட வார்த்தைகளால் திட்டி அடித்து மிரட்டி துப்பாக்கி முனையில் கொள்ளையடிப்பவர்களின் குறி முதலில் தாலிக் கொடியை அறுத்தெடுப்பதில் இருக்கின்றது.

ஏற்கனவே பல இடங்களில் கொள்ளைகள் பல வழிகளில் தீவிரமாக இடம்பெற்று வந்தன. விழிப்புக் குழுக்களை அமைத்து கண்காணிப்பது கொள்ளைகளை கட்டுப்படுத்தும் என வவுனியா மாவட்ட நீதிவான் எம். இளஞ்செழியன் கேட்டுக் கொண்டதற்கமைய விழிப்புக் குழுக்களின் செயற்பாடுகளினால் பல இடங்களில் இடம்பெற்று வந்த கொள்ளைகள் குறைந்து வந்தன.

ஆனால்இ கைக்குண்டெறிதல், கிளேமோர் தாக்குதல்கள் என்பனவற்றினை கட்டுப்படுத்துவதாக கூறி இரவுவேளை படையினரின் நடமாட்டம் இருந்தமையினால் விழிப்புக் குழுக்களாக இருப்போருக்கு ஆபத்தெதுவும் வந்து விடுமோ என அஞ்சி விழிப்புக் குழுக்களின் நடவடிக்கைகள் குறைந்தன. இதன்பின் அண்மையில் படுமோசமான கொடிய எண்ணம் கொண்ட ஆயுதமேந்திய கொள்ளையர்களின் கொள்ளையிடும் நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன.

வவுனியா நகரில் இருந்து ஒரு கிலோ மீற்றர் தூரத்திற்குள் இருக்கும் குருமன்காட்டுப் பகுதியில் வெள்ளை வானொன்றில் சென்ற பத்துப் பேரடங்கிய கொள்ளையர்கள் கோடரிகளால் கதவுகளை கொத்தி உள் நுழைந்து ஆண்களை தாக்கி பிள்ளைகளின் தலையிலும் வாய்க்குள்ளும் துப்பாக்கி முனையை வைத்து மிரட்டி பணம், நகை, கையடக்க தொலைபேசி பெறுமதியான மின் உபகரணங்கள் என்பனவற்றையும் கொள்ளையடித்துள்ளனர்.

நகைகளை எடுக்க முடியாத இடங்களில் கணவனின் தலையில் துப்பாக்கி முனையை வைத்துக் கொண்டு கணவன் வேண்டுமா? தாலிக்கொடி வேண்டுமா? கொண்டு வா தாலிக் கொடியை, நாங்கள் தேடி நகையேதாவது எடுத்தால் ஒருவரையும் விட்டு வைக்க மாட்டோம்" எனவும் மிரட்டியுள்ளார்கள். தாலிக் கொடியே இல்லையென்றவுடன் "என்னடா ..தாலிக்கொடி கட்ட வக்கில்லையா" எனவும் கேட்டடித்துள்ளனர்.

அரச படைகளின் நடமாட்டம் அதிகமாகவுள்ள குருமன்காட்டு பகுதியில் ஆயுத முனையில் கொள்ளையடித்து வாகனமொன்றில் வந்துபல மணி நேரம் அட்டகாசம் செய்து எப்படித் தப்பிச் செல்ல முடியும் என மக்கள் கேள்வியெழுப்புகின்றனர். பல வீடுகளில் கொள்ளைகள் இடம்பெறும் போது வவுனியா பொலிஸாருக்கும் கொழும்பில் உள்ள அவசர பொலிஸ் தொடர்பு தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு விபரத்தைக் கூறிய போதும் பயன் எதுவும் கிட்டவில்லை. கொள்ளையர்களை பிடிக்க மக்கள் இதனை விட வேறென்ன உதவி செய்ய முடியும்.

குருமன்காட்டு சந்தி, தாண்டிக்குளம் சந்தி ஆகிய இடங்களில் பொலிஸ், இராணுவ காவலரண்கள் உள்ளன. இரு பக்கத்தாலும் மட்டுமே குருமன் காட்டிற்குள் வாகனத்துடன் செல்ல முடியும். எனவே, உள் நுழையும் போது சிலவேளை வாகனம் சோதனைக்குட்படுத்தாமல் சென்றிருக்கலாம். ரீ-56 ரக துப்பாக்கி கைத்துப்பாக்கி போன்றவற்றுடன் குருமன் காட்டிற்குள் சென்று நள்ளிரவு பன்னிரண்டு மணி முதல் அதிகாலை மூன்று மணிவரை கொள்ளையர்கள் அட்டகாசம் புரிந்துள்ளனர்.

இதன்போது பொலிஸாருக்கு தகவல் வழங்கிய பின்னரும் குறிப்பிட்ட காவலரணை தாண்டி கொள்ளையர்கள் கொள்ளையிட்ட பொருட்களுடனும், ஆயுதங்களுடனும் எவ்வாறு தப்பினார்கள்?

மகாறம்பைக்குளத்தில் இரவு பதினொரு மணி முதல் அதிகாலை இரண்டு முப்பது வரை கொள்ளையர்களின் அட்டகாசம் இடம்பெற்றுள்ளது. கொள்ளையர்களள் முதலில் இறங்கிய வீட்டில் மூன்று இளம் பெண்களும் அவர்களின் பெரிய தாயார், பெரிய தந்தையார் ஆகியோரும் இருந்துள்ளனர். கொடிய கொள்ளையர்கள் கதவை திறக்குமாறு கேட்ட போது கதவு திறக்கப்படாமையினால் ஜன்னல் கண்ணாடிகளை கைத்துப்பாக்கியால் சுட்டுடைத்து கதவைத் திறக்கவில்லையென்றால் சுட்டுக் கொல்லுவோம் என மிரட்டியுள்ளனர். கதவுப் பூட்டை இலக்கு வைத்தும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இதன் போது குறிப்பிட்ட இளம் பெண்களின் பெரிய தாயாரின் கால் தொடையில் ரவைகள் துளைத்து படுகாயங்கள் ஏற்பட்டுள்ளன. இதன் போது எஸ்.சாரதாம்பாள் (வயது 60) என்பவரே காயமடைந்தார்.

அதன் பின் கதவை உடைத்து உள்நுழைந்த கொள்ளையர்கள் பெரிய தந்தையாரையும் சுடுவோம் என தலையில் துப்பாக்கி முனையை வைத்து மிரட்டி நகைகள் பணம் என்பவற்றை கொள்ளையிட்டுள்ளனர். காயமடைந்தவரை இங்கிருந்து நாம் சென்ற பின் துப்பாக்கி வேட்டைத் தீர்ப்போம் அந்தச் சத்தத்தின் பின்னரே வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லுங்கள் எனக் கூறியுள்ளனர். காயமடைந்தவரை காலை ஐந்து மணிக்குப் பின்னரே வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல முடிந்துள்ளது.

மகாறம்பைக்குளத்தில் ஆயுதங்களுடன் கொள்ளையிட்டவர்கள் எவ்வாறு வெளியேற முடியும்?

இந்தக் கிராமத்தைச் சூழவும் வெளியேறவுள்ள வீதிகளில் காவலரண்கள் இருக்க கொள்ளையர்கள் எவ்வாறு வந்தார்கள்? எவ்வாறு போனார்கள்? கிராமத்தைச் சூழ பூந்தோட்டம் சந்தி, நெருங்குளம் சந்தி, தாண்டிக்குளம், குகைகட்டுச் சந்தி, சாந்தசோலை, நாற்பதடிபாலம் என்ற இடங்களில் பொலிஸ், இராணுவ காவலரண்கள் இருக்க கொள்ளையர்கள் எங்கிருந்து வந்தார்கள் எங்கு போனார்கள்?

இதே போன்றே மகாறம்பைக்குளத்திற்கு கிழக்காக இருக்கும் காத்தார்சின்னக்குளம் கிராமத்தில் நடந்த கொள்ளையிலும் சம்பந்தப்பட்ட கொள்ளையர்கள் மிகக் கொடுமையாக நடந்துள்ளனர். பிள்ளைகளின் தலையில் துப்பாக்கி முனையை வைத்து மிரட்டியதில் சிறு குழந்தைகளின் மனம் பாதிக்கப்பட்டுள்ளது.

இதன் போது பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது. ஆனால், பொலிஸார் எங்கே... ஒருவேளை காவலர்கள் தான் களவெடுக்கிறார்களோ...? பதிலை பொலிஸாரே கூற வேண்டும்.

ஆயுதங்களுடன்.....

மக்களைச் சுற்றிவர படையினரும் பொலிஸாரும் இருக்க ஆயுதங்களுடன் கொள்ளையர்கள் பதற்றமில்லாமல் வந்து கொள்ளையிட்டுச் செல்கின்றனர் என்றால், இனி யார் தான் கொள்ளையர்களைப் பிடிப்பது?

மிகவும் திட்டமிட்ட முறையில் தமிழரின் அடிமடியில் கை வைக்கின்றனர். சிறுகச் சிறுகச் சேர்த்து வைத்திருக்கும் சுய பொருளாதாரத்தை வேருடன் பிடுங்கியெடுக்கும் ஒரு கொடுஞ் செயலாகவே இந்தக் கொள்ளைகள் தொடர்கின்றன. வங்கிகளில் வைத்திருந்தால் இவ்வளவு வைத்திருக்கின்றாய். எடுத்துக் கொண்டு வா அல்லது கைக்குண்டை எறிவோம், பிள்ளைகளைக் கடத்துவோம், சுடுவோம் என மிரட்டுகின்றனர். வீட்டில் வைத்திருப்பவற்றை ஆயுதங்களுடன் நேரடியாக வந்து கொள்ளையிடுகின்றனர்.

கோடரியால் கதவைக் கொத்தி திறந்து கொள்ளையிடும் கொள்ளையர்கள், கோடரிக் காம்புகளோ என மக்கள் ஐயம் கொள்கின்றனர். மக்கள் ஐயப்படுவது தவறெனின் கொள்ளையர்களைப் பிடிக்க வேண்டும். நாளாந்தம் மக்களை மன உளைச்சலுக்குள்ளாக்கும் இந்தச் செயலை கட்டுப்படுத்தவும், இல்லாமல் செய்யவும் அரசு தவறிவிட்டதாகவே கூற வேண்டியுள்ளது.

பல குடும்பத்தினர் சொந்த இடங்களில் வாழ முடியாமல் வெளியேறி வவுனியாவிற்கு வந்து காணிகளை வேண்டி வீடுகளைக் கட்டி வாழ்ந்தவர்களை அவர்கள் மீளவும் சிறுகச் சிறுகச் சேர்த்ததை கொள்ளையிட்டால் இந்த மக்கள் எங்குதான் போவது. இது ஏதோவொரு வகையில் தமிழரை கொடுமைப்படுத்துவதாகவேயுள்ளது.

ஐம்பது ரூபாய் பணத்தையும், தோட்டுச் சுரையையும் விடாமல் கொள்ளையிடும் இந்தக் கொடியவர்களை வந்தப்பாவி பெற்றாளோ என மனம் நொந்து கொண்ட குடும்பப்பெண் ஒருவர் வார்த்தை வராது கண்ணீர் விட்டழுதார். உறவுகள் ஒருவரை இழந்தது போன்ற மனோநிலையில் கொள்ளை நடந்த வீட்டாரை காண முடிந்தது.

மோசமான பேர்வழிகளுக்கு வாழ்க்கையில்லை.

இந்தக் கொள்ளையர்கள் உயிரிழந்த பின் பிணத்தையும் இந்த மண் ஏற்காது என்ற ஆவேச வார்த்தைகளே மக்களிடமிருந்து வருகின்றன.


நன்றி:- கே.சௌந்தரம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2009 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..