பிரதான பக்கம் arrow கட்டுரைகள் arrow பனிச்சங்கேணித்தாக்குதல் முறியடிப்பு - புரியவைக்கும் கள யதார்த்தம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English

பனிச்சங்கேணித்தாக்குதல் முறியடிப்பு - புரியவைக்கும் கள யதார்த்தம் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Thursday, 12 October 2006
வாகரைப் பிரதேசத்தில் கடந்த ஆறாம் திகதி சிறிலங்காப் படைத்தரப்பு மேற்கொண்ட கூட்டுப்படை நடவடிக்கை விடுதலைப் புலிகளாலும், கடற்புலிகளாலும், முறியடிக்கப்பட்டது. இச்சண்டையானது அண்மையில் விடுதலைப் புலிகள் குறித்துச் சில இராணுவ விமர்சகர்களும், செய்தியாளர்களும், முன்நிறுத்த முயன்ற கற்பிதங்களுக்கு முரண்பாடானதாக அமைந்தது எனின் தவறாகாது.


மாவிலாறு, சம்பூர்ப் பகுதிகளில் சிறிலங்கா இராணுவத்தினருடனான மோதலில் விடுதலைப் புலிகள் கடைப்பிடித்த தந்திரோபாயத்தை விடுதலைப் புலிகளின் தோல்வி பின்னடைவு என்றே பல இராணுவ ஆய்வாளர்களும், விமர்சகர்களும், வியாக்கியானம் செய்து கொண்டது உண்டு. விடுதலைப் புலிகளின் பின்வாங்குதலைத் தோல்வி என்றே அவர்கள் நிர்ணயம் செய்தனர்.

இதன்பிரகாரம் கிழக்கில் விடுதலைப் புலிகள் போரிடும் ஆற்றலை இழந்து விட்டனர் எனவும் தெரிவித்தனர். சிறிலங்கா அரச தரப்பினர் அதற்கும் ஒருபடி மேலே போய் கிழக்கில் விடுதலைப் புலிகளுக்குத் தளபதிகளே இல்லாது போய்விட்டனர் என்பது போன்று பிரச்சாரமும் செய்ய முற்பட்டனர். ஆனால் பனிச்சங்கேணி நோக்கிய படைநகர்வு முறியடிக்கப்பட்டதன் மூலம் விடுதலைப் புலிகள் இவ் விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.

பனிச்சங்கேணி நோக்கிய படைநகர்வு விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டது என்பதை இப்படை நடவடிக்கையின் போது படைத்தரப்பிற்கு ஏற்பட்ட இழப்பு இராணுவத்தினர் தனது சகாக்களின் சடலங்களைக் கைவிட்டு ஓடவேண்டிய நிலை என்பனவே தெளிவாக வெளிப்படுத்தப் போதுமானவையாகும்.

ஆயினும் இப்படை நடவடிக்கையின் போது சிறிலங்காப் படைத்தரப்பு எதிர்பாராத வகையில் தாக்குதலுக்கு உள்ளாகியது என்பதும் ஒரு பொறிக்குள் சிக்கிக் கொண்;;டது போன்றதொரு நிலைக்கும் தள்ளப்பட்டது என்பதற்கு இப்படை நடவடிக்கையைப் பொறுப்பேற்று நடத்திய இராணுவ அதிகாரி கொல்லப்பட்டமையும், ஆயுத தளவாடங்களுடன் சிறிலங்காப் படைத்தரப்பின் வாகனங்கள் கைப்பற்றப்பட்டமையும் உறுதி செய்பவையாகவுள்ளன.

சிறிலங்காப் படைத்தரப்பின் இந்நடவடிக்கையானது இராணுவ, அரசியல் ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்ததொன்றாகும். அதிலும் குறிப்பாக இராணுவ ரீதியில் பல கோணங்களில் இதற்கு முக்கியத்துவம் உண்டு.

முதலில் மாங்கேணியில் இருந்து சுமார் பத்துக் கிலோமீற்றர் தொலைவிலுள்ள பனிச்சங்கேணியைக் கைப்பற்றுவதன் மூலம் வாகரைப் பகுதியில் தமது கட்டுப்பாட்டுப் பிரதேசத்தை விஸ்தரித்துக் கொள்வது இராணுவத்தின் நோக்கமாகும். இவ் விஸ்தரிப்பு நடவடிக்கை பலவகையில் இராணுவ அனுகூலங்களைக் கொண்டதாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

1. கிழக்குக் கரையோரத்தில் சுமார் பத்து கி.மீற்றர் தூரத்தைக் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதன் மூலம் வாகரைப் பிரதேசத்திற்கான கடல்வழித் தொடர்பை நெருக்கடிக்கு உள்ளாக்குவதாகும்.

சம்பூரை விட்டுப் புலிகள் வெளியேறியதன் பின்னர் திருமலை மாவட்டத்தின் ஈச்சிலம்பற்றைப் பிரதேசத்தை அண்டிய கரையோரப் பிரதேசமும், வாகரையை அண்டிய கடற்கரைப் பிரதேசமுமே விடுதலைப் புலிகளின் கடல்வழித் தொடர்பிற்கான பகுதியாக உள்ளது. இந்நிலையில் அப்பகுதியின் ஒரு பகுதியைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதன் மூலம் புலிகளின் கடல்வழிப் பயணங்கள் மீது அழுத்தத்தைச் செலுத்த முடியும் என்பது சிறிலங்கா படைத்தரப்பின் எதிர்பார்ப்பாகும்.

2. மாங்கேணியில் இருந்து பனிச்சங்கேணிப் பகுதிக்கான தரைவழிப்பாதையைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதன் மூலம் மட்டக்களப்பு மாவட்டம் வாகரைப் பகுதி, திருகோணமலை மாவட்டம் ஈச்சிலம்பற்றுப் பகுதிகளுக்கான விநியோக மார்க்கங்களைக் கட்டுப்படுத்துதல் ஆகும். ஏற்கனவே ஈச்சிலம்பற்றை, வாகரைப் பகுதிகளுக்கான நிவாரணப் பணிகள் உட்பட்ட அனைத்துப் பணிகளும், இத்தரைவழிப் பாதையூடாகவே மேற்கொள்ளப்பட்டு வருகின்றமையையும் அதனை அரசு பெரும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

3. வாகரைப் பிரதேசத்தில் விடுதலைப் புலிகளுக்கு நெருக்கடியைக் கொடுப்பதன் மூலம் மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏனைய பிரதேசங்களிலும் உள்ள விடுதலைப் புலிகளுக்கு இராணுவ ரீதியிலான அழுத்தங்களைக்கொடுக்க முடியும் என்ற எதிர்பார்ப்பாகும்.

இராணுவ நடவடிக்கையின் நோக்கங்கள் இவ்வாறாக இருக்கையில் இந்நடவடிக்கைக்கான ஆளணி குறித்த திட்டமிடலும், இதுவரை சிறிலங்கா இராணுவம் பயன்படுத்தாத வழிமுறையாகவே இருந்தது. சிறிலங்கா அரசு இதுவரையில் தனது படை நடவடிக்கைக்கெனத் தனது முப்படைகளையுமே, பயன்படுத்தி வந்துள்ளது. ஆனால் இப்படை நகர்வில் தனது முப்படைகளுடன் ஒட்டுக் குழுவான கருணா குழுவையும் சேர்த்துக் கொண்டுள்ளது.

சிறிலங்காப் படைத்தரப்பும் சரி, அரசியல் தலைமைகளும் சரி, ஒட்டுக்குழுக்களைத் தமது தேவைக்குப் பயன்படுத்திக்கொண்டுள்ளது என்பது வெளிப்படையானது. ஆனால் அவர்களைக் காட்டிக் கொடுப்பவர்கள் ஆகவும் தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்காகவுமே வழமையாகப் பயன்படுத்திக் கொண்டுள்ளனர்.

மறுபுறத்தில் ஒட்டுக்குழுக்கள் தனியான செயற்பாட்டைக் கொண்டவையாகவே இருந்தன. இதில் ஆட்கடத்தல், கொள்ளையிடுதல், கப்பம் பெறுதல், படுகொலை செய்தல் என்பன அடங்கியிருந்தனவே ஒழிய படை நடவடிக்கை என்ற ரீதியில் அவை மேற்கொண்டதாக இல்லை.

ஆனால் பனிச்சங்கேணி நோக்கிய படை நகர்வின் போது ஒட்டுக்குழுவினரிலும் ஒரு தொகுதியினரைத் தமது படையினருடன் சிறிலங்காப் படைத்தரப்பு இணைத்துக் கொண்டிருந்தது.

சிறிலங்காப் படைத்தரப்பு இத்தகையதொரு நிலைக்கு வந்தமைக்குச் சில காரணிகள் இருந்திருக்கக்கூடும்.

1. இராணுவத்தில் ஆளணிப் பற்றாக்குறை இருத்தல் கூடும்.

2. விடுதலைப் புலிகள் முன்னைய சாதனைகளைக் கருணாவின் சாதனை என எண்ணி முக்கியத்துவம் கொடுத்திருக்கலாம்.

3.விடுதலைப் புலிகளுக்கு எதிரான மோதல்களில் தமிழர்களையே பயன்படுத்துதல் மூலம் இன அழிப்பை முனைப்புப்படுத்தலாம் என்பது போன்ற மேலும் காரணிகள் இருந்திருக்கலாம்.

ஆனால் பனிச்சங்கேணித் தாக்குதல் முறியடிப்பானது சிறிலங்காப் படைத்தரப்பினரிற்கும் அரசிற்கும் பல இராணுவ விமர்சகர்களுக்கும் சில விடயங்களைத் தெளிவாகவே வெளிப்படுத்தியிருக்கும். அதில் ஒட்டுமொத்தமாகக் குறிப்பிடத்தக்க விடயம் விடுதலைப் புலிகள் கிழக்கில் சிறிலங்கா இராணுவத்தினரின் படை நடவடிக்கைகளை தமது திட்டத்திற்கு ஏற்ற வகையில் எதிர்கொள்ளும் ஆற்றல் பொருந்தியவர்களாகவுள்ளனர் என்பதாகும்.

பனிச்சங்கேணி நோக்கிய படை நடவடிக்கையானது சிறிலங்காப் படைத்தரப்பினால் இருமுனைகளில் மேற்கொள்ளப்பட்டது. மாங்கேணியில் இருந்து பனிச்சங்கேணி நோக்கிய தரைவழிப் படை நகர்வு என்பது ஒரு முறையாகவும், கடற்படையினரின் உதவியுடனான தரையிறக்கமாக இன்னொரு முனையாகவும் படை நகர்வு இடம்பெற்றது.

அதாவது தரைவழியூடாக நகரும் படையும் கடல்வழி மூலம் தரையிறக்கம் செய்யப்பட்ட படையணியும் இணைந்து பனிச்சங்கேணியைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருதல் என்பது தாக்குதல் திட்டமாக இருந்தது. ஆனால் விடுதலைப் புலிகள் சிறிலங்காப் படையணிகளை இரு முனைகளிலும் எதிர்கொண்டு முறியடித்தனர்.

தரையிறக்கம் செய்யமுற்பட்ட கடற்படைக் கலங்களை எதிர்கொண்ட கடற்புலிகள் அணி கடும் சண்டை ஒன்றின் மூலம் சிறிலங்காக் கடற்படை டோறாப் பீரங்கிக்கலங்களுக்குச் சேதத்தை ஏற்படுத்தியதோடு, கடற்படையினரின் தரையிறக்கும் முயற்சியையும், முறியடித்தனர். இதன்மூலம் தரைப்படையினருக்கு கடல்வழி மூலம் கிடைக்கவிருந்த உதவி தடுக்கப்பட்டது.

இதேவேளை விமானப் படையின் உதவியுடனும் ஆட்லறி, சூட்டு ஆதரவுடனும் தரைவழியூடாக முன்னேறிய ஒட்டுக்குழுவினருடன் கூடியதான சிறிலங்கா இராணுவத்தினர் மீது விடுதலைப் புலிகள் உக்கிர பதில் தாக்குதலை நடத்தினர். விடுதலைப் புலிகளின் தாக்குதலுக்கு முகம் கொடுக்க முடியாத இராணுவத்தினர் இறந்த தமது சகாக்களின் சடலங்கள், ஆயுத தளவாடங்கள் என்பனவற்றையும் கைவிட்டு ஓட வேண்டியதாகியது.

இந்நிலையில் சிறிலங்கா இராணுவம் மேலாண்மையைப் பெற்று விட்டது என்பது மாயையே ஒழிய வேறெதுவுமில்லை என்பது முதன்மையானது. அதாவது விடுதலைப் புலிகள் சம்பூரிலும், மாவிலாற்றிலும் தந்திரோபாய ரீதியில் பின்வாங்கினார்களே ஒழிய பனிச்சங்கேணியில் இராணுவம் தோற்று ஓடியது போல் ஓடவில்லை என்பது.

அடுத்த முக்கிய விடயமாகச் சுட்டிக்காட்டத்தக்கது கிழக்குப் பிராந்தியத்திலும், கடற்புலிகள் கடற்சமரில் ஈடுபடத்தக்கதான வலுவுடன் உள்ளனர் என்பதும் சிறிலங்காவின் படை நடவடிக்கைகளை முறியடிக்கும் வலுவில் உள்ளனர் என்பதும் ஆகும்.

இவற்றிற்கும் அப்பால் விடுதலைப் புலிகளுக்கு எதிராகத் துணை இராணுவக் குழுக்களைக் களம் இறக்குவதன் மூலம் குறிப்பாகக் கருணா குழுவை இறக்குவதன் மூலம் எதனையும் சாதித்து விடலாம் என்பது கற்பனையானது என்பதும் ஆகும்.

கருணாவோ சரி, அன்றி வேறு யாராக இருப்பினும் சரி அவர்களின் பலம் விடுதலைப் புலிகளுடன் இருக்கும் வரையில் மட்டுமே. அதற்கப்பால் அவர்களுக்கெனத் தனிப்பட்ட ரீதியிலான பலம் எதுவும் இல்லை. அதாவது அவர்கள் போரிடுவதற்கான தார்மீகப் பலத்தை இழப்பதோடு தாம் தலைவர்கள் இல்லை என்பதையும் உணர்ந்துகொள்ள வேண்டியவர்கள் ஆகின்றனர்.

வேறொரு வகையில் பார்த்தால் கருணா மீது சிறிலங்காப் படைத்தரப்பும் அரச தரப்பும் வைத்த நம்பிக்கையை இத்தாக்குதல் மூலம் விடுதலைப் புலிகள் முறியடித்துள்ளனர். இது ஒரு சாதாரண விடயமாயினும் இதனை நிரூபணம் செய்ய வேண்டிய தேவையும் விடுதலைப் புலிகளுக்கு இருந்ததென்றே கூறலாம்.

இதேவேளை இந்நடவடிக்கை மூலம் சிறிலங்காப் படைத்தரப்பு தனது பலவீனம் ஒன்றையும் வெளிப்படுத்தியுள்ளது. அதாவது தனது ஆளணிப் பற்றாக்குறையை ஈடு செய்வதற்கு ஒட்டுக் குழுவினரையும், பயன்படுத்த முற்பட்டுள்ளது என்பதே அதுவாகும். அவ்வாறு இல்லாது விட்டால் இப் படை நடவடிக்கையைச் சிறிலங்காப் படைத்தரப்பு தனித்தே மேற்கொண்டிருக்க முடியும்.

இந்த வகையில் பார்க்கையில் பனிச்சங்கேணியை ஆக்கிரமிப்பதற்கான சிறிலங்கா இராணுவத்தின் படை நடவடிக்கை முறியடிக்கப்பட்டமையானது சிறிலங்காப் படைத்தரப்பும் சில விமசகர்களும் களநிலைமையை விளங்கிக் கொள்வதற்கான முன்னுதாரணமாகக் கொள்ளவேண்டியதொன்றாகவே இருக்கும்.

களமுனையில் முன்னேறுதலும், பின்வாங்குதலும், தந்திரோபாய ரீதியிலானதான நடவடிக்கைகளாகவே பெரும்பாலும் இருப்பதுண்டு. ஆனால் சிதறி ஓடுதலும் திக்குத் தெரியாமல் ஓடுவதும் தோல்வியின் வடிவமாகவே இருக்கும். இந்த வகையில் பனிச்சங்கேணி நோக்கிய படையெடுப்பை விடுதலைப் புலிகள் முறியடித்து வெற்றிகொண்டுள்ளனர் என்பதே களநிலவரமாகும்.

ஆகையினால் சம்பூரிலும், மாவிலாற்றிலும் நடந்த மோதல்கள் மூலம் சிறிலங்கா இராணுவம் மேலாண்மை பெற்றுவிட்டது என்ற கற்பிதத்தைக் கொள்வதோ அதன் பிரகாரம் தீர்மானங்களை மேற்கொள்வதோ இடம்பெறுமானால் சிறிலங்காப் படைத்துறைத் தலைமையும் அரசும் எதிர்பார்க்க முடியாத இழப்புக் களையும், நெருக்கடிகளையும் சந்திக்க வேண்டிய நிலை உருவாகுவது தவிர்க்க முடியாது போகலாம்.

-ஜெயராஜ்- நன்றி: ஈழநாதம் 11.10.06
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2009 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..