|
துணை இராணுவக் குழுவினருடனான தொடர்பை தடுக்கவில்லை: சிறிலங்கா மீது இங்கிலாந்து குற்றச்சாட்டு |
|
|
|
Saturday, 14 October 2006 |
|
தங்களது கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் எதுவித ஆயுதக் குழுக்களும் இயங்க அனுமதிக்க மாட்டோம் என்ற உறுதிமொழியை சிறிலங்க அரசாங்கம் செயற்படுத்தவில்லை என்று இங்கிலாந்து அரசாங்கம் குற்றம்சாட்டியுள்ளது. இலங்கை நிலைமைகள் குறித்து இங்கிலாந்து அரசாங்கத்தின் அறிக்கையை அந்நாட்டு வெளிவிவகார அமைச்சின் செயலாளர் மார்க்ரெட் பெக்கெட் வெளியிட்டார். அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
கடந்த 2005 ஆம் ஆண்டு யூன் முதல் 2006 ஆம் ஆண்டு வரை மொத்தம் 900 வரையிலான பேர் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் அரைவாசிப் பேர் பொதுமக்கள்.
சிறிலங்கா அரசாங்கமும் தமிழீழ விடுதலைப் புலிகளும் மனித உரிமைகளை மீறியுள்ளனர்.
ஜெனீவாவில் பெப்ரவரியில் நடந்த பேச்சுக்களில் ஒப்புக் கொள்ளப்பட்ட விடயங்கள் உள்ளிட்டவைகளை இருதரப்பும் செயற்படுத்தவில்லை என்கிற இணைத் தலைமை நாடுகளின் கருத்தை இங்கிலாந்து அரசாங்கமும் ஆமோதிக்கிறது.
நீதிக்குப் புறம்பான படுகொலைகளில் சிறிலங்கா இராணுவத்தினர் ஈடுபடுவதாக உறுதியான அறிக்கைகள் தெரிவிக்கின்றன. மேலும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளின் பெயரால் பொதுமக்கள் நீண்டகாலம் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
சிறிலங்கா இராணுவத்துக்கும் துணை இராணுவக் குழுவான கருணா குழுவினருக்கும் இடையேயான தொடர்புக்கு சாத்தியங்கள் உள்ளன. சிறிலங்கா அரசாங்கம் இதனைத் தடுக்கவில்லை. தமது கட்டுப்பாட்டுப் பகுதியில் ஆயுதக் குழுக்கள் இயங்குவதைத் தடுப்பதாக அது வாக்குறுதி அளித்திருந்தும் செயற்படுத்தவில்லை.
இதே கால கட்டத்தில் பொதுமக்களுக்கு எதிரான புலிகளின் படுகொலைகள் அதிகரித்துள்ளன. இராணுவத்தினருக்கு எதிரான பயங்கரவாதத் தாக்குதல்களும் கணிசமான அளவில் அதிகரித்திருக்கின்றன.
சிறார்களை விடுதலைப் புலிகள் தொடர்ந்து படையணிகளில் சேர்க்கின்றனர்.
இலங்கையின் மனித உரிமைகளை தொடர்ந்து இங்கிலாந்து கண்காணிக்கும். எம்மைப் பொறுத்தவரை பேச்சுக்கள் தான் இனப்பிரச்சனைக்குத் தீர்வு காண்பதற்கான பாதையாக இருக்கும். பேச்சுக்களின் மூலம் அனைத்துத் தரப்பு மக்களினது நீதியான முறைமைகளுக்குத் தீர்வு காண முடியும்.
தமிழீழ விடுதலைப் புலிகள் வன்முறைகளைக் கைவிட வேண்டும் என்று மீண்டும் கேட்டுக் கொள்கிறோம்.
மனித உரிமை மீறல்கள் தொடர்பில் வெளிப்படையான நம்பிக்கையான விசாரணைகளை சிறிலங்கா அரசாங்கம் நடத்த வேண்டும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
|