பிரதான பக்கம் arrow ஆசிரியர் தலையங்கம் arrow முன்னாள் படைத் தளபதிகளின் காத்திரமான கருத்து
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English

முன்னாள் படைத் தளபதிகளின் காத்திரமான கருத்து அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Wednesday, 28 September 2005

""தேசிய இனப் பிரச்சினைக்கு யுத்தத்தின் மூலம் ஒருபோதும் தீர்வு காண முடியாது. அரசியல் ரீதியான தீர்வே இந்த நாட்டில் சமாதானம் ஏற்படுத்துவதற்கான ஒரே வழியாக இருக்கும். இனப்பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதற்கான சூழல் காணப்பட்ட போதிலும் அரசியல்வாதிகளின் தவறான வழிகாட்டல்களினாலேயே யுத்தம் ஏற்பட்டது'' என்று முன்னாள் படைத் தளபதிகள் கூறியுள்ளனர்.

கொழும்பில் நடைபெற்ற பத்திரிகையாளர் மாநாட்டில் கருத்து தெரிவித்த முன்னாள் படைத் தளபதிகளான ஜெனரல் எஸ்.சீ. ரணதுங்க, எயார்வைஸ் மார்சல் ஹெரிகுணதிலக்க, லெப்டினன்ட் ஜெனரல் டெனிஸ் பெரேரா, ஜெனரல் ஹெமில்டன் வணசிங்க ஆகியோரே இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளனர்.

ஜனாதிபதித் தேர்தலின் பின்னணியில் யுத்தத்தை தூண்டும் வகையிலான உணர்ச்சி பூர்வமான கருத்துக்களும், அது தொடர்பான உடன்பாடுகளும் ஏற்பட்டுள்ள இன்றைய நிலையில் முன்னாள் படைத் தளபதிகளின் கருத்து, தக்க சமயத்தில் சீர்தூக்கிப் பார்க்க வேண்டியது இந்த நாட்டின் அனைத்துப் பிரஜைகளினதும் கடப்பாடாகும்.

வடகிழக்கில் கோரயுத்தம் இடம்பெற்று பாரிய உயிர்ச் சேதங்கள் ஏற்பட்ட நிலையில், படை அணிகளுக்கு முக்கிய வழிகாட்டிகளாக விளங்கியவர்களும், போர் வியூகங்களை அமைத்து தமிழீழ விடுதலைப் புலிகளை வெற்றி கொள்ள எத்தனித்தவர்களுமான முன்னாள் படைத் தளபதிகளே, யுத்தத்தின் கோரத்தை நன்குணர்ந்த நிலையில் நாட்டின் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வே ஒரே வழி என்று மிகவும் உறுதியாகக் கூறியுள்ளனர்.

இதனிடையே இராணுவத்தைக் கலைக்க வேண்டும் என்ற ஜே.வி.பி. தலைவர் சோமவன்சவின் கூற்றுக்கு கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ள முன்னாள் தளபதிகள், உலகில் எந்தவொரு நாட்டிலும் யுத்தத்தின் மூலம் பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டதாக வரலாறு இல்லை என்பதை சோமவன்ச அமரசிங்கவுக்கு நினைவூட்ட விரும்புகின்றோம் என்றும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அத்துடன், மீண்டும் யுத்தம் செய்தால் எமது மக்களே அழிவார்கள். நாடு யுத்தக் காடாக மாறும் என்றும் முன்னாள் படைத் தளபதிகள் யதார்த்தத்தை எடுத்துக் கூறியுள்ளனர்.

கடந்த காலங்களில் இடம்பெற்ற கோர யுத்தத்தின் போது படையினர் பலர் பலியாக நேர்ந்ததுடன் ஆயிரக்கணக்கில் ஊனமடையவும் நேர்ந்தது. எனினும், இது குறித்து அரசியல் தலைமைத்துவங்கள் கவனத்தில் கொள்ளவில்லை. மாறாக தங்கள் சுயநலனுக்காக யுத்தத்தை முன்னெடுத்தன. அதன் விளைவையே இன்று முழு நாடும் அனுபவித்து வருகின்றது.

இவை அனைத்தையும் நன்கு அவதானித்த நிலையிலேயே முன்னாள் படைத் தளபதிகள் கூட்டாக இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளனர்.தொழிலுக்காகவும், வறுமையின் நிமித்தமும் படையில் சென்று இணைந்து கொண்ட அப்பாவி சிங்கள இளைஞர்களே போரின் போது பெரும் எடுப்பில் பலியானார்கள். அதேவேளை, "போர் என்றால் போர்' என்று கர்ச்சிக்கும் தென்பகுதி அரசியல்வாதிகள், அமைச்சர்களின் பிள்ளைகள் கொழும்பில் ""இன்டர் கூலர்'' வாகனத்தில் சென்று "சர்வதேச கல்லூரி' களிலும் மற்றும் வெளிநாடுகளிலும் கல்வி கற்பது இந்த நாட்டில் தென்பகுதி குக் கிராமங்களில் வாழும் சிங்கள மக்களுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை.

அது மாத்திரமின்றி, இன்று போர் முரசு கொட்டும் மதவாதிகளும், இனவாதிகளும் மீண்டும் நாட்டை போர் நோக்கி தள்ள முயற்சிப்பார்களேயானால், அதனால் பாரிய விபரீதங்களையே நாடு எதிர்நோக்க நேரும் என்பதை கவனத்தில் கொண்டே முன்னாள் படைத் தளபதிகள் இக்கருத்துக்களை முன்வைத்திருப்பதாக எண்ணத் தோன்றுகின்றது.

பல்வேறு சவால்களுக்கு மத்தியில் தொடர்ந்து பேணப்பட்டு வரும் யுத்த நிறுத்தத்தைப் பேணி பாதுகாத்து, அடுத்த கட்டம் நோக்கி நகர வேண்டியது மிகவும் இன்றியமையாதது. இதனையே சர்வதேச நாடுகளும் அடிக்கடி வலியுறுத்தி வருகின்றன.

எவ்வாறெனினும், பேச்சுக்களை மீண்டும் ஆரம்பிப்பதிலுள்ள அரசின் செயற்பாடுகளும், பேரினவாதிகளின் கூட்டும் எங்கே யுத்த நிறுத்த ஒப்பந்தத்துக்கு சாவுமணி அடித்து விடுமோ என்ற ஏக்கத்தையே தமிழ் பேசும் மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.

யதார்த்தத்தை உணர்ந்து சகல தரப்பினரும் தேசிய இனப்பிரச்சினைக்கு பேச்சுக்கள் மூலம் தீர்வு காண முன் வருவதுடன் அதனை செயலுருப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வெறுமனே தேர்தல் பிரசாரங்களின் போதும், அரசியல் கூட்டுக்களை ஏற்படுத்தும் முயற்சிகளின் போதும் மாத்திரம் இனப்பிரச்சினை குறித்து பேசுவதை விடுத்து, ஆக்கபூர்வமான வழியில் அதனை அணுக அரச தரப்பினர் முன்வர வேண்டும் என்பதை மீண்டும் வலியுறுத்திக் கூற விரும்புகின்றோம்


virkesari
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..