|
ஹபரணையில் வெடித்துச் சிதறிய சம்பூர் ஆக்கிரமிப்பு நோக்கம் |
|
|
|
Wednesday, 18 October 2006 |
|
"பேசுங்கள்- போராடுங்கள்- போராடுங்கள்- பேசுங்கள்" என்ற வார்த்தைகளின் வழியாக பேச்சுவார்த்தைக்கான போராடுதலில் ஹபரண நிரந்த இடத்தைப் பிடித்துவிட்ட இடமாக நேற்று முன்தினம் பதியப்பட்டு விட்டது.
ஏற்கப்பட்ட இழப்பு 102, கடுங்காயம் 150-ற்கும் மேல். இதற்கு மேலாக எந்தத் தகவலுமே வெளிவருவதில் சிறிலங்காவுக்கு உடன்பாடில்லை.
இழப்புக்கள் குறித்த தகவல்களுக்கு சம்பவம் நடந்த சில மணிநேரத்திலேயே இரும்புத் திரையிடப்பட்டது. ஆம், இழப்பு அத்தகையது.
கடுங்காயங்களுக்கு உள்ளானோர் என வர்ணிக்கப்பட்டோர் கொழும்பு மற்றும்
குருநாகல் மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட, "சுமாரான காயங்களுக்கு"
உள்ளானோர் எனக் கருதப்பட்டு தம்புள்ள மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டவர்களில் அறுவர் சில மணித்துளிகளிலேயே இறந்ததானது இழப்பின்
நிஜத்தை உணர்த்துவதாக அமைந்து விட்டது.
ஆக மொத்தம் சம்பவ இடத்திலிருந்த அனைவருமே ஒட்டுமொத்தமாக செயலிழக்க வைக்கப்பட்டதான நிலையே தற்போதையது.
அதிலும் வடக்-கிழக்குப் போரரங்கிற்கான கடற்படையின் செயற்பாட்டு மையமான
திருமலைக் கடற்படைத் தளத்தைச் சார்ந்த சுமார் 340-க்கும் மேற்பட்ட
படையினர் போர்க்களத்திலிருந்து முற்றாக அகற்றப்பட்டுள்ளனர்.
யுத்தக் கடற்கலங்களின் இயக்குகைப் பயிற்சிகள், எதிராளிகளின்
பிரதேசங்களுக்கான தரையிறக்க பயிற்சிகள், ஆழ்கடற் கண்காணிப்பிற்கான
சிறப்புப் பயிற்சிகள் என பசுபிக் பிராந்தியம் முதல் பாகிஸ்தானிய கடற்படை
வரை பலரால் பயிற்றுவிக்கப்பட்ட பலர் திருமலைத் தளத்திலிருந்தே
செயற்பட்டார்கள்.
அவ்வாறானவர்களில் 340 பேர் ஒரே நேரத்தில் களத்திலிருந்து
வெளியனுப்பப்படுவார்கள் என்று சிறிலங்கா இராணுவத் தலைமை கனவிற்கூட
நினைத்திருக்காது.
ஒரே கட்டத்தில் இப்படி நடந்துள்ளதால் அதற்கான பிரதியீடு என்னவென்பது
பற்றிய திட்டத்தைப் பற்றிச் சிந்திப்பதற்கான வாய்ப்பையே அவர்களிற்கு
இல்லாது செய்து விட்டது.
காரைநகர் முதல் கற்பிட்டி வரை ஒரு குறுகிய நேர இடைவெளியில் பிரசன்னம்
தரும் போரரங்க நாயகர்களாக இருந்து வந்த போர்க்கலங்கள் குறிப்பாக,
டோராக்கள், சுப்பர் டோராக்கள், ஆழ்கடல் கண்காணிப்புக் கப்பல்கள்
என்பனவற்றின் இயங்குநர்களும், பாதுகாவலர்களுமே இப்போது இல்லாது
செய்யப்பட்டுள்ளார்கள்.
வடக்கு-கிழக்குப் போரரங்கிற்கு மட்டுமல்ல சிறிலங்காவின்
பொருளாதாரத்திற்கும் முக்கியமானது என்று சிறிலங்கா அரசால் பகிரங்கமாக
அறிவிக்கப்பட்ட திருமலைத் துறைமுகத்தின் இயக்கத்திற்குப் பாத்திரமாக
இருந்த இக் கடற்படையினர் புலிகளின் இலக்காக்கப்படுகிறார்கள் என்றே சம்பூர்
கைப்பற்றப்பட்டது.
சம்பூர் கைப்பற்றுதல் என்பதன் சமன்பாடு மிகவும் சிக்கலானது.
வடக்கு-கிழக்கைத் தக்கவைக்க திருமலைத் துறைமுகம் பாதுகாப்பாக இருக்க
வேண்டும், துறைமுகம் பாதுகாப்பாக இருக்க சம்பூர் கைப்பற்ற பட வேண்டும்.
அதன் பிறகு சம்பூரைத் தக்கவைக்க திருமலைத் துறைமுகத்திலுள்ள கடற்படையினர்
தொடர்ச்சியாக உதவ வேண்டும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணையப்பட்ட சமன்பாடு,
இவ்வாறு சம்பூர் ஆக்கிரமிக்கப்பட்டு அங்கே ஏறக்குறைய 3,000 படைகள்
நிலைநிறுத்தப்பட்ட பின்னர், சிங்களம் எந்த இலக்கை காக்க நினைத்ததோ, அந்த
இலக்கிலிருந்த அரைவாசிப்படையினர் களத்திலிருந்து காணமல் போயிருக்கிறார்கள்
என்பதோடு சம்பூர் கைப்பற்றப்பட்ட பின்னரும் கூட திருமலைத் துறைமுகம்
பாதுகாப்பற்ற நிலையை எய்திருக்கிறது.
இப்போது சிறிலங்கா அரசிற்கு இரண்டும் கெட்டான் நிலை.
340 கடற்படையினரைப் பிரதியீடு செய்வது என்பதல்ல அரசின் இப்போதைய
பிரச்சினை. இயங்குதளத்தின் நாயகர்களாக விளங்கியவர்களின் அதீத யுத்த கள
அனுபவத்தையும், வெளிநாட்டுப் பயற்சிகளையும் பிரதியீடு செய்வது என்பது
சாத்தியமற்றது என்பதே அதன் முழுமுதற் பிரச்சினை.
அவ்வாறு யுத்தகள அனுபவம் மற்றும் லாவக இயக்குதிறன் என்பன பிரதியீடு
செய்யப்படாத வரை கடற்படையின் போர்வீச்சு, யுத்தவலு மற்றும் களத்தில்
நின்று போராடும் திறன் என்பன கேள்விக்குறியாகவே இருக்கும் என்பதுடன்,
அதுவே மூதூர் முதல் முகமாலை வரை இதர படைகளின் ஈடாட்டத்திற்கும் வழி
சமைத்துவிடும் என்பதே களநிலை யதார்த்தமாகும்.
ஓயாத அலைகள் மூன்றின் போது எப்படி நான்கு, ஐந்து டிவிசன் படைகள்
சிதைவுற்று ஓடினவோ அதுபோல ஒன்றின் தயவில் பிறிதொன்றாக நிறுத்தப்படும்
நெருப்புப் பெட்டிகள் போன்ற நிலையை சிங்கள படைமுகாம்களும் தற்போது
எட்டியுள்ளன.
இப்போது புரிந்து கொள்ள வேண்டிய செய்தி யாதெனில் படைகளின் தொகையல்ல
வெற்றிக்கான காரணி. மாறாக யுத்த தந்திரோபாயமே வெற்றியை நிர்ணயம் செய்யும்.
எனவே ஹபரண என்பது அண்மைய நிழற்போரரங்கில் ஏதோ உயிரிழப்பின் உச்சத்தைத்
தொட்ட இடமல்ல. அதற்கு மாறாக போர்க்களத்தின் போக்கை மாற்றியமைத்து
சிறிலங்கா என்கிற யுத்த சாம்ராஜ்ஜியத்தின் போக்கில் நினைத்திராத
நிகழ்வுகளை ஏற்படுத்தப் போகின்ற ஒரு வரலாற்றுத் திருப்பு மையம்.
|