|
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி – ஐக்கிய தேசியக்கட்சி ஏன் இணைந்தார்கள்? என்ன தரப்போகிறார்கள்?
இரண்டு கட்சிகளும் இணைந்து நியாயமான தீர்வை முன்வைக்கும் என்பதைத் தமிழ்த்தேசியம் எவ்வாறு கண்ணை மூடிக் கொண்டு நம்பிவிட முடியும்?
கலாநிதி நல்லையா குமரகுருபரன் (பிரதித் தலைவர் - மேலக மக்கள் முன்னணி)
ஜனாதிபதி மகிந்த ராஜபக்~ தலைமையிலான ஆளும் கட்சியான ஸ்ரீலங்கா
சுதந்திரக்கட்சியும், எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க
தலைமையிலான ஐக்கிய தேசியக்கட்சியும் இரண்டு ஆண்டுகளுக்கு கைகோர்த்து
அனுசரணையாக செயற்படுவதென்ற முடிவோடு, 23.10.2006 அன்று ஒப்பந்தத்தில்
கைச்சாத்திட்டிருக்கின்றன. இதற்கான தேவை இரு சாராருக்கும் இருக்கின்றது.
மகிந்த ராஜபக்~ ஜனதாவிமுக்தி பெரமுன (ஜே.வி.பி), யாதிக ஹெலஉறுமய
(ஜே.எச்.ய+) கட்சிகளுடன் கூட்டு சேர்ந்து, ஒற்றையாட்சிக்குள்ளேயே
இனநெருக்கடிக்குத் தீர்வு என்ற கொள்கையை முன்வைத்து அதிகாரத்துக்கு
வந்தவர். இப்போது ஜே. வி. பி, ஹெல் உறுமய கட்சிகள் சமாதான
முயற்சிகளிலிருந்து நோர்வேயை வெளியேற்ற வேண்டும், விடுதலைப் புலிகளின்
மீது முழு அளவிலான யுத்தத்தை ஆரம்பிக்கவேண்டும் என்பன உட்படப் பல
நெருக்கடிகளைக் கொடுத்து வருகின்றன. கூட்டில் ஏற்பட்டிருக்கும் இந்தச்
சௌகரியமற்ற சூழலே சுதந்திரக்கட்சி கூட்டரசுக்கான கோரிக்கையை
விடுத்தமைக்கான முதன்மையான காரணம். இதை ஏற்றுக் கொள்ள வேண்டிய அழுத்தம்
ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஏற்பட்டிருக்கிறது. கட்சியில் இருந்து
ஆளுங்கட்சிக்குத் தாவிப்பாய்பவர்களுக்கு ஆப்பு வைப்பதற்கு இந்த வாய்ப்பைப்
பயன்படுத்திக் கொண்டுள்ளது.
ஜே.வி.பி, ஹெலஉறுமய கட்சிகள் சுதந்திரக்கட்சி – ஐக்கியதேசியக்கட்சியின்
இணைக்கப்பாடு பயங்கரவாதத்தைத் தோற்கடிக்க அடிப்படையாக அமையும் என்கின்றன.
பயங்கரவாதம் என்பது அவர்களின் மொழியில் தமிழீழ விடுதலைப்புலிகளுடனான
பேச்சு வார்த்தை. ஆனால், ரணில் விக்கிரமசிங்க இணைந்த செயற்பாட்டுக்கான
புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் பேச்சுவார்த்தை மூலமே இனப்பிரச்சினைக்குத்
தீர்வு என்பதைத் தான் வலியுறுத்தியுள்ளதை முழு நாட்டுமக்களுக்கும் கிடைத்த
வெற்றி என்கிறார். மகிந்தாவின் இரு புறமும் இரண்டு துருவங்கள். மகிந்த
ரணிலின் வழிக்கு வருவாரா? ரணில் அரசியல் தீர்வுக்கு அழுத்தம் கொடுப்பாரா?
வரலாற்று ரீதியாகப் பார்த்தால் சுதந்திரக்கட்சி இனப்பிரச்சினைக்கான தீர்வை
முன்வைக்கும் போதெல்லாம் அதனை ஐக்கிய தேசியக்கட்சி எதிர்த்தே
வந்திருக்கிறது. பண்டா – செல்வா ஒப்பந்தத்தின் போது ஐக்கிய தேசியக்கட்சி
பாதயாத்திரை போனதை மறந்துவிட முடியுமா? மறு தலையாக, ஐக்கிய தேசியக்கட்சி
இனப்பிரச்சினையைத் தீர்க்க முயன்றால் சுதந்திரக்கட்சி எதிர்க்கும். இரு
சாராருமே இனப்பிரச்சினைக்கான தீர்வில் எட்ட முடியாதவாறு பௌத்த சிங்கள
வாதம் தடுத்துக் கொண்டிருக்கிறது. இந்த வரலாற்றுப் பின்னணியில், இரண்டு
கட்சிகளும் இணைந்து ஒருமித்து கருத்துடன் இனப்பிரச்சினைக்கான நியாயமான
தீர்வை முன் வைக்கும் என்பதை தமிழ்த்தேசியம் எவ்வாறு கண்ணை மூடிக்கொண்டு
நம்பிவிட முடியும்?
சுதந்திரக்கட்சியும் ஐக்கிய தேசியக்கட்சியும் இணைந்து செயற்படுவதாகவே
இருந்தாலுங்கூட, அது நிரந்தரமான தீர்வை நோக்கியதாக இருக்கும் என்று
தமிழ்மக்கள் நம்புவதற்கான வலுவான காரணங்கள் இல்லை. ஏனென்றால், இரண்டு
கட்சிகளினதும் கூட்டு காலத்தின் நெருக்கடிகளால் ஏற்பட்டது. நெருக்கடிதான்
ஜே. ஆர். ஜெயவர்த்தனாவை ராஜீவ் காந்தியோடு இலங்கை - இந்திய ஒப்பந்தத்தை
கைச்சாத்திடவும், அரசியலமைப்பில் 13வது திருத்தத்தைப் பாராளுமன்றத்தில்
ஏற்றுக்கொள்ளவும் வைத்தது. அது போலவே ரணில் விக்கிரமசிங்காவும் காலத்தின்
கட்டாயமாகவே விசுவாசமாக வவுனியாவரை சென்று போர் நிறுத்த ஒப்பந்தத்தைச்
செய்தார். ஆனாலும், இவை இரண்டையுமே அதே பௌத்த சிங்கள அடிப்படைவாதம் இன்று
கேள்விக்குறியாக்கி இனப்படுகொலைகளை நிகழ்த்திக் கொண்டிருக்கிறது. வடக்கு
கிழக்கு இணைப்பு 13வது அரசியற் திருத்தத்தின் அடிப்படையில் நிறைவேற்று
அதிகாரங்கள் கொண்ட ஜனாதிபதியால் வெளிப்படுத்தப்பட்ட ஒன்றாகும். இன்று
நியாயங்களின் அடிப்படையில் அல்லாமல் வாதங்களின் அடிப்படையில் வடக்கு
கிழக்கு இணைப்பை ஏற்க முடியாது என்று பௌத்த சிங்கள வாதம் நீதிமன்றத்;தின்
மூலம்; கூறுபோட்டிருக்கிறது. இணைவு ஒப்பந்தம் குறித்து இன்;னுமொன்றையும்
கருத்தில் எடுக்;க வேண்டும். இப்படியே இணைந்தே இறுதிவரையிருந்து ஐ. தே.
கட்சிக்கு அஸ்தமன வரலாறு எழுதுமளவுக்கு ஐ. தே கட்சித் தலைமை ராஜதந்திரம்
அறியாதது அல்ல. எதிரணியில் இருந்து செய்யக்கூடிய விமர்சன அரசியலே
தேர்தலில் வெற்றி வாய்ப்பைத் தரக் கூடியது என்பது அதற்குத் தெளிவாகவே
தெரியும். இதனால் இரண்டு ஆண்டுகள் இணைந்திருந்து நல்லெண்ண சிந்தனைகளை
வெளிப்படுத்திய பின்னர், பல்வேறு குறைபாடுகளை விமர்சித்து வெளியேறி
அரசுக்கு எதிராகச் செயற்படுவதன் மூலம் ஐக்கியதேசியக் கட்சியும் தனது
வெற்றிவாய்ப்பு நிலையை மேம்படுத்திக் கொள்வதற்கே பெரிதும் முனையும்.
இணைந்த கூட்டமைப்பு 95 வீதமான சிங்கள ஜனநாயகத்தைப் பிரதிபலிக்கின்றது.
இந்த நிலையில் தமிழர்களின் அகிம்சைப் போராட்ட தோல்வியின் பின்னரான
பிரிவினைக்கு மாற்றீடாக சிங்களதேசம் எதை முன்வைக்கப் போகிறது? ஒட்டு
மொத்த யுத்த மூலமான தீர்வை நாடுவார்களா? அல்லது இணைவு ஒப்பந்தத்தில்
உள்ளது போன்று பேச்சு வார்த்தை மூலம் தீர்வை முன்னெடுக்க முயலுவார்களா?
என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
பெரும்பான்மைவாத அரசியலுக்குள் இயங்கியவர்கள் திடீரென தேசிய சமாதானத்துக்குரிய வழிமுறைகளைக் கண்டடைவார்களா என்பது கேள்விக்குறிதான் - தெ. மதுசூதனன் (ஆசிரியர் - அகவிழி மாத இதழ்,கூடம் காலாண்டு ஆய்வு இதழ்)
இலங்கை அரசாங்கத்துக்கும், விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கும் இடையில்
2002, பெப்ரவரியில் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது. நோர்வே
மத்தியஸ்தத்துடன் பேச்சு வார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டன. அதுகாறுமான இலங்கை
அரசியல் வரலாற்றில் இது ஒரு புதிய கட்டம். இதன் பின்னால் பெருமளவுக்கு
இருந்தது வெகுவாக மாறி வரும் சர்வதேச அரசியற் சூழல்தான். 1990களுக்குப்
பிறகு புதிய பன்னாட்டு அரசியல் ஒழுங்கமைவு உருப்பெற்று வருவதோடு பிராந்திய
அரசியல் சூழலும் மாறிவருகின்றது. இந்தப் பின்னணியிலேயே. இலங்கையின்
அரசியல் வரலாற்றின் அடுத்தகட்டமாக நிகழ்ந்திருக்கும் இரண்;டு
கட்சிகளுக்கும் இடையிலான கூட்டையும் புரிந்து கொள்ள வேண்டும்.
கடந்த ஆகஸ்ட் மாதம் தொடக்கம் அரசாங்கத்துக்கும் புலிகளுக்கும் இடையில்
மோதல் வலுப்பெற்றுச் செல்லுகிறது. அதே நேரம் போர் நிறுத்தம் நடைமுறையில்
உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. மேற்கு நாடுகளின் வருகையும் இரண்டு
தரப்புகளுக்கும் அழுத்தங்கொடுக்கும் படலங்களும் மேலும் மேலும்
அரங்கேறிவரும் சூழ்நிலையில், தற்போது இரண்டு பிரதான சிங்களக் கட்சிகளும்
பொது நிகழ்ச்சித் திட்டத்துக்கு வந்துள்ளன. ரணில் காலத்து முயற்சிகள் திசை
திருப்பப்பட்டுவிட்டன. ஆளுகின்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி
அரசாங்கத்துக்கு அது ஆரம்பித்திருக்கும் போரைத் தொடர்ந்து நடத்த
முடியவில்லை. நிறுத்தவும் முடியவில்லை. இனி இதில் இருந்து மீளுவதற்கு
சுதந்திரக் கட்சிக்கு வேறு ஒரு கட்டம் வேண்டும். அதே நேரம் இது அரசியல்
ரீதியில் சில விய+கங்கள் வகுக்கவும் உரிய வாய்ப்புகளைப் பெற்றுக்
கொடுக்கவும் வேண்டும். மாறிவரும் சமூக பொருளாதார, அரசியல் நிலைமைகளை
பன்னாட்டு, மற்றும் பிராந்திய மட்டங்களில் வைத்தும் நாம் புரிந்து கொள்ள
வேண்டும். சுதந்திரக் கட்சி அதற்கு உட்பட்டுத்தான் செல்ல முடியும்.
இதுதான் தற்போது நடைபெறுகிறது. உடனடி மாற்றங்கள் வேண்டும். இதற்கு
சுதந்திரக் கட்சியும் ஐக்கிய தேசியக் கட்சியும் இணைந்து செயற்படுவது போன்ற
தோற்றப்பாடு அவசியமாக உள்ளது. ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இதற்குப்
பணிந்து செல்வதைத் தவிர அதற்கான அரசியல் வெளியை உத்தரவாதப்படுத்த அதனிடம்
வேறு வழியில்லை. இவற்றின் அடிப்படையிலேயே இதுவரை ‘எதிரும் புதிரும்| ஆக
இயங்கிவந்த கட்சிகள் தேசிய சமாதானம், நல்லாட்சி, பொருளாதார அபிவிருத்தி,
சமூக அபிவிருத்தி, தேசத்தைக் கட்டியெழுப்புதல், தேர்தல் மறுசீரமைப்பு ஆகிய
ஆறு விடயங்களை உள்ளடக்கிய பொது வேலைத் திட்டமொன்றுக்கு இணங்கியுள்ளன. இந்த
இணக்கப்பாட்டை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு என்றும்,
வடகிழக்கு வாழ் மக்களுக்கு நியாமானதும் கௌரவமானதுமான தீர்வொன்றை
ஏற்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்பு என்றும் கருத்துப் பரப்புகையும்
செய்யப்படுகிறது.
உண்மையில இனப்பிரச்சினைக்கு தீர்வு காணக்கூடிய மாற்று வழி வகைகளைத்
தேடுவதில் பேச்சுவார்த்தை முதன்மை இடம் வகிக்கும் வகையில், சாத்தியமான
சூழல்களை உருவாக்குவதில் இரு கட்சிகளும் முனைப்புடன் இயங்குவார்களா?
அதற்குரிய நேரம் வந்துவிட்டதா போன்ற கேள்விகள் எழாமல் இல்லை. இந்த
இடத்தில் நாம் வரலாற்று ரீதியில் இலங்கையில் அரசியல் கட்சிகள் வழிவந்த
‘அரசியல் கலாசாரம்’ எத்தகையது என்பதை மீட்டுப்பார்க்க வேண்டும்.
இலங்கையில் கட்சி அரசியல் என்பது நவீன அரசியல் பரிமாணத்தின் கலாசார
கருத்தியல் வெளிப்பாடாக அமையவில்லை. இங்கு முனைப்படைந்த இனத்துவ அரசியலின்
மேலாட்சிக்கு அடிபணிதலுடன், அதன் அரசியல் பலத்தை தத்தமது கட்சி அரசியல்
இருப்புக்கும் ஆட்சி அதிகார மாற்றத்துக்கும் வலுவாகப் பயன்படுத்தியுள்ளன.
இந்தியாவில் கட்சி அரசியல் இந்தியத் தேசியத்தின் தேசியவாதத்தின் அம்சங்களை
வலுவாகப் பற்றியுள்ளன. இதற்குரிய கலாசார மரபு கட்சி அரசியலின் பிரதான
அம்சங்களாகவும் உள்ளன. இதனால் காங்கிரல் கட்சியும் பாரதிய ஜனதா கட்சியும்
தேச நலன், நாட்டுப்பற்று, சார்ந்து இயங்க முடியும். ஆனால் இது போன்ற
கலாசார மரபு, தேசியவாதம் இலங்கையில் வளர்ச்சியடையவில்லை. இரண்டு
கட்சிகளுமே இலங்கை வாழ் அனைத்து மக்களினதும் சுயமரியாதையை, இனசமத்துவத்தை
வளர்க்கும் கட்சிகளாக செயற்படவில்லை. இங்கு இலங்கைத் தேசியம் என்பது
பெரும்பான்மை வாதத்துடன் மட்டும் குறுக்கப்பட்டுவிட்டது. தேசிய சமாதானம்,
நல்லாட்சி, அபிவிருத்தி ஆகிய குறிக்கோள்கள் பெரும்பான்மை வாதத்துக்குள்
மட்டுமே பலியாகியது. இந்தப் பெரும்பான்மைவாத அரசியலுக்குள்ளே
இயங்கியவர்கள் திடீரென்று தேசிய சமாதானத்துக்கு உரிய வழிமுறைகளைக்
கண்டடைவார்களா என்பது கேள்விக்குறிதான்.
தமிழ்த்தரப்பு ஆயுதக்களத்தில் சந்தித்த போரினை இனிமேல் அரசியற்களத்தில் சந்திக்கப் போகின்றது. -சி. அ. யோதிலிங்கம் (அரசியல் ஆய்வாளர்)
ஐக்கிய தேசியக் கட்சியினதும், சிறீலங்கா சுதந்திரக் கட்சியினதும்
இணைவுக்கு சர்வதேசச் சக்திகளின் அழுத்தம்தான் பிரதான காரணம். சர்வதேசச்
சக்திகள் அவர்களது நிகழ்ச்சி நிரலை நகர்த்துவதற்குப் பிரதான தடையாக
இருந்தவை இரண்டு விடயங்கள். ஒன்று, இந்தியா தங்களது நிகழ்;ச்சி
நிரலுக்குள் வராமல் தனியான நிகழ்ச்சி நிரலை நகர்த்த முயன்றமை. அது அநேக
சந்தர்ப்பங்களில் சர்வதேசச் சக்திகளின் நிகழ்ச்சி நிரலுக்கு முரணாக
இருந்தது.. இரண்டாவது, தென்னிலங்கையின் பிரதான கட்சிகளிடையேயான
ஒருமைப்பாடின்மை. இவ்வொருமைப்பாடின்மையால் செயற்பாடுடன் கூடிய நிகழ்ச்சி
நிரலை நகர்த்த சர்வதேசச் சக்திகளால் முடியவில்லை. ஐக்கிய தேசியக் கட்சி
ஆட்சிக்கால சமாதான முயற்சிகள் தோல்வியடைந்தமைக்குப் பிரதான காரணம் இவ்விரு
விடயங்களுமேயாகும். ஜனாதிபதி சந்திரிக்காவின் சுனாமிப் பொதுக்கட்டமைப்புச்
செயற்பாட்டினை இவ்விரு கட்சிகளுக்குமப்பால் நீதிமன்றம் குழப்பிய போதும்
நீதிமன்றத்தின் ஆதிக்கத்தைக்கூட இருகட்சிகளும் இணைந்திருந்தால் பாராளுமன்ற
நடவடிக்கைகள் மூலம் தடுக்கக்கூடிய நிலை காணப்பட்டிருந்தது.
சர்வதேசச் சக்திகளைப் பொறுத்தவரை போர் தொடர்வதை அவர்கள் விரும்பவில்லை.
போர் தொடருமாயின் புலிகள் மேல்நிலைக்கு வரக்கூடிய நிலையிருந்தது. அல்லது
போர் நீண்டகாலம் இழுபடக்கூடிய நிலையிருந்தது. இவ்விரு நிலைகளுமே
வலுச்சமநிலையினைப் புலிகளுக்குச் சார்பாகத் திரும்பிவிடும் போக்கினைக்
கொண்டிருந்தன. வலுச்சமநிலை புலிகளுக்குச் சார்பாக மாறினால் அது தனிநாட்டை
நோக்கியே நகருமென்பது சர்வதேசச் சக்திகளுக்கு நன்றாகவே தெரிந்திருந்தது.
இது இலங்கையின் புவியியலமைவில் நிலைகுலைவினை ஏற்படுத்தி தற்போதைய அமைவு
முறையினைத் தலைகீழாக மாற்றிவிடக்கூடும். அதேவேனை தென்னிலங்கையிலும்
இனவாதச் சக்திகளின் கரங்களும் அதன்வழி இராணுவத்தின் கரங்களும் ஓங்குகின்ற
நிலையும் ஏற்படும். மொத்தத்தில் இவ்வளர்ச்;சி இரு தரப்பினரையுமே கையாள
முடியாத நிலையினையே உருவாக்கும்.
சர்வதேசம் இப்போக்கினை விரும்பவில்லை. இதனால் அவர்கள் முதலில் இந்தியாவைத்
தமது நிகழ்ச்சி நிரலுக்குள் கொண்டுவர முனைந்தனர். போரில் பாகிஸ்தானின்
அதிகரித்த பிரசன்னத்துடன் இந்தியா தானாகவே சர்வதேசச் சக்திகளின் நிகழ்ச்சி
நிரலுடன் இணைந்து கொண்டது. இந்தியாவிற்கு இதனைவிடச் சிறந்த வேறு
தெரிவுகளேதுமிருக்கவில்லை. இரண்டாவது கட்டமாக தென்னிலங்கையின் இரு பிரதான
கட்சிகளிடையேயும் ஒன்றிணைவை ஏற்படுத்தும் முயற்சிகளில் இறங்கி அதிலும்
வெற்றி கண்டுள்ளனர்.
சர்வதேசச் சக்திகளின் அழுத்தங்களுக்குமப்பால் ஐக்கிய தேசியக் கட்சியின்
தலைமைக்கு தனது பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்திற்குத் தாவுவதைத்
தடுக்கவேண்டிய கட்டாயமுமிருந்தது. இதைவிட ஐ. தே. கவின் ஆதாரவுத்தளமான
வர்த்தக சமூகத்தின் தொடர்ச்;சியான அழுத்தமும் அதற்கு இருந்துவந்தது.
சிறீலங்கா சுதந்திரக் கட்சியைப் பொறுத்தவரை ஜே.வி.பியினரின் அதிதீவிர
அழுத்தத்திலிருந்து விடுபட வேண்டிய கட்டாயம் அவர்களுக்கிருந்தது. இவைதவிர
இருகட்சிகளுக்கு மேற்பட்ட இன்னோர் பொதுவான நெருக்கடி ஜே.வி.பியினதும்,
இராணுவத்தினதும் பேரினவாத முன்னெடுப்புக்களால் தமது இருப்பும்
ஆட்டங்கண்டுவிடுமென்ற அச்சமாகும். இராணுவத்தின் அதிதீவிரச்
செயற்பாட்டிற்கு சிறீலங்கா சுதந்திரக் கட்சியினால் போதுமானளவு அரசியல்
தலைமையைக் கொடுக்க முடியவில்லை. உண்மையில் அவ்விரசியல் தலைமையை
ஜே.வி.பி.தான் கொடுத்துக் கொண்டிருந்தது. இரு தரப்பினரும் தனியாகவும்
பொதுவாகவும் முகங்கொடுத்து வந்த இவை போன்ற நெருக்கடிகளும் இரண்டுமிணைந்த
உடன்படிக்கைக்குக் காரணமாகியிருக்கின்றன.
தென்னிலங்கையில் ஏற்படும் மாற்றங்கள் எதுவும் தமிழ்த்தரப்பிற்கு பெரிய
பிரச்சினையாகப் போவதில்லை. தமிழர் அரசியல் இலங்கை மட்டம், பிராந்திய
மட்டமென்பதைத் தாண்டி சர்வதேச மட்டத்திற்கு வந்திருக்கின்றது. தற்போது
தமிழத்தரப்பிற்கு சர்வதேச அரசியலும் அதனடிப்படையிலெழுகின்ற
நடவடிக்கைகளும்தான் பிரச்சனைகளாக அமைகின்றன. சர்வதேசச் சக்திகளைப்
பொறுத்தவரை, தமது நிகழ்ச்சி நிரலை நகர்த்துவதற்கு தென்னிலங்கையிலிருந்து
வந்;த நெருக்கடி தற்போது குறைந்துவிட்டது. இதனால் இனிமேல் புலிகளுக்கு
நேரடியாக அழுத்தம் கொடுத்து, அவர்கள் நினைக்கும் தீர்வை நகர்த்துவது
சுலபமாக இருக்கும்.
இங்கு தமிழ்த்தரப்பிற்குள்ள பிரச்சினை வரப்போகும் தீர்வை தமிழ்மக்களுக்கு
ஏற்ற வகையில் எவ்வாறு பெற்றுக்கொள்வததெனபதேயாகும். சிங்களத் தரப்பு வழங்க
விரும்புகின்ற தீர்விற்கும் தமிழ்த்தரப்பின் அபிலாi~களுக்குமிடையே நீண்ட
இடைவெளி இருக்கின்றது. சிங்களத் தரப்பும் அதனுடன் இணைந்தவகையில் இந்தியத்
தரப்பும் குறைந்த அதிகாரமுள்ள தீர்வினையே முன்வைக்கப் பார்க்கும். தற்போதே
“இந்திய மாதிரி” பற்றிப் பேசப்படுகின்றது. இந்திய மாதிரி தமிழ்மக்களின்
அபிலாi~களை எந்தவகையிலும் தீர்க்கப் போவதில்லை. தமிழ்த்தரப்பு நாடுகளின்
கூட்டாட்சி எனப்படுகின்ற சம்மேளன முறையினின்று கீழிறங்குவது
ஆரோக்கியமானதாக இருக்காது. எனவே தமிழ் மக்கள் இன்னோர் வகையான
போராட்டத்தினை நடத்த வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
மொத்தத்தில் தமிழ்த்தரப்பு ஆயுதக்களத்தில் சந்தித்த போரினை இனிமேல்
அரசியற்களத்தில் சந்திக்கப் போகின்றது. அதற்கான மார்க்கங்களை
இப்போதிருந்தே தேடுவது நல்லது.
இரண்டு கட்சிகளுக்குமான வேறுபாடு நீலமும் பச்சையும் என்பதைத் தவிர வேறெதுவும் இல்லை -பா. சிவகுமார் (சரிநிகர்)
சிறீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்குமிடையிலான
புரிந்துணர்வு ஒப்பந்தம் பற்றிப் பார்ப்பதற்கு முதலில் இந்த இரண்டு
கட்சிகளும் அடிப்படையில், அவை வரித்துக் கொண்டுள்ள கொள்கைகள்,
கோட்பாடுகள், நம்பிக்கைகள் சார்ந்து ஏதாவது வேறுபாட்டைக்
கொண்டிருக்கின்றனவா என்று பார்ப்பது அவசியம் என்று நினைக்கிறேன்.
1950களிலும், 1960களிலும் இருந்த சுதந்திரக் கட்சி அல்ல இன்றுள்ள
சுதந்திரக் கட்சி. ஆகக் குறைந்தது 1970களில் இருந்த கட்சியுமல்ல அது. அது
உருவான காலகட்டத்தில் இருந்த சர்வதேசச் சூழ்நிலைகளும், அதனோடு
ஒட்டியிருந்த இலங்கையின் இடதுசாரிகளும் அதற்குக் கொடுத்த முகம் இன்று
இல்லை. 1977இல் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக இருந்த
ஜே.ஆர்.ஜெயவர்த்தனா கொண்டு வந்த திறந்த பொருளாதாரக் கொள்கை சிறிலங்கா
சுதந்திரக் கட்சியோடு ஒட்டியிருந்ததாகச் சொல்லப்பட்ட தேசியவாதக்
கூறுகளையும் களைந்து கொண்டு போனதுதான் சுவாரசியம். அதற்குப் பிறகு
சரிநிகரில் நாங்கள் குறிப்பிட்டு வந்தது போல இரண்டு கட்சிகளுக்குமான
வேறுபாடு நீலமும் பச்சையும் என்பதைத் தவிர வேறெதுவும் இல்லை. இரண்டு
கட்சிகளுமே அசல் தரகு முதலாளியக் கட்சிகளாகவே இருக்கின்றன. இப்படி
இருக்கும் போது இனப்பிரச்சினைத் தீர்வில் மட்டும் எப்படி இரண்டு
கட்சிகளுக்குமிடையில் வேறுபட்ட நிலைப்பாடு காணப்படும்?
இப்போது நீங்கள் கேட்கக் கூடும் ரணில் விக்ரமசிங்க சமஸ்டி முறைமையான
தீர்வு ஒன்றைப் பற்றிப் பேசினார், ஆனால் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவோ
ஒற்றையாட்சி முறைக்குள் அல்லவா தீர்வுகாண முயற்சிக்கிறார் என்று.
இந்தியாவில் நிலவுவதும் சமஸ்டி முறைமைதான.; அமெரிக்காவில் இருப்பதும்
சுவிற்சலாந்தில் இருப்பதும் சமஸ்டி முறைமைகள்தான். ரணில் பேசிய சமஸ்டி
எதுவென்று நாங்கள் அடையாளம் காண முடியாதபடி புலிகள் அவரை இரட்சித்து
விட்டார்கள்; அல்லவா? தேர்தலில் மீளவும் ஐக்கிய தேசியக் கட்சி வெற்றி
பெற்றிருந்தால் ரணில் எந்த சமஸ்டி பற்றிப் பேசினார் என்பது தெரிய
வந்திருக்கும். ஈழத்தைத் தவிர எல்லாவற்றையும் தருவதாக ஜனாதிபதியாக இருந்த
போது பிரேமதாச சொன்னதை நாங்கள் மறந்த விட முடியாது.
அப்படியானால் இந்த உடன்பாட்டிற்கான காரணம் என்ன என்ற கேள்வி எழுகிறது.
முதலாவது, வுpடுதலைப் புலிகளைப் போரில் தோற்கடிப்பதன் மூலம்
இனப்பிரச்சினைக்குத் தீர்வைக் கண்டுவிடலாம் என்று நம்பிக் கொண்டு தீவிர
இனவாதக் கட்சிகளுடன் சேர்ந்து ஆட்சியமைத்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு
அந்த நம்பிக்கையின் மீது மண் விழுந்திருக்கிறது. அவர் நடாத்திய போரின்
வழிமுறை சர்வதேச சமூகம் என்று சொல்லப்படுகிற பெரும்பான்மையான மேற்குலகைச்
சேர்ந்த நாடுகளுக்கு அரியண்டத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதனால் அவை தமது
நிதியுதவியை நிறுத்தப் போவதாக நெருக்குதல்களைக் கொடுக்க ஆரம்பித்துள்ளன.
முதற்படியாக அரசசார்பற்ற நிறுவனங்களுடாக வழங்கும் நிதியைச் சில நாடுகள்
நிறுத்தி இருக்கின்றன. கூடவே ஜே.விபியுடன் உள்ள கூட்டும் இந்த சர்வதேச
சமூகத்திற்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. அது ஒரு இனவாதக் கட்சி
என்பதையும் விட அதனுடைய சட்டை இன்னமும் சிவப்பாக இருப்பது அவர்களுக்குச்
சகிக்க முடியாமல் இருக்கிறது.
இரண்டாவது, ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்கு வருவதற்கு இன்னும் 12 ஆண்டுகள்
காத்திருக்க வேண்டியிருக்கும் என்பது பல ஐக்கிய தேசியக் கட்சிக்காரர்களின்
கணக்கு. அந்தப் 12 வருட காலத்திலும் ‘உழைக்க” முடியாது போய் விடுமே என்று
தமது தலைமை மீது அதிருப்தியுற்றிருந்த பல ஐக்கிய தேசியக்கட்சி நாடாளுமன்ற
உறுப்பினர்களை அமைச்சர் பதவியை வீசியெறிந்து உள்ளிளுத்துக் கொண்டார்
ஜனாதிபதி, போதாததற்கு ஐக்கிய தேசியக் கட்சிக்குள் நிலவும் ரணிலின்
தலைமைக்கு எதிரான அணியினருடன் ஒரு உடன்பாட்டுக்கு வந்து அவர்களுடைய
ஆதரவைப்பெற ஜனாதிபதி முயன்றதாகவும், இவ்விடயம் அறிந்து விழித்துக் கொண்ட
ரணில் விக்ரமசிங்க அதனை முறியடிக்க தானே உடன்படிக்கைக்குத் தயாரானதாகவும்
ஒரு தகவல் உண்டு.
இது ஜனாதிபதி தன்னுடைய ஆட்சியை ஸ்திரப்படுத்திக் கொள்ள எடுத்த ஏற்பாடு
அல்லவா? ஜனாதிபதியின் இந்த ஏற்பாட்டுக்கு ரணில் விக்ரமசிங்க
உடன்பட்டதுக்கு மூன்றாவதான ஒரு காரணமும் இருக்கிறது. தமிழ் முஸ்லிம்
மக்களுடைய அபிலாசைகளைப் ப+ர்த்தி செய்யக் கூடிய தீர்வை முன்வைப்பது இலங்கை
அரசியல் வளர்ந்த சூழமைவில் ஐக்கிய தேசியக் கட்சிக்குச் சாத்தியமில்லை
என்கிறபோது போர் முனைப்பையும், இனவாதத்தையுமே மூலதனமாகக் கொண்டு ஆட்சிக்கு
வந்த ஜனாதிபதியாலும் முடியாதென்கிற நம்பிக்கைதான் அது. வுpளைவாக,
இறுதியில் தமிழ் முஸ்லிம் மக்களிடமும், சர்வதேச சமூகத்திடமும் ஜனாதிபதி
அம்பலப்பட்டுப் போவார் என்பதும் புலிகள் கொடுத்த வரத்தால் தான் மீளவும்
சமாதானத்தின் காவலன் என்ற நற்பெயருடன் ஆட்சிக்கு வர வாய்ப்பிருக்கிறது
என்பதும் ரணில் விக்ரமசிங்கவின் கணக்கு. இவை தான் ரணிலை இந்தப்
புரிந்துணர்வுக்கு வர இடமளித்ததாகக் கொள்ள முடியும்.
ஆக அவரவர் நலனில் இருந்து செய்து கொள்ளப்பட்ட இந்தப் புரிந்துணர்வு
உடன்படிக்கை தமிழ் முஸ்லிம் மக்களுக்கோ அல்லது மொத்தமாக நாட்டு மக்களுக்கோ
எதைப் பெற்றுக் கொடுக்கும் என்று நாம் எதிர்பார்ப்பது? இந்தப்
புரிந்துணர்வு உடன்படிக்கையை வரவேற்கும் மேற்கும் நாடுகளும் அவற்றின்
முகவர்களில் ஒரு பகுதியினராகத் தொழிற்படும் அரச சார்பற்ற நிறுவனங்களில்
ஒரு பகுதியினரும் இனப்பிரச்சினைத் தீர்வில் தெற்கில் ஏகோபித்த நிலைப்பாடு
ஒன்று வந்து விட்டதாகக் கூறி, இதனூடாக ஏதாவது ஒரு தீர்வு
உருவாக்கப்பட்டால் அதனை ஏற்றுக் கொள்ளுமாறு புலிகள் மீது நிர்ப்பந்தத்தை
ஏற்படுத்துவார்கள். அதற்கு தமிழ் முஸ்லிம் மக்களுடைய அரசியலில் பலவீனமாக
உள்ள அம்சங்களைப் பயன்படுத்துவார்கள். அவர்களைப் பொறுத்தளவில் இங்கு
நிலவுகிற அசமத்துவம் நீங்குகிறதா இல்லையா என்பதை விட போரற்ற நிலைமை
நிலவினாலே போதுமானது. அவர்களுடைய றுin றுin pழடiஉல அதைத் தான் செய்யும்.
ஐனெரளவசயைட Pநயஉந இல் எப்படி முதலாளி தொழிலாளர்களுக்கிடையில் சுரண்டலும்
ஒடுக்குமுறையும் கூடிய அசமத்துவம் நிலவும் அதேவேளை ஒரு அமைதி நிலவ
வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறதோ அதே போல இங்கும் எல்லா
அசமத்துவங்களுக்குமப்பால் ஒரு சமாதானம் ஏற்படுத்தப்படும். அதனை எவ்வாறு
எதிர்கொள்வது என்பதனைத் தான் மக்கள் நலனில் அக்கறை கொண்டோர் சிந்திக்க
வேண்டும்.
வரலாற்றுச் சிறப்புமிக்கது என்று வர்ணிக்கப்படும் இந்த ஒப்பந்தம் புதிய வரலாற்றை உருவாக்காது.
றோஹித பா~ண அபேவாத்தனா (ஹிறு குழுமம்)
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கும், ஐக்கிய தேசியக்கட்சிக்கும் இடையே
உருவாகியுள்ள ‘வரலாற்றுக் கூட்டணி’க்குரிய அரசியல் முக்கியத்துவம் என்ன?
இந்தக் கூட்டணி ஸ்ரீலங்காவின் தேசிய வினாவுக்கு நிரந்தரமான, நியாயமான
தீர்வைக் காணுவதற்கு வழி வகைகளைத் தருமா? என்ற இரண்டு கேள்விகளே இன்றைய
அரசியல் விவாதத்தில் மேலாண்மை செலுத்தும் முக்கிய விடயங்களாக உள்ளன..
இவற்றுக்கு விடை கூற முனையும் போது கூட்டணி உருவாகியுள்ள இன்றைய இயல்பான
அரசியற் சூழலை ஒருவர் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். முதலாவதாக,
இக்கூட்டணி இயற்கையான செயல் முறை வளர்ச்சியில் பரிணாமித்தது அல்ல என்பதை
எவராலும் உணர்ந்து கொள்ள முடியும். நாட்டின் மிகப் பெரிய இந்த இரண்டு
கட்சிகளுமே கணிசமான காலத்தைப் பேச்சு வார்த்தையில் செலவழித்திருந்தாலும்
அதன் சாரமென்னவோ மாக்கியவெல்லியன் (ஆயஉhயைஎநடடயைn) கோட்பாட்டை
அடியொற்றியதாகவே. இருந்தது. இப்போதும், இரண்டு கட்சிகளுமே; அடுத்தவருடைய
உள் முரன்பாடுகளை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி அமைத்திருக்கும்
இந்தக் கூட்டும் மற்றவர்களை பலவீனப்படுத்தி அடிமைப்படுத்துகின்ற ஒரு
தந்திரோபாய வழிமுறையேயன்றி வேறு அல்ல. இந்த வழிமுறை மற்றவர்களை அழிக்க
முற்படுகின்ற ஒரு சதி.
இரண்டாவதாக இ;ந்த ஒப்பந்தக்கான முடிவு இரண்டு கட்சிகளினதும்;
உள்கட்டமைப்பின் ஆலோசனைப் பெற்று எடுக்கப்பட்ட ஒருமனதான, தத்துவார்த்தமான
கொள்கை முடிவு அல்ல. மாறாக முழுமையான எதிர்ப்பு உணர்வால் விளைந்ததே.
அந்நியரின் கூட்டோடு உள்நாட்டின் ஸ்திரத்தன்மையை நிலைநாட்ட உருவான கூட்டு
இது. இரு கட்சித் தலைவர்களும் ஒருவருக்கொருவர் சற்று விட்டுக்கொடுத்து
தங்கள் கட்சிக்குள் உண்டாகும் எதிர் உணர்வுகளை பலவீனப்படுத்தி, அரசியல்
ரீதியாக தங்களை நடுநிலையாளர்காளாக காட்டித் தங்கள் அதிகாரங்களை தக்க
வைத்துக் கொண்டனர். துன்பத்தில் உழலுகின்ற நாட்டு மக்களின் தலைவிதியை
மாற்ற வல்லது என்பதால் ‘வரலாற்றுக்குரிய’ என்ற அடைமொழியை இந்த கூட்டணி
பெறவில்லை. மாறாக, பாரம்பரிய சிங்கள அதிகார முகாம்களில் தலைதூக்கி வரும்
உட்பிரச்சினைகளை தற்காலிகமாகவேனும் தணிக்க முயன்றதால் இதனை
வரலாற்றுக்குரியது என்று கூறலாம். கட்டுப்படுத்த முடியாத பொருளாதார
பிரச்சினைகளாலும் அடக்க முடியாத தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்தினாலும்
பலமிழந்த சிங்கள ஆதிக்க சக்திகள் மக்கள் மீதுள்ள தங்கள் பிடியைத்
தக்கவைத்துக் கொள்ள கடினமாய் பேராடிக் கொண்டிருக்கிறது. எனவே, வரலாற்றுக்
கூட்டணி எனப்படும் இந்த அணி ஸ்திரத்தன்மை என்பதன் அடையாளத்தை காட்டிலும்
சட்ட ப+ர்வமான அதிகாரத்துக்கு தகுதியற்ற அதனது நிலையை எடுத்தியம்பும்
பிரகடனம் என்பதே சரியானது.
நசுக்கப்பட்ட நிலையில் உள்ள தேசிய இனங்களுக்கு சமத்துவத்தையும் நீதியையும்
அடிப்படையாகக் கொண்ட ஒரு தீர்வைத் தரவல்ல தகுதி நிச்சயமாக இந்தக்
கூட்டணிக்கு இல்லை. ஏனெனில் தேசிய சமத்துவத்தையும் நீதியையும் ஏற்க வல்ல
கொள்கையின் அடிப்படையில் இக்கூட்டணி உருவாகவில்லை. மாறாக இக்கூட்டணி மூலம்
தமிழ் தேசிய இயக்கத்தை வலுவிழக்கச் செய்யவும், அவர்களது ஜனநாயக
கோரிக்கைகளை புறந்தள்ளவும் கூடியவாறு தங்களின் பேரம் பேசும் வலுவை
மேலோங்கச் செய்யவே சிங்கள ப+ர்~{வா கட்சிகள் முயற்சித்து வருகின்றன.
அதுமட்டுமல்லாமல் தங்களை ஒரு அரசியல் ஸ்திரத்தன்மையின் அடையாளமாக
முன்னிறுத்திக் காட்டவும், எதிர்பார்க்கப்படும் தென்பிராந்திய ஒற்றுமையை
தாம் ஆற்ற விருப்பதாக காட்டவும் முயலுகின்றன. அதே சமயம் புதிதாக
கண்டுபிடிக்கப்பட்ட இந்த ‘ஒற்றுமை’ ஜே.வி.பி, ஹெல உறுமய போன்ற கட்சிகளை,
அவற்றின் முழக்கங்களைக் கொண்டே முடங்கச் செய்யவும் பயன்படுத்தப்படும்.
விசேடமாக, ஜே.வி.பி தனது இடசாரி அணியின் மூலம் பொருளாதார கோ~ங்ளை
முன்வைத்தும், வலது சாரி அணியின் மூலம் இனவெறி கோ~ங்களை முன்வைத்தும்
மக்களை அரசாங்கத்துக்கு எதிராக திருப்பி விட முயலும். ஆனால், நடுத்தர
மற்றும் அடித்தள மக்களுக்கு எந்தவொரு பொருளாதார சலுகையையும் அரசாங்கத்தால்
வழங்க முடியாது. அது தன்னுடைய தகுதியற்ற தன்மையை மறைப்பதற்காக, இனவெறி
உணர்வையே மேலும் மேலும் ஊக்குவித்து அதன் மூலம் தங்கள் துன்பங்கள் பற்றிய
சிந்தனையிலிருந்து மக்களைத் திசை திருப்பும் முயற்சியில் ஈடுபடும்
இந்தப் பின்னணியில் வரலாற்றுச் சிறப்புமிக்கது என்று வர்ணிக்கப்படும்
புரிந்துணர்வு ஒப்பந்தம் புதிய வரலாற்றை உருவாக்காது. மாறாக வழக்கமான
வரலாற்றையே மீண்டும் எழுதும்.
பொ. ஐங்கரநேசன் /நன்றி தினக்குரல்
|