|
பயங்கரவாத இயக்கங்களின் பட்யலில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் பெயரையும் இடம்பெறச் செய்வது குறித்துத் தீவிரமாகப் பரிசீலனை நடத்திவருவதாக அறிவித்திருக்கும் ஐரோப்பிய ஒன்றியம், அதற்கு முன்னோடியாக ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம்வகிக்கும் நாடுகளில் புலிகளின் தூதுக் குழுவினர் பயணங்கள் மேற்கொள்வதற்கும் தடைவிதிக்கப்பட்டிருப்பதாகவும் அறிவித்திருக்கிறது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்தத் திடீர் முடிவு இலங்கையில் வாழும் தமிழர்களையும், புலம்பெயர்ந்த நாடுகளில் வதியும் ஈழத் தமிழர்களையும் பெரும் அதிர்ச்சிக்குள்ளும், கவலைக்குள்ளும், விசனத்திற்குள்ளும் ஆழ்த்தியிருக்கின்றது. பேரினவாதிகளின் சர்வதேச பிரசார வலையில் ஐரோப்பிய ஒன்றியம் தன்னையறியாமல் விழுந்திருப்பது மேற்குலகின் கௌரவத்திற்குப் பேரிழப்பாகும். தொண்ணூறுகளின் நடுப்பகுதியில் இலங்கை அரச படைகளின் கொடூர இராணுவ நடவடிக்கைகளுக்கு அஞ்சி தேவனின் ஆலயத்தில் நவாலி தேவாலயத்தில் குழந்தை குட்டிகளோடு, குடும்பம் குடும்பமாகத் தஞ்சம்புகுந்த அப்பாவித் தமிழர்கள் 170 பேர் இலங்கை விமானப்படை இலக்குவைத்து நடத்திய விமானக் குண்டுவீச்சில் கண்டதுண்டமாகி, உடல் சிதறிப் பலியான சம்பவம் ஈழத்தமிழரின் போராட்ட வரலாற்றில் ஒரு கோரவடு. இலங்கை விமானப் படை புரிந்த மிகமோசமான கொடூரங்களில் இதுவும் ஒன்று. செஞ்சிலுவைச் சர்வதேசக் குழு உட்பட பல நேரடி சாட்சியங்கள் கண்ணுக்குப் புலனாகக்கூடியதாகப் பட்டவர்த்தனமாக நடந்த இந்தக் கொடூரப் படு கொலைக்கு உண்டு. ஆனால், அப்படி ஒரு சம்பவமே நடக்க வில்லை என்று இலங்கை வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் இதே ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கும், சர்வதேச உலகுக்கும் முன்னால் போய் நின்று முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைத்த போது சர்வதேச உலகம் "பெருமாள்மாடு' மாதிரி தலையாட்டி அதை ஏற்றுக் கொண்டது. இலங்கை அரசினால் இழைக்கப்பட்ட அந்த அரச பயங்கரவாதத்தை ஒட்டு மொத்தமாகப் பகிரங்கமாகக் கண்டிக்க இந்த ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அப்போது முன்வரவில்லை. சாட்சியமாகக் கண்ணுக்குமுன் பலர் பார்த்திருக்க, இலங்கை விமானப் படை நடத்திய அந்த அகோரப் படுகொலைத் தாண்டவத்தைக் கண்டிக்கவும், உரியவர்களைத் தண்டிக்கவும் நடவடிக்கை எடுக்கத்தவறிய ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், இப்போது கதிர்காமர் கொலைக்குக் கண்ணுக்குத் தெரியாத சாட்சிகளின் பெயரால் முன்வைக்கப்படும் கதையைக் கேட்டு தமிழ் மக்களின் விடுதலைப் போராட்ட அமைப்புக்கு எதிராக இத்தகையத் தடையை விதித்திருப்பது அந்த நாடுகளின் நீதி, நியாயக் கோட்பாட்டுப் போக்கில் விழுந்துள்ள மற்றொரு கறையாகும். தங்களுடைய இருப்புக்காகவும், கௌரவத்துடன் கூடிய வாழ்வுரிமைக்காகவும், நியாயமான அபிலாஷைகளை நிறைவுசெய்வதற்காகவும் மூன்று தசாப்தகாலம் அஹிம்சை வழியில் போராடிய தமிழினம், அந்தப் போராட்டங்கள் எல்லாம் அரச அதிகாரத்தினால் ஆயுதப் பலத்தின் மூலம் அடக்கி, ஒடுக்கப்பட்ட நிலையிலேயே வேறு வழியின்றி ஆயுதவழியில் தங்களின் உரிமைகளை அடையும் மார்க்கத்தை நாடவேண்டியவர்களானார்கள். சிங்கள, பௌத்த பேரினவாதத்தினால் தமிழர்களின் அஹிம்சை வழிப் போராட்டங்கள் கொடூரமுறையில் அடக்கப்பட்டபோது, அது உள்நாட்டு விவகாரம் என்று வர்ணித்து வாளாவிருந்த சர்வதேசப் பார்வையாளர்கள், இப்போது வேறு வழியின்றித் தமது போராட்டத்தை ஆயுத மார்க்கத்துக்கு மாற்றிக்கொண்டு, அதில் தமிழர்கள் முன்னேறும்போது,சர்வதேச சமூகமாகத் தம்மைக் காட்டிக் கொண்டு தமிழர் தரப்பைப் பலவீனப்படுத்தும் விதத்தில் நியாயம் கூறவருவது விசனத்தைத் தருகின்றது. ஓரினத்தின் விடுதலைப் போராளிகளை "பயங்கரவாதிகள்' எனச் சித்திரிக்க முயல்வது வேதனைக்குரியது. ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்ட சக்தியான ஈழத் தமிழர்களின் ஏக, அதிகாரபூர்வப் பிரதிநிதிகளான விடுதலைப் புலிகள், இலங்கை இனப்பிரச்சினைக்கு அமைதி வழியில் சமாதான முறையில் தீர்வு காண்பதற்கான வாய்ப்புகளை வழங்கும் வகையில் கடந்த மூன்றரை ஆண்டுகளாக யுத்தத்தை நிறுத்தி, அமைதியைக் கடைப்பிடிக்கின்றார்கள். சிங்களத் தலைமைகளிடையே அதிகாரத்துக்கு நடந்த போட்டியின் விளைவாக இந்த அமைதி முயற்சிகள் தேங்கிப்போய்க் கிடக்கின்றன. ஒருபுறம் தென்னிலங்கை அதிகார இழுபறி, ஜனாதிபதித் தேர்தலை ஒட்டி உச்சத்துக்குச் சென்று, தமிழர்கள் மீது காழ்ப்புணர்ச்சியும், அவர்களை அடக்கி ஒடுக்கவேண்டும் என்பதில் விடாப் பிடியும் கொண்ட பௌத்த சிங்களப் பேரினவாதச் சக்திகளை தென்னிலங்கையில் மீண்டும் ஓர் அணியில் திரளவைத்துள்ளது. மறுபுறம் யுத்தநிறுத்தத்தை வாய்ப்பாகக் கருதி, தமிழர்களின் விடுதலைப் போராட்ட சக்தியை இல்லாதழிக்கும் இல்லாதொழிக்கும் நோக்கில் திரைமறைவில் தீட்டப்பட்ட "இருள் யுத்தம்' என்ற சதித்திட்டம் அரச படைகளினாலும், தலைமையினாலும் கனகச்சிதமாக நிறைவேற்றப்பட்டு வருகின்றது. இந்த இரட்டை ஆபத்துப் போக்கையும், தமிழர்களின் உணர்வுகளையும் உள்ளக் கிடக்கையையும் அழுத்தமாக வெளிப்படுத்தும் விதத்தில் தமிழர் தாயகம் எங்கும் எழுச்சிப் போராட்டங்களைத் தமிழ்மக்கள் நடத்திவருகின்றனர். இந்த நிலையில்தான் தெற்கில் ஒன்றுதிரளும் பௌத்த, சிங்கள இனவாதத்துக்கு உற்சாகமூட்டும் வகையிலும், அரச படைகள் மேற்கொள்ளும் "இருள்யுத்தம்' என்ற திரைமறைவுச் சதியை அங்கீகரிக்கின்ற மாதிரியிலும், தமிழ் மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் எழுச்சி நிகழ்ச்சிகளை உதாசீனம் செய் யும் போக்கிலும், இத்தகைய அறிக்கையை இந்தக் கட்டத்தில் வெளியிடுகிறது ஐரோப்பிய ஒன்றியம். இலங்கையில் சமாதானத் தீர்வுக்கான அமைதி முயற்சிகளை இடறப்பண்ணியிருக்கும் தென்னிலங்கைத் தலைமைகளை உற்சாகப்படுத்தும் விதத்தில் இந்த அறிவிப்பு வெளியாகியிருக்கின்றது. சர்வதேச சமூகத்திலிருந்து இத்தகைய அறிக்கை வடிவத்தில் கிடைக்கும் ஆதரவு சமிக்ஞை, தென்னிலங்கைத் தலைமைகளை மேலும் மேலும் அமைதி முயற்சிகளிலிருந்து விலகச்செய்யும் என்பது திண்ணம். எனவே, இத்தகைய அறிக்கை மூலம், சமாதான விரோதச் செயற்பாட்டுச் சக்திகளை ஊக்கப்படுத்தி, அமைதி முயற்சிகளிலிருந்து அவற்றை முற்றாக விலகவைத்து, மீண்டும் யுத்தம் ஏற்படுவதற்கு வழிசெய்கிறது சர்வதேச சமூகம் என்பதை இத்தகைய அறிக்கை வெளியிடப்படுவதற்குப் பொறுப்பாக இருந்தவர்கள் சிந்திக்கவேண்டும். தங்களின் எழுச்சி நிலையை வெளிப்படுத்தத் தமிழர் தாயகம் எங்கும் தமிழர்கள் நடத்துகின்ற இப்போதைய எழுச்சி நிகழ்ச்சிகளால் பயனில்லைப்போலும் என்பதும் தெளிவாகின்றது. அந்த எழுச்சி நிகழ்ச்சிகளின் ஒலித்தொனி சர்வதேச சமூகத்தின் காதுப் பறைகளைச் சரியாகச் சென்று தாக்கவில்லை என்பதையே ஒரு தலைப்பட்சமாக ஐரோப்பிய ஒன்றியம் விடுத்திருக்கும் இந்த அறிக்கை எமக்கு உணர்த்துகின்றது. பௌத்த சிங்களப் பேரினவாதத்தின் பொய்ப் பிரசாரத்தில் எடுபட்டு இத்தகைய தடைவிதித்து அறிக்கைகளை விடுப்பதன் மூலம் இதுவரை அடக்கி, ஒடுக்கப்பட்ட தமிழினம் மேலும் அடக்கப்படவும், சிங்கள ஒடுக்குமுறையாளர்களின் அடக்குமுறைப் போக்கு மேலும் தீவிரமடையவும் வழிசெய்கின்றன மேற்குலக நாடுகள். அவற்றுக்கு இதனை உறைப்பாக உணர்த்தும் விதத்தில் தமிழர்களின் உணர்ச்சிக் குரல் எழுச்சிப் பிரகடனம் அந்தந்த நாடுகளில் அஹிம்சை வழிச் செயற்பாடுகளின் மூலம் வெளிப்படுத்தப்படுவதும் அவசியம் போலும்.
nitharsanam
|