|
ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரான எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை கட்சித் தலைமையகமான ஸ்ரீகோத்தாவில் வைத்து வெளியிட்டிருக்கிறார். பட்டினிக்கு முடிவு, தகைமைக்கு தொழில், பிரிவினை வாதத்துக்கு முற்றுப்புள்ளி என்று சுலோகங்களுடனான அந்த விஞ்ஞாபனத்துக்கு `மக்கள் நிகழ்ச்சி நிரல்' என்று மகுடமிடப்பட்டிருக்கிறது.
சமாதான முயற்சிகளின் எதிர்காலம் தொடர்பான ஒரு சர்வஜன வாக்கெடுப்பாக ஜனாதிபதித் தேர்தல் அமையப் போகிறதென்று பரவலாக கருதப்படுகின்ற போதிலும், விக்கிரமசிங்க தனது விஞ்ஞாபனத்தில் சமாதான முயற்சிகளுடன் தொடர்புடைய சர்ச்சைக்குரிய விவகாரங்கள் பற்றி கூடுதல் அழுத்தத்தைக் கொடுக்காமல், பொருளாதாரப் பிரச்சினைகளுக்கே மிகுந்த முக்கியத்துவத்தை அளித்திருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது. பிரதமர் மகிந்த ராஜபக்ஷவுடன் அணி சேர்ந்து நிற்கும் (அதிகாரப் பரவலாக்கலுக்கும் சமாதான முயற்சிகளுக்கும் எதிரான) சிங்கள பௌத்த பேரினவாத அரசியல் சக்திகள் விக்கிரமசிங்கவுக்கு எதிரான பிரசாரங்களில் சமாதான முயற்சிகளுடன் தொடர்புடைய விவகாரங்களை முழு மூச்சாகப் பயன்படுத்துவதற்கு கங்கணம் கட்டி நிற்கும் வேளையில், அவர் நாட்டு மக்களைத் திணறவைக்கும் பொருளாதார நெருக்கடியையே தனது பிரசாரங்களின் போது பிரதான கருவியாகப் பயன்படுத்துவதற்குத் தீர்மானித்திருக்கிறார். தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டு வைத்த பின்னர் செய்தியாளர்கள் மகாநாட்டில் உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர், `மக்களின் உண்மையான பிரச்சினை போரோ சமாதானமோ அல்ல. வயிற்றுப் பிரச்சினையே மக்களை இன்று பாரதூரமாக வதைத்துக் கொண்டிருக்கிறது' என்று குறிப்பிட்டிருக்கிறார். கிராமப்புற மக்களின் வாழ்க்கை நிலைமைகளை மேம்படுத்துவதற்காக ஆரம்பத்தில் ஒவ்வொரு கிராமத்துக்கும் 10 இலட்சம் ரூபா வழங்கப்படும் என்பது விக்கிரமசிங்க அளித்திருக்கும் வாக்குறுதிகளில் முக்கியமான ஒன்றாகும். மக்கள் மத்தியில் பணப் புழக்கத்துக்கு வகை செய்வதற்கான இத்திட்டத்துக்காக 500 கோடி ரூபா ஒதுக்கப்படும் என்று அவர் தெரிவித்திருக்கிறார். வறுமைக் கோட்டின் கீழ் வாழும் சகலருக்கும் 1000 ரூபா தொடக்கம் 4000 ரூபா வரையான உணவு முத்திரைகள் வழங்கப்படும்; பால்மா, பருப்பு மற்றும் கருவாடு போன்ற அன்றாட பாவனைப் பொருட்களின் விலைகள் குறைக்கப்படும்; குறைந்தது ஒரு வருடத்துக்காவது அத்தியாவசிய பாவனைப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படுவதற்கு அனுமதிக்கப் போவதில்லை; முதல் வருடத்தில் அரசாங்க மற்றும் தனியார் துறைகளில் 2 இலட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்படும்; ஐந்து வருடகாலத்தில் 10 இலட்சம் வேலை வாய்ப்புகளும் 10 வருட காலத்தில் 20 இலட்சம் வேலை வாய்ப்புகளும் உருவாக்கப்படும்; விவசாயக் கடனை மீளச் செலுத்துவதை ரத்துச் செய்வதற்கு திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படும்- விக்கிரமசிங்க அளித்திருக்கும் ஜனரஞ்சகமான வாக்குறுதிகளில் இவை குறிப்பிடத்தக்கவை. மக்கள் எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடிகளை தணிப்பதற்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்படுமென்று கூறி வாக்குறுதிகளைத் தேர்தல் காலத்தில் அரசியல்வாதிகள் முன் யோசனையின்றி அள்ளி வீசுவதென்பது இலங்கைக்கு ஒன்றும் புதியதல்ல. சந்திரனில் இருந்தென்றாலும் அரிசி கொண்டு வருவோம்; குடும்பமொன்றுக்கு வாரம் 8 இறாத்தல் தானியங்கள் இலவசமாக வழங்கப்படும் என்ற வாக்குறுதிகளையெல்லாம் கேட்டு அனுபவப்பட்டவர்கள் இலங்கை மக்கள். கடந்தகாலத் தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்ட இலட்சணத்தை நோக்கும்போது தற்போது தாராளமாக அள்ளிவீசப்படுகின்ற வாக்குறுதிகளுக்கு நேரப் போகின்ற கதி குறித்து வித்தியாசமாகச் சிந்திக்க உண்மையில் எம்மால் முடியவில்லை. ஆனால், பொருளாதார நெருக்கடியை பிரதானப்படுத்துவதன் மூலம் பிரதமர் ராஜபக்ஷவைச் சங்கடத்திற்குள்ளாக்கலாம் என்று விக்கிரமசிங்க நம்புகிறார் என்பது தெளிவானது. அடுத்ததாக, தேசிய இன நெருக்கடிக்கு தீர்வைக் காண்பதற்கான முயற்சிகளைப் பொறுத்தவரை விக்கிரமசிங்கவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் சமஷ்டி, சமாதான முயற்சிகள், விடுதலைப் புலிகளுடனான பேச்சுவார்த்தை என்ற பதங்களைக் காண முடியவில்லை. `பிரிவினைவாதத்தை தோற்கடிப்போம்' என்ற தலைப்பில் இனநெருக்கடித் தீர்வு முயற்சிகள் குறித்து அதில் விபரிக்கப்பட்டுள்ளது. `ஐக்கிய இலங்கை வரையறைக்குள் அரசியல் தீர்வொன்றின் ஊடாக இனநெருக்கடியை முடிவுக்குக் கொண்டு வருவோம்' என்று குறிப்பிடப்பட்டிருக்கின்ற அதேவேளை, நிரந்தரத் தீர்வைக் காணுகின்ற விவகாரம் மீது கருத்தொருமிப்பை எட்டுவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கான ஆணையை மக்களிடம் விஞ்ஞாபனம் கோரி நிற்கிறது. 2002 டிசம்பர் ஒஸ்லோ பிரகடனம், 2003 ஜூன் டோக்கியோ பிரகடனங்களின் அடிப்படையில் அரசியல் தீர்வைக் காண்பதற்கு முயற்சி செய்யப்போவதாக விக்கிரமசிங்க கூறியிருக்கின்ற போதிலும், அந்தப் பிரகடனங்களில் சமஷ்டித் தீர்வு குறித்து வலியுறுத்தப்பட்டதை விஞ்ஞாபனத்தில் அவர் குறிப்பிட்டுக் காட்டுவதை தவிர்த்திருக்கிறார். சமாதான முயற்சிகளுக்கு எதிராக கடந்த சில வருடங்களாக ஜனதா விமுக்தி பெரமுனை (ஜே.வி.பி.) மற்றும் ஜாதிக ஹெல உறுமய போன்ற கட்சிகளினால் மேற்கொள்ளப்பட்டுவந்த பிரசாரங்கள் காரணமாக தென்னிலங்கை அரசியலில் காணப்படுகின்ற சிங்கள பௌத்த பேரினவாத முனைப்பு தேர்தல் விஞ்ஞாபனத்தைத் தயாரிப்பதில் விக்கிரமசிங்க கையாண்ட அணுகுமுறைகளில் செலுத்திய தாக்கத்தை உணரக் கூடியதாக இருக்கிறது. அடிப்படையில் இது பேரினவாதத்துக்கு மேலும் ஒரு சலுகையாகவே அமைகிறது.
thinakkural
|