|
|
|
ஜனாதிபதி தற்பாதுகாப்பு நிலைக்குத் தள்ளப்படுகிறார் ரவிராஜ் கொலையின் விளைவுகள் |
|
|
|
Monday, 13 November 2006 |
|
ஜனாதிபதி தனது நிலையை சரியாகவே புரிந்துள்ளார். ரவிராஜின் படுகொலை அரசாங்கத்தை கேள்விக் கூண்டினுக்குள் நிறுத்தியுள்ளது. கொழும்பிலுள்ள பெரு வீதியொன்றில் நடைபெற்ற அச்சம்பவத்தை கொழும்பில் நடக்கும் மேலும் ஒரு அசம்பாவிதமென்று தட்டிக் கழித்திடமுடியாது.
அலவிமௌலானா கூறியதுபோல அடிப்படையான ஜனநாயக உரிமையொன்றின் மீது விழுந்த பலமான அடி இது.
எத்தகைய சம்பவங்களைக் காட்டி விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகள் என்று
குற்றம் சாட்டி வந்தனரோ இப்பொழுது அவை எவற்றிலும் பார்க்க அச்சுறுத்தலான
முறையில் நகரப் பெருவீதியில் நடைபெற்றுள்ளது.
ரவிராஜின் படுகொலை எவ்வாறு செய்யப்பட்டது என்பது இப்பொழுது நன்கு
தெரிகிறது. ஆனால்இ யார்? ஏன்? செய்தார்கள் என்பது தெளிவாக்கப்படவில்லை.
ரவிராஜ் ஒரு சாதாரண தனிமனிதர் அல்ல. அவர் ஒரு பாராளுமன்ற எம்.பி. தமிழ்த்
தேசியக் கூட்டமைப்பு எம்.பி.க்களில் ஒருவர். அவர் தமிழ் மக்களின்
பிரதிநிதிகளில் ஒருவர் என்ற வகையில் கூறியனவே இச்சம்பவத்துக்கு காலாக
இருந்தது என்பதில் எவருக்கும் சந்தேகம் இல்லை. அதற்கும் மேலாக தனது தமிழ்
நிலைப்பாட்டையும் அரசாங்க எதிர்ப்பினையும் தமிழில் மாத்திரம் அல்லாமல்
சிங்களம்இ ஆங்கிலம் ஆகிய மொழிகளிலே அவற்றுக்குரிய ஊடகங்கள் மூலம் சாதாரண
சிங்கள மக்களுக்கு அவர்களது மொழியாலே எடுத்துக் கூறியவர்.
இப்படியானவர் கொழும்பிலே கொல்லப்பட்டார் என்பது சர்வதேச அரசியல் சக்திகளை அதிர்ச்சியடையச் செய்துள்ள ஒன்றாகும்.
இது எப்படி நடந்தது? யார் இதிலே ஈடுபட்டுள்ளார்கள்? எதற்காகச்
செய்யப்பட்டது? என்பவற்றை இலங்கை நிலையிலும் தென்னாசிய நிலையிலும்
சர்வதேசிய நிலையிலும் எடுத்துக்கூற வேண்டியது ஜனாதிபதியின்
பொறுப்பாகவுள்ளது. அந்தப் பொறுப்பை ஜனாதிபதியின் நிர்வாகம் நிறைவேற்றத்
தவறுமானால் அது நிச்சயமாக ஜனாதிபதியின் ஆட்சியைப் பாதிக்கப்போகிறது.
உண்மையில் இனித்தான் பிரச்சினையுள்ளது. விசாரணைக்கு
உட்படுத்தப்பட்டுள்ளது. ஒரு சாதாரண கொலை வழக்கல்ல. அவருடைய நிர்வாகம்
முழுவதுமே கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது.
வார்த்தைகளுக்கு எப்பொழுதுமே அர்த்தமுண்டு. அதுவும் அவசர வேளையிலே
பேசப்படுகின்ற வார்த்தைகளுக்கு மிக ஆழமான அர்த்தமுண்டு. ஜனாதிபதி எதற்காக
ஸ்கொட்லாண்ட் யாட்டினுடைய (பிரித்தானியரின் உலகப் பிரசித்திபெற்ற உளவுப்
பொலிஸ்துறையை இந்தப் பெயர் கொண்டு குறிப்பர்) பெயரைப் பயன்படுத்தினார்.
கொழும்பு யாட்டில் அவருக்கு நம்பிக்கை இல்லையா? அதிலும் பார்க்க மோசம்
கொழும்பு யாட் இதனைக் கண்டுபிடிக்கவே மாட்டாது என்று முதலிலேயே
நம்பிவிட்டாரா? புதிய பொலிஸ் மா அதிபருக்கு இது ஒரு பெருத்த சவால். ஆனால்இ
நிச்சயமாக ஒன்றைக் கூறலாம். ஏற்கனவேஇ சீர்குலைந்து போயிருக்கின்ற இலங்கைத்
தமிழர்களின் நம்பிக்கைகளை மீட்டெடுப்பதற்கு இது ஒரு நல்ல சந்தர்ப்பம்
ஆகும்.
இலங்கையின் சகல அரசியல் கொள்கையினரும் - ஜே.வி.பி. உட்பட இக்கொலையைக் கண்டித்துள்ளனர்.
ஆணைக்குழுக்கள் அமைப்பதை தனது வாய்ப்பாடாகக் கொண்டுவிட்ட ஜனாதிபதி மிகக் கவனமாக இருக்க வேண்டிய வேளையிது.
உண்மையில் கடந்த இரண்டு வாரங்களாக அரசாங்கப் பக்கம் சுமுகமான காற்று
வீசவேயில்லை. வாகரையில் நடைபெற்ற விசயம் இப்பொழுது அமெரிக்க வெளிநாட்டு
அமைச்சு முதல் இந்தியாவின் மன்மோகன் சிங் வரை கவனத்துக்கும்
வந்தாகிவிட்டது.
வாகரைச் சம்பவத்தில் 65 பேருக்கு மேல் கொல்லப்பட்டார்கள். ஏறத்தாழ நூறு
பேர் காயப்படுத்தப்பட்டார்கள். முதலில் அரசாங்கம் இதனை ஏற்றுக்
கொள்ளவில்லை. பேசவும் இல்லை. ஐ.சி.ஆர்.சி. கண்காணிப்புக்குழு ஆகியவற்றின்
கருத்துரைகளே இந்தப் பிரச்சினையின் உண்மையை உலகத்துக்குக் கூறின.
உலக நிலையில் அந்த இரண்டொரு நாட்கள் முக்கியமானவை. ஏனெனில் செவ்வாயன்று
தான் இஸ்ரேலிய தாக்குதல்கள் ஒன்று 18 பாலஸ்தீனிய சாதாரண மக்களை
(பெண்களும்இ குழந்தைகளும்) கொன்றதற்காக இஸ்ரேலியப் பிரதமர் தனது ஆழ்ந்த
மனவருத்தத்தைத் தெரிவிக்க வேண்டியதாயிற்று. பாதிக்கப்பட்ட
குடும்பங்களுக்கு அவர் தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்தார். அமெரிக்கா
முதல் பிரிட்டன் வரை ஐரோப்பிய யூனியன் உட்பட எல்லோருமே அச்சம்பவத்தைக்
கண்டித்தனர்.
வாகரையில் நடந்தது உண்மையில் அதிலும் பார்க்க மோசமானது. கெஹலிய
ரம்புக்வெலயோ பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் இவை சகஜமே என்று
நியாயப்படுத்தியும் விட்டார். ஆனால்இ உதவி நாடுகளின் தலைமைக் குழுவும்
ஐரோப்பிய யூனியனும் மிக்க வலுவுடன் எடுத்துக் கூறியதன் பின்னரே ஜனாதிபதி
இப்பொழுது வெளியிட்ட அறிக்கையை வெளியிட்டார். இஸ்ரேலிய பிரதமர் கூட அது
ஒரு தொழில்நுட்பப் பிழை என்று கூறினார். ஆனால் இலங்கை ஜனாதிபதியோ
மனவருத்தத்தைத் தெரிவிக்கும் அதேவேளையில் நடந்ததற்கான நியாயப்பாடுகளையும்
அழுத்தியே கூறிக் கொண்டார்.
இதிலுள்ள இரகசியம் என்னவென்றால் இனக்குழும யுத்தம் சம்பந்தமாக அரசாங்கத்தின் சாயம் நிச்சயமாக வெளிறிக்கொண்டிருக்கிறது.
இதற்கு நல்ல உதாரணம் யாழ்ப்பாணத்துக்கான ஏ-9 மூடுகையாகும். இதற்குள்
இரண்டு விடயங்கள் உள்ளன. ஒன்று யாழ் மாவட்டத்திலுள்ள மக்களின் உணவுப்
பிரச்சினையாகும்.
கடந்த ஒருவாரகாலமாக சில சிங்களப் பத்திரிகைகள் யாழ்ப்பாணத்தில் நிலவும்
அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை எடுத்துக் கூறத்தொடங்கிவிட்டன.
வழக்கம்போல விடுதலைப் புலிகளைப் பற்றிய வழமையான தூத்துதல்
ஸ்தோத்திரங்களுடனேயே இந்தத் தகவல்கள் கூறப்பட்டன. ஒவ்வொரு நாளும் ஏதோ ஒரு
கப்பலில் 3000 தொன் 4000 தொன் உணவுப் பொருட்கள் கொண்டு செல்லப்படுவதாக அரச
ஊடகங்கள் சிங்கள மக்களுக்கு காலையிலும் மாலையிலும் கூறின. ஏறத்தாழ 4
இலட்சம் மக்களுக்கு வேண்டிய உணவுத் தேவையை குறிப்பாக குழந்தைகளின் பால்மா
தேவையை 10க்குள் வரும் தொன்களின் கணக்கிலும் பால்மா பெட்டிகளின் தொகைக்
கணக்கிலும் கூறுவது அரசாங்கத்துக்கு சார்பான தமிழ்க் கட்சிகளிடையே கூட
வரவேற்பைப் பெறவில்லை.
கப்பற் போக்குவரத்தையே மக்கள் பயணப் போக்குவரத்துக்கும் பயன்படுத்துவோம்
என்று கூறியமை காரணமாக ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை விபரித்துக் கூறுவதற்கு
இது அல்ல இடம். ஆனால் ஒன்றை மாத்திரம் கூறலாம். மீள தொடங்கப்பெற்றுள்ள
தனியார் விமான சேவையில் கொழும்பு யாழ்ப்பாணத்திற்கான இரு வழிப்
போக்குவரத்துக்கு விமான டிக்கட்டின் விலை 16 ஆயிரம் ரூபா ஆகும். (8+8)
இவையாவற்றுக்கும் மேலாக ஏ-9 பற்றிய விடயம் அரசாங்கத்திற்கு இப்பொழுது
தொண்டைக்குள் மாட்டியுள்ள மீன் முள்ளுப்போல அரிக்கவும் அலற வைக்கவும் கூட
தொடங்கிவிட்டது.
இந்த விடயமும் கூட சர்வதேச கவனத்தைப் பெற்றுவிட்டது. அரசாங்கம் முன்வைத்த
இரு முக்கிய காரணங்கள் முகமாலையை விடுதலைப் புலிகள் தாக்குதல், விடுதலைப்
புலிகள் பொருட்களுக்கு வரி வசூலித்தல் ஆகியவை ஆகும்.
இப்பொழுது திடீரென சிங்கள மக்களின் நுகர்வுக்காக மாற்று ஏ-9 பாதை என்ற ஒரு கதை கூறப்படுகிறது.
ஜனாதிபதி காரியாலயத்தில் உள்ளவர்களுக்கு ஒருவேளை பரந்தன் ஆனையிறவு பளைப்பாதை தெரியாமல் இருக்கலாம். ஆனால் தமிழ் மக்களுக்கல்ல.
1. பரந்தன் - முரசு மோட்டை சந்தியில் திரும்பி பூநகரிக்குச் செல்வதற்கு
முன்னர் கிளிநொச்சியைக் கடந்தே ஆக வேண்டும். புலிகளின் சுங்கப் பகுதியை
கடந்தே இந்தப் பயணம் வரவும் வேண்டும் போகவும் வேண்டும்.
2. மற்றையது பூநகரி சங்குப்பிட்டிப் பாதையில் சிறிது தூரம் படகில் பயணிக்க
வேண்டும். அது மாத்திரமல்லாமல் அது அதிகம் பயன்படுத்தப்படும் பாதையுமல்ல.
சங்குப்பிட்டிப் பாதை நாவற்குழியில் வந்து மிக்கும்.
இப்பொழுது கேள்வி என்னவென்றால் முகமாலையில் எதனைப் பாதுகாக்க
விரும்புகிறார்கள் என்பதே. இங்கு தான் இராணுவத் தேவை அரசியலை மாத்திரமல்ல
புவியியலையே பாதிப்பதைக் காட்டுகிறது.
இவையாவற்றுக்குமூடே தென் இலங்கையில் ஏற்பட்டுள்ள மிக முக்கியமான ஒரு
அரசியல் மனச்சாட்சிக் கிளர்வினை குறிப்பிடல் வேண்டும். பேராசிரியர்
சுசரித்த கம்லத் சினிமா இயக்குநர் அசோகா கந்தகம, தர்மஷ்ரீ பண்டாரநாயக்க
போன்றோர் ஏ-9 பாதையைத் திறக்குமாறு உணவுக்காக கஷ்டப்படும் மக்களுக்காக
தாங்கள் உணவுப் பொட்டலங்களை சேகரிக்கப் போவதாக கூறியுள்ளார்கள். தாங்கள்
சேகரிக்கப் போகும் பொதிகளை அலரிமாளிகையில் கொண்டு வந்து ஒப்படைக்கப்
போவதாகவும் கூறியுள்ளார்கள்.
ரவிராஜுக்கு அஞ்சலி
ரவிராஜ் நீங்கள் எவ்வாறு வாழ்ந்தீர்களோ அவ்வாறே உங்கள் பொன்னான வாழ்வு
முற்றுப் பெற்றது. நீங்கள் வாழும் போது உங்கள் குரல் எவ்வாறு சிங்கள
மக்களின் மனச்சாட்சிகளை உறுத்தி வந்ததோ இப்பொழுது உங்களைச் சுட்ட
துப்பாக்கியின் ஒலி உலகத்தையே அதிர வைத்துள்ளது. உங்கள் நேர்மை உங்கள்
துணிவுஇ உங்கள் கடப்பாட்டுணர்வு எங்கள் எல்லோரையும் வழி நடத்த வேண்டும்.
உங்கள் குடும்பத்தினருக்கு அனுதாபங்களைத் தவிர நாங்கள் வேறு எதைச்
சொல்வது. ஆனால் ஒன்று உங்கள் வாழ்வும் நினைவும் ஈழத்தமிழரிடத்து அழியாப்
பதிவாக நிற்கும் என்பதை மிகுந்த பணிவுடன் அவர்கள் முன்வைத்து தலை தாழ்த்தி
வணங்குகிறோம்.
பீஷ்மர்
|
|