|
கடற்படையினரின் கடலாதிக்கம் கைவிட்டுப் போய்விடும் நிலையேற்பட்டுள்ளது. அடுத்தடுத்து கடற்படையினரே இலக்கு வைக்கப்பட்டு வருகையில், சிறப்புப் பயிற்சி பெற்ற கடற்படையணிகளில் பெரும் இழப்புக்கள் ஏற்பட்டு வருகின்றன.
ஹபரணவிலும் காலியிலும் கடற்படையினர் பேரிழப்புக்Pளை சந்தித்திருந்த
நிலையில் கடந்த வியாழக்கிழமை வடமராட்சி கடற்பரப்பில் கடற்படையினர் பலத்த
இழப்புகளைச் சந்தித்துள்ளனர். இதைவிட, திருகோணமலை நிலாவெளி கடற்பரப்பிலும்
வெள்ளிக்கிழமை கடற்சமர் நடைபெற்றுள்ளது.
இராணுவத்தினரைப் போலன்றி, கடற்படையினரின் எண்ணிக்கை மிகக் குறைவு.
கடற்படையினரின் முழுப் பலமும் இன்று வடக்கு - கிழக்குப் பகுதிகளிலேயே
ஒன்று குவிக்கப்பட்டுள்ளது. வடக்கு - கிழக்கில், விஷேட பயிற்சிபெற்ற
கடற்படையினரே கடமையில் இருக்கின்றனர்.
அண்மைக் காலங்களில் வடக்கு - கிழக்கிலும், அதற்கு வெளியேயும் தெற்கிலும்
கடற்படையினர் மீது அடுத்தடுத்து கடும் அடிகள் விழுந்துள்ளன. இதில்
அவர்கள், சிறப்புப் பயிற்சிகள் பெற்ற 200 இற்கும் மேற்பட்டவர்களை
இழந்துள்ளதுடன் 150 இற்கும் மேற்பட்டவர்கள் நீண்ட காலத்திற்கு
களமுனைக்குத் திரும்ப முடியாதளவிற்கு படுகாயமடைந்துள்ளனர்.
கிழக்கில் பாரிய படை நடவடிக்கைக்கு படைத்தரப்பு திட்டமிட்டு வருகையில்
வடக்கிலும் புலிகளுக்கு அழுத்தம் கொடுக்க படைத்தரப்பு முற்படுகிறது.
யாழ். குடாநாட்டுக்கான தரைவழிப் பாதையை மூடியதன் மூலம் குடாநாட்டு மக்களை
தனது இடுக்கிப் பிடிக்குள் வைத்திருக்கும் படையினர், இன்று அங்குள்ள
மக்கள் தங்களின் ஒவ்வொரு தேவைக்கும் படையினரை நம்பியிருக்க வேண்டியதொரு
இக்கட்டான சூழ்நிலைக்கும் தள்ளிவிட்டுள்ளனர்.
யாழ். குடாநாட்டை கைப்பற்றாது அங்குள்ள மக்களை படையினரின் பிடியிலிருந்து
மீட்பதாயின் குடாநாட்டுக்கான தரைவழிப் பாதையை உடனடியாக மீளத் திறக்க
வேண்டிய அவசர தேவை புலிகளுக்குள்ளது.
கிளாலி - முகமாலை பகுதிகளில் தனது நிலைகளை மிக நன்கு
பலப்படுத்தியிருக்கும் படையினர் புலிகளின் எந்தவொரு தாக்குதலையும்
எதிர்கொள்ளும் விதத்தில் தங்களைத் தயார்படுத்தி வைத்துள்ளனர். ஆகஸ்ட்
மாதம் 11 ஆம் திகதி ஆரம்பமான மோதல்களை சாட்டாக வைத்து `ஏ-9' பாதை இன்று
இறுக மூடப்பட்டுள்ளது.
`ஏ-9' பாதையை திறப்பதாயின், புலிகள் குடாநாட்டின் மீதான முற்றுகையை
நிறுத்த வேண்டுமெனவும் `ஏ-9' வீதியூடாகச் செல்லும் பொருட்களுக்கு வரி
அறவிடக் கூடாதெனவும் அரசு நிபந்தனை விதிக்கிறது. புலிகள் இதனை
நிராகரித்துவிட்ட நிலையில் குடாநாட்டில் பெரும் பட்டினி நிலை தோன்றி
வருவதால், குடாநாட்டுக்கான தரைவழிப் பாதையை திறக்க வேண்டுமென்று சர்வதேச
சமூகம் கடும் அழுத்தங்களை கொடுக்கத் தொடங்கியுள்ளது.
ஆனால், மீண்டும் `ஏ-9' பாதையை திறக்க மறுக்கும் அரசு அதற்கு மாற்றாக
பூநகரி - கேரதீவுப் பாதையை திறக்க பெரிதும் அக்கறை காட்டுகிறது. இதற்கான
யோசனைகளையும் அரசு புலிகளுக்கு அனுப்பி வைத்திருப்பதுடன் இது குறித்து
இணைத் தலைமை நாடுகளுக்கும் கூறியுள்ளது.
`ஏ-9' பாதையை திறக்காது பூநகரி - கேரதீவுப் பாதையை திறப்பதன் மூலம் ஒரே
கல்லில் பல மாங்காய்களை விழுத்த அரசும் படைத்தரப்பும் முயல்கின்றன. கடந்த
ஆகஸ்ட் மாதம் 11 ஆம் திகதி குடாநாட்டில் வெடித்த மோதல்களையடுத்து `ஏ-9'
பாதை மூடப்பட்டுவிட்ட நிலையில் குடாநாட்டில் இன்று மனிதப் பேரவலம்
ஏற்பட்டுள்ளது. எங்கும் பசி,பட்டினி நிலை ஏற்பட்டுள்ளது.
வெளியிடங்களுக்கான போக்குவரத்தின்றி மக்கள் திறந்த வெளிச் சிறைச்சாலைக்
கைதிகள் போன்றே வாழ்கின்றனர்.
இவர்களின் தேவைகளுக்காக கப்பல்கள் மூலம் பொருட்களை தாராளமாக
அனுப்புவதென்பது சாத்தியப்படாததால் தரை வழிப் பாதை திறப்பு குறித்து
சர்வதேச சமூகம் கடும் நெருக்கடி கொடுத்து வருகையிலேயே பூநகரிப் பாதையை
திறக்க அரசு அவசரப்படுகிறது.
பூநகரிப் பாதையில் சங்குப்பிட்டிக்கும் கேரதீவுக்குமிடைப்பட்டது சுமார்
500 மீற்றர் தூரமான ஆழ்கடல் பரப்பாகும். இதனால், புலிகளின்
கட்டுப்பாட்டிலிருக்கும் சங்குப்பிட்டிக்கும் படையினரின்
கட்டுப்பாட்டினுள்ளிருக்கும் கேரதீவுக்குமிடையே படகுப் பாதையை
நடத்தலாமெனவும் அரசு கூறுகின்றது.
இதன் மூலம், பூநகரிப் பாதையூடாக மக்கள் மட்டுமே போக்குவரத்துக்கு
அனுமதிக்கப்படுவரெனவும் பொருட்கள் யாவும் கப்பல்கள் மூலமே குடாநாட்டுக்கு
அனுப்பப்படுமெனவும் அரசு நிபந்தனை விதித்துள்ளது.
தரைவழிப் பாதையால் பொருட்களை எடுத்துச் சென்றால் புலிகள் அதற்கு வரி
அறவிடுவரென்பதால் பொருட்களை கடல் வழியாகவும் மக்களைத் தரை வழியாகவும்
அனுப்புவதே அரசின் திட்டமாகும்.
சங்குப்பிட்டிக்கும் கேரதீவுக்குமிடையிலான கடலை படகுப் பாதை மூலமே கடக்க
வேண்டுமென்பதால் அதனைத் தனக்கு வாய்ப்பாக்கி கொழும்புக்கும்
யாழ்குடாநாட்டுக்குமிடையில் கப்பல்கள் மூலம் பொருட்களை அனுப்பத்
திட்டமிடுகிறது.
ஒருபுறம் குடாநாட்டில் மனிதப் பேரவலத்தை தடுத்து நிறுத்த பூநகரிப் பாதையை
திறக்கத் தான் நடவடிக்கை எடுப்பதாக கூறும் அரசு அதேநேரம், `ஏ-9' பாதையை
திறப்பதை விட பூநகரிப் பாதையையே திறக்க வேண்டுமென அடம்பிடிப்பதற்கு இராணுவ
ரீதியான முக்கிய காரணமுமுண்டு.
பூநகரியிலிருந்தே புலிகள் பலாலி விமானப் படைத்தளம் மீதும் காங்கேசன்துறை
துறைமுகம் மீதும் ஆட்லறி ஷெல் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
பூநகரியிலுள்ள புலிகளின் ஆட்லறித் தளங்களை அழிக்க படையினர் மேற்கொண்ட
முயற்சிகள் எதுவுமே கைகூடாததால், பூநகரிப் பாதையைத் திறப்பதன் மூலம்
புலிகளின் ஆட்லறித் தளங்களை அங்கிருந்து அகற்றச் செய்துவிட வேண்டுமென்பதே
அரசினதும் படையினரதும் நோக்கமாகும்.
பூநகரிப் பாதையை திறப்பதன் மூலம் புலிகளுக்கு வரி கிடைப்பதை தடுக்கும்
அதேநேரம், பூநகரியிலிருந்து யாழ். குடாவிலுள்ள பிரதான படைத்தளங்களுக்கு
ஏற்படும் அச்சுறுத்தலையும் தவிர்த்துவிட முடியுமென்பதுடன் `ஏ-9' பாதையை
திறந்து வைத்துக் கொண்டு அதனூடாக ஆனையிறவை நோக்கி பாரிய படை நகர்வை
மேற்கொள்வது சாத்தியமில்லை.
`ஏ-9' பாதையை மூடி வைத்துக்கொண்டு பூநகரிப் பாதையை திறந்தவாறு ஆனையிறவை
நோக்கி பாரிய படை நகர்வை மேற்கொள்வதும் அரசின் திட்டமாகும். இதனாலேயே
பல்வேறு காரணங்களுக்காக `ஏ-9' பாதையை திறக்காது பூநகரிப் பாதையை திறக்க
முனைகிறது.
`ஏ-9' பாதையை மூடும் அதேநேரம், குடாநாட்டுக்கு கடல்வழிப் பாதையிருக்க
வேண்டுமென்பதாலேயே மூதூர் கிழக்கு சம்பூரில் பாரிய படை நடவடிக்கையொன்றை
மேற்கொண்டு சம்பூரை கைப்பற்றியதன் மூலம் புலிகளின் ஆட்லறித்
தாக்குதலிலிருந்து திருமலைத் துறைமுகத்தை விடுவித்து அந்தத் துறைமுகம்
மீதான புலிகளின் முற்றுகையையும் அரசு விடுவித்தது.
இந்த நிலையில், பூநகரிப் பாதையை உடனடியாகத் திறக்கும் சாத்தியமில்லை
என்பதை புலிகள் தெளிவுபடுத்தியுள்ளனர். பூநகரியிலுள்ள புலிகளின் ஆட்லறி
நிலைகளைத் தாக்குவதாகக் கூறி அந்தப் பிரதேசம் முழுவதிலும் கிபீர்
விமானங்கள் வீசிய நூற்றுக்கணக்கான குண்டுகள் பூநகரிப் பாதையை முழுமையாகவே
அழித்துவிட்டன.
கிணறுகளைப் போல் எங்கும் பாரிய குழிகள் காணப்படுகின்றன. சங்குப்பிட்டி
இறங்கு துறையும் முழுமையாக அழிக்கப்பட்டு விட்டது. விமானக் குண்டு
வீச்சுகளால் மட்டுமல்லாது ,பல நூற்றுக்கணக்கான ஆட்லறி ஷெல்
வீச்சுக்களாலும் இந்தப் பாதை முற்றாக அழிந்துள்ளதால், இதனைத்
திருத்தியமைக்க குறைந்தது இரு வருடங்களாவது தேவைப்படுமென புலிகள்
கூறியுள்ளனர்.
இந்த நிலையிலேயே கடற்படையினர் தங்கள் கடலாதிக்கத்தை விரைவாக இழந்து
வருகின்றனர். வடக்கு - கிழக்கின் மிகப்பெரும் பகுதியிலுள்ள கடற்பரப்பு
புலிகளின் ஆதிக்கத்திலேயே உள்ளது. இங்கு சில சில பகுதிகளில் மட்டுமே
கடற்படையினரின் ஆதிக்கமிருந்தது. ஆனாலும், வடமராட்சி கடற்பரப்பில்
கடற்படையினரின் பூரண ஆதிக்கமிருந்த கடலில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற
கடற் சமரானது, நிலைமை தலைகீழாகி வருவதை உணர்த்துகின்றது.
பருத்தித்துறை கடலில் தொடங்கி காங்கேசன்துறை கடற்படைத் தளம் வரையான
கடற்பகுதிக்குச் சென்று கடற்புலிகள் மிகக் கடுமையான தாக்குதலை
நடத்தியுள்ளனர். இரு அதிவேக டோரா பீரங்கிப் படகுகள் முற்றாகத்
தகர்த்தழிக்கப்பட்டு கடலில் மூழ்கடிக்கப்பட்டுள்ளன. ஒரு டோரா படகு பலத்த
சேதமடைந்து இனிமேல் செயற்பட முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
கடற்படையினர் நால்வரை கடற்புலிகள் சிறைப்பிடித்துமுள்ளனர்.
செயலிழக்கச் செய்யப்பட்ட டோரா ஒன்றை தம் வசப்படுத்தி, அதற்குள் ஏறி
பெருமளவு போர்த்தளபாடங்களை கைப்பற்றிய பின்னர், புலிகள் அந்த டோராவை
தகர்த்தழித்துள்ளனர். சுமார் இரு மணிநேரம், எதிரியின் பூரண கடலாதிக்கமுள்ள
கடற்பரப்பில் இந்தளவு தூரம் கடற்புலிகள் தங்கள் வலிமையை நிரூபித்துள்ளனர்.
விமானப் படை கிபிர் விமானங்களும் ஹெலிகொப்டர்களும் தாக்குதலை நடத்தியும்
கடற்படையினரால் எதுவும் செய்ய முடியவில்லை. வடபகுதி இராணுவத் தலைமையகமும்
கடற்படைத் தலைமையகமும் விமானப் படைத் தலைமையகமும் அமைந்துள்ள
பிரதேசத்திலேயே கடற்படையினர் இந்தப் பேரழிவைச் சந்தித்துள்ளனர்.
திருகோணமலையிலிருந்து 300 பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்ற பயணிகள் கப்பலுக்கு
பாதுகாப்பு வழங்கிச் சென்ற கடற்படை பீரங்கிப் படகுகள் மீதே தாக்குதல்
நடத்தப்பட்டதாக அரசும் படைத்தரப்பும் கூறுகின்றன. எனினும், புலிகள் இதனை
முற்றாக மறுத்துள்ளனர்.
பயணிகளை மிரட்டுவது தான் புலிகளின் நோக்கமாயிருந்திருந்தால்,
கடற்படையினரின் பூரண ஆதிக்கமுள்ள கடற்பரப்பில் புலிகள் இந்தச் சமரில்
இறங்கியிருக்க மாட்டார்கள். தங்களின் வலுவான கடலாதிக்கமுள்ள முல்லைத்தீவு
கடற்பரப்பில் இந்தத் தாக்குதலை நடத்தியிருப்பர். வடமராட்சிக் கடலுக்கு
சென்றிருக்க வேண்டிய தேவையில்லை.
எனினும், புலிகள் பயணிகள் கப்பலைத் தாக்க முயன்றதாக பிரசாரம் செய்வதன்
மூலம் மறைமுகமாக அவர்கள் ஒன்றை ஒத்துக்கொண்டுள்ளனர். அதாவது,
திருமலையிலிருந்து யாழ். குடாநாட்டுக்குச் செல்லும் எந்தக் கப்பலையும்
தாக்கும் ஆற்றல் புலிகளிடமுள்ளதென்பதையும் இரண்டுக்குமிடையிலான கடற்பரப்பு
புலிகளின் ஆதிக்கத்திலேயே உள்ளதென்பதுமே அதுவாகும்.
`ஏ-9' பாதைக்கு மாற்றாக, பூநகரிப் பாதையை திறப்பது குறித்து அரசு யோசனை
கூறி வருகையில் யாழ். குடாநாட்டுக்கான கடல்வழிப் பாதையை கடற்படையினர்
இழந்துவிட்டது அரசுக்கு பேரிடியாகவேயிருக்கும். இதனால், குடாநாட்டுக்கான
கப்பல் போக்குவரத்துக்களை புலிகள் நினைத்த மாத்திரத்திலேயே நிறுத்தக்
கூடிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
`ஏ-9' பாதையை மூடப்போய் அரசும் படையினரும் கடல்வழிப் பாதையை மூடும் நிலைமை
தோன்றியுள்ளதால், `ஏ-9' பாதையை திறக்க வேண்டிய கட்டாய சூழ்நிலை
தோன்றியுள்ளது. தற்போதைய நிலையில் கடல்வழிப் போக்குவரத்தை தங்கள்
கட்டுப்பாட்டினுள் கொண்டுவந்துள்ள புலிகள் பூநகரியிலிருந்து தாக்குதலை
நடத்துவதன் மூலம் பலாலி விமானப் படைத்தளத்தையும் காங்கேசன்துறை
துறைமுகத்தையும் செயலிழக்கச் செய்யும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
கிழக்கில், குறிப்பாக மட்டக்களப்பில் புலிகளுக்கெதிராக பாரிய படை
நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான துரித ஏற்பாடுகளில் அரசு இறங்கியுள்ள
நிலையில் மீண்டும் குடாநாட்டு முற்றுகைக்குள்ளாகும் நிலைமை ஏற்பட்டுள்ளதை
அரசும் படைத்தரப்பும் உணர்ந்துள்ளன.
மூதூர் கிழக்கில் பெரும் பகுதியை புலிகளிடமிருந்து கைப்பற்றியதன் மூலம்
திருமலை மாவட்டத்திலிருந்து புலிகளைப் பெரும்பாலும் மட்டக்களப்புக்கு
(வாகரை) பின்வாங்கச் செய்துவிட்டதாகக் கருதும் படையினர் வாகரைப்
பகுதியிலிருந்தும் புலிகளை அப்புறப்படுத்தி திருகோணமலைக்கும்
மட்டக்களப்புக்குமிடையிலான தரைவழிப் பாதையை திறக்கத்திட்டமிட்டு
வருகின்றனர்.
இதனாலேயே கடந்த இருவாரங்களுக்கும் மேலாக தொடர்ச்சியாக முப்படையினரும்
வாகரையை மையமாக வைத்து அகோர தாக்குதல்களை நடத்தி, மக்களை கொன்றுகுவித்து,
அவர்களை பெரிதும் அச்சுறுத்தி, அங்கிருந்து அவர்களை அப்புறப்படுத்தும்
முயற்சியில் இறங்கியுள்ளனர்.
முதலில் வாகரை மற்றும் கதிரவெளிப் பகுதிகளைக் கைப்பற்றுவதும் அதன் பின்
மட்டக்களப்பில் புலிகள் வசமுள்ள படுவான்கரைப் பிரதேசத்தினுள் நுழைவதுமே
படையினரின் திட்டமாகும். இதற்கு முன்னோடியாக கிழக்கு நோக்கி போர்த்
தளபாடங்களும், படையணிகளும் நகர்த்தப்பட்டும் வருவதாக பிந்திய தகவல்கள்
தெரிவிக்கின்றன.
ஜெனீவாப் பேச்சுக்கள் முறிவடைந்துவிட்ட நிலையில் அடுத்த சுற்றுப்
பேச்சுக்கு முன் பாரிய இராணுவ வெற்றிகளைப் பெற வேண்டுமென அரசு முனைப்புக்
காட்டுகிறது. முகமாலையில் ஏற்பட்ட பெருந் தோல்வியும் ஹபரண, காலி
கடற்படைத்தளத் தாக்குதல்களும் புலிகளின் கையை திடீரென ஓங்கச் செய்ததாலேயே
ஜெனீவாப் பேச்சு தோல்வியடையக் காரணமாகிவிட்டதாக அரசு கருதுகிறது.
அடுத்த முறை பேச்சுக்களில் அரசியல் தீர்வு பற்றி பேச வேண்டுமென்பதில்
ஆர்வம் காட்டும் அரசுக்கு, வடக்கு - கிழக்கை பிரிக்க வேண்டுமென்ற உயர்
நீதிமன்றத் தீர்ப்பு வாய்ப்பாகி விட்டது.
கிழக்கில் பாரிய படை நடவடிக்கைகள் மூலம் புலிகளை பின்வாங்கச்
செய்துவிட்டால் கிழக்கிற்கென உடனடியாகத் தனியான மாகாண சபையை அமைத்து அங்கு
தமிழர்களைப் பலமிழக்கச் செய்து , அதன் மூலம் அரசியல் தீர்வையும்
மட்டுப்படுத்திவிடலாமென்ற சிந்தனை தென்னிலங்கை இனவாதிகளிடையே தோற்றம்
பெற்றுள்ளது.
இதற்கு வாய்ப்பாக கிழக்கைச் சேர்ந்த கருணா குழுவை முடிந்தளவுக்கு வளர்த்து
அங்குள்ள தமிழர்களுக்கு அவர்களே பிரதிநிதிகளென்றதொரு தோற்றப்பாட்டை
ஏற்படுத்தி, இனிவரும் காலங்களில் கருணா குழுவுக்கும் முக்கியத்துவமளித்து,
இலங்கையில் பிரிவினையை தடுத்து வடக்கு - கிழக்கில் பிரிவினையை ஏற்படுத்தி
வடக்கிற்கும் கிழக்கிற்குமிடையே தொடர்புகளைத் துண்டிப்பதே அரசின்
திட்டமாகும்.
இதனாலேயே கிழக்கில் உடனடி படை நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு அரசு
திட்டமிட்டு வருகிறது. கிழக்கில் பாரிய படைநகர்வு, ஆரம்பமாகும் அதேநேரம்,
வடக்கிலும் பாரிய தாக்குதல்களை நடத்தி புலிகளின் கவனத்தை கிழக்கிலிருந்து
திசை திருப்புவதும் அரசின் நோக்கமாகும். இதனாலேயே, இதுவரை கடும்
அழுத்தங்கள் ஏற்பட்டும் இன்றுவரை அரசு `ஏ-9' பாதையை திறக்க மறுத்துள்ளது.
அண்மைக் காலங்களில் படையினர் மேற்கொண்ட பல தாக்குதல்களில் அப்பாவிப் பொது
மக்கள் கொல்லப்பட்டபோதெல்லாம் பொறுமை காத்த புலிகள் தற்போதும் அதே
நிலையிலேயே உள்ளனர். அரசினதும் படையினரதும் பல்வேறு ஆத்திரமூட்டும்
நடவடிக்கைகளின் போதெல்லாம் மௌனம் காத்த புலிகள், அடுத்து படையினர்
மேற்கொள்ளவுள்ள பாரிய நடவடிக்கைகளை எதிர்கொள்ளக் காத்திருக்கின்றனர்.
இதுவரை காலங்களும், நடைபெற்ற போர்களைவிட இது மிகக் கடுமையாகவே இருக்கப்
போகின்றதென்பதால், அடுத்த படை நடவடிக்கையின் எதிரொலி முழு இலங்கையையும்
உலுக்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
விதுரன்
|