|
இலங்கையின் அரசியல் மற்றும் பாதுகாப்பு நிலைவரப் போக்கைத் தீர்மானிக்கும் திங்களாக இந்த நவம்பர் மாதம் அமையப்போகின்றது.நாட்டின் நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்று இந்த மாதத்துடன் ஒரு வருடம் பூர்த்தியாகின்றது.நாட்டின் பாதுகாப்புச் செலவினத்தை இரட்டிப்பாக்கி அவரது அரசு சமர்ப்பிக்கப் போகும் வரவு-செலவுத் திட்டம் நாளை மறுதினம் நாடாளுமன்றில் பகிரங்கப்படுத்தப்பவிருக்கிறது.
அரைவாசி மாதம் கடந்த நிலையில் இந்த இரு வாரங்களுள் பல்வேறு அனர்த் தங்களும், அசம்பாவிதங்களும் நாட்டின் அரசுக்குக் கெட்ட பெயரை வாங்கித் தருவன போல அரங்கேறி விட்டன.
கிளிநொச்சி வைத்தியசாலை மீதான விமானக் குண்டு வீச்சு, வாகரை அகதிகள் கூட்டமாகப் படுகொலை, தமிழரின் உரிமைகளுக்காகவும், மனித உரிமைகளுக்காகவும் போராடிய தமிழ்க் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் என். ரவிராஜ் தலைநகரில் பட்டப் பகலில், நட்ட நடு வீதியில் வைத்துச் சுட்டுக் கொல்லப்பட்டமை என்று பல்வேறு அனர்ததங்கள்.
கடற் சமர்களில் அரச கடற்படைக்குக் கணிசமான பின்னடைவு வேறு.
இந்தச் சூழ்நிலையில் கடந்த மாத இறுதியில் ஆக்கபூர்வமான முன்னேற்றமேதுமின்றி பயன் ஏதும் தராமல் முடிவடைந்த ‘ஜெனிவா-2 அமைதிப் பேச்சுக்களின் பெறுபேறுகள் குறித்தும், அதன் பின்னரான இலங்கையின் அரசியல் களநிலைவரம் குறித்தும் ஆராய்வதற்காக இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளின் இணைத்தலைமைகளின் கூட்டம் வாஷங்டனில் இடம்பெறவிருக்கின்றது.
இலங்கை இனப்பிரச்சினை விவகாரத்தில் தரப்புகளின் போக்குப் பற்றிய தமது உள்ளக் கிடக்கையை இணைத்தலைமைகள் அப்பட்டமாக வெளியிடும் காலம் நெருங்கி வருவதாகக் கருதும் நோக்கர்கள், இவ்வாரம் நடைபெறும் அவற்றின் கூட்டத்துக்குப் பின்னர் வெளியிடப்படக் கூடிய கூட்டு அறிக்கை படு ‘காரமாகவும்” தரப்புகளுக்கு அதிர்ச்சி அளிப்பதாகவும் அமையக் கூடும் என எதிர்பார்க்கின்றார்கள்.
இரு தரப்புக்கும் - இலங்கை அரசு மற்றும் புலிகள் ஆகிய இரு பக்கத்தினருக்கும் - கடும் அழுத்தம் தரும் முடிவுகளை இணைத் தலைமைகள் மேற்கொள்ள அதிக வாய்ப்புகளுண்டு.
இதேசமயம்-
விடுதலைப் புலிகளின் தலைவர் தமது இயக்கத்தின் அரசியல் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தி வருடா வருடம் ஆற்றும் - அரசியல் முக்கியத்தும் வாய்ந்த மாவீரார் தின உரை இந்த மாதத்தில் இன்னும் இரண்டு வாரங்களில் இடம் பெறவிருக்கின்றது.
“தமிழர்களின் நியாயமான அபிலாஷைகளை நிறைவு செய்வதற்கான தீர்வு யோசனை ஒன்றைச் சமர்ப்பிப்பதற்கு அதிபர் மஹிந்த ராஜபக்ஷவுக்குக் குறுகிய கால அவகாசம் வழங்குவோம். அதை நிறைவு செய்ய அவர் தவறினால் தமிழரின் சுயாநிர்ணய உரிமைக்கான சுதந்திரப் போராட்டத்தை எமது மக்களுடன் இணைந்த அடுத்த ஆண்டில் முன்னெடுப்போம்.” என்ற சாரப்படக் கடந்த மாவீரர் தின உரையில் புலிகளின் தலைவர் பிரபாகரன் தெரவித்திருந்தார்.
அப்படி அவர் தெரிவித்து ஒரு வருடம் கடந்து வி;ட்டது.
தமிழர்களின் நியாயமான அபிலாஷைகளை நிறைவு செய்யும் தீர்வு யோசனை ஒன்றை சமர்ப்பிக்கும் இதய சுத்தியான எண்ணம் மஹிந்தவின் அரசுக்கு இல்லை என்பது இந்த ஒரு வருட காலத்துக்குள் தமிழர்களுக்கு மட்டுமல்ல சர்வதேச சமூககத்துக்கே தெளிவாகி விட்டது.
“இனப்பிரச்சினை விடயத்தில் ஆட்சிக்கு வந்து மூன்று மாத காலத்துக்குள் தென்னிலங்கையில் இணக்கப்பாட்டை ஏற்படுததுவேன். அதன் பின்னர் புலிகளுடன் பேசுவேன்” என்று தமது ‘மஹிந்த சிந்தனை’ ஊடாக வாக்குறுதி தந்து பதவியை எட்டிப் பிடித்தவர் ஜனாதிபதி மஹிந்தர்.
அவர் தெற்றிகில் இணக்கப்பாட்டை ஏற்படுத்தினாரோ இல்லையோ, இணக்கமான தீர்வு ஒன்றை ஆளுந்தரப்புடன் சேர்ந்து முன் வைக்கத் தயார் என்று விட்டுக் கொடுத்து இறங்கி வந்துள்ளது பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி.
ஆனால், அந்த அருமையான வாய்ப்பைச் சரியாகப் பற்றிப் பிடித்து, ஒரு நியாயமான தீர்வு யோசனையை முன்வைக்க எத்தனிக்காமல், யுத்த முனைப்போடு -இராணுவத் தீர்வின் பால் நாட்டம் கொண்டு – விவகாரத்தை மோசமாகக் கையாள்கிறது மஹிந்தரின் அரசு.
தீர்வு யோசனையை அவரது அரசு முன்வைப்பதற்குக் கடந்த ஆண்டில் குறுகிய கால அவகாரம் வழங்கிய புலிகளின் தலைவர், இந்த அவகாசம் காலாவதியான நிலையில் அடுத்து என்ன செய்யப் போகின்றார், என்ன சொல்லப் போகின்றார் என்பது இம்மாத இறுதியில் திட்டவட்டமாக வெளியாகி விடும்.
யுத்த நிறுத்த மீறல்களும் தமிழர்கள் மீதான தாக்குதல்களும் மலிந்து, தமிழ் மக்களின் மனிதாபிமானப் பேரவலம் எல்லை கடந்து, சீர்கெட்டு மோசமாகியுள்ள இந்தச் சூழ்நிலையில் -
யுத்த முனைப்போடு, பாதுகாப்புச் செலவினத்தை இரட்டிப்பாக்கி, ஒட்டுக் குழுக்களை ஊக்குவித்து, புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தி, இனவாத உருக் கொண்டு தென்னிலைங்கை முறுகிக் கொண்டு நிற்கையில் -
வன்முறைகளைக் கைவிட்டு, அமைதித் தீர்வு காண்பதற்காகப் பேச்சு மேசைக்குச் செல்லுங்கள் என சர்வதேச சமூகம் ஒன்று பட்டு வற்புறுத்துகையில் -
தலைவர் பிரபாகரனின் மாவீரர் தின உரை, தொடர்ந்தும் சமாதானத்துக்கான சகிப்புணர்வைப் பிரதிபலிக்குமா? அலலது போருக்கான முரசறைதலாக அமையுமா?
இவற்றில் எதை அந்த முக்கித்துவம் வாய்ந்த உரை தாங்கிவரப் போகின்றதோ, அதனடிப்டையில் தான் இலங்கையின் அரசியல போக்கும், பாதுகாப்பு நிலைவரங்களும் வழிப்படுத்தப்படப் போகின்றன என்பது கண்கூடு.
அந்த வகையில், இலங்கையின் எதிர்காலத் தலையெழுத்தை எழுதப் போகும் மாதமாக இந்த நவம்பர் அமைகின்றது.
நன்றி : சுடர் ஒளி
|