|
நாட்டில் பாரிய யுத்தத்துக்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன. வரவு - செலவுத் திட்டம் மூலம் பாதுகாப்புக்கு மிகப் பெருமளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ள அதேநேரம் போர்த் தளபாடங்களை வாங்கிக் குவிப்பதில் அரசு தீவிர ஆர்வம் காட்டுகிறது.
உயர் நீதிமன்றத் தீர்ப்பு மூலம் வடக்கு - கிழக்கைப் பிரித்த அரசு, அரசியல்
ரீதியாக வடக்கு - கிழக்குப் பிரிப்புக்கு எதிரான செயற்பாடுகளை
முடுக்கிவிட்டுள்ள அதேநேரம், இராணுவ ரீதியிலும் வடக்கு - கிழக்கைத்
துண்டாடுவதில் தீவிர அக்கறை காட்டுகிறது.
கிழக்கில் துணைப் படைகளை வளர்ப்பதன் மூலம், கிழக்கில் தான் மேற்கொள்ளவுள்ள
படை நடவடிக்கைகளை இவர்களே மேற்கொள்வதாக வெளியுலகுக்குக் காட்டும்
முயற்சிகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அதேநேரம், வடக்கு - கிழக்கில்
இன்று முழுப் பலத்துடன் செயற்படும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அழித்து
விடுவதிலும் அரசு தீவிரம் காட்டுவதாக கடும் குற்றச்சாட்டு
சுமத்தப்படுகிறது.
யாழ்.குடாநாட்டுக்கான `ஏ-9' பாதை மூடப்பட்டதன் மூலம் குடாநாடு இன்று
திறந்தவெளிச் சிறைச்சாலையாகிவிட்டதுடன் படுகொலைக் களமாகவும் மாறிவிட்டது.
நுழைவாயில் மூடப்பட்டு, ஆயிரக் கணக்கில் படைகள் குவிக்கப்பட்டு, இரவு நேர
ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டு ஆட்கடத்தல்களும் படுகொலைகளும்
அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.
நாட்டைப் பாதுகாக்கவும் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காகவுமே வரவு - செலவுத்
திட்டத்தில் பாதுகாப்புச் செலவினம் இரட்டிக்கப்பட்டதாக அரசு தரப்பு
கூறுகிறது. பயங்கரவாத ஒழிப்பு, நாட்டின் பாதுகாப்பென்ற போர்வையில் மிகப்
பெரும் யுத்தமொன்றுக்கு அரசு பெரும் ஏற்பாடுகளைச் செய்துவருகிறது.
வடக்கு - கிழக்கை பிரிக்க வேண்டுமென உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தாலும்
ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரம் மற்றும் பாராளுமன்றின் சட்டவாக்க
அதிகாரங்கள் மூலம் மீண்டும் வடக்கு - கிழக்கை இணைத்து நிலைமை மோசமடைவதைத்
தடுத்திருக்க முடியும். உயர்நீதிமன்றத் தீர்ப்பைப் புறந்தள்ளிவிட்டு
வடக்கு - கிழக்கை இணைக்குமாறு கோரியே பாராளுமன்றில் சத்தியாக்கிரகப்
போராட்டங்களை மேற்கொண்டு வரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு,
ஜனாதிபதியையும் எதிர்க்கட்சித் தலைவரையும் சந்தித்து இதனை
வலியுறுத்தியிருந்தது.
இது தொடர்பாக உறுதியான முடிவெடுக்கும் வரை இம்முறை வரவு - செலவுத்
திட்டத்தில் இணைந்த வடக்கு - கிழக்கிற்கே நிதி ஒதுக்குமாறு தமிழ்த்
தேசியக் கூட்டமைப்பு, ஜனாதிபதியும் நிதி அமைச்சருமான மகிந்த ராஜபக்ஷவை
வலியுறுத்தி வந்தது. எனினும், ஜனாதிபதி அதனை நிராகரித்து, வடக்கு -
கிழக்கிற்கு தனித்தனியாக நிதி ஒதுக்கீடு செய்ததன் மூலம், வடக்கு - கிழக்கு
இணைப்பு விவகாரத்தில் அரசினதும் தனதும் நிலைப்பாட்டைத்
தெளிவுபடுத்தியுள்ளார்.
`சாணேற முழம் சறுக்கும்' நிலைமையே இன்று இனப்பிரச்சினைத் தீர்வு
முயற்சியிலுள்ளது. நாளும் பொழுதும் புதுப்புதுப் பிரச்சினைகளைத்
தோற்றுவிப்பதன் மூலம், அவை குறித்துப் பேசி முடிவெடுக்கவே பல வருடங்கள்
செல்லும் நிலையில் அடிப்படை பிரச்சினை குறித்து ஆராயும் நிலைமை ஏற்படும்
வாய்ப்பே இல்லாமல் போய்விடப் போகிறது. போர் நிறுத்த உடன்பாட்டைச் செய்து
விட்டு அதனை அமுல்படுத்தாததால் முதல் சுற்று ஜெனீவாப் பேச்சில் போர்
நிறுத்த உடன்பாட்டின் அமுலாக்கம் பற்றியே பேச வேண்டியிருந்தது. அதேநேரம்,
இந்தப் போர் நிறுத்த உடன்பாட்டின் மூலம் திறக்கப்பட்ட `ஏ-9' பாதை
மூடப்பட்டதால் இரண்டாம் சுற்று ஜெனீவாப் பேச்சில், இந்தப் பாதை திறப்பது
பற்றியே பேசப்பட்டது.
இவ்விரு பேச்சுகளும் தோல்வியிலேயே முடிவடைந்தன. இனப் பிரச்சினைத்
தீர்வுக்கான சமாதான முயற்சிகளை ஆரம்பிப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட போர்
நிறுத்த உடன்பாடு பற்றியும் அதன் அமுலாக்கம் பற்றியுமே இந்தப் பேச்சு
நடைபெறுகிறதே தவிர, என்ன காரணத்திற்காக இந்த உடன்பாடு ஏற்படுத்தப்பட்டதோ
அது அடிபட்டுப் போய்விட்டது.
தற்போதைய நிலையில் கூட, தமிழர்களின் அடிப்படைப் பிரச்சினையைத் தீர்க்க
எதுவித நடவடிக்கையும் எடாத அரசு, தமிழர்களின் அடிப்படைப் பிரச்சினையான,
இணைந்த வடக்கு - கிழக்கு என்ற தாயகக் கோட்பாட்டை நிராகரித்து நீதிமன்றத்
தீர்ப்பு மூலம் வடக்கு - கிழக்கை தனித் தனியாக்கியது மட்டுமன்றி, வரவு -
செலவுத் திட்டத்திலும் வடக்கிற்கு வேறாகவும், கிழக்கிற்கு வேறாகவும் நிதி
ஒதுக்கி சத்தமின்றி அரசியல் ரீதியாகவும் வடக்கு - கிழக்கை பிரித்துள்ளது.
அதேநேரம், பாதுகாப்புச் செலவினத்தை இரட்டிப்பாக்கி முப்படைகளுக்கும் பல
நூறு கோடி ரூபாவில் போர்த் தளபாடங்களைக் குவிப்பதன் மூலம் பெரும் போருக்கு
அரசு தயாராகி வருகின்றது. தற்போது நீதிமன்றத் தீர்ப்பின் மூலமும் அரசியல்
ரீதியாகவும் பிரிக்கப்பட்டிருக்கும் வடக்கு - கிழக்கை, இராணுவ நடவடிக்கை
மூலமும் பிரிப்பதே அரசின் திட்டமாகும்.
கிழக்கில் புலிகளுக்குள் பிளவை ஏற்படுத்தி அங்கு பிரிவினையை
தோற்றுவித்ததன் மூலம் வடக்கு - கிழக்கிலும் பிளவை ஏற்படுத்தி பிரிவினையைத்
தோற்றுவிக்கும் பல்வேறு நடவடிக்கைகளிலும் அரசு ஈடுபட்டுள்ளது. இதன்
ஒருகட்டமே கிழக்கில் துணைப் படைகளுக்கு ஆட்களைச் சேர்க்கும் அரசின்
நடவடிக்கையாகும்.
கிழக்கில் துணைப் படைகளை வளர்த்து புலிகளுக்கு சவால்விடச் செய்வதும் அந்த
துணைப் படைகளைத் தங்கள் கடடுப்பாட்டினுள் வைத்துக் கொண்டு வடக்கிற்கு
எதிராக கிழக்கின் செயற்பாடுகளைத் தூண்டுவதுமே அரசின் திட்டமாகும். வடக்கு
- கிழக்கை பிரிப்பதன் மூலம் தமிழர்களின் தாயகக் கோட்பாட்டை வலுவிழக்கச்
செய்து வடக்கு - கிழக்கை நிரந்தரமாகப் பிரித்துப் பின்னர் கிழக்கைத்
தங்களது (சிங்களவர்) கட்டுப்பாட்டினுள் கொண்டு வந்து குடியேற்றங்களை
மேற்கொண்டு தமிழர்களையும், முஸ்லிம்களையும் சிறுபான்மையினராக்கி வடக்கை
தனிமைப்படுத்துவதே இனவாதிகளின் திட்டமாகும்.
கடந்த காலங்களில் எல்லாம் கிழக்கில் அடிக்கடி தமிழ் - முஸ்லிம் கலவரங்கள்
தூண்டப்பட்டு வந்தன. கிழக்கில் தமிழர்களுக்கெதிராக முஸ்லிம்களைத்
தூண்டுவதன் மூலம் வடக்கு - கிழக்கு இணைப்புக் கெதிராக முஸ்லிம்களை
செயற்படச் செய்யும் அதேநேரம் கிழக்கில் தமிழ் - முஸ்லிம் உறவைச்
சீர்குலைப்பதன் மூலமே தங்களது நோக்கங்களை நிறைவேற்ற முடியுமென்பதும்
இனவாதிகளின் திட்டமாகும்.
தற்போது கிழக்கில் துணை இராணுவக் குழுக்களை வளர்ப்பதன் மூலம்
தமிழர்களையும் - தமிழர்களையும் மோதவிட்டு கிழக்கிற்குள் தமிழர்களிடையே
பிளவை ஏற்படுத்தி அதன் மூலம் கிழக்கைத் தமிழர்களது ஒத்துழைப்புடன்
பிரித்துவிடலாமென்றும் அரசு கனவு காண்கிறது. இதனால்தான் தற்போது
தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்குமிடையே முன்னரைப் போன்று இனக்கலவரங்கள்
தூண்டப்படாது, தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்குமிடையே பிரச்சினைகள்
எதுவும் தோன்றாதவாறு அரசும் படைத் தரப்பும் நிலைமைகளைக் கையாளுகின்றன.
கிழக்கில் தமிழ் - முஸ்லிம் கலவரம் ஏற்படுவதற்கு, முன்னர் புலிகளே
காரணமென்பது போன்றும் தற்போது துணை இராணுவக் குழுக்கள் கிழக்கில் தமிழ்
முஸ்லிம் ஒற்றுமையை வளர்ப்பது போன்றதொரு தோற்றப்பாடும்
ஏற்படுத்தப்படுவதுடன், கிழக்கில் தமிழ் - முஸ்லிம் கலவரமானது தற்போதைய
நிலையில் துணை இராணுவக் குழுவின் வளர்ச்சியைப் பெரிதும் பாதித்து
விடுமென்பதால் முஸ்லிம்களை தமிழர்களுடன் மோதவிடாது இனநல்லுற
கட்டியெழுப்பப்படுவது போன்றதொரு மாயையும் உருவாக்கப்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகளை பலவீனப்படுத்தும் முயற்சிகளும்
தீவிரப்படுத்தப்பட்டுள்ளதுடன் கிழக்கைப் புலிகளிடமிருந்து கைப்பற்றும்
படைநடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதனொரு கட்டமாகவே வாகரையை
நோக்கிப் பாரிய படை நடவடிக்கைகளுக்கு படையினர் தயார்படுத்தப்பட்டு
வருகின்றனர்.
அந்தப் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள மனிதப் பேரவலமும் சர்வதேச சமூகத்தின்
கடுமையான நிலைப்பாடும் அரசின் சில நடவடிக்கைகளுக்கு சற்றுத் தடை
போட்டுள்ளதாகக் கருதப்படுகிறது. உடனடியாக பாரிய படையெடுப்பை
மேற்கொள்வதானது கடுமையான பின் விளைவுகளையும் ஏற்படுத்துமென்பதால் வாகரைப்
பகுதி நோக்கி சிறிய சிறிய முன் நகர்வுகள் மூலம் நில ஆக்கிரமிப்பை
மேற்கொள்ள படைத்தரப்பு முயல்கிறது.
வடக்கில் யாழ்.குடாநாட்டுக்கான தரை வழிப் பாதையை மூடிவிட்டு ஆனையிறவு
நோக்கியும் பாரிய படை நகர்வுக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இதனால் குடாநாட்டுக்கான அனைத்து விநியோகங்களையும் கடல்வழியால்
மேற்கொள்ளும் முயற்சிகளில் அரசும் படைத்தரப்பும் ஈடுபட்டு வருகின்றன.
ஆனாலும் அண்மைக் காலமாக வடபகுதிக் கடலில் இடம்பெறும் கடற்சமர்களில்
கடற்படையினர் எட்டுக்கும் மேற்பட்ட அதிவேக டோரா பீரங்கிப் படகுகளையும்,
நூற்றுக்கும் மேற்பட்ட கடற்படையினரையும் இழந்துள்ளனர். நேற்று அதிகாலை கூட
மன்னார் விடத்தல்தீவு கடற்பரப்பில் இடம்பெற்ற பாரிய கடற்சமரில்
கடற்படையினர் பேரிழப்புகளைச் சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தக் கடற்சமரில் இரு அதிவேக பீரங்கிப் படகுகளை கடற்புலிகள்
தாக்கியழித்து மூழ்கடித்ததுடன் நான்கு படகுகளை கடுமையாகச்
சேதப்படுத்தியுள்ளதாக புலிகள் தரப்புத் தகவல்கள் தெரிவித்தன. இந்தக்
கடற்சமரிலும் பல கடற்படையினர் கொல்லப்பட்டுள்ளனர்.
வடபகுதிக் கடற்பரப்பில் அண்மைக் காலமாக கடற்படையினர் சந்திக்கும்
பேரிழப்புகள் அவர்களது பலம் குறித்துப் பெரும் கேள்விகளை
எழுப்பியுள்ளதுடன் கடற்புலிகளின் கை ஓங்கி விட்டதையும்
தெளிவுபடுத்துகிறது. இதனால் யாழ்.குடா நாட்டுக்கான கடல்வழி விநியோகங்கள்
தடைப்படுமென்பதுடன் குடா நாட்டுக்குச் செல்லும் கப்பல்களை விடுதலைப்
புலிகள் கைப்பற்றும் நிலைமையும் ஏற்பட்டு வருகிறது.
யாழ்.குடாநாட்டுக்கான தரைவழிப் பாதையை மூடப்போய் இன்று அரசு,
யாழ்.குடாநாட்டுக்கான கடல்வழிப் பாதையை இழந்துள்ளது. குடாநாட்டுக்கான
தரைவழிப் பாதையை திறக்க வேண்டிய கட்டாய சூழ்நிலை அரசுக்கு ஏற்பட்டு
வருகிறது. இல்லையேல் அங்கு ஏற்படப்போகும் மனிதப் பேரவலத்தால் சர்வதேச
சமூகம் நேரடித் தலையீடுகளை மேற்கொள்ளும் நிலைமை ஏற்படலாம்.
படையினருக்கு ஏற்படும் பாரிய இழப்புகளையடுத்து அரசு போர்த் தளபாடங்களை
வாங்கிக் குவிக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. போர் விமானங்கள்,
அதிவேக டோரா பீரங்கிப்படகுகள், யுத்த டாங்கிகள் மற்றும் பெருமளவு
ஆயுதங்களைக் கொள்வனவு செய்வதற்காக வரவு - செலவுத் திட்டத்தில்
பாதுகாப்புச் செலவினம் இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது.
அடுத்தடுத்து ஏற்படும் பாரிய போர்த்தளபாட இழப்பானது படையினரின்
மனோவலிமையையும் இழக்கச் செய்து வருகிறது. அண்மைக் காலங்களில் பல நூறு
படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் பல நூறுகோடி ரூபா பெறுமதியான
போர்த்தளபாடங்களும் இழக்கப்பட்டுள்ளன. புலிகள் ஆயுதங்களைக் கைவிட்டுப்
பேச்சுக்கு வரவேண்டுமென அழைப்பு விடுத்துள்ள அரசு தான் ஆயுதங்களை வாங்கிக்
குவித்தவாறு பெரும் போருக்குத் தயாராகிறது. அடுத்த சுற்றுப் பேச்சுக்கு
முன் பாரிய வெற்றிகளைக் குவித்துவிட வேண்டுமென்ற முனைப்பில் செயற்பட்டு
வரும் அரசுக்குப் புலிகள் போர் முனையில் கடும் பதிலடி கொடுத்து
வருகின்றனர்.
யுத்த முனையில் ஏற்படும் தோல்விகளைத் தாங்க முடியாத படையினர் அதற்காக
அப்பாவிப் பொதுமக்களைப் பழிவாங்கி வருவதாக கடும் குற்றச்சாட்டுகள்
எழுந்துள்ளன. இதனை நிராகரிக்க அரசும் படைத்தரப்பும் முயன்ற போதும் தினமும்
அரசின் இந்தச் செயல்கள் அம்பலமாகிக் கொண்டேயிருக்கின்றன.
யுத்த முனையில் ஏற்படும் இழப்புகளுக்காக அப்பாவித் தமிழர்கள் இலக்கு
வைக்கப்படுகின்றனர். குடாநாட்டில் தினமும் நால்வருக்குக் குறையாது
கொல்லப்படுகின்றனர். நால்வருக்கும் மேற்பட்டோர் காணாமல் போகின்றனர்.
ஊரடங்கு உத்தரவு அமுலிலிருக்கையில் நள்ளிரவு நேரத்தில் வாகனங்களில்
வருவோரால் கடத்தப்படுவோரே படுகொலை செய்யப்படுகின்றனர். இல்லையேல் காணாமல்
போகின்றனர்.
பகல் வேளையிலேயே மக்கள் நடமாட அஞ்சும் நிலையில் நள்ளிரவில் ஊரடங்கு
வேளையில் படை முகாம்களையும் சோதனை நிலையங்களையும் தாண்டி வாகனங்களில்
வருவோர் யாரென்ற கேள்வி எழுகிறது. தரை வழிப்பாதையை மூடிவிட்டு மக்கள்
தப்பிவிடாது தடுத்து நிறுத்தப்பட்டு படுகொலை செய்யப்படுகின்றனர்.
இனப்பிரச்சினைக்கு இனி அரசியல் தீர்வே இல்லையென்ற நிலை
உருவாக்கப்பட்டுவிட்டது. இராணுவத் தீர்விலேயே இந்த அரசு முழுமையான
ஈடுபாட்டைக் காட்டுகிறது. அப்பாவிப் பொதுமக்கள் தினமும் கொன்று
குவிக்கப்படுகின்றனர். அரசின் இந்த அணுகுமுறையை தமிழ் மக்கள் பல
வருடங்களுக்கு முன்பே புரிந்து கொண்டு விட்டனர். சர்வதேச சமூகம் தான்
இன்னமும் புரிந்து கொள்ளவில்லை.
விதுரன்
|