பிரதான பக்கம் arrow கட்டுரைகள் arrow ஏ-9 பாதை விவகாரமும் 'கௌரவப்' பிரச்சினையும்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English

ஏ-9 பாதை விவகாரமும் 'கௌரவப்' பிரச்சினையும் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Wednesday, 22 November 2006

ஏ-9 பாதை விவகாரம் இன்று இலங்கை அரசியல் அரங்கை ஆக்கிரமித்து நிற்கும் பாரிய ஒரு சர்ச்சையாக மாற்றப்பட்டிருக்கிறது.

கடந்த மாதம் அரசாங்கத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே ஜெனீவாவில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிவடைந்தமைக்கு இந்த ஏ-9 விவகாரமே காரணமாயமைந்தது.

இப்போது சமாதான முயற்சிகள் என்று கூறப்படுபவற்றில் எந்தவொரு முன்னோக்கிய நகர்வுமே இப்பாதை தொடர்பான சர்ச்சைக்குக் காணப்படக்கூடிய தீர்விலேயே முற்றுமுழுதாகத் தங்கியிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது.

அரசாங்கப் படைகளுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையேயான மோதல்கள் தீவிரமடைந்ததையடுத்து கடந்த ஆகஸ்ட் 11 ஆம் திகதி முதல் ஏ-9 பாதை ஊடான போக்குவரத்தை முகமாலையில் இராணுவம் தடை செய்தது. இதன் விளைவாக யாழ்ப்பாணக் குடாநாடு நாட்டின் ஏனைய பகுதிகளில் இருந்து துண்டிக்கப்பட்டு அங்கு பாரதூரமான மனிதாபிமான நெருக்கடி தோன்றியது.

சுமார் 5 இலட்சம் மக்கள் வாழும் குடாநாட்டில் அத்தியாவசிய உணவு மற்றும் பாவனைப் பொருட்களுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. சுமார் மூன்று மாத காலமாக ஏ-9 பாதை மூடப்பட்டுக் கிடக்கின்ற நிலையில் குடாநாட்டு மக்களின் மனிதாபிமானத் தேவைகளை பூர்த்தி செய்வதற்கெனக் கூறிக் கொண்டு அரசாங்கம் மேற்கொண்ட எந்தவொரு நடவடிக்கையுமே உருப்படியான பயனைத் தரவில்லை.

ஏ-9 பாதையைத் திறந்துவிட வேண்டுமென்பதை அரசாங்கம் விடுதலைப் புலிகளின் கோரிக்கையாக மாத்திரம் பார்க்கிறது. அக்கோரிக்கை வடபகுதி மக்களினுடையது என்பதைப் பற்றிச் சிந்திக்க அரசாங்கம் தயாராயில்லை. குடாநாட்டில் தீவிரமடைந்து வருகின்ற மனிதாபிமான நெருக்கடியே ஏ-9 தொடர்பான சர்ச்சை மீது சர்வதேச சமூகத்தின் கவனத்தைத் திருப்பியது என்பதில் சந்தேகமில்லை.

தேசிய பாதுகாப்பைக்' காரணம் காட்டி பாதையைத் திறப்பதற்கு அரசாங்கம் தெரிவித்து வருகின்ற மறுப்பு அரசாங்கம் நினைக்கின்ற அளவுக்கு வெளியுலகில் செல்லுபடியாகவில்லை.

குடாநாட்டு மனிதாபிமான நெருக்கடியைத் தணிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்துக்கு சர்வதேச சமூகத்திடமிருந்து விடுக்கப்படுகின்ற நெருக்குதல்கள் காரணமாகவே ஒரு தடவை மாத்திரம் அத்தியாவசிய பாவனைப் பொருட்களை கொண்டு செல்வதற்கான ஏற்பாட்டுக்காக பாதையைத் திறந்து விடத் தயாராயிருப்பதாக அரசாங்கம் அறிவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது என்பதில் சந்தேகமில்லை.

-9 பாதையை ஒரு தடவை திறப்பது என்ற ஜனாதிபதி செயலகத்தின் அறிக்கை வெளியான மறுநாள் அமைச்சர் நிமால் சிறி பால டி சில்வாவும் அது தொடர்பாக பாராளுமன்றத்தில் அறிக்கையொன்றை விடுத்தார்.

அரசாங்க சமாதானச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி பாலித கோஹனவும் பாதை திறப்பதற்கு அரசாங்கத்தினால் மேற்கொள்ள உத்தேசிக்கப்படுகின்ற நடவடிக்கைகள் குறித்து இராஜதந்திரிகளுக்கு விளக்கமளித்தார். ஏ-9 பாதையை தொடர்ந்து மூடிவைத்திருப்பது அரசாங்கத்தின் நோக்கமல்ல என்றும் ஒரு தடவை மாத்திரம் திறப்பதற்கு மேற்கொள்ளப்படவிருக்கும் நடவடிக்கைகளுக்கான பிரதிபலிப்பை அவதானித்த பின்னர் தொடர்ந்தும் பாதையை திறந்து விடுவது குறித்து பரிசீலிக்கப்படும் என்றும் அரசாங்கத் தரப்பினால் விளக்கம் தரப்பட்டிருக்கிறது.

ஆனால் பாதையை நிரந்தரமாகத் திறந்து விட வேண்டுமென்பதே தங்கள் கோரிக்கை என்று தெரிவித்திருக்கும் விடுதலைப் புலிகள்இ தற்காலிக ஏற்பாடுகளை நிராகரித்திருக்கிறார்கள். இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளின் டோக்கியோ மகாநாட்டு கூட்டுத்தலைமை நாடுகளின் கூட்டம் வாஷிங்டனில் நடைபெறுகின்றதை மனதில் கொண்டு தான் அரசாங்கம் பாதையை ஒரு தடவை திறக்கும் அறிவிப்பை விடுத்திருப்பதாகவும் விடுதலைப் புலிகள் கூறியிருக்கிறார்கள்.

தென்னிலங்கையின் சிங்களப் பேரினவாத சக்திகளான ஜனதா விமுக்தி பெரமுனை (ஜே.வி.பி.) மற்றும் ஜாதிக ஹெல உறுமய போன்றவை அரசாங்கம் கோழைத்தனமாக நடந்து கொள்வதாகக் குற்றஞ்சாட்டியிருக்கின்றன.

ஏ-9 பாதை திறப்பு தொடர்பான சர்ச்சையின் காரணமாக ஜெனீவா பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தவேளையில், இந்த விவகாரத்தை சிங்கள மக்களின் ஹகௌரவத்துடனும் தன்மானத்துடனும்' சம்பந்தப்பட்ட பிரச்சினையாக உருமாற்றுவதற்கு பேரினவாத சக்திகள் முயற்சிக்கும் அபாயம் இருப்பதாக சமாதானத்தில் இதய சுத்தியான அக்கறையுடைய அரசியல் சக்திகள் எச்சரிக்கை செய்தன என்பதை இக்கட்டத்தில் நினைவுபடுத்துவது பொருத்தமானது. அந்த எச்சரிக்கை எந்தளவுக்கு சரியானது என்பதை இன்று எம்மால் நிதர்சனமாகக் காணக்கூடியதாக இருக்கிறது.

5 இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் எதிர்நோக்குகின்ற மனிதாபிமான நெருக்கடியைத் தணிப்பதற்கு அவசியமான ஒரு விவகாரமாக ஏ-9 பாதைத் திறப்பை ஆரம்பம் முதலிருந்தே அரசாங்கம் அணுகியிருந்தால் பேரினவாதசக்திகளுக்கு ஹதீனி' கிடைத்திருக்க வாய்ப்பில்லாமல் போயிருக்கும்.

இந்த விவகாரத்தைப் பயன்படுத்தி சிங்கள மக்கள் மத்தியில் தவறான பிரசாரங்களை முன்னெடுக்க கங்கணம் கட்டி நிற்கும் பேரினவாத சக்திகளுக்கு இடம்கொடுக்காமல் அரசாங்கம் செயற்பட வேண்டும் என்பதே எமது வேண்டுகோளாகும். 

Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2009 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..