|
வடக்கு-கிழக்கில் படை நகர்த்தல்களுக்கு மத்தியில் அரசியல் ரீதியான காய்நகர்த்தல்களையும் அரசு ஆரம்பித்துள்ளது. உள்நாட்டில் பிரச்சினைக்கு இராணுவ ரீதியில் தீர்வு காண முற்படுகையில், அரசியல் தீர்வுக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சர்வதேச ரீதியில் காண்பிக்க முற்படுகிறது.
ஒரு புறம் பாரிய படை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகையில் மறுபுறம் உணவும்
ஆயுதமாகப் பயன்படுத்தப்படுகிறது. யாழ். குடாநாட்டில் இராணுவக்
கட்டுப்பாட்டுப் பகுதியிலும் மட்டக்களப்பில் புலிகளின் கட்டுப்பாட்டுப்
பகுதியிலும் (வாகரை) உணவையே அரசு ஆயுதமாகப் பயன்படுத்துகிறது.
வடக்கிலும் கிழக்கிலும் இதனால் மனிதப் பேரவலம் ஏற்பட்டுள்ளது. 1950 களின்
முற்பகுதியில் ஆபிரிக்க நாடுகளில் ஏற்பட்ட பசிக் கொடுமை மற்றும் மிக
மோசமான தொற்று நோய்கள் போன்று யாழ்.குடா நாட்டிலும் வாகரையிலும் மக்கள்
பசியுடனும் நோயுடனும் போராடத் தொடங்கியுள்ளனர்.
குடா நாட்டில் கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக பாரிய உணவுப்
பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் அங்குள்ள ஆறு இலட்சம் மக்களும் ஒருவேளை
உணவுக்காக அலைந்து திரியும் நிலை ஏற்பட்டுள்ளது. குடாநாட்டுக்கான `ஏ -9'
வீதியை பூட்டி வைத்திருக்கும் அரசு அந்த மக்களுக்கு உணவுப் பொருட்களையும்
அனுப்புவதில்லை.
ஆனால், அங்குள்ள 40,000 படையினருக்கும் உணவுப் பொருட்கள் தாராளமாகக்
கிடைக்கிறது. மக்களுக்குத் தான் எதுவுமே கிடைப்பதில்லை. இதே நிலை தான்
வாகரையிலும் நிலவுகிறது. அங்கும் 60,000 க்கும் மேற்பட்ட மக்கள் உணவுக்காக
அலைந்து திரிகின்றனர். பசிக் கொடுமையால் உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன.
மூதூர் கிழக்கிலிருந்து இடம்பெயர்ந்து அகதி முகாம்களில் தங்கியிருக்கும்
பல்லாயிரக்கணக்கான மக்களின் நிலைமை சொல்லில் அடங்காது. ஒருபுறம் இவர்கள்
உணவைப் பெறவும் நோயை எதிர்க்கவும் போராடுகையில் மறுபுறம் அகோர ஷெல்
தாக்குதலுக்கும் விமானக் குண்டு வீச்சுக்கும் முகங்கொடுக்க வேண்டியுள்ளது.
யாழ். குடாநாட்டில் ஆனையிறவையும் மட்டக்களப்பில் வாகரையையும் கைப்பற்ற
முயலும் அரசு, அதனொரு கட்டமாகவே இவ்விரு பகுதிகளிலும் சகல வழிகளிலும்
பெரும் நெருக்கடிகளை ஏற்படுத்த முற்படுகிறது.
அதேநேரம், வாகரையிலுள்ள மக்களை பட்டினி போட்டு அவர்களை அங்கிருந்து
வெளியேற்றி இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள் இழுக்கவும்
முயல்கிறது. இதனால், அங்குள்ள மக்கள் அங்கிருந்து வெளியேற முயல்கின்ற
போதும் புலிகள் அவர்களைத் தடுத்து நிறுத்தி மனிதக் கேடயங்களாக பயன்படுத்தி
வருவதாக அரசும் படைத்தரப்பும் குற்றஞ்சாட்டுகின்றன.
ஆனால், குடாநாட்டிலுள்ள ஆறு இலட்சம் மக்கள், இன்று அங்கு தோன்றியுள்ள
மிகப் பெரும் அச்சமானதும் அவலமானதுமொரு சூழ்நிலையிலிருந்து தப்பி
அங்கிருந்து வெளியேற முயல்கின்ற போதும் `ஏ9' பாதையை மூடி அவர்கள்
வெளியேறுவதை அரசும் படைகளும் தடுத்து நிறுத்தியுள்ளன.
வாகரையில் தங்கள் சொந்த இடங்களிலுள்ள மக்களை அங்கிருந்து வெளியேற்றி அகதி
முகாம்களினுள் அடைக்க முற்படும் அரசு, குடா நாட்டில் தங்கள் சொந்த
இடங்களிலிருந்து வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல முயலும் மக்களை
ஏன் தடுத்து நிறுத்துகிறது?
குடா நாட்டுக்கான தரை வழிப்பாதையை மூடப் போய் அரசு இன்று குடா நாட்டுக்கான
கடல்வழிப் பாதையை இழந்து விட்டது. இதனால், அங்கு எந்த விதத்திலும்
பொருட்களை அனுப்ப முடியாது அரசு தடுமாறுகிறது. ஆனாலும், அதனைக் கூட தனது
அரசியல் நடவடிக்கைக்கும் பிரசாரத்துக்கும் வாய்ப்பாகப் பயன்படுத்த
முற்படுகிறது.
கடந்த திங்கட்கிழமை வாஷிங்டனில் இலங்கைக்கு உதவி வழங்கும் இணைத் தலைமை
நாடுகளின் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில், குடா நாட்டுக்கான தரை
வழிப்பாதையை (ஏ-9) அரசு உடனடியாகத் திறந்து அங்கு ஏற்பட்டுள்ள மனிதப்
பேரவலத்தை போக்க வேண்டுமென இலங்கை அரசுக்கு இணைத் தலைமை நாடுகள் கடும்
அழுத்தம் கொடுக்குமென எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், இந்த மாநாட்டுக்கு முதல் நாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ விடுத்த
அறிவிப்பொன்று இணைத் தலைமை நாடுகளின் கடும் அழுத்தத்திலிருந்து அவரைத்
தப்ப வைத்ததுடன் அவருக்கு பாராட்டையும் பெற்றுக் கொடுத்தது.
பாரிய படை நகர்வுக்காக பாதையை மூடிய ஜனாதிபதி மாநாட்டுக்கு முதல் நாள்
மேற்கொண்ட அரசியல் காய் நகர்த்தலால் இணைத் தலைமை நாடுகளும் ஏமாந்து விட்டன.
குடா நாட்டுக்கு உணவுப் பொருட்களை அனுப்ப ஒரேயொரு முறை ஏ-9 வீதியை திறக்க
நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மகிந்த அதிகாரிகளுக்கு விடுத்த
உத்தரவானது, `ஏ-9' பாதையை உடனடியாகத் திறக்க ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளதாக
வெளியுலகுக்கு பிரசாரம் செய்யப்பட்டது.
இதனால், இந்தப்பாதையை மூடியதற்காக இலங்கை அரசை மிக வன்மையாகக் கண்டிக்க
வேண்டிய இணைத் தலைமை நாடுகள், இப்பாதையை திறக்கப் போவதாக ஜனாதிபதி கூறியது
வரவேற்கத்தக்கதெனக் கூறி அவருக்கு பாராட்டுத் தெரிவித்ததுடன்
மட்டுமல்லாமல், ஒரு படி மேல் சென்று ஜனாதிபதியின் இந்த முயற்சிக்கு
புலிகளும் உதவ வேண்டுமெனக் கூறியதன் மூலம் இணைத் தலைமை நாடுகளை அரசு
ஏமாற்றிவிட்டது.
ஆனால், ஒரேயொரு முறை மட்டும் இந்தப் பாதையை திறந்து மூடுவதென்பது
சாத்தியமற்றதென்பதையும் ஒரேயொரு தடவை மட்டும் குடா நாட்டுக்கு உணவுப்
பொருட்களை அனுப்புவதன் மூலம் அங்கேற்பட்டுள்ள மனிதப் பேரவலம் முடிவுக்கு
வந்து விடாதென்பதையும் உணராத இணைத் தலைமை நாடுகள், தங்களது
அழுத்தத்திலிருந்து தப்பவும் குடாநாட்டுக்கான கடல் வழிப் பாதை
மூடப்பட்டிருப்பதாலேயுமே அரசு இவ்வாறானதொரு அறிவிப்பை வெளியிட்டதென்பதை
உணரத் தவறிவிட்டது.
வடக்கு, கிழக்கில் தோன்றியுள்ள இந்த மோசமான நிலைமை தமிழகத்தில் மிகக்
கடுமையான உணர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்திய மத்திய அரசுக்கு இதனால்
பெரும் நெருக்கடிகள் ஏற்பட்டு வருகின்றன. உத்தராஞ்சல் மாநிலத்தில்
டேராடூனில் நடைபெறும் ஆசிய மேயர்கள் மாநாட்டுக்கான பிரதம விருந்தினராக
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ செல்கையில் அதனை தமிழகத்தின் அனைத்து மேயர்களும்
முழுமையாக பகிஷ்கரிக்க முடிவு செய்துள்ளனர்.
நான்கு தி.மு.க. மேயர்களும் இரு காங்கிரஸ் மேயர்களும் இந்த பகிஷ்கரிப்பில்
ஈடுபடவுள்ளனர். தமிழகத்தில் தி.மு.க.வே ஆளும் கட்சி. மத்தியில்,
தி.மு.க.வின் ஆதரவுடன் காங்கிரஸ் கட்சியே ஆட்சியிலுள்ளது. இதனால், தமிழக
மேயர்கள் மகிந்த ராஜபக்ஷ பங்கேற்கும் நிகழ்வை புறக்கணிக்கிறார்களென்றால்
அது தி.மு.க. மற்றும் காங்கிரஸ் தலைமைப் பீடத்தின் அனுமதியின்றி
பகிஷ்கரிக்க முடியாது.
இதனால், இணைத் தலைமை நாடுகளை ஏமாற்றியது போல் இந்தியாவை ஏமாற்ற
முடியாதென்பது தெளிவாகியுள்ளது. கடைசி நேரத்தில் கூட இந்த மேயர்கள்
மாநாட்டில் தமிழகத்தின் ஆறு மேயர்களையும் கலந்து கொள்ளச் செய்வதற்கான
முயற்சியில் இந்திய மத்திய அரசு ஈடுபட்டிருந்தது.
பிரதமர் மன்மோகன் சிங்கின் விஷேட பிரதிநிதியாக அவரது பாதுகாப்பு ஆலோசகர்
எம்.கே.நாராயண் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை சென்னை வந்து தமிழக
முதலமைச்சர் மு.கருணாநிதியை சந்தித்தார்.
இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பிரதம விருந்தினராகக் கலந்து கொள்ளும்
நிகழ்வை தமிழக மேயர்கள் புறக்கணிப்பது சர்வதேச ரீதியில் இந்தியாவுக்கு
பின்னடைவை ஏற்படுத்துமெனக் கூறியிருந்தார்.
எனினும், தமிழகத்தில் ஏற்பட்டு வரும் உணர்வை புறந்தள்ள முடியாத கருணாநிதி
அதற்கு சம்மதம் தெரிவிக்காததால் மகிந்த ராஜபக்ஷ கலந்து கொள்ளும் நிகழ்வை
தமிழக மேயர்கள் பகிஷ்கரிப்பதன் மூலம் இந்தியா முழுவதும் உடனடியாக இந்தப்
பிரச்சினை எதிரொலிக்கப் போகிறது.
எனினும், தான் அங்கு செல்வதற்கு முன்னர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ
வெள்ளிக்கிழமை பிற்பகல் இந்திய மற்றும் சர்வதேச ஊடகவியலாளர்களை அவசர
அவசரமாக அலரி மாளிகைக்கு அழைத்து குடா நாட்டுக்கு அத்தியாவசிய உணவுப்
பொருட்களை அனுப்ப சர்வதேச தொண்டர் அமைப்புகள் உதவ முன்வர வேண்டுமென
அழைப்பு விடுத்தார்.
இந்தியாவுக்கு தான் செல்வதற்கு முன்னர், இது தொடர்பான செய்திகள் இந்திய
ஊடகங்களிலும் சர்வதேச ஊடகங்களிலும் பெரிதுபடுத்தப்பட வேண்டுமென்பதற்காகவே
திடீரென இந்திய மற்றும் சர்வதேச ஊடகவியலாளர்களை மட்டும் அழைத்து
குடாநாட்டு மக்கள் மீது தனது கரிசனையைத் தெரிவித்தார்.
இதற்கு முன்பாக, குடா நாட்டுக்கு பொருட்கள் செல்வதற்காக ஒரேயொரு தடவை
மட்டுமே பாதையை திறப்பது குறித்து அரச சமாதானச் செயலகப் பணிப்பாளர், போர்
நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினை சந்தித்துப் பேசினார். ஜனாதிபதி இந்தியா
செல்லும் போது குடா நாட்டுக்கு உணவுப் பொருட்களை அனுப்ப அரசு அனைத்து
நடவடிக்கைகளையும் எடுப்பது போன்றதொரு தோற்றப்பாட்டை ஏற்படுத்தும் பல
முயற்சிகள் நடைபெற்றுள்ளன. எதுவித நிபந்தனையுமின்றி, போர் நிறுத்த
உடன்பாட்டின்படி இந்தப் பாதையை அரசு உடனடியாகத் திறக்க வேண்டுமெனக் கூறி
வரும் புலிகள், அரசின் ஏமாற்றுக்கும் பிரசார உத்திக்கும் துணை
போகமாட்டார்களென்பது தெளிவு. ஒரு முறை மட்டும் இந்தப் பாதையை திறந்து
மூடுவதற்கு அவர்கள் எந்த விதத்திலும் அனுமதிக்கமாட்டார்களென்பது நிச்சயம்.
புலிகள் இதற்கு சம்மதிக்க மறுத்தால் அதனையும் தங்களுக்கு வாய்ப்பாக்கி
பிரசாரம் செய்வதற்கு அரசும் அவர்கள் சார்ந்த ஊடகங்களும் தயாராகவேயுள்ளன.
அத்துடன் `ஏ-9' பாதையை திறப்பதற்கு புலிகளே தடையாக இருப்பது போன்றும்
பிரசாரங்களை முடுக்கிவிட்டு, `ஏ9' ஐ மூடி வைத்திருப்பதுடன் அதற்கான
பழியையும் புலிகள் மீது சுமத்திவிடுவதற்கும் அரசு திட்டமிட்டுள்ளது.
அதேநேரம், கடற்படையினர் பலமிழந்தும் கடற்புலிகளின் கை வேகமாக ஓங்கி
வருவதையுமடுத்தே `ஏ9' ஒரு முறை திறக்க அரசு முன்வந்ததை எவரும் மறக்க
முடியாது. வடக்கே கடந்த சில வாரங்களில் கடற்படையினர் அடுத்தடுத்து பாரிய
இழப்புகளைச் சந்தித்ததையடுத்து குடாநாட்டுக்கான கடற்படையினரின் கடல்வழிப்
பயணம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
இம்முறை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தனது இந்தியப் பயணத்தின் போது கூட
கடற்புலிகளின் பலம் குறித்து இந்தியாவிடம் கூறி அதற்கான உதவிகளைக்
கேட்கும் நிலை தோன்றியிருப்பது கவனிக்கத்தக்கது.
இணைத் தலைமை நாடுகளையும் இந்தியாவையும் இவ்வாறு ஏமாற்றும் அதேநேரம்
சர்வதேச சமூகத்தை ஏமாற்றும் முயற்சியிலும் அரசு இறங்கியுள்ளது.
இனப்பிரச்சினைக்கு அதிகூடிய அதிகாரப் பரவலாக்கல் மூலம் தீர்வொன்றைக் காண
அனைத்துக் கட்சிகளும் உடன்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.
ஜெனீவாவில் அண்மையில் நடைபெற்ற பேச்சுகளில் கூட அரசியல் தீர்வு பற்றி அரசு
தரப்பு பேச முற்பட்ட போது, உங்களிடம் என்ன தீர்வு இருக்கிறதெனப் புலிகள்
கேட்டனர்.
எதுவுமில்லை ஆனால், அனைத்து கட்சி மாநாடு நடைபெற்று வருவதால் விரைவில்
தீர்வுத் திட்டமொன்றை தயாரித்து விடுவோமென அரசு தரப்பினர் கூறியிருந்தனர்.
இந்த நிலையில் தான், கடந்த சில தினங்களுக்கு முன் அரசு அறிவிப்பொன்றை
வெளியிட்டுள்ளது. அதிகூடிய அதிகாரப் பரவலாக்கல் மூலம் இனப்
பிரச்சினைக்குத் தீர்வு காண அனைத்துக் கட்சிகளும் தயாரென அரசு அறிவித்த
மறுநிமிடமே ஜே.வி.பி.யும், ஜாதிக ஹெல உறுமயவும் இதற்கு வன்மையான மறுப்புத்
தெரிவித்ததுடன் அவ்வாறு எதற்கும் தாங்கள் உடன்படவில்லையெனக் கூறின.
அதேநேரம், அதிகூடிய அதிகாரப் பரவலாக்கலெனக் கூறப்பட்டுள்ளதே தவிர, அது
எத்தகையதெனக் கூறாது தீர்வுத் திட்டமொன்று தயாரெனவும் அரசு கூறுகிறது.
உயர் நீதிமன்றத் தீர்ப்பு மூலம் வடக்கு, கிழக்கை பிரித்து, கிழக்கில்
கருணா குழுவை வளர்த்து, வடக்கு-கிழக்கு இணைப்பின்றி பிரச்சினைக்கு தீர்வு
காண அரசு முற்படுகிறது.
இதற்காகவே கிழக்கில் புலிகளைப் பலவீனப்படுத்தும் தீவிர முயற்சியில் அரசு
இறங்கியுள்ளது. அங்கு புலிகளை நன்கு பலவீனப்படுத்தி கிழக்கில் கருணா
குழுவையும் வேறு கட்சிகளையும் தூண்டி இணைப்புக்கெதிரான கோஷத்தை கிழக்கில்
ஏற்படுத்திக் கொண்டு இனப்பிரச்சினைக்கு அவசர தீர்வொன்றை முன்வைக்கலாமென
அரசு திட்டமிடுகிறது.
ஜனாதிபதி மகிந்தவின் ஒரு வருட ஆட்சிக் காலம் முடிவடைந்துள்ள நிலையில்
புதிய ஜனாதிபதியின் செயற்பாடுகளை அவதானிக்க அவருக்கு புலிகள் வழங்கிய கால
அவகாசமும் முடிவடைந்து விட்டது. இதனால் மீண்டும் புலிகள் அவருக்கு கால
அவகாசத்தை எந்தச் சந்தர்ப்பத்திலும் வழங்கப் போவதில்லையென்பது தெளிவு.
1983 இல் இனப்பிரச்சினை மோசமான நிலையை அடைந்த பின்னர் 1987 இல் இலங்கை-இந்திய உடன்பாட்டின் மூலம் வடக்கு-கிழக்கு இணைக்கப்பட்டது.
தமிழர்களின் தாயக கோட்பாடே போராட்டத்தின் அடிநாதமாயிருக்கையில் இதுவரை
காலமும் எந்தவொரு ஜனாதிபதியும் செய்யத் துணியாததொன்றை செய்ததன் மூலம்
மகிந்த ராஜபக்ஷ தமிழர் தாயக கோட்பாட்டை நிராகரித்து தமிழினத்தையே கடும்
சீற்றமடையச் செய்துள்ளார்.
இலங்கையில் சிங்கள இனம் இப்படியானதுதானென்பதை தமிழர்கள் எப்போதோ சர்வதேச
சமூகத்திற்கு நிரூபித்து விட்டனர். அதேநேரம் சர்வதேச சமூகமும் எமது
பிரச்சினையில் தனக்கு ஆதாயம் தேடவும் எமது போராட்டத்தை நசுக்கவுமே
முற்படுகிறதே தவிர எமது இனம் இன்று மிகப் பெரும் பேரவலத்தை சந்தித்துக்
கொண்டிருக்கையிலும் எதுவுமே செய்யப் போவதில்லை என்பது எமது இத்தனை வருட
கால போராட்டம் மூலம் நாம் உணர்ந்துள்ளோம். இதனால், இந்தப் பிரச்சினைக்கு
இனியும் எவரையும் `தமிழினம்' நம்பத் தயாரில்லை என்பதையும் சர்வதேச சமூகம்
கூட இப்பிரச்சினையை சரிவரப் புரிந்து கொள்ளவில்லை என்பதையும் முழு
உலகுக்கும் புலிகள் தெளிவுபடுத்துவரென எதிர்பார்க்கப்படுகிறது.
நாளைய மாவீரர்தின உரையானது, புலிகளின் தலைவரது இதுவரை கால உரை
போலிருக்காதென்பது நிச்சயம். இலங்கை அரசும், சிங்களவர்களும் சர்வதேச
சமூகமும் எதிர்பாராத முடிவொன்றை தமிழர்கள் எடுக்கப் போகிறார்கள் என்பதை
நாளைய உரையில் பிரபாகரன் கூறுவாரென்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
அந்த உரை, இனிமேலும் தமிழர்கள் எவரையும் நம்பப் போவதில்லையென்பதையும்
தமிழர்களே தங்கள் தலைவிதியை நிர்ணயிக்கப் போகிறார்களென்பதையும் கூறப்
போகிறது.
-விதுரன்-
|