|
சமாதான விரும்பிகளே, என் செய்வீர்? |
|
|
|
Tuesday, 05 December 2006 |
|
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைத் தடைசெய்வது குறித்து அரசாங்க உயர்மட்டங்களில் ஆராயப்பட்டு வருவதாகச் செய்திகள் வெளிவந்துள்ளன.
கடந்த வெள்ளிக்கிழமை மாலை ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இது குறித்து மிகத் தீவிரமாக ஆராயப்பட்டிருக்கிறது. வன்முறைகளைக் கைவிடுமாறு நிபந்தனை விதித்துத் தடையைக் கொண்டுவருவதில் அரசு முனைப்பாக உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும், உடனடியாக அவ்வாறு செய்வதில்லை என்று முடிவாகியதாக
அறியப்படுகின்றது. ஜே.வி.பி மற்றும் ஜாதிக ஹெல உறுமய ஆகிய பேரினவாதக்
கடுங்கோட்பாட்டுக் கொள்கைக் கட்சிகள், விடுதலைப் புலிகளை உடனடியாகவே
தடைசெய்யவேண்டும் என்று அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றன.
ஜாதிக ஹெல
உறுமய தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் விதத்தில் நேற்றுமுன்தினம்
ஆர்ப்பாட்டமும் ஊர்வலமும் நடத்தியது.
அரசாங்கத்தின் முடிவு உடனடியாக வெளிப்படுத்தப்படுமா அல்லது தாமதித்து
வருமா என்பதல்ல முக்கியம். விடுதலைப் புலிகள் அமைப்பைத் தடைசெய்வது
குறித்து அது பரிசீலனை செய்கிறது என்பதே கவனத்தில் கொள்ளப்படவேண்டிய
விடயம்.
விடுதலைப் புலிகள் அமைப்பின்மீது தடை விதிப்பது என்பது, இப்போது சிறுகிக்
குறுகி, நொறுங்கியுள்ள கதவுடன் உள்ள சமாதானப் பாதையை, ஒரேயடியாகப்
பூட்டிட்டு மூடிவிடுவது என்பதே ஆகும். அதன் பின்னர் போரை முழு அளவில்
நடத்தி ஒரு "முடிவு' கண்டாக வேண்டும் என்ற மூர்க்கத்துடன், ஆவேசத்துடன்
எடுக்கப்படும் தீர்மானம் அது.
விடுதலைப் புலிகளைத் தடை செய்தால் அவர்களுடன் எப்படிப் பேசுவது? பயங்கரச்
சண்டையிடும் எதிரிகள் இருவர் மேசையில் அமர்ந்து பேசுவதற்கான சூழல் அறவே
இருக்கமாட்டாது. அதுவும் அடுத்தவர் தீண்டத்தகாதவர், பொல்லாதவர் என்று
முத்திரை குத்திய நிலையில் இருவரும் நேருக்குநேர் முகம் பார்த்துப் பேச
இயலுமா? அது அசாத்தியமானது.
1988ஆம் ஆண்டில் விடுதலைப் புலிகள் அமைப்பு மீது அப்போதைய அரசாங்கம் தடை
விதித்தது. அதன் பின்னர் 2002ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் திருப்புமுனையை
உண்டாக்கிய போர்நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்தாவதற்கு சுமார் ஒரு
மாதத்திற்கு முன்னர் தடை நீக்கப்பட்டது.
அவ்வாறு செய்யப்பட்டதாலேயே அரசும் புலிகளும் சமதரப்பாக இருந்து கடந்த நான்கு வருடங்களாகப் பேச்சுவார்த்தைகளை நடத்த முடிந்தது.
பேச்சுவார்த்தைகள் எதிர்பார்க்கப்பட்ட பலனை விளைவை தரவில்லையெனினும் அவை
உத்தியோக பூர்வமாகவும் ஒரு தரப்புக்கு அடுத்த தரப்பு மதிப்பளிக்கும்
பண்புடனும் நடைபெற்றன. தடைசெய்யப்பட்ட நிலையில் இருந்துகொண்டு சமாதானப்
பேச்சு மேசைக்கு விடுதலைப் புலிகள் செல்வார்கள் என்று
எதிர்பார்ப்பதற்கில்லை. தடையின் விளைவாக நாடு முழுவதிலும் மக்கள் அழிவும்
உடைமை அழிவும் உண்டாகி அது சீரழியும் என்பது எவருக்குமே எல்லேõருக்குமே
தெரிந்ததே.
அரசும் விடுதலைப் புலிகளும் எதிரும் புதிருமாகக் கடுப்பான முகங்களைக்
காட்டிக்கொண்டு பேசுவது துர்லாபம். இரு தரப்புகளும் தனித்துப் பேசித்
தீர்வு ஒன்றைக் காணமுடியாது. முந்தைய அனுபவம் அதுவே. இதனை உணர்ந்தே
நோர்வேயை அனுசரணையாளராக அழைத்துப் பேச்சுவார்த்தையைத் தொடங்கினார்
சந்திரிகா.
ஆனால், சந்திரிகாவும் வெளிநாடுகளில் இருந்து நிதி உதவி பெறுவதற்காகச்
சமாதான வேடம் பூண்டவரே. இடையில் ரணில் வந்தார். போர்நிறுத்த ஒப்பந்தம்
ஒன்றை விடுதலைப் புலிகளுடன் செய்ய விரும்பினார். அதற்கு ஏதுவாக அவர்கள்
மீது விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி சமாதானப் பேச்சுக்கான சுமுகமான
பின்புலத்தையும் மேடையையும் அமைத்தார்.
எனினும், அவரது சில தந்திரங்களும் குள்ளநரித் தனங்களும் பேச்சு விரைந்து ஆக்கபூர்வமான முடிவை எட்டுவதற்குத் தடைக்கல் போட்டன.
இவை தற்கால வரலாறாகிவிட்டவை.
இவ்வாறிருக்க விடுதலைப் புலிகள் மீது தடை விதிப்பதற்கு அரசு தயாராகிறது
என்ற தகவல் "சமாதானத்துக்கான யுத்தம்' என்ற சந்திரிக்காவின் உளுத்துப்போன,
"சித்தாந்தத்'தை அடியொற்றியே, மஹிந்தரும் நாட்டை மேலும்
சீர்கெடுத்தப்போகிறார் என்பதற்குக் கட்டியம் கூறுவதாக உள்ளது.
இப்போது தான் பரிசீலனை செய்து வருவதை அரசாங்கம் முடிவாக்கி,
அமுலாக்கும்போது போர்நிறுத்த ஒப்பந்தம் அர்த்தமற்றதாகி விடும்;
செத்துப்போய்விடும்.
அதன் பின்னர் முழு அளவிலான போர்மூண்டு எல்லா வகைகளாலும் பேரழிவுகள்
உண்டாகும். சமாதானப் புறா கொல்லப்பட்டுக் குழி தோண்டிப் புதைக்கப்படும்.
நாட்டின் சமாதான விரும்பிகள் அதன் பிற்பாடு என்ன செய்யமுடியும்?
ஆபத்து வருமுன் தடுப்பதே சிறந்தது. அதனைச் செய்ய வேண்டியவர்கள் உள்நாட்டு,
வெளிநாட்டு சமாதான விரும்பிகளே. வெளிநாடுகளுக்கு இதில் முக்கிய பெரிய
பங்குண்டு. அந்தப் பங்கினை ஆற்றுவார்களா அவர்கள்?
நெருடல் இணையம்
|