பிரதான பக்கம் arrow கட்டுரைகள் arrow சரத் பொன்சேகா விரும்பும் பலப்பரீட்சை
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English

சரத் பொன்சேகா விரும்பும் பலப்பரீட்சை அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Wednesday, 06 December 2006

nerudal_sarath_fonseka2இலங்கைப் பிரச்சினைக்கு அமைதிப் பேச்சுவார்த்தையூடாகவே அரசியல் தீர்வு காணப்பட வேண்டும்; விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியில் பலவீனப்படுத்தினாலேயொழிய இலங்கையில் அமைதி ஏற்பட வழியேயில்லை, எனச் சிறிலங்காவின் இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேகா அமெரிக்காவில் தெரிவித்துள்ளார்.

கடந்த செவ்வாய்க்கிழமை அமெரிக்க ராஜாங்கச் செயலர் நிக்களஸ் பேர்ன்ஸை சந்தித்தபோது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் மூன்று நாட்கள் தங்கியிருந்த அவர் அமெரிக்க இராணுவத் தளபதி இராணுவத் தலைமை அதிகாரி உட்பட உயர் இராணுவ அதிகாரிகள் பலரையும் சந்தித்துள்ளார்.

விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியாகப் பலமடைய அனுமதிக்கக்கூடாது. சமாதான காலம் அவர்களைப் பலமடைய வழிவகுத்துள்ளது. குறைந்தது சிறிலங்கா இராணுவத்தின் பலத்தைப் பரீட்சித்துப் பார்க்கவாவது படையினரின் பலத்தை காட்டவாவது புலிகள் மீது இராணுவ நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றெல்லாம் அவர் அமெரிக்க இராஜங்கச் செயலருக்கு எடுத்துக்கூறியுள்ளதாக அமெரிக்காவிலுள்ள சிறிலங்கா தூதரகம் கூறியிருக்கின்றது.

இந்தக் கருத்துக்கள் எல்லாம் சிறிலங்கா இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவிற்கு மட்டும் சொந்தமானவையல்ல. தமிழ் மக்களை ஒடுக்கி அடிமையாக்க முயலும் சிங்களப் பேரினவாதத்தின் அடிப்படைக் கருத்துகளின் வேறு வடிவங்களே இவை.

தமிழ் மக்கள் அமைதி வழிமுறையில் தமது உரிமைகளைப் பெறமுயன்றவேளை அவர்கள் மீது சிங்களக் காடையர்களின் வன்முறை தூண்டிவிடப்பட்டது முதல் இன்று சம்பூரை ஆக்கிரமித்தது வரை தமிழ்மக்களை அடக்கி அவர்களின் அரசியல் வலுவைச் சிதைத்து அவர்களை அடிமைகளாக்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்த பலப்பரீட்சை செய்து பார்க்கவே சிங்கள இனவாதம் முயன்று வந்திருக்கிறது.

அவ்வாறான முயற்சிகள் தமிழ்மக்களைப் பலவீனப்படுத்தவில்லை. அவர்களைப் பலப்படுத்தவே உதவின. அமைதி வழியில் தமது உரிமைக்காகக் குரல் கொடுத்த வேளையில் தமிழ் மக்களின் போராட்டம் போலவே அவர்களின் அரசியல் கோரிக்கைகளும் மென்ரக மாகவே இருந்தன. அதாவது ஐக்கிய இலங்கைக்குள் தமது உரிமைகளைப் பெற்று வாழ்வதன் அடிப்படையிலானதாகவே இருந்தது. இதற்கான தீர்வு வழிமுறைகள் கூட சாதாரண மானவையாக - மாவட்ட மட்ட மாகாண மட்ட அமைப்புகளுடன் திருப்தி கொள்ளும் அளவிலானதாகவே இருந்தன.

ஆனால் இந்தக் கோரிக்கைகளை எழுப்புவதற்கான அரசியல் பலம் தமிழ் மக்களுக்கு எவ்வாறு ஏற்படுகிறது? அதனை எவ்வாறு பலவீனப்படுத்துவது? அதனை எவ்வாறு சிதைப்பது? என்பதாகவே சிங்களப் பேரினவாதத்தின் சிந்தனை ஓட்டம் இருந்தது.

இதனடிப்படையில் போராட்டம் நடத்திய அரசியல் சக்திகள் மீது வன்முறைகள் பிரயோகிக்கப்பட்டதுடன் தமிழர் தாயகத்தில் ஆக்கிரமிப்புக் குடியேற்றங்கள் மொழி உரிமை பறிப்பு கல்வி உரிமை பறிப்பு எனத் தொடர்ந்து உயிர் வாழும் உரிமையைப் பறிக்கும் இனவன்முறைகள் கட்டவீழ்த்து விடப்பட்ட போதே தமிழ் மக்கள் தம்மைக்காக்க ஆயுதப் போரட்டத்தை வரித்துக் கொள்ளவேண்டியதாயிற்று.

இந்த ஆயுதப் போராட்டத்தை முளையிலேயே கிள்ளியெறிய சிங்களப் பேரினவாதம் இராணுவப் பயங்கரவாதத்தை ஏவிவிட்டது. இதன் மூலம் தமிழ் மக்களை மிரட்டிப் பணிய வைக்க முயற்சி செய்தது.

விடுதலைப் புலிகள் இயக்கம் ஆரம்பிக்கப்பட்டு தனது செயற்பாடுகளை தொடங்கிய காலத்தில் யாழ். இல் ஒரு காவல்துறை அதிகாரி கூறினார். 'அவர்கள் குறைந்த அளவில் இருப்பதால் அவர்களைத் தேடிப்பிடித்து அழிப்பது கடினமாக இருக்கிறது. பெரும்படையாக இருந்தால் சுலபமாக மடக்கி விடலாம்" என்று.

தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டம் படிப்படியாக வளர்ச்சிபெற்று வருகின்ற வேளையில் அதனை அடக்க சிங்களக் காவல்துறையால் முடியாது போக வடக்கு-கிழக்கில் அவசரகாலச் சட்டம் பிறப்பிக்கப்பட்டு அதற்கும் மேலாக 15 ஆம் திகதி ய+லை மாதம் 1979 ஆம் ஆண்டு பயங்கரவாதத் தடைச்சட்டம் கொண்டுவரப்பட்டது.

தமிழ் மக்கள்மீது எவ்வகையான பயங்கரவாதத்தையும் புரியும் வரன் முறையற்ற அதிகாரங்களுடன் பிரிகேடியர் ரி.ஐ.வீரதுங்கா எனும் இராணுவ அதிகாரி அந்த வருடம் டிசம்பர் 31 ஆம் திகதிக்குள் தமிழ் மக்களின் போராட்டத்தை அழித்து விட்டு வருமாறு அப்போதைய சனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனவினால் அனுப்பி வைக்கப்பட்டார்.

இதனடிப்படையில் சிங்கள இராணுவத்தின் கையில் வடக்கு கிழக்கு ஒப்படைக்கப்பட்டு தமிழ் மக்கள் மீது பயங்கரவாதம் கட்டவீழ்த்து விடப்பட்டது. இது தமிழ் மக்களைத் துன்பத்துக்கு உள்ளாக்கினாலும் போராட்டத்தை வளர்த்து விடுவதில் பெரும் பங்காற்றியது என்பதை வரலாறு காட்டியது.

இவ்வாறான நாட்குறித்தல்கள் 'போர் என்றால் போர் சமாதானம் என்றால் சமாதானம்" என அறைகூவல் விடுத்த ஜே.ஆர்.ஜெயவர்த்தனவினால் மட்டுமல்ல பின்னர் வந்த ஆர்.பிரேமதாசா, சந்திரிகா குமாரதுங்க இடையில் வந்த இந்திய ஆட்சியாளர் ஆகியோராலும் மேற்கொள்ளப்பட்டே வந்தன.

ஜே.ஆர்.விதித்த காலக்கெடு முடிந்து ஏறத்தாழ 27 வருடங்கள் முடிவடைகின்றன. ஆனால் இன்று தமிழ் மக்களின் போராட்டம் சர்வதேச கவனத்தைப் பெற்றுவிட்ட நிலையில் இதனைப் பலவீனப்படுத்தித்தான் சமாதானத்தை ஏற்படுத்த முடியும் என சிறிலங்காவின் தரைப்படைத்தளபதி அமெரிக்காவில் சென்று முறைப்பாடு செய்து கொண்டிருக்கின்றார்.

ஆனால் அன்றைய ரி.ஐ வீரதுங்க முதல் இன்றைய சரத் பொன்சேகா வரை தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தைப் பலவீனப்படுத்தி தமிழ் மக்களை அழித்து அல்லது அடிமைகொண்டுவிட முடியுமென நம்பும் சிங்களத் தளபதிகளையே சிங்கள இனவாதம் போற்றி வருகிறது. இந்த வகையில் இப்போது சரத் பொன்;சேகாவின் முறை. விடுதலைப் புலிகள் ஆட்லறிகள், மோட்டார்கள், பீரங்கிகள் என்பவற்றை சமாதான காலத்தில் பன்மடங்கு பெருக்கியிருப்பதன் மூலம் மிகுந்த பலம் பெற்றிருப்பதாக சரத் பொன்சேகா அமெரிக்காவிடம் முறைபிட்டிருக்கிறார். இதனைவிட கடற்படை விமானப்படை என முப்படைகளும் கொண்ட ஒரே விடுதலை அமைப்பாக விடுதலைப் புலிகள் வளர்ச்சி பெற்று விட்டார்கள்.

முகமாலையில் ஒக்ரோபர் 11 ஆம் திகதி அடிவாங்கும் வரை புலிகள் பலவீனப்பட்டு விட்டார்கள் இதுதான் சந்தர்ப்பம் எனக் கூக்குரலிட்டு வந்த சிங்கள இனவாதிகள் மத்தியில் கதாநாயகனாகத் திகழ்ந்து வந்த சிங்கள இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தமிழ் மக்கள் மீது போர்ப் பிரகடனம் செய்வதற்கு அமெரிக்காவின் ஆதரவையும் அனுமதியையும் ஆசீர்வாதத்தையும் பெறுவதற்காக புலிகளின் பலம் பற்றியெல்லாம் கூறவேண்டியேற்பட்டிருக்கிறது. தமிழ் மக்கள் மீது மறைமுகப்போரை நடத்திக் கொண்டிருக்கும் சனாதிபதி மகிந்த ராஜபக்ச முகமாலையிலும் ஹபரணையிலும் காலியிலும் வாங்கிய அடியினால் அதனை நேரடிப் போராகப் பிரகடனப்படுத்தப்பட்ட யுத்தமாக மாற்றும் முயற்சியில் தீவிரமாக இறங்கியிருக்கிறார்.

இதற்கு அவர் மேற்கொள்ளும் முன்னோடி நடவடிக்கைகளாகச் சிறிலங்காப் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்கவின் இந்தோனேசிய, கம்போடிய பயணங்களும் சிங்கள இராணுவத் தளபதியின் அமெரிக்கப் பயணமும் அமைந்திருக்கின்றன.

அது மட்டுமல்லாது இந்தப் போருக்கு இந்தியாவின் ஆதரவையும் சம்மதத்தையும் பெறத்தானே நேரடியாக அங்கு சென்று வந்திருக்கிறார்.

இவரது முன்னோடிகள் தமிழ்மக்களின் விடுதலைப் போராட்டத்தை அழித்துவிட மேற்கொண்ட கொடூர யுத்தங்கள் அதனை எவ்வாறு வளர்த்து விட்டிருக்கிறது என்பதைச் சிறிதும் சீர்தூக்கிப் பார்க்காது யுத்தம் எனும் விளக்கை நோக்கிப் பறக்கும் விட்டில் பூச்சியாக மகிந்தரும் செயற்பட முனைகின்றார்.

ஆனால், அவர்கள் தம்மை அறியாமலே தமிழ்மக்களின் விடுதலைப் போராட்டம் பெற்றுள்ள வளர்ச்சியை தாம் பயணிக்கும் ஒவ்வொரு நாடுகளிலும் பயங்கரவாதத்தின் வளர்ச்சி என்ற பெயரில் பரப்புரை செய்தே வருகின்றனர். அதனைக் கூறி உலகை மிரட்டி போராட்டத்தை அழிக்க உதவி கோருகின்றனர்.

ஆனால், கடந்த ஐந்து வருடகாலம் தமிழ் மக்களின் போராட்டத்தை நெருங்கிப் பார்க்கும் சந்தர்ப்பத்தை உலகத்திற்கு வழங்கியுள்ளது. தமிழ்மக்களின் போராட்டத்திலுள்ள நியாயப்பாட்டை மனதளவிலாவது புரிந்து கொள்ளும் வாய்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

அதனை வெளிப்படையாகச் சொல்லத் தடையாக இருப்பது என்னவெனில் தமிழ் மக்களிடம் ஒரு நாடு இல்லாமைதான்.

சிங்கள இராணுவத் தளபதி விரும்பும் பலப்பரீட்சையின் முடிவு இந்தக் குறையை நிச்சயம் போக்கும் என்பதை வரலாறு புலப்படுத்தி நிற்கின்றது.
 
நன்றி: ஈழநாதம் 05.12.06 


-வேலவன்-
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2009 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..