|
நேற்று டிசெம்பர் மாதம் பத்தாம் திகதி அனைத்துலக மனித உரிமை நாளாகும்.
ஒவ்வொரு மனிதனதும் உரிமைகள் மதிக்கப்படவேண்டும்; மற்றவர்களால் மீறப்படக்கூடாது. அவ்வாறு மீறுவது குற்றம்.
மக்களின் உரிமைகளைப் பேணுவதற்கு அரசாங்கம் சட்டரீதியாக நடவடிக்கை
எடுக்கவேண்டும். இத்தகைய பல அம்சங்களை உள்ளடக்கியதே ஐ.நா. மனித உரிமை
சாசனம். அந்த சாசனத்தில் உள்ள விதிமுறை கள், வழிமுறைகள் குறித்த
விழிப்புணர்வை உலக நாடுகள் எல்லாவற்றிலும் உண்டாக்கும் பொருட்டே மனித
உரிமை தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.
ஆனால், மனித உரிமைகள் தினத்தை அனுஷ்டிக்கக் கூடிய தகுதி இலங்கைக்கு உண்டா?
மிகக் குறிப்பாக அரசாங் கத்துக்கு உண்டா?
மிகப்பெரிய கேள்வி இது!
ஐ.நாவின் மனித உரிமைகள் பிரகடனத்தில் இலங்கை அரசாங்கமும்
கைச்சாத்திட்டுள்ளது. மிக அண்மையில் மனித உரிமைகள் அமைச்சு ஒன்றை
உருவாக்கி அதற்கு ஓர் அமைச் சரும் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
மனித உரிமை
ஆணைக் குழு ஒன்றும் கடந்த சில வருடங்களாக இயங்குகிறது.
உண்மைதான்.
ஆனால், மக்களின் மனித உரிமைகளைப் பேணுவதில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய
அளவுக்கு முன்னேற்றம் இல்லை. மிகமிகப் பின்தங்கிய நிலையிலேயே அது உள்ளது.
மனித உரிமைகளைப் பேணுவதற்கென சில சட்டங்கள் இந்த நாட்டில் உள்ளன.
மறுப்பதற்கில்லை. ஆனால், அவற்றை ஒதுக்கித்தள்ளி மேலோங்கி
நிற்கும்(Supersede) சட்டங்களைக் கொண்டு வந்து மக்களின் உரிமைகளைப்
பறிப்பதில் இலங்கை அரசுகள் கைதேர்ந்தவை.
அவசரகாலச் சட்டம், பயங்கரவாதச்
சட்டம் ஆகிய இரண் டும் உதாரணங்கள். இவை மக்களின் மிக மிக அடிப்படை யான
உரிமைகளையே பறித்தெடுக்கும் விதமாக அரசுகளால் அடிக்கடி
நடைமுறைப்படுத்தப்படுவன.
நியாயமான காரணங்கள் என்று நம்பத் தகுந்த சில
போர்வை களைப் போர்த்திக்கொண்டு, சட்டத்தையும் ஒழுங்கையும்
நிலைநாட்டுவதற்கு எனக் கூறிக்கொண்டு, அரச, இராணுவ அதிகாரிகள் மக்களின்
உரிமைகளை மீறுவதற்கு வகைசெய் யும் இடம்கொடுக்கும் சட்ட விதிகளைக் கொண்டு
வரு வது இலங்கை ஆட்சியாளருக்கு அப்போதும், இப்போதும், எப் போதுமே கைவந்த
கலை.
குறிப்பாகச் சொல்வதானால், போர்க்காலங்களில் மட்டு மல்லாது சமாதான
வேளைகளில் கூட, சட்டத்துக்குப் புறம் பாக சட்டத்தைப் பொருட்படுத்தாது
தமிழர்களின் மனித உரிமைகளை நசுக்குவதில் இந்த நாட்டு ஆட்சியாளர்களுக்கு
ஒரு "தனித்திறமை' உண்டு.
ஆனால் மனித உரிமைகள் மீறப்படுவது குறித்து அவற் றைப் பேணும் அமைப்புகள்,
வெளிநாடுகள் இலங்கை மீது குற்றச்சாட்டுகளை வைத்தால் அவை பொய்யானவை என்று
தட்டிக்கழித்து விடுவது பல வருடங்களாகக் கடைப்பிடிக் கப்பட்டு வந்த
தந்திரமான உத்தி.
இப்போதெல்லாம், இலங்கை அரசினால் அவ்வாறு தற் காத்துக்
கொள்ளமுடியாத, இக்கட்டான, நெருக்கடியான, சோதனையான காலமாக மாறிவருகிறது.
இலங்கையில் மனித உரிமை மீறல்கள் மிக மோசமான நிலையை எட்டியுள்ளதாகக் கூறி,
கடந்த மாதம் 27ஆம் திகதி ஐரோப்பிய ஒன்றியம் ஐ.நாவின் மனித உரிமைக்
கவுன்ஸில் கூட்டத்தில் பிரேரணை ஒன்றைக் கொண்டுவர இருந்தது.
அரசாங்கம் இது விடயத்தில் அதிக அக்கறை எடுத்து, மனித உரிமை மீறல்களைக்
குறைப்பதற்கு நடவடிக்கை மேற் கொள்ள உள்ளதாக நம்பவைத்து, அந்தப் பிரேரணையை
மூன்று மாதங்களுக்கு ஒத்திவைக்க ஐரோப்பிய ஒன்றிய நாடு களை இணங்க
வைத்துவிட்டது.
மனித உரிமை மீறல்களைத் தடுப்பத்தில், ஐரோப்பிய
ஒன்றியத்திடம் அரசு சொன்னது தப்பாது நடைபெறுமா என்ப தனைப் பொறுத்திருந்து
பார்க்கவேண்டியதில்லை.
இங்கு மனித உரிமை மீறல்கள் அதிகரித்து வருவதை, மோசமுற்றுச் செல்வதை உரிய
படிமுறைகள், அவதானிப்பு கள், ஊடாகக் கண்டறிந்த பிரிட்டன், இலங்கையை (வெள்
ளைப் பட்டியல் எனக் கூறப்படும்) பாதுகாப்பான நாடுகள் அந்தஸ்தில் இருந்து
நீக்கப்போவதாக அறிவித்துள்ளது.
இந்த ஏற்பாட்டையும் தடுத்துநிறுத்துவதற்கு
தனது வழமையான தகிடு தத்தங்களை கையாள அரசு முனைந்தா லும் ஆச்சரியம் இல்லை.
எப்படியோ, எல்லோரையும் எல்லாக் காலமும் ஏமாற்ற முடியாது. உண்மையை
மூழ்கடித்துவிடலாம் என்று நினைத்து விடக்கூடாது!
ஆயுத மோதல்களில் சிறுவர்களைப் பயன்படுத்தல் சம் பந்தமான ஐ.நாவின. விசேட
தொடர்பாளர் அலன் றொக் வெளியிட்ட தகவலை அரசாங்கப் படையினரின் ஆதரவு டன்
கருணா குழுவினர் சிறுவர்களைக் கடத்தி மோதல்களில் ஈடுபடுத்துவதாகத்
தெரிவித்த குற்றச்சாட்டை பொய்யா னது என்று கண்டித்திருக்கிறது மஹிந்த
அரசு. ஆனால் அமெரிக்காவின் மனித உரிமைகள் அவதானிப்பு நிலையம் (Human
Rights Watch) என்ற அமைப்பு அலன் றொக் வெளியிட்ட கருத்தை நிரூபிக்கும்
சான்றுகள் தன்னி டமும் உள்ளதாக அடித்துக்கூறியிருக்கிறது.
இலங்கையில் மனித
உரிமை மீறல் விவகாரம் மேன் மேலும் பூதாகரமாகும் என்பதற்கு அரசின்
சமீபத்திய ஏற்பாடு கள் கட்டியம் கூறுகின்றன என்பது மிகவும் தெளிவு.
மக்களின் சிவில் உரிமைகள் மீறப்படுவது ஒருபுறமிருக்க ஐக்கியநாடுகள்
சபையின் சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் பிரகடனத்தில்
உள்ளடக்கப்பட்டிருக்கும் தேசிய இனங்களின் சிறப்புரிமையான சுயநிர்ணய உரிமை
குறித்து ஏறெடுத்துப் பார்க்கவும் பின்னிற்கிறது இந்த நாட்டு அரசு.
ஐ.நாவின் சிவில் மற்றும் அரசியல் பிரகடனம் சுயநிர்ணய உரிமை, தேசிய
சிறப்புரிமை என்று வகுத்துள்ளது. ஆனால் தமிழர்கள் தமக்குரிய அந்த உரிமையை
சுயநிர்ணய உரி மையை அனுபவிக்க வகை செய்வது என்ற சொற்றொடரே இலங்கை அரசுக்கு
வேம்பாய்க் கசக்கிறது.
இதுவிடயத்தில் சர்வதேசம் தனது அக்கறையை கவ னத்தை இனியாவது செலுத்தவேண்டியது இன்றியமையாதது என்பதனை உணர்ந்து கொள்ளவேண்டிய காலம் இது.
|