|
பயங்கரவாத தடைச் சட்டத்துடன் முற்றாக செயலிழந்து போகும் போர் நிறுத்த உடன்படிக்கை பயங்கரவாதத் தடைச் சட்டம் மீண்டும் அமுலுக்கு வந்துள்ளது. போர் நிறுத்த உடன்பாடு கைச்சாத்திடப்பட்டதைத் தொடர்ந்து இல்லாது போன அவசரகாலச் சட்டமும் பயங்கரவாதத் தடைச் சட்டமும் தற்போது மீண்டும் அமுலுக்கு வந்துள்ளன.
இதன் மூலம் போர் நிறுத்த உடன்பாடு முற்று முழுதாகவே செயலிழந்து போயுள்ளது.
நாட்டில் இயல்பு நிலையை உருவாக்கி சுமுகமானதொரு சூழ்நிலையை ஏற்படுத்தி
இனப்பிரச்சினைக்கு சமாதானத் தீர்வொன்றைக் காண்பதற்காகவே போர் நிறுத்த
உடன்பாடு கைச்சாத்திடப்பட்டது. அமைதியும் சுமுக நிலையும் ஏற்படுவதற்கு
தடைகளாயிருந்த அவசரகாலச் சட்டமும் பயங்கரவாதத் தடைச் சட்டமும்
நீக்கப்பட்டே இவற்றுக்குப் பதிலாக போர் நிறுத்த உடன்பாடு அமுலுக்கு கொண்டு
வரப்பட்டது.
ஆனால், தற்போது அவசரகாலச் சட்டமும் பயங்கரவாதத் தடைச் சட்டமும்
அமுலிலுள்ளதன் மூலம் போர் நிறுத்த உடன்பாடு முற்று முழுவதாகவே செயலிழந்து
போயுள்ளதால் சமாதான முயற்சிகளுக்கு இனி சந்தர்ப்பமே இல்லாது போயுள்ளது.
ஒருபுறம் போரை நடத்திக் கொண்டு மறுபுறம் சமாதான முயற்சிகள் பற்றி இந்த
அரசு பேசுகிறது. வடக்கு, கிழக்கில் தினமும் கொலைகள், ஆட்கடத்தல்கள்,
காணாமல்போதலென மனித உரிமை மீறல் உச்சக் கட்டத்தை அடைந்துள்ளது. அப்பாவிப்
பொதுமக்களே தினமும் இலக்கு வைத்து தாக்கப்படுகின்றனர்.
வீதிகளை மூடி வைத்து மிகப்பெரும் மனித அவலங்களை ஏற்படுத்திக் கொண்டு இந்த
அரசு மனிதாபிமானம் பற்றி பேசுகிறது. யாழ். குடா நாட்டுக்கான தரைவழிப் பாதை
(ஏ-9) மூடப்பட்டதால் ஆறு இலட்சம் மக்களும், வாகரைக்கான தரைவழிப் பாதை
(ஏ-15) மூடப்பட்டதால் 60,000 இற்கும் மேற்பட்ட மக்களும் கடந்த பல
மாதங்களாக மிகப்பெரும் அவலங்களைச் சந்திக்கின்றனர்.
ஆனாலும், இந்த மனிதப் பேரவலத்தை தடுத்து நிறுத்தும் திராணியின்றி சர்வதேச
சமூகமிருப்பதால் அப்பாவி மக்களுக்கெதிராக இலங்கை அரசு தொடர்ந்தும்
அவலங்களைத் திணித்து வருகிறது. இவற்றிலிருந்து விடுபட முடியாது தமிழ்
மக்கள் தினமும் மிகப்பெரும் வேதனைகளை அனுபவித்து வருகின்றனர்.
வடக்கு, கிழக்கில் அப்பாவி மக்களுக்கெதிராக கொடூர யுத்தத்தை
கட்டவிழ்த்துக் கொண்டு அந்த யுத்தத்தை தீவிரப்படுத்தும் வகையில்
சட்டங்களையும் அமுல்படுத்தி வருவதால் மிகப்பெரும் அவலங்களுக்குள்
சிக்கியுள்ள மக்களால் இவற்றுக்குள்ளிலிருந்து மீள முடியாதுள்ளது.
அரசினதும் படையினரதும் அண்மைக்கால செயற்பாடுகளால் போர் நிறுத்த உடன்பாடு
படிப்படியாகச் செயலிழந்து விட்டது. கண்காணிப்புக் குழுவும் அதிகாரமற்றதொரு
குழுவாகவே நடமாடுகிறது. நோர்வே அனுசரணையாளர்களும் தங்கள் பணிகளிலிருந்து
விலகிவிடும் காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது.
சர்வதேச சமூகத்தினதும் இணைத்தலைமை நாடுகளினதும் பூரண ஆதரவுடனேயே
நோர்வேயும் இங்கு சமாதான முயற்சிகளை ஆரம்பித்தது. இந்த முயற்சி
ஆரம்பமானபோது எல்லாமே மிகவும் வலுவாகவேயிருந்தன. ஆனால், இன்றோ அனைத்துமே
செயலிழந்துவிட்டதால் நோர்வேயின் பணியும் முடிவுக்கு வருகிறது.
நோர்வேயின் அனுசரணைக்கு சர்வதேச சமூகம் வழங்கிய ஆதரவு போதாத காரணத்தாலேயே
இன்று இலங்கையில் நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளது. இலங்கை அரசு மீது கடும்
அழுத்தங்களைப் பிரயோகிக்கும் நிலையை சர்வதேச சமூகம் இழந்துள்ளதே நிலைமை
மிக மோசமடையக் காரணமாயுள்ளதுடன் இலங்கை அரசின் கடும் போக்கு
நடவடிக்கைக்கும் காரணமாயுள்ளது.
இலங்கையைப் பொறுத்தவரை தற்போதைய நிலையில் போரை நடத்தியவாறு தீர்வு
யோசனையொன்றை திணித்து விடுவதே நோக்கமாயுள்ளது. எல்லா வழிகளிலும் தமிழ்
மக்கள் மீது கடுமையான அழுத்தங்களைப் பிரயோகித்தவாறு திணிக்கும் தீர்வை
அவர்கள் எப்படியும் ஏற்றுக் கொண்டு விடுவார்களென்ற நினைப்பும்
அரசிடமுள்ளது.
முன்னெப்போதும் இல்லாதவாறு இனவாதம் நாட்டில் தலை விரித்தாடுகிறது. தமிழ்
மக்களை முற்று முழுதாக அழித்து ஒழித்து விட வேண்டுமென்பதில் இனவாதிகள்
முழு மூச்சாயுள்ளனர். வெளியுலகத்திற்காக சில சலுகைகளை காட்டியவாறு
தமிழர்களை அழிப்பதில் அரசு தீவிரம் காட்டுகிறது.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை மீண்டும் அறிமுகப்படுத்தியதன் மூலம் மனித
உரிமை மீறல்கள் உச்சக் கட்டத்தை அடையப் போகிறது. படையினருக்கும்
பொலிஸாருக்கும் மிகப்பெரும் அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதனால்
விடுதலைப் புலிகளுக்கு எதுவித பாதிப்பும் ஏற்படப் போவதில்லை. இனி
அப்பாவித் தமிழ் மக்களே முழுமையாக இலக்கு வைக்கப்படவுள்ளனர்.
இந்தச் சட்டத்தின் மூலம் கைதுகள், கடத்தல்கள், காணாமல்போதல் வெகுவாக
அதிகரிக்கப்படவுள்ளதுடன் தற்போதைய மர்மக் கொலைகளும் தீவிரமடையப் போகின்றன.
இதனால் தமிழ் மக்கள் முழுமையாக படையினரால் இலக்கு வைக்கப்படும் அபாய
நிலைமை தோன்றியுள்ளது.
தமிழ் பகுதிகளில் தினமும் பாரிய இராணுவ நடவடிக்கைகள்
முடுக்கிவிடப்பட்டுள்ளன. அவர்களை சொந்த இடங்களிலிருந்து விரட்டியடித்து
அகதிகளாக்கும் நடவடிக்கைகள் தினமும் நடைபெறுகின்றன. இந்தப் படை
நடவடிக்கைகளால் தமிழ் பகுதிகள் சுடுகாடாக்கப்பட்டு வருவதுடன் தமிழ் மக்கள்
தினமும் தங்கள் பாரம்பரிய பிரதேசங்களை இழந்தும் வருகின்றனர்.
போர் நிறுத்தம் எனக் கூறிக் கொண்டாலும் அது இன்று ஏட்டளவில்
மாத்திரமேயுள்ளது. யுத்தமே முழு அளவில் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் பாரிய படை நடவடிக்கைகள் மூலம்
அங்குள்ள மக்கள் தினமும் மாறி, மாறி விரட்டப்பட்டு அழிக்கப்படுகின்றனர்.
புலிகள் நடத்தும் தாக்குதலுக்கான பதில் தாக்குதல்களில் அப்பாவி மக்கள்
பாதிக்கப்படுவது தவிர்க்க முடியாதெனக் கூறிக் கொண்டு அப்பாவி மக்கள்
இலக்கு வைத்து அழிக்கப்படுகின்றனர். வடக்கு-கிழக்கு என்றுமே
யுத்தத்திற்குரியதொரு பகுதியென்றும் அங்கு அழிவுகள் நிச்சயம்
இடம்பெறத்தான் செய்யுமெனக் கூறும் அரசும் அதன் பிரசார சாதனங்களும்,
தெற்கில் சிறு குண்டு வெடிப்பு நடந்து விட்டாலும் அது மிகப் பெரும்
பயங்கரவாதமென்கிறது.
புதிய புதிய சட்டங்களை அமுல்படுத்தி தமிழ் மக்களுக்கெதிராக வன்முறைகளையும்
படுகொலைகளையும் கட்டவிழ்த்து விட்டு அவற்றுக்கெல்லாம் இந்த அரசு நியாயம்
கற்பிக்கிறது. எந்தச் சட்டம் புதிதாக நடைமுறைக்கு வந்தாலும் அது தமிழ்
மக்களை அழித்தொழிக்க முனையும் சட்டங்களாகவேயுள்ளன.
பல லட்சம் மக்களுக்கான பிரதான விநியோகப் பாதை கடந்த நான்கு மாதங்களாக
மூடப்பட்டுக் கிடக்கிறது. அங்குள்ள ஆறு லட்சம் மக்கள் பட்டினிச் சாவை
எதிர்நோக்கியுள்ளனர். ஆனால், அங்குள்ள நாற்பதாயிரத்துக்கும் மேற்பட்ட
படைகளுக்கும் மிகத் தாராளமாக உணவு விநியோகம் நடைபெறுகிறது.
அந்தப் பகுதிக்கான பாதையை திறந்து அங்கு ஏற்பட்டுள்ள மிகப் பெரும் மனித
அவலத்தை உடனடியாக முடிவுக்கு கொண்டு வருமாறு அழுத்தம் கொடுக்குமளவிற்கு
சர்வதேச சமூகத்திற்கு இன்று திராணியில்லை. இலங்கை அரசின் கொடூரச்
செயல்களுக்கு துணை போகிறது.
இந்த நிலையில் சமாதான முயற்சிகளை மீள ஆரம்பிக்குமாறும் யுத்தத்தை
நிறுத்துமாறும் எப்படி இந்த சர்வதேச சமூகத்தால் இலங்கை அரசுக்கு அழுத்தம்
கொடுக்க முடியும். எப்படித்தான் நோர்வேயின் அனுசரணை முயற்சிக்கு ஆதரவையும்
வழங்க முடியும்.
பயங்கரவாதத் தடைச்சட்டத்தை அரசு மீண்டும் அமுல்படுத்தியதன் மூலம்
போர்நிறுத்த உடன்பாட்டை அரசு மீறுவதாக கண்காணிப்புக்குழு கூறியுள்ள
அதேநேரம் , இது குறித்து விளக்கமளிக்குமாறும் அரசிடம் அது கேட்டிருந்தது.
ஆனால் கண்காணிப்புக் குழுவின் இந்தக் கோரிக்கையை நிராகரித்துள்ள அரசு,
இலங்கையின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்பும் அருகதை கண்காணிப்புக்
குழுவுக்கு இல்லையெனக் கூறி, அவர்களுக்கு இது குறித்து விளக்கமளிக்கவும்
அரசு மறுத்துவிட்டது.
இதன் மூலம், தங்களைக் கட்டுப்படுத்த முயலும் எதனையும் தாங்கள் ஒரு போதும்
ஏற்றுக் கொள்ளப் போவதில்லையென்பதை அரசு தெளிவாக உணர்த்தியுள்ளதுடன், போர்
நிறுத்த உடன் பாடு மட்டுமல்ல ,அனைத்து உடன் பாடுகளையும் வீசியெறிய தாங்கள்
எப்போதும் தயாராயிருப்பதையும் தெளிவுபடுத்தியுள்ளது.
அத்துடன், முக்கிய சந்திப்புக்களை நடத்துவதற்காக இலங்கை வந்திருந்த
நோர்வேயின் விஷேட பிரதிநிதி ஹான்சன் பௌர் ,வன்னி செல்வதற்கு புறப்பட்ட
போது அவரை தடுத்து நிறுத்தி நான்கு, ஐந்து நாட்கள் காக்க வைத்த பின்னரே
,வன்னிக்குச் செல்ல அனுமதி வழங்கியது. இதன் மூலம் நோர்வே அனுசரணையாளர்கள்
மீது அரசு தனது கடுமையான அழுத்தத்தை பிரயோகித்துள்ளது.
வடக்கு - கிழக்கில் தோன்றியுள்ள மனிதாபிமானப் பிரச்சினை குறித்து முழு
உலகமும் கவலை கொண்டிருக்கையில் இதனை வாய்ப்பாகப்பயன் படுத்தி பாரிய
படைநடவடிக்கையை மேற்கொள்ள அரசு தொடர்ந்தும் முயன்று வருகிறது. வடக்கில்
ஆனையிறவையும் கிழக்கில் வாகரையையும் கைப்பற்றும் முயற்சியை அரசும்
படைத்தரப்பும் இது வரை கைவிடவில்லை.
வாகரைப் பகுதியில் தினமும் படை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதும் புலிகள்
அதற்கு கடும் பதிலடி கொடுப்பதும் வழமையாகிவிட்டது. இவ்விரு பகுதிகளையும்
கைப்பற்றுவது சாத்திய மற்றதென்பதையும் அரசு உணர்ந்துள்ள போதும் அங்கு
பெரும் மனிதாபிமானப் பிரச்சினையை ஏற்படுத்தி அதன் மூலம் இவ்வாறானதொரு படை
நடவடிக்கையை மேற்கொண்டுவிட முடியுமெனவும் கருதுகிறது.
இந்த நிலையில் மனிதப் பேரவலத்தை தடுக்கவும் மீண்டும் இரு
தரப்புக்குமிடையில் சந்திப்புக்களை ஏற்படுத்தவும் ஹான்சன் பௌர் இம் முறை
இலங்கையில் மேற்கொண்ட முயற்சியும் வெற்றியளிக்கவில்லை. இரு தரப்பும் மாறி
மாறித் தெரிவித்த குற்றச்சாட்டுக்களை கேட்டுச் செல்கிறாரே தவிர ,அவரால்
ஆக்கபூர்வமாக எதனையும் செய்ய முடியவில்லை.
அத்துடன், மீண்டும் இரு தரப்புக்குமிடையில் மிக மோசமான சமர்வெடிக்கும்
போது வருகை தந்து இரு தரப்பையும் சந்திப்பதை விட தற்போதைய நிலையில்
அவர்களால் வேறெதனையும் செய்ய முடியாதென்பதே உண்மை.
விதுரன்
|