|
தமிழரின் சுயநிர்ணய உரிமைக் கோட்பாடு மீது உலகின் கவனத்தை ஈர்க்கச் செய்வோம் ஈழத்தமிழினத்தின் வரலாற்றை நாம் பின்னோக்கிப் பார்ப்போமாயின் ஈழத்தமிழன் ஏமாந்த வரலாற்றையும் ஏமாற்றப்பட்ட வரலாற்றையுமே நாம் காண்கிறோம். இந்நிலை மேலும் தொடருமாயின் எம் இனம் இந்நாட்டில் பூண்டோடு அழிக்கப்படுவது உறுதி. எம்மை வழி நடத்திய தலைவர்கள் தடம் புரண்டது உண்மை என்பதை ஏற்கின்ற நாம் அதே தவறினைத் தொடர்ந்து செய்வோமாயின் அவர்களுக்கும் எங்களுக்குமிடையே எதுவித வேறுபாடுமில்லை. எமது முன்னைய தலைவர்கள் மீது பழி சுமத்துகின்ற நாம் அதே தவறினைச் செய்யின் எம் வழித்தோன்றல்கள் எம்மீது வசைபாடுவது உறுதி. வரலாறும் எம்மீது பழிதூற்றுவதையும் நாம் தவிர்க்க முடியாது.
1947 ஆகஸ்ட் 15 இல் இந்தியாவுக்கு விடுதலை கிடைத்த போது வெள்ளையன் வெளியேறுகிறான். ஆனால், வடக்கன் ஆட்சிக்கு வருகிறான். ஆபத்துக்கள் எமக்குச் சூழ இருக்கின்றன என்று பகுத்தறிவுப் பகலவன் பெரியார் முழங்கினார். ஆனால், அவருடைய சிந்தனைக்கும் தொலை நோக்கிற்கும் தமிழினம் ஈடு கொடுக்க முடியவில்லை. இதன் விளைவு தமிழகம் டெல்லி ஆட்சிக்கு - வடக்கன் வல்லாண்மைக்கு அடி பணிந்து செயலற்றுக் கிடக்கின்றது. இந்தியாவில் நிலவுவது இணைப்பாட்சியின் சாயல் மட்டும் தான். அத்தியாயம் பிரிவு 356 ஐ வைத்துக் கொண்டு எந்த மாநில அரசையும் கலைக்கின்ற உரிமை இந்தியாவின் மத்திய அரசுக்கு உண்டு. இதை எண்ணி அஞ்சுகின்ற மாநில அரசுகளின் முதல்வர்கள், டெல்லிக்கு அஞ்சி செயலற்றுக் கிடக்கிறார்கள். தமிழகத்தை ஆண்ட ஆளுகின்ற முதல்வர்களும் இந்த சட்டத்திற்கு அஞ்சி அஞ்சிச் சாகின்ற கோழைகளாக விளங்குகிறார்கள். இந்நிலையில் தான் தமிழகம் தன்னையும் காப்பாற்ற முடியாது, எமக்கும் குரலெழுப்பவும் முடியாது தத்தளிக்கிறது. இந்தியா விடுதலை பெற்ற வேளையில் தமிழகம் தன்னை விடுவித்து ஒரு சுதந்திரம் பெற்ற நாடாக மலர்ந்திருக்க முடியும். பாகிஸ்தானை உருவாக்கிய முகம்மது அலி ஜின்னாவோ தொலைநோக்குச் சிந்தனை உடையவராக இருந்தமையால் வெள்ளையனைப் பார்த்து "நீ வெளியேறு ஆனால், நாட்டைப்பிரித்த பின்பு வெளியேறு" என்று கூறினார். "Quit India alright but divide & quit India" என்று முழங்கினார். ஈழத்தமிழர்கள் இந்நிகழ்ச்சியிலிருந்து படிக்க வேண்டிய பாடமென்ன? தமிழகத் தலைவர்கள் செய்த தவறினை, எம்மை வழிநடத்திய தலைவர்கள் இங்கும் செய்தார்கள். முகம்மது அலி ஜின்னாவுக்கு இருந்த தொலை நோக்குச் சிந்தனை எம் முன்னைய தலைவர்களிடம் இருக்கவில்லை. இங்கு வெள்ளையன் வெளியேறிய போது, "நாட்டைப் பிரித்த பின்பு வெளியேறு" என்று எம்மை வழிநடத்துகின்ற தலைவர்கள் குரலெழுப்பி இருந்தால் இன்று, எமக்கு இந்த அழிவு நிலை ஏற்பட்டிருக்காது. தொலை நோக்குச் சிந்தனை அல்லது - ஆவது அறிதல் என்று வள்ளுவர் குறிக்கும் அரசியல் நுண்ணறிவு எம் தலைவர்களிடம் இல்லாததால் இந் இழி நிலைக்கு நாம் ஆளாகியுள்ளோம். வள்ளுவர் குறிக்கும் "ஆவது அறிதல்" எனும் சொற்றொடரை ஆங்கிலத்தில் "The Concept of Futurelogy" என்று கூறுவர். முகம்மது அலி ஜின்னா பாகிஸ்தான் வேண்டும் என்று ஓங்கிக் குரலெழுப்பிய போது காந்தியும் நேருவும் "பெருமக்கள் அவர்கள் அனைத்திந்திய சிந்தனையுடையவர்கள். அவர்களிடம் குறுகிய நோக்கில்லை" என்று செய்தியாளர் கூறிய போது ஜின்னா தனக்கே உரிய புன்னகையை வருவித்துக் கொண்டு கூறினார். நீங்கள் கூறுவது போல் காந்தியும் நேருவும் பெருமக்கள் தான். அவர்களிடம் அனைத்திந்திய சிந்தனை உண்டு. அவர்களிடம் குறுகிய நோக்கம் இல்லை என்பதை நான் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால், என்றோ ஒரு நாள் சாகப்போகின்ற அவர்களிடம் சாகாது நிலைத்து வாழவேண்டிய என் சமுதாயத்தை நான் எவ்வாறு அவர்களிடம் ஒப்படைக்க முடியுமென்று கேட்டார். அன்று ஜின்னா எழுப்பிய கேள்வி எவ்வளவு பொருள் பொதிந்த கேள்வியாகும். ஐம்பத்துக்கு ஐம்பது என்ற சமப் பிரதிநிதித்துவத்தைக் கேட்டிருந்த தமிழ் காங்கிரஸின் தலைவர் ஜீ.ஜீ. பொன்னம்பலம் அவர்கள் "Soulbary has come to bury the soul of the Tamils" (தமிழினத்தின் ஆன்மாவைப் புதைக்க வந்த சோல்பெரியை) நாம் நம்ப முடியாது என்று குரலெழுப்பிய பொன்னம்பலம் அவர்கள் சோல்பெரி ஒற்றைக் கண் உடையவராக இருந்ததனால், "ஒற்றைக் கண்ணன் தந்த ஒற்றையாட்சி தமிழினத்தை ஒழித்துக் கட்டுமென்று" குரலெழுப்பிய பொன்னம்பலம் அவர்கள் எப்படித்தான் டொன்ஸ்டீவன் சேனநாயக்கா என்ற மீசைக்கார சேனநாயக்கா விரித்த மந்திரிப் பதவி என்ற மாயவலையில் சிக்கி தன்னையும் தமிழினத்தையும் அழிப்பதற்கு துணை போனாரோ என்பது எம்மை வியப்பில் ஆழ்த்துகின்ற நிகழ்ச்சியாகும். ஜீ.ஜீ. பொன்னம்பலத்துக்கு அடுத்த நிலையில் இருந்த தந்தை செல்வா கூட "வெள்ளையனே வெளியேறு ஆனால் நாட்டைப் பிரித்த பின்பு வெளியேறு" என்று குரலெழுப்பியதற்கு சான்றில்லை. இது நிற்க தமிழினத்தின் வரலாற்றை மீண்டும் பின்னோக்கி பார்ப்போமாயின் பல கசப்பான உண்மைகளை நாம் உணரத்தக்கதாக இருக்கும். 1904 ஆம் ஆண்டு கொழும்பு ஆனந்தக் கல்லூரியில் உரை நிகழ்த்திய சேர்.பொன். இராமநாதன் "சிங்கள நாக்குகள் சிங்களத்தைப் பேசாவிட்டால் சிங்களத்தை யார் பேசுவது" "If Singala lips will not speak the singala Language who is there to Speak it" என்று குரலெழுப்பிய இராமநாதன் அவர்கள், 1915 இல் முதலாவது உலகப்போர் நடைபெற்ற வேளையில் நீர்மூழ்கிக் கப்பலில் இலண்டன் சென்று சிங்கள முஸ்லிம் கலவரத்தினால் சிங்களத் தலைவர்களுக்கு ஏற்பட்ட அழிவைத் தடுக்கக் குரல் எழுப்பி வெற்றியீட்டி வருகை தந்த போது அவரை தேரிலேற்றி சிங்களத் தலைவர்கள் தாம் குதிரைகளாக மாறி அவரை அவரது இல்லத்திற்கு இழுந்து வந்த காட்சி எம் நினைவுக்கு வருகிறது. சிங்கள இனத்தின் மிக நெருக்கடியான காலக்கட்டத்தில் இராமநாதன் அவர்களுக்கு உதவினார். இதனை சிங்களத் தலைவர்கள் பின்வரும் முறையில் குறிப்பிட்டுள்ளனர். ("In the dire hour of our need the valiant son of the north came to our rescue, if not for him we may not be among the living). "எமது மிக நெருக்கடியான காலத்தில் வடக்கிலிருந்து வந்த மாவீரன் எம்மைக் காப்பாற்றினார். அவர் இல்லாவிடின் நாம் முற்றாக அழித்து ஒழிக்கப்பட்டிருப்போம்" என்ற கூற்றினை நாம் இங்கு நினைவு கூருகிறோம். சேர். பொன். இராமநாதன் உவந்து போற்றிய சிங்கள இனம் 1920 இன் தொடக்கத்திலேயே சிங்களத் தலைமைப் பீடத்தின் செயற்பாட்டில் ஐயுறவு கொண்டு அவர்களின் கருத்திற்கு மாறுபட்ட முறையில் இராமநாதன் கருத்துத் தெரிவித்ததற்காக அவரின் சிலையை கடலில் தூக்கியெறிய வேண்டுமென்று கூறியதாக 1923 சிங்களவர்களால் ஏமாற்றப்பட்ட நிலையில் "இலங்கைத் தமிழர் அவையைத் தோற்றுவித்த அவரின் தம்பி சேர். பொன். அருணாசலம் 1923 இல் தனது உணர்ச்சிமிக்க ஆழம் மிக்க உரையில் குறிப்பிட்டுள்ளதை நாம் கவனத்தில் எடுப்பது நலம். "The statue that was built in greatful memory, may be flung into the sea" சிங்களவருக்கு செய்த உதவிக்காக நன்றியுணர்வுடன் செய்யப்பட்ட சேர்.பொன். இராமநாதன் சிலையை கடலில் தூக்கி எறியப்பட வேண்டும்" என்ற கருத்து சில சிங்கள வட்டாரங்களில் கூறப்படுகின்றது என்று தன் உரையில் குறிப்பிட்டுள்ளார். அருணாசலம் அவர்கள் இலங்கைத் தமிழ் அவையை தோற்றுவித்த நிலையில் தேசியம் என்ற பெயரிலோ அல்லது அனைத்துலக கோட்பாடு என்ற பெயரிலோ தமிழினத்தை பூண்டோடு அழிக்கின்ற நிகழ்ச்சி நடைபெறுகின்றது என்றும் இதை நாம் எதிர்க்க முயல்கின்ற போது சிங்கள வெறியர்களைக் கொண்டு தம்மைத் தாக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். ஆனால், இந்த வெறியர்களின் கொட்டத்தை தான் அடக்குவேன் என்று தன் உரையில் குறிப்பிட்டுள்ளார். தமிழினத்தின் சாப்கேடு, இவ்விதம் குரல் எழுப்பிய சேர்.பொன். அருணாசலம் தமிழ் அவையைத் தோற்றுவித்த ஓர் ஆண்டு முடிவதற்கு முன்பு உயிர் துறக்கிறார். ஆனால் இவருடைய அண்ணா சேர். பொன்.இராமநாதன் தனது 79 ஆவது அகவை வரை அதாவது நவம்பர் 26.1930 வரை இராமநாதனுடைய குரல் சட்டசபையில் ஒலிக்கிறது. எதிர்பாராத காற்றின் வீச்சினால் தற்செயலாக இலங்கையின் கடற்கரையோரத்தில் வந்தடைந்த சிங்களவர்கள் கொடிய நச்சு ஊர்வனவாகிய பாம்பையும் தேளையும் கொல்லத் தயங்குகின்றவர்கள். "இந்திய வம்சாவளி மக்களை எப்படி வெளியேறு' என்று கூற முடியும் என்று கோபம் பொங்க கேட்கின்ற கேள்வியை சட்ட மன்றப் பதிவேட்டில் காணலாம். அது மட்டுமல்ல புத்தளத்திற்கும் அனுராதபுரத்திற்குமிடையிலுள்ள நொச்சிகம என்ற பகுதியில் சிங்களவர்களை குடியேற்ற சிங்கள அரசு எடுக்கின்ற முயற்சியை இராமநாதன் கடுமையாக எதிர்த்ததையும் சட்ட மன்றப்பதிவேடு சான்று பகருகிறது. இன்று நொச்சிகம என்ற பகுதி முழுச்சிங்கள மயமாகிவிட்டது. ஆனால் இராமநாதன் வாழ்ந்த காலத்தில் நொச்சிகம தமிழ்ப் பகுதியாக விளங்கியதனால் தான் இராமநாதன் அதில் சிங்கள குடியேற்றம் ஏற்பட்டு தமிழர் மண் பறிபோகக் கூடாது எனக் குரலெழுப்பியதையும் காண்கிறோம். சேர்.பொன். இராமநாதன் இன அடிப்படையிலமைந்த பிரதிநிதித்துவம் நீக்கப்பட்டு மாகாண அடிப்படையில் தொகுதிகளை உருவாக்குவதற்கு வழிவகுக்கும் டொனமூர் அரசியல் சட்டத்தை கடுமையாக எதிர்ப்பதை சட்டசபை பதிவேடுகள் சான்று கூறுகின்றன. "Donoghmore means Tamils no more, We are handing over power to the vulgar mob if we accept this consitution without due safeguard it will be a deathnell to the tamils"."(டொனமூர் எனில் இனிமேல் தமிழர் இல்லை நாம் வெறிகொண்ட கும்பலுக்கு ஆட்சியை ஒப்படைக்கிறோம். போதிய பாதுகாப்பற்ற நிலையில் இச்சட்டத்தை நாம் ஏற்போமாயின் அது தமிழினத்தின் சாவோலையாக அமையும்" என எச்சரித்தார். இவருடைய எச்சரிப்பை சிங்களவர் மட்டும் எள்ளி நகையாடவில்லை. மாறாக தமிழ்த் தலைவர்கள் என்று சொல்லப்பட்ட பலர் இராமநாதனுடைய எச்சரிப்பை அறளை பேர்ந்த கிழவனின் அலறல் என்று அவருடைய தொலைநோக்கு சிந்தனையை பொருட்படுத்த மறுத்தனர். இவ்வேளையிற்றான் சேர். பொன்.இராமநாதன் திருவாசகத்தை மேற்கோள் காட்டி "முத்திநெறி அறியாத மூர்க்கரொடு முயல்வோனே" என்று கண் கலங்கிக் கதறினார். இவரின் இறுதிக்கால இக்கூட்டம் யாழ். இந்துக் கல்லூரியில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இவர் இலண்டன் சென்று டொனமூர் சட்டத்தை எதிர்த்து பிரித்தானிய அரசிடம் அளித்த அறிக்கையை பிரித்தானிய அரசு ஏற்க மறுத்த நிலையில் மனச்சோர்வோடு இராமநாதன் இலங்கை திரும்பினார். ஆனால், இவ்வறிக்கையை அறிஞர் உலகம் "The Constitutional Bible of the Tamils" (தமிழரின் அரசியல் யாப்பு விவிலியம் என்று புகழ்ந்து பேசுகின்றனர்.) பிற்காலத்தில் அடங்காத்தமிழனாக விளங்கி ஈழம் தான் எமது இறுதித் தீர்வு எனக் கூறிய சுந்தரலிங்கம் 1936 இல் "Pan sinhala Cabnet" என்று கூறுமளவிற்கு தனியே சிங்களவரைக் கொண்ட அமைச்சரவையைத் தன் கணித அறிவைக் கொண்டு உருவாக்கிக் கொடுத்தார். இதற்காக அவர் பின்பு கண்ணீர் விட்டது உண்மை. ஆனால், வரலாறு இவரை மன்னிக்குமோ என்பது பெருங்கேள்விக்குறி. ஒப்பந்தங்கள் ஒப்பேறவில்லை இனி சிங்களவரோடு தமிழர் செய்த ஒப்பந்தங்கள் எந்நிலைக்கு ஆளாகியதென்பதை மிக சுருக்கிப் பார்ப்போம். 1926 இல் யாழ்ப்பாணத்தில் முன்னர் சட்டசபை அவைத்தலைவர் சேர்.வைத்திலிங்கம் துரைசாமியின் இல்லத்தை சிங்களத் தமிழ் ஒப்பந்தம் (மகேந்திர ஒப்பந்தம்) செய்யப்பட்டது. அது காலப்போக்கில் கிழித்தெறியப்பட்டது. பின்பு இலங்கை விடுதலை பெற்ற நிலையில் இணைப்பாட்சியில் இனிய வாழ்வு காண்போம் என்று கூறிய தந்தை செல்வா அவர்கள் இரத்தக்களரியைத் தவிர்க்கும் முறையில் மிகக் கீழே இறங்கி பண்டா - செல்வா ஒப்பந்தத்தை 1957 இல் செய்தார். அது மைகாயும் முன்பே கிழித்தெறியப்பட்டது. 1965 இல் டட்லி - செல்வா ஒப்பந்தம் செய்யப்பட்டது. இது மாவட்ட சபையை உருவாக்கச் செய்யப்பட்டது. மாவட்ட சபை உருவாக்குவதற்குப் பதிலாக வெறும் மாவட்டமே எமக்குக் கிடைத்தது. இதனையடுத்து சிறிமாவோ - செல்வநாயகத்திற்கு இடையில் ஓர் புரிந்துணர்வு ஒப்பந்தம் 1970 களின் தொடக்கத்தில் இடம்பெற்றது. அதுவும் செயல்வடிவமின்றி செத்தது. பின்பு 1978 இல் ஜே.ஆர்- அமிர்தலிங்கம் உடன்படிக்கை செய்யப்பட்டது. அதுவும் ஏமாற்றத்திலேயே முடிந்தது. இதனையடுத்து 1983 இல் பெரிய இனப்படுகொலை ஏற்பட்டதை அடுத்து இந்தியாவின் தலையீட்டின் பெயரில் திம்புவில் 1985 இல் ஓர் மாநாடு இடம்பெற்றது. திம்பு மாநாட்டில் எடுக்கப்பட்ட தீர்மானம் எமக்கு தெம்பு தரும் என நம்பிய நிலையில் அதுவும் வம்பில் முடிந்தது. திம்பு மாநாட்டில் எடுக்கப்பட்ட தீர்மானங்களில் முக்கியமானவை. தமிழர் ஓர் தேசிய இனம் தமிழருக்கு மரபுவழித் தாயகம் உண்டு தமிழர் தம் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் முறையில் சுயநிர்ணயக் கோட்பாடு ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும். இவற்றை வெறி கொண்ட ஜே.ஆர். அரசு முற்றாக நிராகரித்தது. பின்பு 1987 இல் இலங்கை இந்திய ஒப்பந்தம் ஜெ.ஆருக்கும் ராஜீவ் காந்திக்குமிடையில் நடைபெற்றது. இதை "அவசரத்தில் தெளிக்கப்பட்ட அலங்கோலம்" என்று நெடுமாறன் தெரிவித்தார். இந்த ஒப்பந்தம் தமிழர் மீது திணிக்கப்பட்ட நிர்ப்பந்தம் எனவும் காலப்போக்கில் தீப்பந்தமாக பற்றி எரியும் என்றும் நாம் எச்சரித்தோம். நாம் எச்சரித்ததன் படி ராஜீவ் காந்தியின் உயிரும் இத்தீயில் பொசுங்கியது. இந்த ஒப்பந்தம் பற்றி நான் அன்று வர்ணிக்கையில் பெரிய நாட்டின் சிறுமதி படைத்த தலைவர் ராஜீவ் காந்தியும் சின்னத்தீவின் பெறுமதிபடைத்த ஜெ.ஆருக்குமிடையில் நடைபெற்ற இவ் ஒப்பந்தம் சீரழிவில் முடியுமென்று நாம் எச்சரித்தோம். இதை நாம் ஆங்கிலத்தில் குறிப்பிடுகையில் `J.R. was too big for a small country & Rajive gandhi was too small for a big country there fore this messup took place" என்று எச்சரித்தோம். இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் தமிழர் சார்பில் ஒரே ஒரு முக்கிய குறிப்பு இருந்தது. இலங்கையின் வட, கிழக்கு மாகாணத்தை ஈழத்தமிழன் வரலாற்று தாயகம் என ஏற்றுக்கொண்டது மட்டும்தான். இதனை நடைமுறைப்படுத்தும் வகையில் இந்தியா எதுவும் செய்யவில்லை. மாறாக இந்த ஒப்பந்தத்தையடுத்து மாதுறு ஓயாவிலும் மணலாற்றிலும் சிங்களக் குடியேற்றம் பரவியது. இவையனைத்தையுமடுத்து சந்திரிகா 1994 இல் ஆட்சிக்கு வந்தபோதும் சந்திரிகா மீது எல்லை மீறி நம்பிக்கை வைத்த தமிழர் குறிப்பாக எம் தமிழ்ப் பெண்கள் சந்திரிகா வளையல் அணிந்து தம் மகிழ்ச்சியைத் தெரிவித்தனர். ஆனால், 1995 இன் இறுதியில் சந்திரிகாவின் மாமனார் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றியதாக கூறி சிங்கக் கொடியை உயர்த்தினார். இந்த வெறியாட்டத்திற்கு சந்திரிகா வாழ்த்துக் கூறியதையும் மறுப்பதற்கில்லை. பின்பு 2001 ஆண்டு ரணில் விக்கிரமசிங்கவினுடைய ஆட்சி அமைய 2002 பெப்ரவரி 22 ஆம் திகதி ஓர் ஒப்பந்தம் பிரபாகரனுக்கும் ரணிலுக்குமிடையில் நிறைவேற்றப்பட்டது. இந்த ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டு மூன்றரை ஆண்டுகள் உருண்டோடிய நிலையிலும் தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் தமிழ் மக்கள் பெற்றது யாதுமில்லை. வெறிகொண்ட சந்திரிகா ரணிலினுடைய ஆட்சியைப் பலவீனப்படுத்துகின்ற முறையில் ரணில் அமைச்சரவையில் இருந்த பாதுகாப்பு அமைச்சு உட்பட பல முக்கியமான அமைச்சுக்களைத் தன் வசமாக்கினார். பலவீனமுற்ற ரணிலின் ஆட்சி கவிழ மீண்டும் 2004 ஆம் ஆண்டு மீண்டும் தேர்தல் இடம்பெற்று ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஆட்சிப் பொறுப்பை ஏற்றது. தமிழரைப் பொறுத்தவரையில் தமது ஒற்றுமையை காட்டுகின்ற முறையில் 22 பாராளுமன்ற உறுப்பினரைக் கொண்ட தமிழர் தேசியக் கூட்டமைப்பை தெரிவு செய்தனர். இந்தக் காலகட்டத்தில் உலகின் அனுதாபத்தை எம்பால் திரட்டும் முறையில் விடுதலைப் புலிகளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினரும் தமிழீழத்தை வலியுறுத்திய நிலையில் இணைப்பாட்சியில் இனிய வாழ்வு காண்போம் என்று குரல் எழுப்பினோம். பின்பு அதைக் கூட வலியுறுத்தாது இடைக்கால அரசையாவது தாவெனக் கேட்டோம். பின்பு சுனாமி சூறாவளியாக உருவெடுத்த போது இவற்றைக் கூட வலியுறுத்தாது சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அரசியல் சார்பற்ற பொதுக்கட்டமைப்பு உருவாக்க வேண்டுமென்ற தமிழர் விடுதலைக் கூட்டமைப்பும் விடுதலைப் புலியினரும் அரசை வேண்டி நின்றனர். ஆனால், இந்த கடல்கோளினால் தமிழ் மக்கள் அழிவுறுதலைக் கண்ணாரக் கண்டும் சிங்கள அரசு இரங்க மறுத்ததன் விளைவு ஏறக்குறைய 10 மாதம் உருண்டோடிய நிலையில் கடல்கோளினால் பாதிக்கப்பட்ட மக்கள் கண்ணீர் விட்டு கதறும் நிலை உருவானது. இவையனைத்தையும் நினைவு கொண்டுதான் இனிமேல் இரக்கமற்ற கொலையாளிகளுடன் கூடிவாழ முடியாது என்ற முடிவிற்கு வந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தமிழீழ விடுதலைப் புலிகளும் தமிழர் எழுச்சிப் பேரவையும் ஈழம் தான் முடிந்த முடி என 1976 இல் வட்டுக் கோட்டையில் விட்டுக் கொடுக்காது எடுத்த தீர்மானத்தை வடக்கின் எல்லை வவுனியாவில் தமிழரின் சுய நிர்ணய கோட்பாட்டை ஓங்கி ஒலித்து உலகின் கவனத்தை ஈர்க்கும் முயற்சியில் ஈடுபட்டோம். இதே குரல் மீண்டும் மீண்டும் மீன்பாடும் தேனாடாம் மட்டக்களப்பிலும் ஓங்கி ஒலிக்கப்பட்டது. பின்பு வன்னியிலிருந்து வையத்தை நோக்கி குரல் எழுப்பினோம். பின்பு தமிழனின் தொல்லை நீங்க முல்லையில் பெரும் மாநாடு கூட்டினோம். அடுத்து இம் மாதம் 28 ஆம் திகதி திருக்கேடினை நீக்கும் கேதீச்சரமும் மடுமாதாவும் எழுந்தருளிய மன்னாரில் மாநாடு கூட்டி எம் எழுச்சிக் குரலை எழுப்பினோம். இவை அனைத்துக்கும் சிகரம் வைப்பது போல் தமிழினத்தின் பண்பாட்டின் தலைநகர் யாழ்ப்பாணத்தில் மூன்று இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் திரண்டு கலந்து கொள்ளும் நிலையில் வரலாறு காணாத ஓர் பொங்கு தமிழ் வடிவில் பொறுத்தது போதும் என பொங்கி எழ இருக்கிறோம்.
எம்.கே. ஈழவேந்தன் எம்.பி.
|