|
ஜனாதிபதித் தேர்தல் பிரசாரப் பரபரப்பில் இலங்கை மூழ்கியிருக்கும் இவ்வேளையில், வன்முறையையும் பயங்கரவாதத்தையும் தொடர்ந்தும் பயன்படுத்திவருவதாக விடுதலை புலிகளைக் கடுமையாகக் கண்டனம் செய்திருக்கும் ஐரோப்பிய ஒன்றியம் அதன் உறுப்பு நாடுகளுக்கு விடுதலை புலிகளின் தூதுக் குழுக்கள் பயணம் செய்வதை மறு அறிவித்தல் வரை தடை செய்திருக்கிறது. விடுதலைப் புலிகளை ஒரு பயங்கரவாத அமைப்பாக முறைப்படி தடை செய்வது குறித்து தீவிரமாகப் பரிசீலனை செய்துவருவதாகவும் ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்திருக்கிறது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் அறிக்கை வெளியானதற்கு மறுநாளான புதன்கிழமை கிளிநொச்சியில் செய்தியாளர்கள் மகா நாடொன்றைக் கூட்டிய விடுதலை புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் ஐரோப்பிய ஒன்றியம் அதன் தீர்மானத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென்று வேண்டுகோள் விடுத்திருக்கிறார். இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்கு விடுதலை புலிகள் தீர்மானத்ததற்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆதரவு முக்கியமானதொரு காரணியாக விளங்கியதாகக் குறிப்பிட்டிருக்கும் தமிழ்ச்செல்வன், சமாதான முயற்சிகளுக்கு பெரும் பின்னடைவைத் தோற்றுவிக்கும் ஆபத்தைக் கொண்டிருக்கும் ஒன்றியத்தின் தீர்மானம், சமாதானப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கக் கூடாது என்று போர்க்கொடி தூக்கி நிற்கும் சிங்கள பௌத்த பேரினவாத சக்திகளுக்கு ஒரு தார்மீக ஆதரவை அளிக்கும் என்று விசனம் தெரிவித்திருக்கிறார். இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளின் 2003 ஜூன் டோக்கியோ மகாநாட்டு கூட்டுத் தலைமையில் அங்கம் வகித்துக் கொண்டு ஐரோப்பிய ஒன்றியம் இலங்கை நெருக்கடி தொடர்பில் அதன் நிலைப்பாடுகளையும் எதிர்பார்ப்புகளையும் வெளிப்படுத்தி வந்திருக்கிறது. கடந்த ஒன்றரை வருடகாலத்தில் தீவிரமடைந்த வன்முறைச் சம்பவங்களால் போர்நிறுத்த உடன்படிக்கை பாரதூரமான நெருக்குதல்களுக்கு உள்ளான வேளைகளிலெல்லாம் பாதுகாப்பு நிலைவரம் மேலும் சீர்கேடு அடைந்துவிடாதிருப்பதை உறுதி செய்வதற்கு அரசாங்கமும் விடுதலை புலிகளும் அந்த உடன்படிக்கையை முறையாக நடைமுறைப்படுத்துவதில் அக்கறை காட்டவேண்டுமென்று அமெரிக்கா, ஜப்பான் மற்றும் நோர்வேயுடன் சேர்ந்து ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்திக் கேட்டு வந்தது. இறுதியாக கடந்த 19 ஆம் திகதி கூட்டுத் தலைமை வெளியிட்ட அறிக்கையில் ஜனாதிபதித் தேர்தலுக்குப் பிறகு இனநெருக்கடிக்கு சமாதானத் தீர்வு காண்பதை நோக்கிய முயற்சிகளைக் குந்தகப்படுத்தக்கூடிய எந்தக் காரியத்திலும் ஈடுபடுவதை சகல தரப்பினரும் தவிர்த்துக் கொள்ள வேண்டுமென்றும் போர் நிறுத்த உடன்படிக்கையை முறையாக நடைமுறைப்படுத்துவதற்கான வழிவகைகளை ஆராய அக்டோபரில் இலங்கைக்கு விஜயம் செய்யவிருக்கும் நோர்வேயின் விசேட பிரதிநிதியுடன் அரசாங்கமும் விடுதலை புலிகளும் ஆக்கபூர்வமான முறையில் பேச்சு வார்த்தைகளை நடத்த வேண்டுமென்றும் வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது. இவ்வாறாக இலங்கை தெருக்கடியில் சர்வதேச சமூகத்தின் நிலைப்பாடுகளை பிரதிபலிக்கும் கூட்டுத்தலைமைக்குள் இருந்து கொண்டு, சமாதான முயற்சிகளில் சம்பந்தப்பட்ட இரு தரப்பினரும் அந்த முயற்சிகளை மீண்டும் விரைவில் முன்னெடுக்கக் கூடிய சூழ்நிலையை உருவாக்க வேண்டுமென்று வலியுறுத்தி வந்த ஐரோப்பிய ஒன்றியம் திடீரென்று விடுதலை புலிகளுக்கு எதிராக இத்தகையதொரு கடுமையான நடவடிக்கையை எடுத்ததற்குக் காரணம் என்ன? ஐரோப்பிய ஒன்றியம் கடந்த திங்களன்று வெளியிட்ட அறிக்கையில் முன்னாள் வெளியுறவு அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரின் கொலையைக் கடுமையாகக் கண்டனம் செய்திருக்கிறது. கதிர்காமரின் கொலையைத் தொடர்ந்து இலங்கையில் ஏற்பட்டிருக்கும் நிலைவரங்கள் தொடர்பாக நியூயோர்க்கில் கடந்த வாரம் ஆராய்ந்த கூட்டுத் தலைமை அதன் அறிக்கையில் அக் கொலையைக் கண்டனம் செய்திருந்தபோதிலும், விடுதலை புலிகளை நேரடியாகக் குற்றஞ்சாட்டுவதைத் தவிர்த்திருந்தது. ஆனால், விடுதலை புலிகள் மீதான பயணத் தடைத் தீர்மானத்தில் கதிர்காமரின் கொலை பெரும் செல்வாக் குச் செலுத்திய காரணியாக இருந்திருக்கிறது என்பதை ஐரோப்பிய ஒன்றியத்தின் அறிக்கை உணர்த்தி நிற்கிறது. கதிர்காமர் கொலை செய்யப்பட்டதன் பின்னரும் விடுதலை புலிகளுடன் பேச்சுவார்த்தையை நடத்துவதற்கு இலங்கை அரசாங்கம் முன் வந்த போதிலும் கூட, வெளியுலகில் நன்கு அறியப்பட்டவரான அவரின் கொலையைப் பயன்படுத்தி விடுதலை புலிகள் மீது சர்வதேச சமூகத்தின் நெருக்குதலைக் கொண்டு வருவதற்கும் அரசாங்கம் முழு மூச்சாக ஈடுபட்டிருந்தது. ஐக்கிய நாடுகள் சபையில் ஜனாதிபதி திருமதி குமாரதுங்க ஆற்றிய உரை, அரசாங்க சமாதானச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி ஜயந்த தனபால சர்வதேச அரங்கில் அண்மைக்காலமாக தீவிரப்படுத்திய முயற்சிகள் அரசாங்கத்தின் நோக்கங்களை தெளிவாக உணர்த்தின. ஐரோப்பிய ஒன்றியத்தின் சுழற்சி முறையிலான தலைமைத்துவத்தை தற்போது வகிக்கும் பிரிட்டன் விடுதலை புலிகளுக்கு எதிரான இந்த பயணத் தடைத் தீர்மானத்தில் தாராளமாக செல்வாக்கைச் செலுத்தியிருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் நடவடிக்கை ஏற்படுத்தக் கூடிய விளைவுகளே முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியவையாக இருக்கின்றன. தனக்கு ஆதரவைத் திரட்டுவதற்கு பிரதமர் மகிந்த ராஜபக்ஷ கடைப்பிடித்து வருகின்ற அணுகுமுறை இன நெருக்கடி தொடர்பில் தென்னிலங்கை அரசியல் சமுதாயத்தை மேலும் விறைப்பான உணர்வுகளுடன் துருவ மயப்படுத்தும் ஆபத்தைக் கொண்டிருக்கும் நிலையில், விடுதலை புலிகளுடன் சிங்கள அரசியல் சமுதாயம் எந்தவிதமான விட்டுக் கொடுப்பையோ அல்லது ஊடாட்டத்தையோ செய்வதை மூர்க்கத்தனமாக எதிர்க்கும் சக்திகள் பிரதமருடன் அணி சேர்ந்து நிற்பதன் காரணமாக சிங்கள பௌத்த பேரினவாத அரசியல் நிகழ்ச்சித் திட்டத்தை பிரசாரப்படுத்துவதற்கு பரந்தளவு களத்தை வாய்ப்பாகப் பெற்றிருக்கும் நிலையில், விடுதலை புலிகளுக்கு எதிரான நடவடிக்கை மூலமாக ஐரோப்பிய ஒன்றியம் விடுக்கும் செய்தி என்ன? நோர்வேயின் அனுசரணையுடனான சமாதான முயற்சிகளை ஐரோப்பிய ஒன்றியம் முழுமையாக ஆதரிப்பதால் அந்த முயற்சி கள் கூடுதலான அளவுக்கு மேற்குலகின் செல்வாக்கிற்குட்பட்டிருப்ப தாகவும் மேற்குலகம் விடுதலை புலிகளுக்கு சார்பானதாகச் செயற்படுவதாகவும் குற்றஞ்சாட்டிய சிங்கள பௌத்த பேரினவாதச் சக்திகள் இன நெருக்கடிக்குத் தீர்வைக் காண்பதற்கான முயற்சிகளில் சர்வதேச சமூகத்தின் ஈடுபாட்டைத் தளர்த்த வேண்டுமென்றே கோரி வந்திருக்கின்றன. ஆனால், விடுதலை புலிகளின் தூதுக்குழுக்கள் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டவுடன் அதே பேரினவாதச் சக்திகள் அத்தடையை பெரிதும் பாராட்டி வரவேற்று குதூகலிப்பதை காணக் கூடியதாக இருக்கிறது. ஐரோப்பிய ஒன்றியத்தின் தீர்மானம் ஜனாதிபதித் தேர்தல் பிரசாரங்களின்போது சமாதான முயற்சிகளுக்கு எதிரானவையாகவும் சிறுபான்மை இனங்களின் எந்தவொரு நியாயபூர்வமான அரசியல் அபிலாசை யையும் ஏற்றுக்கொள்ளத் தயாரில்லாதவையாகவும் விளங்கும் சக்திகளினாலேயே பயன்படுத்தப்படப்போகிறது என்பது இதன் மூலம் தெளிவாகிறது. அதனால் ஐரோப்பிய ஒன்றியம் அதன் நடவடிக்கையினால் இலங்கைத் தமிழ் மக்களுக்கு தெரிவிக்க முனையும் செய்திதான் என்ன? கொழும்பு அரசாங்கம் சமாதான முயற்சிகளை மீண்டும் முன்னெடுத்து இனநெருக்கடிக்குத் தீர்வு காண்பதை நோக்கி நகராவிட்டாலும் விடுதலை புலிகள் மீண்டும் போருக்கு செல்லாதிருப்பதை சர்வதேச சமூகம் உறுதிப்படுத்தும் என்றும் தமிழ் மக்களுக்கு எதையுமே வழங்காமல் வேண்டிய மட்டும் காலத்தை இழுத்தடித்துக்கொண்டு தங்களால் அரசியலை நடத்த முடியும் என்றும் சிங்கள அரசியல் சமுதாயம் நம்பிக்கை கொள்ளக்கூடிய ஆரோக்கியமற்ற ஒரு சூழ்நிலையையே ஐரோப்பிய ஒன்றியத்தின் நடவடிக்கை தோற்றுவிக்கும் என்பதே எமது உறுதியான அபிப்பிராயமாகும்.
thinakural
|