|
வாகரையை நோக்கி படையினர் ஆரம்பித்துள்ள முழு அளவிலான யுத்தம் மட்டக்களப்பு வாகரைப் பகுதியில் இன்று மிகப்பெரும் மனிதப் பேரவலம் ஏற்பட்டுள்ளது. ஒருபுறம் ஷெல் மற்றும் விமானத் தாக்குதல்களால் மக்கள் கொன்று குவிக்கப்படுகையில் மறுபுறம் அங்கிருந்து தப்பிச் செல்ல வழியின்றி மக்கள் காடுகளினுள்ளும் கடற்பரப்பிலும் மடியும் பேரவலம் சொல்லும் தரமன்று.
நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை அதிகாலை 5.30 மணியளவில் அவசர அவசரமாக
படகுகளில் ஏறி வாகரையிலிருந்து இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியிலுள்ள
வாழைச்சேனைக்கு கடல்மார்க்கமாகச் சென்றவர்களில் 20க்கும் மேற்பட்டோர்
படகுகள் கவிழ்ந்து உயிரிழந்துள்ளனர்.
கடும் ஷெல் தாக்குதலுக்கு அஞ்சி கடல் கொந்தளிப்பையும் பொருட்படுத்தாது
தப்பிச்செல்ல முற்பட்ட போதே வாகரை மற்றும் வாழைச்சேனை கடற்பரப்பில் மூன்று
படகுகள் முற்றாகக் கவிழ்ந்ததில் சிறுவர்கள், குழந்தைகள், பெண்கள் உட்பட
20க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். இவர்கள் அனைவரும்
திருகோணமலையிலிருந்து இடம்பெயர்ந்து வாகரைப் பகுதியில்
தஞ்சமடைந்திருந்தவர்கள்.
சம்பூரை மையமாக வைத்து மூதூர் கிழக்கில் இடம்பெற்ற பாரிய படை
நடவடிக்கையால் இடம்பெயர்ந்த 45,000க்கும் மேற்பட்ட மக்களும் வாகரை மற்றும்
அதனை அண்டிய பல கிராமங்களைச் சேர்ந்த 15,000க்கும் மேற்பட்ட மக்களுமாக
60,000க்கும் மேற்பட்ட மக்கள் இன்று வாகரைப் பகுதியில் தஞ்சமடைந்துள்ளனர்.
திருகோணமலை - மட்டக்களப்பு வீதியில் இவ்விரு மாவட்டங்களின் எல்லையில்
கடற்பரப்பை அண்டிய மிக ஒடுங்கிய நிலப்பரப்பிலேயே வாகரை உள்ளது.
திருமலையில் ஈச்சிலம்பற்று முதல் மட்டக்களப்பில் பனிச்சங்கேணி வரையான
`ஏ15' வீதி தற்போது விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலேயே
உள்ளது. திருமலையில் ஈச்சிலம்பற்றுக்கு அப்பால் கல்லாறு படைமுகாம் உள்ளது.
அதேபோல் மட்டக்களப்பில் பனிச்சங்கேணிக்கு அப்பால் கஜூவத்தை படைமுகாம்
உள்ளது.
மேற்படி பகுதிகளை புலிகள் வசமிருந்து மீட்டு `ஏ15' வீதியை முழுமையாகத்
தங்கள் கட்டுப்பாட்டினுள் கொண்டு வந்துவிட்டால், திருகோணமலை முதல் அம்பாறை
வரையான கிழக்குப் பிராந்தியத்தின் கரையோரப் பகுதி முற்று முழுதாக
படையினரின் கட்டுப்பாட்டினுள் வந்துவிடும். இதன் மூலம் கிழக்கிலிருந்து
கடற்புலிகளை முற்று முழுதாக இல்லாது செய்துவிடவேண்டுமென்பதில் அரசும்
படைத்தரப்பும் தீவிர ஆர்வம் காட்டுகின்றன.
சம்பூர் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த போது அங்கு
கடற்புலிகளின் முக்கிய தளங்களிருந்தன. சம்பூரில் கடற்புலிகள் மிகவும்
வலுவாக நிலை கொண்டிருந்ததால் திருகோணமலைத் துறைமுகத்தின் பாதுகாப்பு
பெரும் கேள்விக்குறியாகவுமிருந்தது. அத்துடன் கிழக்கில் கடற்படையினர்
கடற்புலிகளின் அச்சுறுத்தலையும் எதிர்கொண்டனர்.
சம்பூரை புலிகளிடமிருந்து படையினர் கைப்பற்றியதன் மூலம் கடற்புலிகளின்
தளங்கள் இல்லாது போயின. தற்போது கடற்புலிகள் வாகரை கடலோரப் பகுதியில்
முகாமிட்டிருந்தாலும், சம்பூரில் அவர்கள் நிலைகொண்டிருந்த போது இருந்த
பலம் தற்போது பெருமளவில் குறைந்துவிட்டதாகவே படைத்தரப்பு கருதுகிறது.
அதேநேரம் `ஏ15' வீதியில் தற்போது புலிகள் வசமிருக்கும் ஈச்சிலம்பற்று
முதல் பனிச்சங்கேணி வரையான கரையோரப் பகுதிகளைக் கைப்பற்றுவதன் மூலம்
திருகோணமலை மாவட்டத்தில் புலிகளின் ஆதிக்கத்தை பெரும்பாலும் முடிவுக்கு
கொண்டு வந்துவிட முடியுமென அரசும் படைத்தரப்பும் கருதுகின்றன. இதனை மனதில்
வைத்தே கடந்த சில தினங்களுக்கு முன்னர், கிழக்கிலிருந்து விரைவில் புலிகளை
துரத்தியடித்துவிடுவோமென இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சரத் பொன்சேகா
கூறியிருந்தார்.
தற்போதைய நிலையில் ஈச்சிலம்பற்று முதல் பனிச்சங்கேணி வரையான கடலோரப்
பிரதேசத்தை கைப்பற்றும் முயற்சியில் படையினர் இறங்கியுள்ளனர். இதனால்
வாகரை மற்றும் அதனை அண்டியுள்ள பிரதேசங்களில் தங்கியிருக்கும் 60,000
மக்களையும் ஏதோவொரு விதத்தில் அங்கிருந்து அப்புறப்படுத்தி புலிகளைத்
தனிமைப்படுத்தி வாகரையை கைப்பற்றும் திட்டங்களும் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
`ஏ15' வீதியை முழுமையாகப் கைப்பற்றி திருமலையிலிருந்தே புலிகளை
அப்புறப்படுத்துவதன் மூலம் வடக்கு - கிழக்கிற்கிடையிலான புலிகளின்
தொடர்புகளை துண்டிப்பதும் படைத்தரப்பின் முக்கிய திட்டமாகும்.
ஏற்கனவே உயர் நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் வடக்கு - கிழக்கு
பிரிக்கப்பட்டுள்ளதால் அரசியல் ரீதியிலும் வடக்கு - கிழக்கை முழுமையாகத்
துண்டாடிவிடுவதற்கான காய் நகர்த்தல்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த
நேரத்தில் இராணுவ ரீதியிலும் வடக்கு - கிழக்கை முற்றாக பிரித்துவிடும்
முயற்சியே வாகரை மீதான தொடர்ச்சியான ஆக்கிரமிப்பு நடவடிக்கையாகும்.
கடந்த அக்டோபர் 21 ஆம் திகதியுடன் வாகரைக்கான தரைவழிப் போக்குவரத்து
படையினரால் தடை செய்யப்பட்டது. இந்தப் போக்குவரத்துத் தடை மூலம்
வாகரையிலும் அதனை அண்டியுள்ள பிரதேசங்களிலும் வாழும் ஆயிரக் கணக்கான
மக்களுக்கான உணவு விநியோகம் நிறுத்தப்பட்டு அங்கு பட்டினி நிலைமை
உருவாக்கப்பட்டுள்ளது. இங்கு உணவுப் பொருட்களும் படையினரின் ஆயுதங்களாகப்
பயன்படுத்தப்படுகின்றன.
ஒருபுறம் உணவு, மருந்துப் பொருட்களை முற்றாகத் தடைசெய்துவிட்டு மறுபுறம்
தொடர்ச்சியான அகோர ஷெல் தாக்குதல், பல்குழல் ரொக்கெட் தாக்குதல் விமானத்
தாக்குதல் மூலம் மக்களுக்கு பேரழிவுகளை ஏற்படுத்தி அவர்களை பெரும்
அச்சமூட்டி அங்கிருந்து அப்புறப்படுத்துவதே முக்கியதிட்டமாயுள்ளது.
இவற்றின் உக்கிரத்தால் மக்கள் அங்கிருந்து இடம்பெயர்ந்து இராணுவக்
கட்டுப்பாட்டுப் பகுதிகளை நோக்கி வரும் போது, மக்கள் புலிகளின்
பிரதேசங்களை விட்டு வெளியேறி இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வந்து
கொண்டிருப்பதாக பெரும் பிரசாரங்களும் முடுக்கிவிடப்படுகின்றன.
இதேநேரம், மிக மோசமான படை நடவடிக்கையின் போது மக்கள்
அப்பிரதேசங்களிலிருந்து வெளியேற புலிகள் கட்டுப்பாடுகளை விதிப்பதாகவும்
சர்வதேச மனிதாபிமான சட்டதிட்டங்களை அவர்கள் மீறுவதாகவும் போர் நிறுத்தக்
கண்காணிப்புக் குழுவும் அரசுடனும் படைத்தரப்புடனும் இணைந்து
பிரசாரத்திலும் ஈடுபட்டுள்ளது.
போர் நிறுத்த உடன்பாடு அமுலிலிருக்கையில் படை நடவடிக்கை பிழையானது,
உடன்பாட்டையே இது முழுமையாக சிதைத்துவிடும், இந்தப் பாரிய படை
நடவடிக்கைகளின் போது மக்களே முற்றுமுழுதாக இலக்கு வைக்கப்படுகிறார்கள்
என்பதை முழு உலகுக்கும் எடுத்துக் கூறவேண்டிய கண்காணிப்புக் குழு
அதைவிடுத்து இன்று போரைக் கண்காணிக்கும் குழுவாகவே செயற்படுகிறது.
உடன்பாட்டையும் மீறி வாகரைப் பகுதியில் மேற்கொள்ளப்படும் பாரிய
தாக்குதல்களையும் மக்கள் கொன்றொழிக்கப்படுவதையும் தடுத்து நிறுத்த
தவறியுள்ள கண்காணிப்புக் குழு, வாகரையிலிருந்து மக்கள் வெளியேறுவதைத்
தடுப்பதால் அந்த மக்கள் உயிராபத்தை எதிர்கொள்வதாகக் கூறுவதன் மூலம்,
உடன்பாட்டை மீறிபடை நடவடிக்கையையும் பாரிய அழிவையும் ஏற்படுத்துவோருக்கு
கண்காணிப்புக் குழு நேரடியாகவே துணை போகிறது.
அதேநேரம் கடந்த அக்டோபர் மாதம் 21 ஆம் திகதி வரை இந்தப் பாதை திறந்திருந்த
போது மக்கள் தாராளமாக இந்தப் பாதையூடாக (ஏ15) போக்குவரத்துச் செய்தனர். 21
ஆம் திகதியுடன் பாதை மூடப்பட்டுவிட்டதாலும் பாதை இல்லாததாலும் மக்களின்
போக்குவரத்து முற்று முழுதாகத் தடைசெய்யப்பட்டுள்ளதை கண்காணிப்புக் குழு
ஏன் உணரவில்லை.
பனிச்சங்கேணி ஊடான பாதை மட்டுமே 60,000 மக்களுக்கும் உள்ளது. ஆனால் இன்று
அந்தப் பாதையை மூடி, போக்குவரத்தை தடை செய்து, நாளாந்தம் கடும் ஷெல்
வீச்சை நடத்தி, தினமும் பலரைக் கொன்றுகுவித்து, பாரிய படைநகர்வுகளை
மேற்கொண்டவாறு முழுமையாக படைத்தரப்பு பாதையை மூடியுள்ளது.
இதனால் வேறு வழிகளோ பாதைகளோ இன்றி மக்கள் தினமும் பெரும் உயிராபத்தை
எதிர்நோக்குகின்றனர். வெள்ளிக்கிழமை கூட, கடும் ஷெல் தாக்குதலுக்கு
அஞ்சியே அவசர அவசரமாக படகுகளில் ஏறி கடல்கொந்தளிப்புக்கு மத்தியிலும்
தப்பிச் செல்ல முயன்ற அப்பாவிப் பொதுமக்களில் 20க்கும் மேற்பட்டோர்
படகுகள் கவிழ்ந்து உயிரிழந்துள்ளனர்.
மக்கள் வாழும் பகுதிகளிலிருந்து படை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படக் கூடாதென
ஐ.நா.சபையும் கடுமையாகக் கூறியுள்ளது. இவ்வாறான செயற்பாடுகள் மக்களை
பேராபத்தினுள் தள்ளிவிடுவதாகவும் ஐ.நா. எச்சரித்துள்ள போதிலும் தினமும்
மக்கள் குடியிருப்புக்களை நோக்கியே படையினர் ஷெல் தாக்குதலையும் விமானத்
தாக்குதலையும் பல் குழல் ரொக்கட் தாக்குதலையும் மேற்கொள்கின்றனர்.
அதேநேரம் தங்கள் தாக்குதலை நியாயப்படுத்துவதற்காக, புலிகள் மக்களை மனிதக்
கேடயங்களாகப் பயன்படுத்தி தாக்குதல்களை நடத்திவருவதாக அரசும் படைத்
தரப்பும் பெரும் பிரசாரங்களையும் மேற்கொண்டு வருகின்றன. அதேநேரம் கடந்த
அக்டோபர் 21 ஆம் திகதிக்குப் பின்னர் மோதல்கள் நடைபெறும் பகுதிக்கு
கண்காணிப்புக் குழுவினர் செல்ல இன்று வரை படைத்தரப்பு அனுமதிக்கவுமில்லை.
வடக்கு - கிழக்கில் மக்கள் குடியிருப்புகளுக்கு மத்தியிலேயே படை முகாம்கள்
அனைத்துமுள்ளன. அங்கிருந்தே படையினர் புலிகளுக்கெதிரான தாக்குதல்களை
காலாகாலமாக மேற்கொண்டு வருவதுடன் புலிகள் மக்களை மனிதக்கேடயங்களாக்கி
தாக்குதல் நடத்துவதாகவும் பிரசாரங்களை செய்து வருகின்றனர்.
எனினும், தமிழ் மக்கள் மத்தியிலேயே அனைத்து படைமுகாம்களுமிருப்பதால்
தாங்கள் மேற்கொள்ளும் பதில் தாக்குதல்களில் சற்று தவறு ஏற்பட்டாலும் அது
மக்களையே பாதிக்கும் என்பதால் புலிகள் பதில் தாக்குதல்களை நடத்துவதில்
மிகவும் கவனம் செலுத்தி வருவதை படையினரும் நன்கறிவர்.
புலிகளின் பதில் தாக்குதலில் மக்கள் கொல்லப்பட்டால், தங்கள் சொந்த மக்களை புலிகள் கொல்வதாகப் பிரசாரம் செய்யலாம்.
ஆனால், அதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாததால் மக்கள் மத்தியிலிருந்து படையினர்
தாக்குவதாலேயே, புலிகளின் பதில் தாக்குதலில் மக்கள்
கொல்லப்படுகிறார்களெனக் கூறி அரசுக்கும் படைத்தரப்புக்கும் எவராலும்
அழுத்தம் கொடுக்க முடியவில்லை.
ஆனால், புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் கண்காணிப்புக் குழுவையோ
சர்வதேச தொண்டர் அமைப்புக்களையோ செல்வதற்கு தடைவிதித்தவாறு பாரிய
தாக்குதல்களை கண்மூடித்தனமாக நடத்தும் படையினர், மக்களுக்கு பேரழிவுகள்
ஏற்படும் போதெல்லாம், புலிகள் மக்களை மனிதக் கேடயங்களாக பயன்படுத்துவதாகக்
கூறி தப்பிவிடுகின்றனர்.
சர்வதேச சமூகம் கூட இன்று வரை இதன் உண்மை நிலை குறித்து ஆராயாது, புலிகள்
மக்களை மனிதக் கேடயங்களாக பயன்படுத்தக்கூடாதெனக் கூறிவருவது
நகைப்புக்கிடமானது.
இதேநேரம், தமிழர் பகுதிகள் மீது தொடர்ந்தும் கடும் ஷெல் தாக்குதல்கள்
நடைபெற்று வருகின்றன. அவர்களை சொந்த இடங்களிலிருந்து வெளியேற்றும்
நோக்கிலேயே இவ்வாறு திட்டமிட்டு ஷெல் தாக்குதல்கள் நடத்தப்பட்டு
வருகின்றன. வாகரையில் இதுவரை ஷெல் தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்டோர்
கொல்லப்பட்டும் நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்துமுள்ளனர்.
பாரிய படைநடவடிக்கைகள் மூலம் தமிழ் மக்களை அவர்களது சொந்த இடங்களிலிருந்து
வெளியேற்றி அந்தப் பிரதேசங்களை சூனியப் பிரதேசங்களாக அல்லது அதிஉயர்
பாதுகாப்பு வலயங்களாக்கி மக்கள் மீளக் குடியேறாதவாறு செய்து அவர்களை
அகதிமுகாம்களில், அடிப்படை வசதிகள் கூட இன்றி இருக்கவைத்து சீரழிப்பதே
அரசின் திட்டமாகும்.
வடக்கில் பலாலி இராணுவதளத்தைச் சுற்றியுள்ள மிகப்பெரும் பிரதேசம் கடந்த 16
வருடங்களுக்கும் மேலாக அதிஉயர் பாதுகாப்பு வலயங்களாக்கப்பட்டு 70,000
க்கும் மேற்பட்ட குடும்பங்கள் விரட்டியடிக்கப்பட்டது போல் திருமலை,
மட்டக்களப்பு மாவட்டங்களிலும் தமிழர்களின் பூர்வீகக் கிராமங்களிலிருந்து
இராணுவ நடவடிக்கைகள் மூலம அவர்களை விரட்டிவிட்டு பின்னர் சிங்களக்
குடியேற்றங்களை மேற்கொள்வதே இனவாதிகளின் திட்டமாகும்.
மூதூரில் இடம்பெற்ற மோதலையடுத்து மூதூர் நகரிலிருந்து வெளியேறிய மக்கள்
சில தினங்களிலேயே மீண்டும் அங்கு முழுமையாக மீளக் குடியேற்றப்பட்டனர்.
ஆனால், சம்பூர் உட்பட மூதூர் கிழக்கில் 12 கிராமங்களிலிருந்து படை
நடவடிக்கையால் விரட்டப்பட்ட 40,000 இற்கும் மேற்பட்ட மக்கள் இன்று திருமலை
மாவட்டத்தை தாண்டி மட்டக்களப்பு வாகரை பகுதியில் தஞ்சம் புகுந்த நிலையில்
அவர்களை மீளக் குடியேற அனுமதிக்காத அரசு, அவர்களை அங்கிருந்தும் விரட்டி
மட்டக்களப்பு மாவட்டத்துக்குள் தள்ளிவிட முயற்சிக்கின்றது.
அதேநேரம், தமிழர்கள் விரட்டியடிக்கப்பட்டு இன்று சிங்களக் குடியேற்றத்
திட்டங்களாக்கப்பட்ட பகுதிகளைச் சூழ படைமுகாம்கள் அமைக்கப்பட்டு அவை
நிரந்தர சிங்களக்கிராமங்களாகிவிட்டன.
விதுரன்
|