|
விடைபெற்றார் "தேசத்தின் குரல்" பாலா அண்ணை: பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் வீரவணக்கம் |
|
|
|
Thursday, 21 December 2006 |
|
தமிழீழத் "தேசத்தின் குரல்" அன்ரன் பாலசிங்கத்தின் புகழுடலுக்கு பல்லாயிரக்கணக்கானோர் இன்று வீரவணக்கம் செலுத்தினர்.
லண்டனின் வடக்குப் பகுதியில் உள்ள அலெக்சாண்ட்றா மாளிகை முன்பாக இன்று புதன்கிழமை காலை லண்டன் நேரம் 8 மணி தொடக்கம் பிற்பகல் 3 மணிவரை பாலா அண்ணையின் புகழுடல் வைக்கப்பட்டது.
உலகம் முழுவதுமிருந்தும் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் குடும்பம் குடும்பமாக வந்து பாலா அண்ணைக்கு வீரவணக்கம் செலுத்தினர்.
ஐரோப்பாவில் உள்ள தமிழர்கள் நாள் முழுமைக்கும் லண்டன் நோக்கி வருகை தந்திருந்தனர்.
நோர்வேயின்
சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம், தமிழ்நாட்டிலிருந்து
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகி சபாபதி மோகன்,
விடுதலைச் சிறுத்தைகள் பொதுச் செயலாளர் தொல். திருமாவளவன் ஆகியோர் பாலா
அண்ணைக்கு வீரவணக்கம் செலுத்தினர்.
இந்நிகழ்வில் உரையாற்றிய நோர்வே சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் தனது உரையில்,
பாலா
எனது நண்பர். 1999 ஆம் ஆண்டு இலங்கையிலிருந்து அவர் இலண்டன் வந்த காலம்
முதல் அவருடன் பழகி வந்தேன். சமாதான முயற்சிகள் முன்நகர்த்தப்பட வேண்டும்
என்று விரும்பியவர் பாலா. யுத்த நிறுத்த ஒப்பந்த காலத்தில் பாலாவின்
வீட்டில் நீண்ட நேரம் நாங்கள் உரையாடினோம். பாலா நல்ல நகைச்சுவையாளர்.
அமைதி முயற்சிகளில் தொடர்புபட்ட இலங்கையின் பல இனத் தலைவர்களுடன் நான்
உரையாடும்போது ஒருபோதும் பொய்யே கூறாத உண்மையான மனிதர் என்று தெரிவித்தனர்
எனக் குறிப்பிட்டார்.
இங்கிலாந்து நேரப்படி மாலை 4 மணியளவில் தமிழீழத் "தேசத்தின் குரல்" பாலா அண்ணையின் புகழுடல் தீயுடன் சங்கமமாகியது.
தமிழீழத்
தாயகத்திலும் மலேசியா உள்ளிட்ட தமிழர் வாழும் நாடுகளிலும் இலண்டனில்
நடைபெறும் இறுதி வணக்க நிகழ்வு அதே நேரத்தில் வீரவணக்க நிகழ்வு
நடைபெற்றது.
|