|
புரந்தார்கண் நீர்மல்கச் சாகிற்பின், சாக்காடு
இரந்துகோள் தக்கது உடைத்து. (அத்தியாயம் 78 படைச்செருக்கு - குறள் 780)
தமக்குச் செய்த நன்றிகளை நினைந்து அரசன்; கண்கள் நீர் பெருகப் போரில் உயிர் நீங்கப் பெற்றால், அந்தச் சாவு இரந்தாவது பெற்றுக்கொள்ளும் தகுதியுடையது.
போர்க்களத்தில் ஆயுதம் ஏந்திக்களமாடிய வீரனுக்குச் சொல்லப்பட்ட இந்தக் குறள் ஆயுதம் ஏந்தாத அரசியல் போராளியாக முப்பதாண்டு காலம் களத்தில் நின்ற 'தேசத்தின் குரல்" பாலாண்ணாவுக்கும் பொருந்தும். பாலாண்ணாவின் சாவு இரந்து பெற்ற சாவு.
தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனுக்கும் பாலாண்ணாவிற்கும் இடையில்
நெருக்கமான உறவு - அண்ணன் தம்பி உறவு - இருந்தது எல்லோருக்கும் தெரியும்.
ஆனால் தலைவர் பிரபாகரன் பாலாண்ணாவின் மறைவு கேட்டு விடுத்த இரங்கல்
உரைக்குப் பின்னரே தலைவருக்கு அவர் மீது வைத்திருந்த அளப்பரிய அன்பு,
நேசம், வாஞ்சை, மதிப்பு மலைபோல் தெரிகிறது.
'எமது தேசத்தின் ஒளிவிளக்கு இன்று அணைந்து விட்டது"
'இவரது மறைவு எனக்கு மாத்திரமல்ல தமிழீழ தேசத்திற்கே இட்டு நிரப்ப முடியாதது"
'துயரத்தின் சுமை என் ஆன்மாவை அழுத்துகிறது. என் உள்ளத்தை உடைத்து,
நெஞ்சத்தைப் பிளக்கிறது. கட்டுக்கடங்காத காட்டாறு போல சீறிப்பாயும்
உணர்ச்சிப் பெருவெள்ளத்தை என்னால் வார்த்தைகளால் கொட்டமுடியாது. மனித
மொழியில் இதற்கு இடமுமில்லை"
'பாலாண்ணையை நான் ஆழமாக நேசித்தேன். விடுதலை இயக்கம் என்ற மாபெரும்
குடும்பத்தில் ஒரு மூத்த தலைமகனாக பிதாமகனாக மூன்று தசாப்தங்கள்
வாழ்ந்தவர்"
'அவர் ஒரு சாதாரண மனிதப்பிறவி அல்ல"
'அவரின் இந்த இலட்சிய உறுதி எனது நெஞ்சத்தைத் தொட்டுநின்றது. அவர் துன்பத்தால் துவண்டபோதெல்லாம் எனது ஆன்மாவும் கலங்கியழுதது"
'எமது இயக்கத்தின் வளர்ச்சியிலும் அதன் இன்றைய விரிவாக்கத்திலும் பாலாண்ணைக்கு ஒரு நிரந்தரமான இடம் இருக்கிறது"
'எமது விடுதலை இயக்கம் தோற்றம்பெற்ற ஆரம்பகாலம் முதல் என்னோடு இருந்து,
எல்லாச் சோதனைகளையும் வேதனைகளையும் சவால்களையும் சங்கடங்களையும்
தாங்கிக்கொண்டவர். எமது அரசியல் இராஜதந்திர முன்னெடுப்புக்களுக்கு
மூலாதாரமாக, முன்னால் நின்று செயற்பட்டவர்"
'பாலாண்ணா உண்மையில் எம்மை விட்டுப் போகவில்லை. அவர் எமது நினைவலைகளில் என்றும் நீங்காத நினைவுகளாக நிலைத்து நிற்பார்"
தலைவர் பிரபாகரனது கண்களில் நீர் பெருக உயிர்நீத்த திரு. பாலசிங்கம்
கொடுத்து வைத்தவர்! அவரது இறப்பு சாதாரண இறப்பல்ல. இரந்து பெற்ற இறப்பு!
தமிழ் சமுதாயத்தில் பொதுப் பணிக்கு பதவி பட்டங்களை எதிர்பாராது தங்களை ஈகை
செய்வோர் குறைவு. இனத்தின் உயர்வுக்கு நாட்டின் உயர்வுக்கு தங்களை ஈகை
செய்வோர் அதை விடக் குறைவு. பெரும்பாலோர் தான் உண்டு தனது குடும்பம்
உண்டு, நெருங்கிய உறவு உண்டு என்று சிறிய வட்டத்திலேயே வாழ்ந்து
மடிகிறார்கள்.
ஐம்;பதுகளிலும் அறுபதிகளிலும் இலங்கையின் அரச சேவையில் உயர் பதவிகளில் பல
தமிழர்கள் நீக்கமற நிறைந்து இருந்தார்கள். பெரும்பாலான அமைச்சுக்களின்
நிரந்தரச் செயலாளர்களாக தமிழர்களே இருந்தார்கள். திணைக்களங்களிலும்
தமிழர்களே இருந்தார்கள்.
கந்தையா வைத்தியநாதன், கே.ஆழ்வாப்பிள்ளை, மாணிக்க இடைக்காடர்,
சி.பாலசிங்கம், எம்.இராசேந்திரா, எம்.திருச்செல்வம், சிவா பசுபதி,
ஸ்ரீகாந்தா, ஆர்.பாஸ்கரலிங்கம் ஆகியோர் அரச இயந்திரத்தின் மூளையாகச்
செயற்;பட்டார்கள். சிங்கள அமைச்சர்கள் எப்போதும் தமிழர்களை தங்களது
நிரந்தர செயலர்களாக வைத்துக் கொண்டார்கள். இதற்கு மூன்று காரணம் இருந்தன.
ஒன்று அவர்களது கடும் உழைப்பு. இரண்டு எஜமான விசுவாசம். மூன்று
இரகசியங்கள் எதிரிகளுக்குக் கசிய விடமாட்டார்கள்.
இந்த உயர்மட்ட தமிழர்கள் பணியில் இருந்து இளைப்பாறியதும் நாட்டை விட்டு
வெளியேறித் தங்கள் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் ஆகியரோடு தங்கள் இறுதிக்
காலத்தைக் கழிக்கப் போய்விடுவார்கள். தமிழ் மக்களைப் பற்றியோ தமிழ்
இனத்தைப் பற்றியோ அவர்கள் கிஞ்சித்தும் கவலைப்படுவதில்லை.
விதி விலக்காகக் கந்தையா வைத்தியநாதன் திருச்கேதீஸ்வர ஆலயத்தை
புதுப்பிக்கும் திருப்பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.
மு.திருச்செல்வம் சொலிசிட்டர் ஜெனரலாக இருந்து ஓய்வு பெற்றதும் நேரே தமிழ்
அரசுக்கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். மற்றவர்கள் நாட்டை விட்டுப்
பறந்தனர்.
திரு. பாலசிங்கம் எழுபதுகளில் பிரித்தானியாவுக்குப் புலம் பெயர்ந்தவர்.
அவர் நினைத்திருந்தால் தனது படிப்பையும் பட்டத்தையும் பயன்படுத்தி நல்ல
தொழிலில் இருந்து கொண்டு காசு பணம் தேடியிருக்கலாம். அந்தப் பணத்தில்
ஒன்றுக்கு இரண்டு வீடுககளை வாங்கி இருக்கலாம். சுருக்கமாகச்
சொல்வதாயிருந்தால் சொகுசாக காலுக்கு மேல் கால் போட்டுக்கொண்டு தான் உண்டு
தனது குடும்பம் உண்டு என வாழ்ந்திருக்கலாம். ஆனால் அவர் அப்படி வாழவில்லை.
எண்பதுகளின் முற்பகுதியில் இருந்து வி.புலிகள் இயக்கத்தோடு தன்னை
இணைத்துக் கொள்கிறார். இயக்கம் கொடுத்த சொற்ப பணத்திலேயே தனது
துணைவியாருடன் சென்னையில் குடும்பம் நடத்துகிறார். கட்டம் கட்டமாகப்
போராளிகளுக்கு அரசியல் வகுப்பு எடுக்கிறார்.
பின்னர் யாழ்ப்பாணத்தில் இருந்த காலத்தில் இந்திய அமைதிப் படையின்
சுற்றுவளைப்புகளுக்குள் அகப்படாமல் ஊர் ஊராகக் கரந்து வாழ்கிறார்.
கட்டாந்தரையில் படுத்துறங்குகிறார். குறித்த நேரத்தில் சாப்பிட முடியாது.
தனது நீரிழிவு நோய்க்கு ஏற்ற மருந்து கிடையாது. உணவும் கிடையாது.
இங்கேதான் அவர் மற்றவர்களிடம் இருந்து மாறுபட்ட அசாதாரண மனிதனாகத் தோற்றம்
பெறுகிறார். மண்ணையும் மக்களையும் மனதார நேசிக்கிறார். தனது நலத்தைவிட இன
நலம் பெரிதென்று நினைக்கிறார்.
நாடிழந்த அல்லற்படும் தமிழ்மக்களது நாட்டை மீளப் பெறும் பெரு வேள்வியில் தன்னை முற்று முழுதாக ஈடுபடுத்திக் கொள்கிறார்.
இந்த ஈகைதான் அவருக்கு இன்று தேசத்தின் குரல் என்ற அதிவுயர் பட்டத்தை பெற்றுக் கொடுத்துள்ளது.
பார் புகழும் பார்த்திபனுக்கு கண்ணன் தேரோட்டியாக மட்டுமல்ல ஒரு நண்பனாகவும் தத்துவாசிரியராகவும் விளங்கினான் என இதிகாசம் சொல்கிறது.
அதே போல் எம் கண்முன்னே தமிழீழத் தேசியத் தலைவருக்கு திரு. பாலசிங்கம் ஒரு
மூத்த அரசியல் போராளியாக, ஒரு மதியுரைஞராக, ஒரு தத்தவாசிரியராக,
எல்லாவற்றுக்கும் மேலாக உற்ற நண்பனாக விளங்கினார்.
பாலாண்ணா இனமானம் மட்டுமல்ல தன்மானமும் படைத்த தலைவர்.
1998 ஆண்டு ஓகஸ்ட் 27 ஆம் நாள் ஒரு போராளியின் திருமணத்துக்கு வேட்டி
கட்டிக் கொண்டு பாலாண்ணா புறப்பட்ட போது அவர் கண்கள் சிறுத்திருப்பதையும்
முகம் அதைத்திருப்பதையும் அடேல் கவனித்தார். இரண்டு கிழமைகளாக அவரது
கண்களும் குதிக்காலும் வீங்கி இருந்தன. அடேல் அந்த அறிகுறிகள் சிறுநீரக
வியாதியின் தோற்றப்பாடாக இருக்குமோ என வேடிக்கையாக சொன்ன போது மருத்துவர்
சூரி வியப்படைந்து கலவரத்தோடு காணப்பட்டார். அடுத்த நாள் பாலா சிறுநீர்
கழிக்கவில்லை என்று அறிந்ததும் அவர் கடும் உடல்நலக் குறைவுக்கு ஆளாகி
இருக்கிறார் என்பது தெரிந்தது. 'பாலா சுகவீனமடைந்து சாவின் விளிம்பை
அடைந்தபோது எமது வாழ்க்கை நிச்சயமற்றதாக மாறியது" என்கிறார் அடேல்.
(சுதந்திர வேட்கை - பக்கம் 566)
பாலாவின் உடல்நிலை மிக விரைவாக சீர்குலைந்தது. வன்னியில் அவருக்குத்
தகுந்த மருத்துவம் செய்ய வசதிகள் போதாது என மருத்துவர்கள்
தெரிவித்தார்கள். பாலா கடும் உடல்நலம் இழந்து விட்டார் என்ற செய்தி
வன்னியில் காட்டுத் தீ போல் பரவியது. தளாபதிகளுக்கு செய்தி
தெரிவிக்கப்பட்டது. தலைவர் பிரபாகரன் தனது துணைவியாரோடு பாலாவை வந்து
பார்த்தார்.
நீண்டகால நீரிழிவு நோயினால் பாலாவின் இடது சிறுநீரகம் முற்றாக முடக்கம்
கண்டிருந்தது. பதினைந்து ஆண்டு கால பொருளாதார மருத்துவ தடை காரணமாக
பாலாவுக்கு சரியான மருந்துகள் கிடைக்கவில்லை. அவரது சிறு நீரகம் முடங்கிப்
போனதற்கு இதுதான் முக்கிய காரணம்.
பாலாவை வன்னியில் இருந்து வைத்தியத்திற்காக வெளிநாடொன்றுக்கு அனுப்புவதை
விட வேறு வழி இல்லை என்ற நிலையில் தலைவர் பிரபாகரன் நோர்வே தூதுவர்
மற்றும் செஞ்சிலுவைச் சங்கத்தோடு தொடர்பு கொண்டார். செஞ்சிலுவைச் சங்க
மருத்துவர் குழு வன்னிக்குச் சென்று பாலாவின் உடல்நிலையைப் பரிசோதனை
செய்தது. அவர்களின் முடிபு 'பாலா உடனடியாக வெளிநாடொன்றுக்கு எடுத்துச்
செல்லப்பட வேண்டும்" என்பதாகும்.
நோர்வே அரசு மற்றும் செஞ்சிலுவைச் சங்கம் பாலாவை பத்திரமாக
வெளிநாடொன்றுக்குக் கொண்டு போவதற்கு ஆட்சித் தலைவர் சந்திரிகாவை அணுகினர்.
பாலா கடுமையான சிறுநீரக நோய்க்கு ஆளாகியிருப்பது சந்திரிகாவுக்கு
எடுத்துச் சொல்லப்பட்டு மனிதாபிமான அடிப்படையில் அவரைக் கொழும்பு ஊடாக
வெளிநாடு கொண்டு செல்லப்படுவதற்கு உதவி கேட்கப்பட்டது. எதிர்கால அமைதிப்
பேச்சுவார்த்தை ஒன்றுக்கு பாலாவின் உயிர் காப்பாற்றப்படுவதின் அவசியம்
பற்றியும் அவருக்கு விளங்கப் படுத்தப்பட்டது. ஸ்ரீலங்கா அரசு அந்த
வேண்டுகோளைக் கரிசனையோடு ஆராய்வதாக வன்னிக்குச் செய்தி வந்தது. தலைவர்
பிரபாகரன் பாலாண்ணாவை அனுப்பி வைப்பதற்கு வேண்டிய ஆயத்தங்களைச் செய்து
கொண்டிருந்தார்.
ஸ்ரீலங்கா அரசுக்கு ஒரு நல்லெண்ண சமிக்கையை விடுக்க நினைத்த தலைவர்
பிரபாகரன், புலிகளால் கைது செய்யப்பட்டுக் காவலில் இருந்த 9 படையினரை
விடுவித்தார்.
நாட்கள் நகர்ந்து கொண்டிருந்தன. முழுசாக 3 மாதங்கள் பறந்தோடி விட்டது.
கொழும்பில் இருந்து நல்ல செய்தி வருமென வழி மேல் விழி வைத்துக்
காத்திருந்த நேரத்தில் சந்திரிகாவும் கதிர்காமரும் சேர்ந்து சில
கோரிக்கைகளை அல்லது உத்தரவாதங்களை முன் வைத்தார்கள். விடுதலைப் புலிகள் -
வட-கிழக்கு நிருவாகத்தை சீர்குலைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது.
அரச சொத்துக்களை தாக்கி அழிக்கக் கூடாது.
வட-கிழக்குக்கு வான் மற்றும் கடல் ஊடாக எடுத்துச் செல்லும் வழங்கல்களுக்க குந்தகம் இழைக்கக் கூடாது.
தடுத்து வைத்திருக்கப்பட்டுள்ள அனைத்துப் போர்க் கைதிகளையும் விடுவிக்க
வேண்டும். (இயக்கம் 250 போர்க் கைதிகளைச் சிறை வைத்திருக்கிறது என அரசு நினைத்தது)
18 அகவைக்குக் குறைந்தவர்களை படையில் இருந்து விடுவித்துப் பெற்றார் உற்றாரிடம் ஒப்படைக்க வேண்டும்.
பாலாவும் அடேலும் சந்திரிகா - கதிர்காமர் விடுத்த கோரிக்கைகளை
புறக்கணித்தார்கள். ஒரு சாதாரண மனிதநேய வேண்டுகோளை நிராகரித்த சந்திரிகா
தமிழர்களது அடிப்படை உரிமைகளை வழங்கி இன மோதலுக்கு எவ்வாறு முற்றுப்
புள்ளி வைக்கப்போகிறார் என்ற கேள்வி எழுந்தது.
தலைவரும் அவரது துணையியாரும் பாலா வீட்டுக்குச் சென்று அவரைப் பார்த்தனர்.
அடேல் தனது கவiலையைத் தலைவருக்கு எடுத்துச் சொன்னார். பாலாவை
வெளிநாடொன்றுக்கு எடுத்துச் செல்லாவிட்டால் அவர் இறப்பது தவிர்க்க
முடியாததாகிவிடும் என்று சொன்னார். அடேலை ஆற்றுப்படுத்திய தலைவர்
பாலாண்ணாவை வெளியில் அனுப்ப தனது சக்திக்கும் வளத்துக்கும் உட்பட்ட
அனைத்தும் செய்யப்படும் என்று உறுதி சொன்னார்.
சனவரி 1999, 23 ஆம் நாள் வி.புலிகளின் கடற்தளமான சாலையில் இருந்து
பாலா-அடேல் இருவரையும் ஏற்றிக் கொண்டு படகுகள் அனைத்துலக கடற்பரப்பில்
தரித்து நின்ற கப்பலை நோக்கி விரைந்தன. பாலாவும் அடேலும் அதில்
ஏற்றப்பட்டார்கள். இரண்டு கிழமை கடுமையான கடல் பயணத்துக்குப் பின்னர்
தாய்லாந்து சென்றடைந்தனர். அங்கிருந்து மீண்டும் பயணப்பட்டு சிங்கப்பூர்
சென்றடைந்தனர். அங்குள்ள பெரிய மருத்துவமனை ஒன்றில் அறுவை மூலம்
பழுதுபட்டு இயங்காது இருந்த பாலாவின் இடது சிறுநீரகம் அகற்றப்பட்டது.
பின்னர் உரிய கடவுச் சீட்டுக்கள் பெறப் பெற்று பாலா - அடேல் இருவரும்
இலண்டன் போய்ச் சேர்ந்தார்கள்.
இலண்டனில் நடந்த மாவீரர் விழாவில் பேசும் போது இந்த நிகழ்வை
நினைவுபடுத்திய பாலாண்ணா தனக்கே உரித்தான நகைச்சுவையோடு ஒரு கேள்வி
கேட்டார் 'எனது மனைநெல க்கும் சந்திரிகா போட்ட நிபந்தனைகளுக்கும் என்ன
சம்பந்தம்?"
உண்மையில் பாலாவின் வாழ்வு வன்னியில் அன்றே முடிந்திருக்கலாம். தலைவரின்
துணிச்சலான முயற்சியால் அன்று அவரது உயிர் காப்பாற்றப்பட்டது. ஆனால் இன்று
புற்றுநோய்க்கு இரையாகிய பாலாண்ணாவை யாராலும் காப்பாற்ற முடியாது
போய்விட்டது. அப்போது வன்னியில் புறங்கண்ட கூற்றுவன் இப்போது இலண்டனில்
வென்று விட்டான்.
-நக்கீரன் (கனடா)-
|