பிரதான பக்கம் arrow கட்டுரைகள் arrow மேற்குலகின் சதிவலையும் விடுதலைப் போரின் புதிய வடிவங்களும் மலையக மக்களின் எழுச்சியும்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English

மேற்குலகின் சதிவலையும் விடுதலைப் போரின் புதிய வடிவங்களும் மலையக மக்களின் எழுச்சியும் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Sunday, 24 December 2006
மேற்குலகின் அரசியல் சித்து வேலைகள் மறுபடியும் தென்னிலங்கையில் ஆரம்பமாகிவிட்டன. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சந்திரிகா அணியையும் ரணிலின் ஐக்கிய தேசியக் கட்சியையும் ஒரு பொது இணக்கப்பாட்டிற்குக் கொண்டு வருவதனூடாக தம் சார்பான பலமானதொரு எதிரணியை உருவாக்க இணைத் தலைமை நாடுகள் விரும்புகின்றன.

அதேவேளை ஏகாதிபத்திய எதிர்ப்புப் பிரசாரம் செய்யும் இனவாத ஜே.வி.பி. யை தம் பக்கம் இழுப்பதற்கான முயற்சிகளையும் ஒரே நேரத்தில் மேற்கொள்கிறது.

இன அழிப்பில் ஒத்திசைவான போக்கைக் கடைப்பிடித்தால் ஏகாதிபத்திய பேய்களுடனும் கூட்டுச்சேர ஜே.வி.பி. தயார். சந்திரிகா ரணில் கூட்டினால் ஏற்படப் போகும் அரசியல் பாதிப்பினை முறியடிக்க கூட்டை உருவாக்கும் அமெரிக்காவின் காலடியில் விழுவதற்கும் ஜே.வி.பி. தயங்கப் போவதில்லை.

ஜனாதிபதி மஹிந்தவுடனான இன மேலாதிக்க கூட்டணிக்கெதிரான இன்னுமொரு கூட்டுச் சக்தி உருவாவதை ஜே.வி.பி. விரும்பாது. அத்தகைய பலமான எதிரணியொன்றின் உருவாக்கம், தமது இருப்பினை அரசியல் சதுரங்கத்தில் பலவீனமடையச் செய்யுமென்றும் ஜே.வி.பி. க்கு புரியும்.

இதேவேளை அமெரிக்காவின் சகுனி வேலைகளை உணர்ந்து கொண்ட ஜனாதிபதி மஹிந்த, ஐ.தே.க. விலுள்ள ஆறு முக்கியஸ்தர்களுக்கு முழுமை பெற்ற உயர் மந்திரிப் பதவிகளை வழங்க முயற்சிக்கிறார். பேராசிரியர் ஜி.எல். பீரிஸிற்கு வெளிநாட்டமைச்சர் பதவியும், கரு ஜயசூரியாவிற்கு பாதுகாப்பு அமைச்சுப் பதவியினையும் வழங்கி, தமது அணியிலுள்ள சந்திரிகா ஆதரவுச் சக்திகளை ஓரங்கட்ட திட்டமிடுவதாகச் செய்திகள் கூறுகின்றன.

இச்செய்தியின் ரிஷி மூலம் எவ்வகையானதாக விருந்தாலும் குறுக்கறுக்கும் அரசியல் கோடுகள் பிக்காசோவின் புரியாச் சித்திரமாகவும் அமையலாம்.

பலமான நிலையிலிருந்தே சந்திரிகாவுடன் இணைவை ஏற்படுத்த ரணில் விரும்புவார். தமது தானைத் தளபதிகள், மஹிந்தவுடன் இணைவதைத்தடுக்கும்படி மேற்குலகிடம் கெஞ்ச வேண்டிய நிர்ப்பந்தம் ரணிலிற்குண்டு.

பேச்சுவார்த்தை என்கிற கால நீட்சித் தந்திரத்தினை செயற்படுத்த முடியாமல் தடுக்கும் சக்தியாகவே ஜே.வி.பி. யை மேற்குலகு கருதுகிறது. ஜே.வி.பி.யை தனிமைப்படுத்துவதை விட, அதனை தம் சார்பாக இழுத்தெடுக்கும் முறைமையை முயற்சிக்கலாம். அது நிறைவேறாத பட்சத்தில், அரசியல் களத்தின் பலவீனமானதொரு நிலையை ஜே.வி.பி. அடைய, எதிரணியைப் பலமாக்கலாம்.

ஜனாதிபதி மஹிந்தவின் அரசாங்கத்தைக் கவிழவிடாமல் முண்டு கொடுக்கும் அதேவேளை, சமாதான முயற்சிகளுக்கு எதிரான போக்கினையும் ஜே.வி.பி. கடைப்பிடிக்கிறது. வெட்டி ஓடி முன்னுக்கு வர, அரசின் ஏகாதிபத்தியத்திற்கு ஆதரவான நகர்வுகளைச் சாடுகிறார்கள்.

அதள பாதாளத்தை நோக்கிச் செல்லும் ஸ்ரீலங்காவின் பொருளாதாரத்தினை தூக்கி நிமிர்த்த இணைத் தலைமை நாடுகளின் பக்கத்துணை அரசிற்கு அத்தியாவசியமாக இருந்தாலும் ஜே.வி.பி., ஹெல உறுமய போன்ற வழுவழுத்த உறவுகளின் இடைவிடாத போராட்ட முன்னெடுப்புக்கள் இராணுவத் தீர்வினை முன்னிலைப்படுத்தும் நிர்ப்பந்தத்தினை ஜனாதிபதி மஹிந்தவிற்கு ஏற்படுத்துகின்றன.

விடுதலைப் புலிகளின் தலைவரின் மாவீரர் தின உரையும், 'தேசத்தின் குரல்" அன்டன் பாலசிங்கத்தின் இழப்பும் சர்வதேச சமூகத்தின் மாற்றுவழி நகர்வுகளை துரிதப்படுத்துமென்கிற கணிப்பில் ஜே.வி.பி. யானது தனது அரசியல் களச் செயற்பாடுகளை வேகப்படுத்தும்.

ரணில் சந்திரிகா இணைவு

சாத்தியப்படாவிட்டாலும் அது ஏற்படப் போவது போன்றதொரு தோற்றப்பாட்டினை ஜே.வி.பி. க்கு சொல்லப்படும் செய்தியாக சர்வதேசம் கருதுகிறது.

அது போன்று ஜனாதிபதி மஹிந்தவின் அரசின் மீது சுமத்தப்படும் இராஜதந்திர அழுத்தமாகவும் இவ்விணைவுச் செய்தியினை கையாள முற்படுகிறார்கள்.

அடுத்த கட்டப் பேச்சுவார்த்தை சடங்கிற்கான தயாரிப்புக்களுக்கு முன்பாக, தென்னிலங்கையில் தம் நலன் சார்பான சக்திகளின் குவிமையம் நிலைகொள்ள வேண்டுமென இணைத் தலைமை நாடுகள் முயற்சித்தாலும் களநிலைமைகள் வேறு திசை நோக்கி வேகமாக நகர்கின்றன.

விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இளந்திரையன் கூறிய வாகரை குறித்த செய்தி இங்கு முக்கியத்துவம் பெறுகிறது.

அதாவது, அரச படைகள், வாகரை மீதான தமது நில ஆக்கிரமிப்பினை ஆரம்பித்தால், அதை முறியடிக்கும் முன்னகர்வுத் தாக்குதல்களை புலிகள் தொடுப்பார்களென்பதே அச்செய்தியாகும்.

முன்னோக்கிய தாக்குதல் போர் நிறுத்த எல்லைக் கோட்டினை இடமாற்றம் செய்யுமென்பதே செய்திக்கான உள்ளார்ந்த விளக்கமாகக் கொள்ளலாம். வாகரைத் துயரினை தனது இறுதி மூச்சோடு கலந்து மரணமடைந்த 'தேசத்தின் குரல்" பாலசிங்கத்திற்கு காணிக்கை செலுத்தும் நிகழ்வாகவும் இது அமையலாம்.

'தேசத்தின் குரல்" மறைந்த சோகத்தினுள் மக்கள் ஆழ்ந்திருக்கும் வேளையிலும் அரச வன்முறைகள் தொடர்ந்த வண்ணமுள்ளன.
குடாநாட்டுத் தென்முனையும் வாகரையும் கொழும்போடு இணைந்து இராணுவ முக்கோணத் தளமொன்றை உருவாக்கியுள்ளது.

தென்முனையில் நாகர் கோவிலும் கிழக்கில் கதிரவெளி வாகரையும் தற்காலிக இராணுவ உணர்திறன் கூடிய மையப் புள்ளிகளாக அரசால் கருதப்படுகிறது.

இம் மையத்திலமைந்த நிலப்பரப்புகளை அண்டிய கடல் பகுதிகளை தமது கட்டுப்பாட்டினுள் கொண்டு வருவதனை நோக்கிய உத்தியாகவே தற்போதைய அரசு வலிந்த தாக்குதல்களை நோக்கலாம்.

கடற்புலிகளின் படை வலுவை பலவீனமடையச் செய்ய முடியாவிட்டாலும் கடற் பகுதிகளையாவது கைப்பற்றலாமென்கிற மாற்றீட்டு உத்திகளை இராணுவம் பிரயோகிக்கின்றது.

முழு அளவிலான பாரிய படை நகர்வுகளை எதிர்கொண்ட, புலிகளின் முறியடிப்புச் சமர்கள், பேரழிவுகளை ஏற்படுத்துவதால், புதிய உத்திகளை வெளியிலிருந்து பெற வேண்டிய சோகமும் அரசிடம் உள்ளது.

களமுனைகளைப் பார்வையிடும் வெளிநாடுகளின் இராணுவப் பிதாமகர்கள், தமது அனுபவ அறிவுரைகளை வழங்கியும், அரச இராணுவம், அழிவுகளையே களத்தில் சந்திக்கின்றன.

இந்நிலையில் மலையக மக்களின் தொடர் வேலை நிறுத்தப் போராட்டங்கள் பாரிய தலைவலியை அரசிற்கு ஏற்படுத்தியுள்ளன. பெருவாரியான பெண்களும் போராட்டத்தில் இணைந்து வீதியில் இறங்கி விட்டார்கள். தமது தலைமைகளின் வர்க்க சமரசத்தையும் மீறி தன்னியல்பாக எழுந்துள்ள மலையக மக்களின் பேரெழுச்சி, வடகிழக்கு தமிழ் பேசும் மக்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட வேண்டும்.

ஒட்டுமொத்த மக்களின் விடுதலை எழுச்சியே புதிய விடியலை உருவாக்கும். பக்கத்தில் நடக்கும் நிகழ்வுகளில் இருந்தாவது பாடம் கற்கலாம். மக்கள் சக்தியின் முன்னால் எந்த ஏகாதிபத்தியங்களின் சித்து விளையாட்டுகளும் செயலற்றுப் போகும் என்பதே வரலாறு விட்டுச் சென்ற செய்தி. 


-சி.இதயச்சந்திரன்-
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2009 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..