|
வடக்கிலிருந்து கிழக்கை துண்டாடிவிட வேண்டுமென்பதில் மகிந்த அரசு மிகவும் தீவிரம் காட்டுகிறது. இதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் தற்போது இந்த அரசு முழு அளவில் முடுக்கிவிட்டுள்ளது. இதனால் அடுத்துவரும் நாட்களில் கிழக்கில் பெரும் போர் வெடிக்கப் போகிறது.
வடக்கு - கிழக்கை, உயர் நீதிமன்றத் தீர்ப்பு மூலம் அரசியல் ரீதியாகப்
பிரித்த அரசு தற்போது கிழக்கிலிருந்து புலிகளை அப்புறப்படுத்துவதன் மூலம்
கிழக்கை முற்று முழுதாக தங்கள் கட்டுப்பாட்டினுள் கொண்டு வர
முயற்சிக்கிறது.
இதற்கு வசதியாகவே கிழக்கில் ஆயுதக் குழுக்களை உருவாக்கி அவற்றை இந்த அரசு
தனது கட்டுப்பாட்டினுள் வைத்திருந்து செயற்படுத்தி வருகிறது. தனது
தேவைக்காகவும் கிழக்கில் தமிழ் அரசியல்கட்சிகளின் செயற்பாடுகள்
இருப்பதாகவும் காண்பிப்பதற்காகவே இந்த ஆயுதக் குழுக்கள் உருவாக்கப்பட்டு
அவற்றை அரசியல் மயப்படுத்தும் முயற்சிகளும் நடைபெறுகின்றன.
தங்கள் தேவைக்கேற்ப இந்த ஆயுதக் குழுக்களை பயன்படுத்தும் விதத்திலேயே அவை
உருவாக்கப்பட்டுள்ளன. தற்போது புலிகளுக்கெதிராக இந்தக் குழுக்களை
செயற்படச் செய்வதும் கிழக்கிலிருந்து புலிகள் வெளியேற்றப்படும் பட்சத்தில்
அரசின் செயற்பாடுகளை எதிர்ப்போரை அடக்கவும் இந்த ஆயுதக் குழுக்களைப்
பயன்படுத்தும் விதத்திலேயே அவை படையினரின் கட்டுப்பாட்டில்
வைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையிலேயே வடக்கு - கிழக்கு பிரிப்பை துரிதப்படுத்தும் முயற்சியில்
அரசு தீவிரமாக இறங்கியுள்ளது. இதன் ஒரு கட்டமாக கிழக்கு மாகாணத்துக்கென
புதிய ஆளுநராக, வடக்கு- கிழக்கு மாகாண ஆளுநர் ரியர் அட்மிரல் மொஹான்
விஜயவிக்கிரம நியமிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
வடக்கு - கிழக்கை உயர் நீதிமன்றம் இரண்டாகப்பிரித்துள்ள அதேநேரம், வடக்கை
தனியாகவும், கிழக்கை மேலும் இரண்டாகவும் பிரிக்க அரசு திட்டமிட்டுள்ளது.
இதன்படி வடக்கு மாகாணத்தின் நிர்வாக மையமாக வவுனியாவும் கிழக்கு
மாகாணத்தின் (மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்கள்) நிர்வாக மையமாக
கல்முனையும் செயற்படும்.
வடக்கு - கிழக்கிலிருந்து மட்டுமல்லாது கிழக்கிலிருந்தும் திருகோணமலையை
தனியாகப் பிரித்து அதனை மத்திய அரசின் முழுமையான கட்டுப்பாட்டினுள் கொண்டு
வரவும் அரசு திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் திருகோணமலையை முழுஅளவில் சிங்கள
மயப்படுத்தும் முயற்சிகளில் அரசு இறங்கவுள்ளது.
திருகோணமலை நகருக்கு தெற்கே மூதூர் உள்ளது. மூதூருக்கு கிழக்கே மிகப்
பெருமளவில் தமிழ் மக்களே வசித்து வந்தனர். சம்பூரை கைப்பற்றும்
நடவடிக்கையெனக் கூறி மூதூர் கிழக்கிலிருந்து 45,000 இற்கும் மேற்பட்ட
மக்கள் விரட்டியடிக்கப்பட்டனர். அவர்கள் அங்கிருந்து தப்பியோடி சுமார் 40
கிலோ மீற்றர் தூரத்தில் வாகரையில் தஞ்சமடைந்திருந்தனர்.
இன்று வாகரையிலிருந்தும் முழுமையாக அவர்கள் விரட்டப்பட்டு
மட்டக்களப்பிற்குள் தள்ளிவிடப்படுகின்றனர். வாகரை மற்றும் அதனை அண்டிய
பகுதிகளைக் கைப்பற்றுவதன் மூலம் திருகோணமலை மாவட்டத்தின் மிகப் பெரும்
பிரதேசத்திலிருந்து தமிழர்களை முழுமையாகவே அப்புறப்படுத்திவிட
வேண்டுமென்பதே அரசின் திட்டமாகும்.
மூதூர் கிழக்கில் 12 இற்கும் மேற்பட்ட தமிழ் கிராமங்களிலிருந்தும்
வெளியேற்றப்பட்ட 45,000 இற்கும் மேற்பட்ட மக்களை அவர்களது சொந்த இடங்களில்
மீளக் குடியேற்ற அரசோ படையினரோ எவ்விதத்திலும் தயாரில்லை என்பதாலேயே
வாகரையிலிருந்து மக்களை வெளியேற்றி மட்டக்களப்பினுள் அவர்களைத் தள்ளிவிடத்
திட்டமிட்டது.
இல்லையேல் வாகரையில் தங்கியிருந்த மூதூர் கிழக்கு மக்களை மீண்டும் மூதூர்
கிழக்கில் அவர்களது சொந்த இடங்களுக்கு திரும்புமாறு அரசும் படைத்தரப்பும்
கூறியிருக்கும். ஆனால், அவர்களை சொந்த இடங்களுக்கு திரும்பவிடாது மேலும்
மேலும் அகதிகளாக்கி, தங்கள் சொந்த மாவட்டத்திலிருந்தே விரட்டி தற்போது
மட்டக்களப்பு மாவட்டத்தினுள் அவர்களை அகதிகளாக்கியுள்ளது.
வாகரை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் மிக நெருக்கமாக அறுபதாயிரத்துக்கும்
மேற்பட்ட மக்கள் தங்கியிருந்த போது அங்கு மிகப் பெரும் இன அழிப்பு
நடைபெற்றது. வாகரைக்கான பாதை மாதக்கணக்கில் மூடப்பட்டு அங்கு உணவு
விநியோகங்கள் நிறுத்தப்பட்டு பெரும் பட்டினி நிலைமை உருவாக்கப்பட்டது.
அதேநேரம், அங்கு மருந்துப் பொருட்களுக்கும் மிகப் பெரும் தட்டுப்பாடுகளும்
ஏற்படுத்தப்பட்டன. உணவுப் பொருட்களின்றியும் மருத்துவ வசதியின்றியும் அந்த
மக்கள் பெரும் அவலங்களைச் சந்தித்து வருகையில் அப்பகுதி நோக்கி மிகக்
கடுமையான ஆட்லறி ஷெல் தாக்குதலும் பல்குழல் ரொக்கட் தாக்குதலும் விமானக்
குண்டு வீச்சும் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு மக்கள் பெருமளவில் கொன்று
குவிக்கப்பட்டனர்.
முழு உலகமும் இதனைக் கண்டித்த போது, புலிகள் அந்த மக்களை மனிதக்
கேடயங்களாகப் பயன்படுத்தி படை முகாம்கள் மீது தாக்குதல்களை நடத்துவதாகவும்
அகதிகள் தங்கியிருக்கும் இடங்களிலிருந்தும் மக்கள் குடியிருப்புகளுக்கு
மத்தியிலிருந்துமே புலிகள் தாக்குதல்களை நடத்திவருவதாக அரசும்
படைத்தரப்பும் பெரும் பிரசாரம் செய்தன.
வாகரைப் பகுதியில் உண்மை நிலையை அறியவிடாது போர் நிறுத்த கண்காணிப்புக்
குழுவும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் அகதிகளுக்கான ஐ.நா. உயர்
ஸ்தானிகராலயமும் தடுக்கப்பட்டன. அதேநேரம், சிங்கள, ஆங்கில ஊடகங்களூடாகவும்
சர்வதேச ஊடகங்கள் மூலமும் முழுஅளவில் பொய்ப் பிரசாரம் முடுக்கிவிடப்பட்டது.
அகதி முகாம்களிலும் அகதிகள் தங்கியிருந்த பாடசாலைகளிலும் தினமும்
குண்டுகள் வீழ்ந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டபோது, புலிகள்
அகதிமுகாம்களின் அருகிலிருந்தும் பாடசாலைகளின் மத்தியிலிருந்துமே
படைமுகாம்களின் மீது தாக்குதல்களை நடத்துவதாக முழு அளவில் பிரசாரம்
செய்யப்பட்டது.
ஆனால், இது உண்மைதானா என்பதை நேரில் கண்டறிவதற்கு கண்காணிப்புக் குழுவினரோ
அல்லது சர்வதேச செஞ்சிலுவைச் சங்கமோ இன்றுவரை அங்கு செல்ல
அனுமதிக்கப்படவுமில்லை, உண்மை நிலை இதுதான் எனக்கூற எந்தவொரு சர்வதேச
அமைப்பும் முன்வரவுமில்லை.
மக்கள் தினமும் கொன்று குவிக்கப்பட்டும் உணவுப் பொருட்களோ மருத்துவ
வசதிகளோ இன்றி அவர்கள் உயிர் தப்ப நாலாபுறமும் ஓடித்திரிந்தபோதும் அவர்கள்
மீதான தாக்குதல்கள் நிறுத்தப்படவில்லை. மாறாக, இந்தத் தாக்குதல்கள்
அதிகரித்தன. இழப்புகளும் பெருமளவில் அதிகரிக்கவே அந்தப்
பிரதேசங்களிலிருந்து உயிர் தப்ப மக்கள் அங்கிருந்து வெளியேற வேண்டிய
கட்டாய சூழ்நிலை ஏற்பட்டது.
அதேநேரம், தொடர்ந்தும் அப்பகுதிகளில் தாக்குதல்களை நடத்திக் கொண்டு,
மக்களைப் புலிகள் மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்துவதாக பிரசாரம் செய்து
அதன் மூலம் புலிகளுக்கு கடும் அழுத்தங்களைக் கொடுத்து வாகரைப்
பகுதியிலிருந்து மக்களை முழுமையாக வெளியேற்றிவிட வேண்டுமென்பதே அரசினதும்
படையினரதும் திட்டமாகும்.
இந்த நிலையில்தான் உயிர் தப்புவதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் கடலாலும்,
காடுகளினூடாகவும் மட்டக்களப்பை வந்தடைந்தனர். இவர்கள் புலிகளின்
கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து இடம்பெயர்ந்து இராணுவக் கட்டுப்பாட்டுப்
பகுதிகளினுள் வருவதற்குக் கூட பாதைகள் திறக்கப்படாத அதேநேரம், மக்கள்
புலிகளின் பிடியிலிருந்து தப்பி இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளினுள்
வருவதாக அரசும் படைத்தரப்பும் தென்பகுதி ஊடகங்களும் பெரும் பிரசாரம்
செய்து வருகின்றன.
அகோரத் தாக்குதலிலிருந்து உயிர் தப்புவதற்காக மக்கள் தப்பியோடுவதை
புலிகளுக்குக் கிடைத்த பெரும் தோல்வியென்றும் அரசுக்கும்
படைத்தரப்புக்கும் கிடைத்த பெரும் வெற்றியென்பது போன்றும் பெரும்
பிரசாரங்கள் செய்யப்படுகின்றன.
இந்த மக்கள் படையினரின் கொடூர தாக்குதல்களில் கொல்லப்பட்டபோதும்
மாதக்கணக்கில் உணவுப் பொருட்களும் மருந்துப் பொருட்களும் தடுத்து
நிறுத்தப்பட்ட போதெல்லாம் மூச்சே விடாத தென்பகுதி ஊடகங்கள் அந்த மக்கள்
இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வந்தபோது, மிகப் பெரும்
பிரசாரத்தில் இறங்கியதுடன் மக்கள் புலிகளை வெறுத்தும் படையினரை நாடி ஓடி
வருவது போன்றும் பிரசாரம் செய்து வருகின்றன.
இந்த மக்கள் 2004 இல் ஏற்பட்ட கடல்கோளால் மிகமோசமாகப் பாதிக்கப்பட்டு
இன்று வரை எதுவித உதவிகளுமின்றியிருந்தவர்கள். இவர்களே இன்றும்
வாகரையிலிருந்து விரட்டப்பட்டு தற்போது மட்டக்களப்பில் பாடசாலைகளிலும்
கோயில்களிலும் கொட்டில்களிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் படைமுகாம்கள் அனைத்தும் மக்கள்
குடியிருப்புகளுக்கு மத்தியிலேயே உள்ளன. மக்கள் குடியிருப்புப்
பகுதிகளிலிருந்தே படையினர் புலிகளின் பகுதிகளை நோக்கி இரவு பகலாக கொடூர
ஷெல் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். அதேநேரம், புலிகள் பதிலுக்கு
படைமுகாம்கள் மீது கண்மூடித்தனமாக ஷெல் தாக்குதல்களை நடத்துவதில்லை.
ஏனெனில் படைமுகாம்கள் அனைத்துமே தமிழ் மக்களின் குடியிருப்புகளுக்கு
மத்தியிலேயே உள்ளன. இந்தப் படைமுகாம்கள் மீது மேற்கொள்ளும் தாக்குதல்
சற்று தவறிவிட்டால் அது மக்கள் குடியிருப்புப் பகுதிகளில்
வீழ்ந்துவிடுமென்பது புலிகளுக்கு தெரியுமென்பதால் புலிகளால் படைமுகாம்கள்
மீது கண்டபடி ஷெல் தாக்குதலை நடத்த முடியாது.
அவ்வாறு ஷெல் தாக்குதலை நடத்தி அதனால் பொதுமக்கள் கொல்லப்பட்டால், `மக்கள்
மத்தியில் படைமுகாம்களிருப்பதாலேயே இவ்வாறான நிலையேற்பட்டது. ஒன்றில்
மக்கள் குடியிருப்புக்கு மத்தியிலிருந்து படைமுகாம்களை அகற்றுங்கள் அல்லது
படைமுகாம்களுக்கு அருகிலிருந்து மக்களை வெளியேற்றுங்கள்' எனக்
கூறிவிடலாம். ஆனால் எந்த மக்களைத் தாங்கள் பாதுகாக்க வேண்டுமோ அந்த
மக்களுக்கெதிராக புலிகளால் எப்படித் தாக்குதல் நடத்த முடியும்?
இதனை நன்குணர்ந்தே அரசும் படைத்தரப்பும் தமிழ் மக்களின்
குடியிருப்புகளுக்கு மத்தியில் படை முகாம்களை அமைத்து புலிகளின் பகுதிகள்
மீது கண்மூடித்தனமான தாக்குதல்களை நடத்துகின்றன.
கொல்லப்படுபவர்களெல்லோரும் தமிழ் மக்களென்பதால் அது குறித்து அரசுக்கோ
படைத்தரப்புக்கோ எதுவித கவலையுமில்லை.
இந்த நிலையில் தான் சர்வதேச ஊடகவியலாளர் ஒருவர் புலிகளின் இராணுவப்
பேச்சாளர் இளந்திரையனிடம் இதுபற்றிக் கேட்டார். வாகரையிலிருந்து
மக்களெல்லோரும் வெளியேறி இன்று இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள்
வருகிறார்களே, அவர்களெல்லோரும் புலிகளை வெறுத்தே வருவதாக அரசும்
படைத்தரப்பு கூறுகின்றனவே இதுபற்றி என்ன கூறுகிறீர்களென்று?
இளந்திரையன் இந்தக் கேள்விக்கு தெளிவாகப் பதிலளித்தார். வடக்கு -
கிழக்கில் தான் மக்கள் குடியிருப்பு பகுதிகள் மீது ஷெல் தாக்குதலை
நடத்தியும் விமானக் குண்டு வீச்சை நடத்தியும் மக்களை கொன்று குவித்தால்
அவர்கள் உயிர் தப்ப தங்கள் சொந்த இடங்களை விட்டு
தப்பியோடுவார்களென்றில்லை. இதே படையினர் இதேபோன்ற தாக்குதலை கொழும்பிலும்
கண்டியிலும் மேற்கொண்டாலும் அந்த மக்களும் உயிர் தப்பி ஓடத்தான்
செய்வார்கள். இது இயற்கையென்றார்.
இவ்வாறானதொரு நிலையில் தான் கிழக்கிலிருந்து புலிகளை முற்றாக வெளியேற்ற
பாரிய தாக்குதல்களைத் தொடுக்கப் போவதாக அரசும் படைத்தரப்பும்
கூறிவருகின்றன. இதற்கான ஆயத்தங்களிலும் படைத்தரப்பு ஈடுபட்டு வருகிறது.
இது குறித்து கண்காணிப்புக் குழுவும் எச்சரித்துள்ளதுடன், தற்போது வெறும்
காகிதத்திலேயே இருக்கும் போர் நிறுத்த உடன்பாடானது இவ்வாறானதொரு தாக்குதல்
நடைபெற்றால் முழுமையாகவே முறிந்துவிடுமெனக் கூறியுள்ளது.
அதேநேரம் கிழக்கில் படையினர் தங்கள் மீது பாரிய தாக்குதலை நடத்தத்
திட்டமிட்டு வருவது குறித்து புலிகளும் எச்சரித்துள்ளனர். இவ்வாறானதொரு
தாக்குதலானது தங்களுக்கெதிரான முழு அளவிலான யுத்தப்
பிரகடனமாகவேயிருக்குமெனவும் இது முழு நாட்டையும் மிகப் பெரும்
யுத்தத்திற்குள்ளும் பேரழிவுக்குள்ளும் தள்ளிவிடுமெனவும் எச்சரித்துள்ளனர்.
அத்துடன் இவ்வாறானதொரு பாரிய தாக்குதலுக்கு படைத் தரப்பு தயாராகிவிட்டதால்
அவர்கள் தங்கள் மீது பாரிய தாக்குதலைத் தொடுக்கும் வரை தாங்கள் பார்த்துக்
கொண்டிருக்கப் போவதில்லையென்றும் அதற்கு முன்கூட்டியே தாக்குதல்கள்
நடத்தப்படுமெனவும் எச்சரித்துள்ளனர்.
கிழக்கிலிருந்து புலிகளை அப்புறப்படுத்தும் தாக்குதலாகவே இது இருக்குமென
அரசும் படைத்தரப்பும் கூறியுள்ள அதேநேரம் இவ்வாறானதொரு படை நடவடிக்கை முழு
நாட்டையும் முழு அளவிலான போருக்குள் தள்ளிவிடுமென புலிகள்
எச்சரித்துள்ளதன் மூலம் இனிவரும் தாக்குதல்கள் வடக்கு - கிழக்கிற்கு
வெளியேயும் பெரியளவில் இடம்பெறப்போவதை புலிகள் உணர்த்தியுள்ளனர்.
அரசு இந்தப் படை நடவடிக்கைக்கு தயாராகிவிட்டதை அதன் அவசர செயற்பாடுகள்
தெளிவாக உணர்த்தியுள்ளன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான சந்திப்பில்,
வடக்கு - கிழக்கு பிரிப்பென்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் இணைந்த வடக்கு
- கிழக்கிற்குள்ளேயே தீர்வென்றும் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் கூறிய
சில மணிநேரத்தினுள், கிழக்கு மாகாணத்துக்கென புதிய ஆளுநரை நியமித்து
இந்தியாவுக்கு இலங்கை அரசு எச்சரிக்கையொன்றை விடுத்துள்ளது.
வடக்கு - கிழக்கை அரசியல் ரீதியிலும் இராணுவ ரீதியிலும் பிரித்து
கிழக்கிலிருந்து புலிகளை வெளியேற்றி கிழக்கில் அவசர அவசரமாக ஒரு தேர்தலை
நடத்தி அங்கு தங்கள் முழுமையான அதிகாரத்தை நிலைநாட்டிவிட வேண்டுமென்பதில்
இந்த அரசு மிகத் தீவிரம் காட்டுகிறது. இது தமிழ் மக்களை மிக மோசமாகச்
சீண்டுமொரு செயலாகும்.
வடக்கு - கிழக்கில் எப்படியும் படை நடவடிக்கையை மேற்கொள்ளலாமெனக் கருதும்
அரசுக்கு புலிகள் பெரும் அதிர்ச்சிகளைக் கொடுப்பார்களென அனைவரும்
எதிர்பார்க்கின்றனர். அண்மைக் கால நிகழ்வுகள் கூட அதனை தெளிவாக்குகிறது.
முழு அளவிலான போர் மூலம் வெற்றிகளைப் பெற்று விட்டால் இனப்பிரச்சினைக்கு
அரசியல் தீர்வெதனையும் காணத் தேவையில்லையென்பதே இந்த அரசின் முழுமையான
நோக்கமாகும். இதற்கேற்பவே இராணுவ நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் இந்த அரசு
செயற்படுகிறது.
கிழக்கிலிருந்து புலிகளை முதலில் அப்புறப்படுத்திவிட்டால் பின்னர் வடக்கு
பற்றி சிந்திக்கலாமென அரசு கருதுகிறது. இதேநோக்கத்துடன் தான் கடந்த சில
மாதங்களுக்கு முன்னர் வாகரையிலும் முகமாலையிலும் பாரிய படை நடவடிக்கைகள்
மேற்கொள்ளப்பட்டு அவை படுதோல்வியில் முடிவடைந்தன. இதனை அரசு மறந்துவிட்டது
போன்றே தென்படுகிறது.
இனிவரப் போகும் போர் இறுதிப் போருக்கான தொடக்கமாகவேயிருக்கும். அது
இனிவரும் காலத்தில் சமாதான முயற்சிகளெல்லாவற்றுக்கும் முற்றுப் புள்ளி
வைத்துவிடுமென்பதுடன் இலங்கையின் தலைவிதியையும் அது தீர்மானிக்குமென்பதில்
ஐயமில்லை.
-விதுரன்-
|