பிரதான பக்கம் arrow ஆசிரியர் தலையங்கம் arrow தென்னிலங்கை ஒருமித்துஒரு முடிவுக்கு வரவேண்டும்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English

தென்னிலங்கை ஒருமித்துஒரு முடிவுக்கு வரவேண்டும் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Friday, 30 September 2005

 ஜனாதிபதித் தேர்தலை ஒட்டி தமது தேர்தல் விஞ்ஞா பனத்தை ஐக்கிய தேசியக் கட்சித் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவரும், பிரதான வேட்பாளர்களுள் ஒருவருமான ரணில் விக்கிரமசிங்க வெளியிட்டிருக்கின்றார். அதில் அவர் சுட்டிக்காட்டி யுள்ள ஒரு விடயம் குறிப்பிடத்தக்கது.

"பிரிவினைக்கு முற்றுப்புள்ளி' என்ற உபதலைப்பில் அந்தத் தேர்தல் விஞ்ஞாபனத்தில், கடந்த கால அரசியல் குறித்து அவர் பிரஸ்தாபித்திருக்கின்றார்.
""வடக்கு கிழக்குப் பிரச்சினைக்குக் கடந்த காலத்தில் மாவட்ட அபிவிருத்திச் சபை மூலம் தீர்வு காணுவதற்கு வாய்ப்பு இருந்தது. பின்னர் இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் மூலம் தீர்வு காணக் கூடிய சந்தர்ப்பம் இருந்தது. அதன் பின்னர் மாகா ணசபை மூலம் இந்தப் பிரச்சினையைத் தீர்க்கும் நிலைமை இருந்தது. ஆனால், தெற்கில் வாழும் நாம் பிரிந்திருந்ததால் சகல சந்தர்ப்பங்களும் நழுவிவிட்டன.'' என்கிறார் தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் ரணில்.
இதைத்தான் கடந்த வருடத்துக்கு முந்திய வருடம் நவம்பரில் தாம் நிகழ்த்திய மாவீரர் தின உரையில் மிக விளக்கமாகவும் மிகத் தெளிவாகவும் எடுத்துரைத்திருந்தார் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன்.
""காலங்காலமாகத் தமிழருக்கு உரிமையை மறுத்துவரும் சிங்கள இனவாதத்தின் முகமூடி கிழிந்துவிட்டதால் அதன் உண் மையான அசிங்கமான முகத்தை உலகம் காணக்கூடியதாக இருக்கின்றது. முடிவில்லாத ஒரு துன்பியல் நாடகமாகத் தமிழரின் இனப்பிரச்சினை தொடர்கின்றது. எமது பிரச்சினைக்குத் தீர்வு காண ஆளுங்கட்சி முயற்சிப்பதும், எதிர்க்கட்சி எதிர்ப்பதும், பின்பு எதிர்க்கட்சி ஆளுங்கட்சியாக மாறி மீண்டும் அதே முயற் சியும் அதே எதிர்ப்புமாக, இந்தச் சிங்கள அரசியல் வரலாற்று நாடகம் தொடர்ச்சியாக ஒரே பாணியில் கடந்த ஐம்பது வருடங்களுக்கு மேலாக மேடையேறி வருகின்றது. இலங்கையில் மாறிமாறி ஆட்சிப்பீடம் ஏறும் இரு பெரும் சிங்கள அரசியல் கட்சிகளுமே தமிழர்களுக்கு விரோதமான இந்த விபரீத நாடகத்தின் இயக்கு நர்கள். இந்த இனவாத நாடகத்தின் கதாநாயகர்கள் காலத்திற்குக் காலம் மாறியபோதும் கதையின் கருப்பொருள் மாறவேயில்லை. இப்போது கொழும்பில் உருவாகியிருக்கும் அரசியல் நெருக்கடி யும் இந்த அபத்த நாடகத்தின் அப்பட்டமான வெளிப்பாடு தான். தமிழர்களைப் பகடைக் காய்களாகப் பாவித்து ஆடப்படும் இந்தச் சதுரங்க விளையாட்டின் எதிர்விளைவாக எத்தனையோ சமரச முயற்சிகள் முறிந்து போயின; எத்தனையோ உடன்பாடு கள் கிழித்தெறியப்பட்டன; எத்தனையோ ஒப்பந்தங்கள் செய லிழந்து செத்துப்போயின. இதனாலேயே தமிழரின் பிரச்சினை தீர்வின்றித் தொடர்கின்றது. காலத்தால் மோசமாகித் தமிழரின் அவல வாழ்க்கை தொடர்கின்றது.
இவ்வாறு சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தலை வர் வே.பிரபாகரன் சுட்டிக்காட்டிய விடயத்தை வேறு வார்த்தை களில் இப்போது கூற முனைகின்றார் ரணில் விக்கிரமசிங்க. இதுதான் யதார்த்தம்; உண்மையும் கூட.
தலைவர் பிரபாகரன் கூறியதுபோல கதாபாத்திரங்கள் கதா நாயகர்கள் மாறுகிறார்கள். ஆனால், அந்த அபத்த நாடகத்தின் கருப்பொருளும், கதையும் மாறப்போவதேயில்லை.
கடந்த பத்தாண்டுகளுக்கு மேல் கதையின் முக்கிய பாத்திரங்களாக இருந்த ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க என்ற இரு பாத்திரங் களில் சந்திரிகா குமாரதுங்க இன்னும் ஏழு வாரங்களில் வேடத் தைக் கலைத்து, நாடக மேடையிலிருந்து இறங்கி, ஒதுங்கி விடு வார். களத்தில் ரணிலோடு, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ என்ற புதிய கதாபாத்திரம் முன்னுக்குத் தள்ளப்படும். அதன் பின்னரும் அபத்த நாடகம் இதே அபஸ்வரத்துடன் தொடரத்தான் போகின்றது.
இந்த அவல நாடகத்தின் கதையை மாற்றியமைப்போம் என்பதுதான் ரணிலின் இப்போதைய அழைப்பு.
இதே அழைப்பைத்தான் 1994இல் தாம் ஆட்சிப்பீடமேறியபோதும், பின்னர் 2000ஆம் ஆண்டில் தன்னிச்சையாக ஓர் அர சமைப்புத் திட்ட நகலை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த சமயத்திலும் ஜனாதிபதி குமாரதுங்க விடுத்தார். ஆனால், அழைப்புக்கு அப்பால் எதுவுமே நடக்கவேயில்லை. தென்னிலங்கையில் இணக்கம் ஏற்படவேயில்லை.
ரணில் விக்கிரமசிங்கவோ, மஹிந்த ராஜபக்ஷவோ இந்த இருவரில் யார் இம்முறை வென்றாலும் அவர் ஆட்சிப்பீடம் ஏறி, அதிகாரத்தைக் கைப்பற்றியதும் அவரும்கூட இப்படியான அழைப்பை தன்பங்குக்கும் வெளியிடுவார் என்பதும் எதிர்பார்க்கத்தக்கதுதான்.
ஆனால், இத்தேர்தல் முடிவை அடுத்து உடனடியாகக் கையோடு வரக்கூடிய பொதுத் தேர்தலைத் தமக்குச் சாதகமாக மாற்றுவதற்காகவும், அதிகாரத்தில் ஏறியுள்ள ஜனாதிபதியின் காலை இழுத்து விழுத்துவதற்குமாக, இத்தேர்தலில் தோற்ற தரப்பு "மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறியதுபோல' இனவாதப் பிசாசாக மாறி, மேலாண்மைவாத முருங்கையில் ஏறும்.இதுதான் நடக்கப் போகின்றது.
மாவட்ட அபிவிருத்தி சபையையோ, அல்லது அதன் பின்னர் மாகாண சபையையோ வழங்கி, பிரச்சிøயைத் தீர்த்துக் கொள்வதற்கு எமக்கு முன்னர் இருந்த வாய்ப்பை தென்னிலங்கைய ரான நாம் பிரிந்து நின்றதால் இழந்தோம் என்று இப்போது புலம் பும் ரணில் விக்கிரமசிங்க போன்றோர், இன்னும் கொஞ்சக்காலம் சென்று "சமஷ்டி முறையைக் கொடுத்தும் இனப்பிரச்சினையைத் தீர்த்திருக்கலாம். அதையும் தவறவிட்டுவிட்டோம்.' என்று மன வருத்தப்படவேண்டி இருக்கும். தென்னிலங்கை அரசியல்போக்கு அத்தகைய எதிர்காலத்தைத்தான் அதற்குத் தரப்போகின் றது என்பது நிதர்சனமாகிவருகின்றது.
சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வு மூலம் இப்பிரச்சினையைத் தீர்க்க முடியாமல்போனால் பிரிவினை தவிர்க்க முடி யாததாகும்.
அந்த நிலையில், தென்னிலங்கை வருந்துவதோ, அதைத் தடுப்பதற்கு முயற்சிப்பதோ "குதிரை ஓடிய பின்னர் லாயத்தை மூட முனையும் செயலாக' இருக்கும். அல்லது "கண்கெட்ட பின்னர் சூரிய நமஸ்காரம் செய்ய முயலும்' வேலையாகிவிடும்.
ரணில் சுட்டிக்காட்டியபடி ஏதோ ஒரு பக்கத்தில் ஏதோ ஒரு முடிவில் தென்னிலங்கை ஒன்றுபடவேண்டும். தமிழரின் நியாயமான அபிலாஷைகளைத் தீர்க்கும் ஒரு திட்டத்துக்கு ஒன்றுபட்டு இணங்கவேண்டும். தவறினால் வாய்ப்பைக் கோட்டை விட்டுவிட்டு வருந்த வேண்டி நேரும்.


uthayan
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..