|
கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் தலைநகர் கொழும்பில் வைத்து கடத்திச் செல்லப்பட்டு இன்றுடன் சரியாக ஒருமாதம் கடந்து விட்டது. பேராசிரியரின் நிலை குறித்து ஏங்கித் தவித்துக் கொண்டிருக்கும் குடும்பத்தவர்களும் அவரின் நலன்களிலும் பாதுகாப்பிலும் அக்கறைகொண்ட கல்விச் சமூகமும் மனித உரிமைகள் அமைப்புகளும் அவர் பத்திரமாக விடுவிக்கப்பட வேண்டும் என்று தொடர்ச்சியாக விடுத்துவரும் வேண்டுகோள்களுக்கு இதுவரை எந்தப்பயனும் கிடைக்கவில்லை
அவரின் கடத்தல் தொடர்பாக பொலிஸார் மேற்கொண்டுவரும் விசாரணைகளில் முன்னேற்றம் காணப்படவில்லை. இந்நிலையில், பேராசிரியரின் குடும்பத்தினர் அவரை விடுவிக்குமாறு மீண்டும் வேண்டுகோள் விடுத்திருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது. குடும்பத்தினர் சார்பில் வேண்டுகோளை விடுத்த அவரது மருமகன் டாக்டர் எம்.மலரவன், கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பதவியில் இருந்து பேராசிரியர் பதவி விலகுவதை குடும்பத்தினர் உறுதி செய்து கொள்வர் என்று உத்தரவாதமும் அளித்திருக்கிறார்.
பேராசிரியர் ரவீந்திரநாத் கொழும்பு -7 வித்யா மந்திரயவில் விஞ்ஞான முன்னேற்றத்துக்கான இலங்கைச் சங்கத்தின் வருடாந்தக் கூட்டத்தொடரில் கலந்து கொள்வதற்காகச் சென்றவேளையிலேயே கடந்த மாதம் 15 ஆம் திகதி கடத்திச் செல்லப்பட்டிருந்தார். கடத்தல் சம்பவம் இடம்பெற்ற சில தினங்களில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவைச் சந்தித்த குடும்பத்தினர் பேராசிரியரின் பதவிவிலகலை ஏற்றுக்கொள்ளுமாறு அவரிடம் வேண்டுகோள் விடுத்திருந்ததாகவும் தெரியவந்தது. குடும்பத்தினரைப் பொறுத்தவரை, பேராசிரியரின் பதவியைப் பற்றி கிஞ்சித்துமே அக்கறை கிடையாது. அவர்களுக்கு வேண்டியதெல்லாம் பேராசிரியர் பத்திரமாக தங்களுடன் மீண்டும் இணைய வேண்டும் என்பதைத் தவிர, வேறு ஒன்றுமேயில்லை.
பேராசிரியர் ரவீந்திரநாத் கடந்த அக்டோபரிலேயே தனது பதவி விலகல் கடிதத்தை பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் தலைவருக்கு அனுப்பி வைத்தபோதிலும், அக்கடிதம் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. பல்கலைக்கழக உபவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் மானிய ஆணைக்குழுவுக்கு உரியதல்ல என்பதே பதவி விலகல் கடிதம் ஏற்றுக் கொள்ளப்படாதமைக்கு கூறப்பட்ட காரண மாகும். ஜனாதிபதியிடமே பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பதவிவிலகல் கடிதத்தை கையளிக்க வேண்டும் என்றால், பேராசிரியர் ரவீந்திரநாத் விடுதலை செய்யப்படும் பட்சத்தில், அவர் பதவியிலிருந்து விலகுவதை உறுதிசெய்வதாகக் கூறியிருக்கும் குடும்பத்தினர் தங்கள் உத்தரவாதத்தின் பிரகாரம் செயற்படுவார்கள் என்பது நிச்சயம். தனது பதவிவிலகல் கடிதம் மானிய ஆணைக்குழுவினால் ஏற்றுக்கொள்ளப்படாத நிலையில் கொழும்பில் இருந்தவாறே கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தருக்குரிய பணிகளை (மானிய ஆணைக்குழுவின் தலைவரின் வேண்டுகோளுக்கிணங்க) பேராசிரியர் ரவீந்திரநாத் செய்துகொண்டிருந்தமை தான் அவர் கடத்திச் செல்லப்பட்டதற்கான காரணமாக இருக்குமானால், இனிமேலும் அவரை விடுவிக்காமல் இருப்பதற்கு எந்தக் காரணமும் இல்லை.
இலங்கைத் தமிழ்ச் சமூகத்தின் முக்கியமான கல்விமான்களில் ஒருவர் தலைநகரில் பலத்த பந்தோபஸ்துடன் கூடிய பகுதியொன்றில் வைத்துக் கடத்திச் செல்லப்பட்டு ஒருமாதம் கடந்துவிட்ட நிலையிலும்கூட, அவரின் நிலை குறித்து எந்தவொரு தடயத்தையுமே அறியமுடியாதவர்களாக பொலிஸார் இருக்கிறார்கள். உபவேந்தர் என்றவகையில் தனது உயிருக்கு அடிக்கடி விடுக்கப்பட்டுவந்த அச்சறுத்தல்கள் குறித்து பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவுக்கு பேராசிரியர் ரவீந்திரநாத் முறைப்பாடுகளை செய்திருந்தார். பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷவுக்கும் பேராசிரியர் தனக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்கள் குறித்து கடிதமூலம் முறைப்பாடு செய்ததாக குடும்பத்தவர்கள் கூறுகிறார்கள். அவ்வாறு இருந்தும்கூட, அவருக்கு உகந்த பாதுகாப்பை வழங்க நடவடிக்கை எதுவுமே எடுக்கப்படவில்லை. அதுவே அவரின் இன்றைய நிலைக்கும் அதன் விளைவாக குடும்பத்தவர்களின் கலக்கத்துக்கும் காரணமாகும். மீண்டும் அவர்கள் விடுத்திருக்கும் உருக்கமான வேண்டுகோளுக்கு உரிய பலன் கிடைக்க வேண்டும் என்பதே எமது நம்பிக்கையும் எதிர்பார்ப்புமாகும்.
thinakkural
|