|
ஈழநாதத்தின் விநியோகப் பணியினை மேற்கொண்டு வந்த மற்றுமொரு பணியாளன் நேற்று சிறிலங்காப் படைத்தரப்பு மற்றும் தேசவிரோதக் கும்பல்களின் கூட்டுச் சதிமுயற்சியின் காரணமாக சுட்டுக் கொல்லப்பட்டிருக்கின்றார்.
ஈழநாதத்தின் பணியாளரான நாட்டுப் பற்றாளர் அரசகுமார் கடந்த யூன் 26ம் திகதி அம்பாறை மாவட்டத்திற்கு விநியோகப் பணிக்காகச் சென்ற போது நிந்தவூர்ப்; பகுதியில் சுட்டுக்கொல்லப்பட்டார். அச்சம்பவம் நடந்து மூன்று மாதங்கள் நிறைவடைந்த நிலையில் மட்டக்களப்பு நகரில் மற்றுமொரு சம்பவம். வழமையாக தமது விநியோகப்பணிக்காக ஈழநாதம் இதழ்களை எடுத்துச் சென்ற கொக்கட்டிச்சோலையைச் சேர்ந்த ஜோக்குமார் என்ற இந்தப்பணியாளன் கொடூரமாக கோழைகளினால் சுடப்பட்டுள்ளார். இது பத்திரிகை ஜனநாயகத்திற்கு விடுக்கப்பட்ட சவால். இந்தச் சம்பவம் நடந்த இடம், இதற்கு முன்னர் நடந்த சம்பவங்களையும் அடிப்படையாக வைத்து நோக்குமிடத்து இக்கொலைக்கான முழுக்காரணத்தையும் படைத்தரப்பே ஏற்கவேண்டும். ஏனெனில் சம்பவம் நடந்தஇடம் சிறிலங்கா அரசின் உயர் பாதுகாப்புப் பிரதேசமான நகரப்பகுதியாகும். படையினர், பொலிசார் வீதிகளில் குவிக்கப்பட்டும் சோதனைக் கெடுபிடிகளில் ஈடுபட்டு வரும் நிலையில் படைத்தரப்பு தவிர்ந்த அல்லது படைத்தரப்புக்குத் தெரியாமல் எவரும் இவ்வாறு கொலை செய்து விட முடியாது என்பதை இங்கு சுட்டிக்காட்டுகிறோம். இது தவிர அண்மையில் பட்டிருப்பு மற்றும் மண்முனை துறையூடாக படையினர் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வினியோகத்திற்காக பத்திரிகைகள் எடுத்துச் செல்லப்படும் போது சோதனைச் சாவடியில் வைத்து படைத்தர்பினரால் திருப்பி அனுப்பப்பட்டனர். பின்னர் இது தொடர்பாக போர் நிறுத்தக் கண்காணிப்புக்குழு மற்றும் தமிழ் தேசிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதன் காரணமாக மீண்டும் படைத்தரப்பு அனுமதி வழங்கியது. நேற்று துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் நடைபெறுவதற்கு முன்னதாகவுள்ள நாட்களில் மட்டக்களப்பு நகரிலுள்ள சிலரிடம் விநியோகப் பணியாளரான ஜோக்குமார் பற்றி விசாரித்துள்ளனர். எனவே இந்தக் கொலைக்கான முழுப்பொறுப்பையும் சிறிலங்காப் படைத்தரப்பே ஏற்கவேண்டும். ஈழநாதம் மட்டக்களப்பு பதிப்பு கடந்த ஒன்றரை வருடங்களாக தமிழ் தேசியத்துக்காக குரல் கொடுத்து வருகின்றது. அத்துடன் தமிழ் பேசும் சமூகங்களிடையே நல்லுறவை வளர்ப்பதற்கும் விழிப்போடு செயற்பட்டு வருகின்றது. எத்தனை சவால்கள், இடர்கள், சோதனைகள் வந்தாலும் ஈழநாதத்தின் பணி மௌனித்து விடமாட்டாது. விநியோகப் பணியாளர்களை சுடுவதாலோ அல்லது படைக்கட்டுப்பாட்டுப் பகுதிக்கான விநியோகத்தை தடை செய்வதன் மூலமோ ஈழநாதத்தின் வரவை நிறுத்திவிட முடியாது. இழப்புக்களிலிருந்தும், துயரங்களிலிருந்தும் அது புரிய வேண்டியதைப் புரிந்து கொண்டு தமது வரவை மேலும் உத்வேகத்துடன் தொடர்ந்து செல்லும் என்பதை தமிழ் தேசியத்துக்கு எதிரான சக்திகள் புரிந்து கொள்ள வேண்டும். இதேவேளை ஊடகத்துறை இன்று மிகப் பெரியதொரு சவாலை, அச்சுறுத்தலை எதிர்நோக்கியிருக்கும் காலமிது! சிறிலங்கா அரசு தமிழ் தேசியத்திற்கு எதிரான சக்திகளுக்கு தமது அரச ஊடகங்களில் களமமைத்துக் கொடுத்துள்ளன. அதேவேளை தமிழ்த் தேசியத்தை நேசிக்கின்ற குரல் கொடுக்கின்ற ஊடகங்களைக் கொச்சைப்படுத்துவதுடன் கொலைக் கலாசாரத்தையும் கட்டவிழ்த்து விட்டு ஜனநாயக நாடு என சர்வதேச சமூகத்தில் தம்மை அடையாளப்படுத்த நினைக்கின்றனர். எனவே அரசும் படைகளும் தொடர்ச்சியாக ஊடகங்களுக்கும், ஊடகத்துறை சார்ந்தோருக்கும் இழைத்து வரும் அநீதியை கொதித்தெழுந்து எதிர்க்கவேண்டும். ஈழநாதத்தின் வரவை நிறுத்தமுனையும், இது போன்ற சம்பவங்களில் ஈடுபடும் இந்த நயவஞ்சகத்தனமான கொலைகாரர்களை சர்வதேச சமூகத்திற்கு அம்பலப்படுத்த ஊடகவியலாளர்கள், ஊடக அமைப்புக்கள் முன்வர வேண்டும். இன்னும் ஒரு ஊடகவியலாளன், அல்லது ஊடகத்துறை சார்ந்த பணியாளன் சிங்கள பேரினவாதக் கூலிகளால் கொடூரமாக இரத்த வெள்ளத்தில் மூழ்குவதற்கு இடமளிக்கக் கூடாது!
batti eelanatham
|