பிரதான பக்கம் arrow ஆசிரியர் தலையங்கம் arrow அரசியல் குத்துக்கரணங்களால் நேரப்போகும் ஆபத்துக்கள்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English

அரசியல் குத்துக்கரணங்களால் நேரப்போகும் ஆபத்துக்கள் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Monday, 29 January 2007

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பருத்து உப்பி ஊதிப் பெருத்த இராட்சத அமைச்சரவை பதவியேற்று விட்டது.
"போரும் சமாதானமும்' என்ற இரட்டைவேட அணுகுமுறையோடு நாட்டின் தேசிய இனப்பிரச்சினையைக் கையாண்டு வரும் மஹிந்தரின் அரசின் போக்கில், இப்போது இடம்பெற்றிருக்கும் அரசியல் குத்துக்கரணங்கள் என்ன மாற்றத்தைக் கொண்டுவரப்போகின்றன என்பதுதான் தமிழர் தரப்பின் அங்கலாய்ப்பாக இருக்கின்றது.

கூண்டோடு இடம்பெற்ற அரசியல் குத்துக்கரணங்கள், அணி மாற்றங்கள், அதிரடிப் பாய்ச்சல்கள் காரணமாக நாடாளுமன்ற ஆசனங்களின் எண்ணிக்கை தொடர்பான அட்சரகணிதத்தில் தனது நிலையை ஸ்திரப்படுத்தி, வலுப்படுத்தியுள்ள இந்த அரசு இனி எந்த வழியை நாடப்போகின்றது?

பௌத்த சிங்களப் பேரினவாதத்திலும் மேலாதிக்க மமதையிலும் மூழ்கி, இனவாதத்தில் ஊறித் திளைத்த ஜே. வி. பியோடு இதுவரை கைகோத்து நின்றது மஹிந்தரின் அரசு. அதனால் முழுப் பேரினவாத மேலாண்மைப் போக்கோடும், சிறுபான்மையினரின் பிரச்சினையை முழு அதிகாரத் திமிரோடும் இந்த அரசு அணுகியது. தனது ஆட்சிக் கூட்டாளியான ஜே. வி. பி. தீவிரப் போக்காளர்களைத் தாஜா செய்து, சமாளித்துப் போவதற்காக அந்தப் பாதையில் அது சென்றிருக்கலாம். இப்போது, பிரதான எதிரணிக்கட்சியான ஐ. தே. கவைப் பிளந்து குறிப்பிடத்தக்க எண்ணிக்கையான அதிருப்தியாளர்களை அரசுத் தலைமை, தன்பக்கம் சேர்த்துக் கொண்டு விட்டதால் ஜே. வி. பியும் இதுவரை அரசுக்கு வழங்கி வந்த ஆதரவை விலக்குகின்றது. ஜே. வி. பி. பிரிந்து செல்வதால் அந்த அரசு இனிமேல் சிறுபான்மையினர் விடயத்தை பேரினவாதத் திமிரோடு அணுகாமல், பரிவோடு பரிசீலிக்கும். அத்தகைய சமரசப் போக்குடையவர்கள் பலர் ஐ. தே. கவிலிருந்து பிரிந்து இப்போது ஆளும் தரப்புக்கு வந்திருப்பதால் அத்தகைய சிந்தனைப் போக்குடையோரின் கைகள் ஆளுந்தரப்புக்குள் ஓங்கும். அதனால் ஆளும் தரப்பு இதுவரை தான் காட்டிவந்த வலிந்து இராணுவ நடவடிக்கைகளை முன்னெடுக்கும் போர்த் தீவிரப் போக்கைக் கைவிட்டு, அமைதி வழித் தீர்வுக்கு இடமளிக்கக்கூடிய மிதவாதப் போக்கை நாடிச்செல்லும் என்றெல்லாம் பலரும் கருதக்கூடும்.

ஆனால் அதுதான் நடக்காது என்பதே உண்மை நிலை. தெற்கில் இப்போது இடம்பெற்றுள்ள மிகக் கேவலமான அரசியல் குத்துக்கரணத்தின் "அந்தர் பல்டி" யின் பெறுபேறு மிக மோசமான நெருக்கடி நிலைக்கு அதுவும் அரசியல் ரீதியாக மட்டுமன்றி இராணுவ ரீதியாகவும் இக்கட்டான சூழலுக்கு நாட்டை இட்டுச் செல்லப்போகின்றது என்பதே அச்சத்துக்குரிய நிலைவரமாகும். சிங்கள, பௌத்த இனவாதத் திமிருடைய ஜே. வி. பி. போன்ற கட்சிகளை வளைத்துத் தன் அணி பக்கம் வைத்திருப்பதற்காகத்தான் அந்தப் போக்கை மஹிந்தரின் அரசு இவ்வளவு காலமும் நாடியது என்று யாரும் கருதினால் அது முற்றிலும் தவறானது.

மஹிந்த ராஜபக்ஷவின் இலக்கும் நோக்கும் ஜே. வி. பியைத் திருப்திப்படுத்துவது அல்ல. ஜே. வி. பியின் சிந்தனைப்பாணியில் ஊறியுள்ள தென்னிலங்கைத் தீவிரப்போக்காளர்களைத் திருப்திப்படுத்தி, அவர்களைத் தன் பின்னால் அணி திரளவைத்து அந்த வாக்கு வங்கியை அரசியலில் தனது நிரந்தர முதலாகவும் பலமாகவும் ஆக்கிக் கொள்வதுதான். அதற்காக ஜே. வி. பியை விட இன்னும் பேரினவாதத் தீவிரப்போக்கும், தமிழ்த் தேசியத்தின் எழுச்சியை எந்த வழியிலும் நசுக்கும் மேலாண்மை வெறியும் தனது அரசிடம்தான் அதிகம் உள்ளன என்பதை வெளிப்படுத்தும் விதத்தில் அரசின் செயற்பாடுகள் இனிமேல் அமையும் என்பதே யதார்த்தம்.

பேரினவாதத்தின் ஒருமுகமாகத் திகழும் பௌத்த மத அடிப்படைவாதிகளின் கட்சியான ஜாதிக ஹெல உறுமய இன்னும் மஹிந்தரின் அணியில்தான் இருக்கிறது. ஜே. வி. பியை விட இனவாதத்தில் தாங்கள் முற்றியவர்கள் மூத்தவர்கள் என்று வெளிப்படுத்துவதன் மூலம் தென்னிலங்கை வாக்கு வங்கியைத் தக்கவைக்கத் துடியாய்த் துடிக்கும் இக்கட்சி, இதே நோக்கத்துக்காக மஹிந்தரின் அரசையும் இந்த வழியிலேயே வழிப்படுத்த உள்ளிருந்து அழுத்தம் கொடுக்கும் என்பதும் நிச்சயம்.

மறுபுறத்தில், இதுவரை அமைதி முயற்சிகளுக்கு எதிரணியில் இருந்தபடி நிபந்தனையற்ற ஆதரவு வழங்கிவந்த பிரதான எதிர்க்கட்சியை உடைத்து அதனைக் குட்டிச் சுவராக்கியிருக்கின்றார் அதிபர் மஹிந்த ராஜபக்ஷ. இதனால் அமைதி முயற்சிகளை ஒன்றுபட்டு அணுகுவதற்கு ஆளும்தரப்புக்கும் ஐ.தே.கவுக்கும் இடையில் செய்துகொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் கிழித்து வீசப்பட்டாயிற்று. இது சமாதான முயற்சிகளை முன்னெடுக்க சாதகமாக இருந்த சூழ்நினைக்கு விழுந்த பேரிடி தேசிய இனப்பிரச்சினையில், சிறுபான்மையினருக்கு நீதி வழங்கப்படவேண்டும் என்ற நியாயப் போக்கோடும், தாராள எண்ணத்தோடும் தாம் செயற்பட்டதால் தான் தென்னிலங்கை வாக்காளர்களினால் ஒதுக்கப்பட்டு, தென்னிலங்கைத் தீவிரப் போக்காளர்களின் முழு ஆதரவோடு ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிய அதிபர் மஹிந்தவினால் தங்கள் கட்சி ரீதியாக உடைத்து, சின்னாபின்னமாக்கப்பட்டு, பிய்த்து உதறப்பட்டுள்ளோம் என்ற சிந்தனை ஐ. தே. கட்சியின் எஞ்சியுள்ள தலைவர்களுக்கு ஏற்படுவதும் தவிர்க்க முடியாது. எப்படியும் ஆட்சிக்கு வரவேண்டும், அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும் என்ற இலக்கில், வேறு வழியின்றி தென்னிலங்கைத் தீவிரப் போக்கை மீண்டும் தங்களுடையதாகவும் சுவீகரித்துக்கொண்டு, அந்தப் பாதையில் பயணிக்க வேண்டிய அரசியல் கட்டாயம் அவர்களுக்கு நேரும். ஆகவே உடைந்து , பிய்ந்து, மிஞ்சியுள்ள ஐ. தே. கட்சியையும் "பழைய குருடி கதவைத் திறவடி' என்ற பாணியில் இனவாத அரசியலை முற்றாகக் கையேற்கும் நிலைக்குத் தள்ளியுள்ளன தற்போதைய அரசியல் குத்துக்கரணங்கள்.

அரசியல் நிலைமை இதுவென்றால் இராணுவக் கள நிலைமையும் அதுதான். நாடாளுமன்றத்தில் தனது பலத்தை ஸ்திரப்படுத்தியுள்ள மஹிந்தரின் அரசு, தென்னிலங்கைத் தீவிரப் போக்காளர்களை அடிப்படை இலக்காகக்கொண்ட தனது வாக்குவங்கியை ஸ்திரப்படுத்துவதற்கு தமிழர் தரப்பு மீதான இராணுவ வலோற்கார நகர்வுகளை முழு அளவில் முன்னெடுக்க முயலும். இராணுவக் கள வெற்றிகளை அரசியல் ஆதாயமாகப் பயன்படுத்தி, ஜே. வி. பியை விட பௌத்த சிங்கள மேலாதிக்கத்தை நிலை நிறுத்துவதில் உறுதியானது தமது அரசு என்று காட்டுவதற்கு அது முயலும். அதற்காக, அமைதி முயற்சிகளை மேலும் ஓரம்கட்டிவிட்டு இராணுவ முனைப்பில் அது அதிக தீவிரம் காட்டும்.

எப்படிப் பார்த்தாலும் தென்னிலங்கையின் தற்போதைய அரசியல் குத்துக்கரணங்கள் அதிபர் மஹிந்தரின் கையைப் பலப்படுத்தினாலும், மறுபுறத்தில் நாட்டைப் பெரும் சிக்கலுக்குள் ஆழ்த்தப்போகின்றன என்பது திண்ணம்.


sudaroli.com
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2009 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..