பிரதான பக்கம் arrow Karuna Antharangam arrow தொப்பிகலையை இலக்கு வைத்த படையினரின் நகர்வுகள்!
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English

தொப்பிகலையை இலக்கு வைத்த படையினரின் நகர்வுகள்! அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Monday, 29 January 2007

paathukaappu2கிழக்கில் முழு அளவிலான படை நடவடிக்கையில் அரசு இறங்கியுள்ளது. வாகரையை கைப்பற்றியதன் மூலம், மட்டக்களப்பில் புலிகள் வசமுள்ள ஏனைய பகுதிகளையும் கைப்பற்றி விடமுடியுமென அரசு கருதுவதால் அடுத்து வரும் நாட்களில் உக்கிரமான போர் வெடிக்கப் போகிறது. திருகோணமலைத் துறைமுகத்துக்கு மூதூர் கிழக்கில் சம்பூரிலுள்ள புலிகளின் ஆட்லறிகளால் பெரும் ஆபத்தேற் பட்டுள்ளதாகக் கூறி ஆரம்பிக்கப்பட்ட தாக்குதல் இன்று பாரிய படை நடவடிக்கையாக கிழக்கின் பல்வேறு பகுதிகளுக்கும் விஸ்தரிக்கப்பட்டுள்ளது.

போர் நிறுத்த உடன்பாடு அமுலிலிருக்கையிலும் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு வடக்கு - கிழக்கிலிருக்கையிலுமேயே இந்தப் பாரிய படை நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன. இதனால் இன்று இந்த உடன்பாட்டின் அனைத்து விதிகளும் மீறப்பட்ட நிலையிலும் உடன்பாடு அமுலிலிருப்பதுடன் கண்காணிப்புக் குழுவும் வாய்மூடி மௌனம் சாதித்துக் கொண்டிருக்கிறது.

பாரிய படை நடவடிக்கைகள் மூலம் கிழக்கில் மனிதப் பேரவலங்கள் ஏற்படுத்தப்பட்டு, மக்கள் தங்கள் சொந்த இடங்களிலிருந்து விரட்டப்பட்டு, அவர்களது வீடு வாசல்கள் அழிக்கப்பட்டு, நிலப் பிரதேசங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு வருகின்றன. கிழக்கை முழுமையாக விடுவிக்கும் வரை இந்தப் படை நடவடிக்கை தொடருமெனவும் அரசு கூறிவருகின்றது.

அதேநேரம், கிழக்கில் இடம்பெறும் பாரிய படை நடவடிக்கைகளுக்கெதிராக முறியடிப்புத் தாக்குதலில் இறங்காத புலிகள் தற்காப்புச் சமருடன் அந்தப் பகுதிகளிலிருந்து வெளியேறி வருகின்றனர்.

ஆனாலும், கிழக்கில் மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள் மூலம் புலிகள் வசமுள்ள பிரதேசங்களை கைப்பற்றுவதுடன் அவர்களுக்குப் பாரிய உயிர்ச்சேதங்களை ஏற்படுத்தி ஆட்பலத்தை குறைப்பதுடன் அவர்களது ஆயுத பலத்தையும் குறைத்துவிட வேண்டுமென்பதில் அரசும் படையினரும் அக்கறை காட்டுகின்றனர்.

புலிகள் வசமுள்ள பகுதிகளை படையினர் கைப்பற்றுவதன் மூலம் அப்பகுதிகளிலிருந்த மக்கள் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளினுள் வந்துவிடுவதால் கிழக்கில் புலிகளுக்கு ஆட்களைச் சேர்க்கும் முயற்சிகளும் தடுத்து நிறுத்தப்படுவதாக அரசு கருதுகிறது.

அத்துடன், புலிகளின் பகுதிகளினுள் படையினர் பிரவேசிப்பதன் மூலமும் முறியடிப்புச் சமரை விடுத்து தற்காப்புச் சமருடன் புலிகள் பின்வாங்குவதன் மூலமும் கிழக்கில் புலிகளின் மரபு வழிப்போருக்கு முற்றுப் புள்ளி வைத்து விடலாமெனக் கருதும் அரசு, புலிகளை மீண்டும் கெரில்லாப் போர் முறைக்குள் தள்ளிவிடுகிறது.

கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட பாரிய படை நடவடிக்கைகளைவிட இந்த அரசு படை நடவடிக்கைகளுக்காக கையாளும் தந்திரங்கள் மிகக் கடுமையாகவும் கொடூரமாகவுமுள்ளது. பாரிய படை நடவடிக்கைகளின் போது பெரும் மனித பேரவலத்தை ஏற்படுத்தி அதனூடாக படை நடவடிக்கையை முன்னெடுத்துச் செல்கிறது.

எந்த மக்களுக்காக தாங்கள் போராடுகின்றோமோ அந்த மக்கள் பெரும் அவலங்களைச் சந்திக்கும்போது அவர்களைப் பாதுகாக்க வேண்டிய தேவை புலிகளுக்கேற்படுவதால் அவர்களது நடவடிக்கைகள் மிகவும் மட்டுப்படுத்தப்பட்டதாகவே இருக்கிறது.

இந்தப் படை நடவடிக்கைகள் மூலம் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளிலுள்ள மக்களை புலிகளின் பிடிகளிலிருந்து விடுவிப்பதாகக் கூறும் அரசு, அவர்களை எப்படி சொந்த மண்ணிலிருந்து அப்புறப்படுத்துகிறது?

ஆட்லறி ஷெல் தாக்குதல், பல்குழல் ரொக்கட் தாக்குதல், விமானத் தாக்குதல், துப்பாக்கிச் சூடு என்பவற்றுடன் உணவுப் பொருட்களுக்கான தடை, மருந்துப் பொருட்களுக்கான தடை, மருத்துவ வசதிகள் மறுப்பு, போக்குவரத்துத் தடையென மாதக் கணக்கில் ஏற்படுத்தி அந்த மக்களை கொன்றொழித்தே புலிகளின் பகுதிகளிலிருந்து அவர்களை வெளியேற்றுகிறது.

மூதூர் கிழக்கு மற்றும் வாகரையில் இடம்பெற்ற பாரிய படை நடவடிக்கைகளில் அரசும் படைத்தரப்பும் எவ்வாறு நடந்து கொண்டனவோ அவ்வாறே இனி வரும் காலங்களிலும், பாரிய படை நடவடிக்கைகள் இடம்பெறும் பகுதிகளில் மனிதப் பேரவலங்களை ஏற்படுத்தி அதன் மூலம் மக்களைக் கொன்று குவித்தும்; அச்சுறுத்தியும் அடி பணிய வைத்தும் புலிகளின் பகுதிகளிலிருந்து வெளியேற்றி பின்னர் பெருமெடுப்பில் படை நகர்வுகளை மேற்கொள்வதே அரசின் திட்டமாகும்.

முற்று முழுதாக ஆயுத பலத்தை மட்டுமே நம்பி பேரழிவுகளை ஏற்படுத்தியவாறு இன்று கிழக்கில் படையினர் அகலக்கால் வைத்து வருகின்றனர். இதனால் கிழக்கிலிருந்து புலிகளை முற்றாக வெளியேற்றுவதன் மூலம் கிழக்கில் படையினருக்கும் அவர்களோடு சேர்ந்தியங்கும் ஆயுதக் குழுக்களுக்கும் அச்சுறுத்தல் ஏற்படுவதை தடுத்து விட முடியுமெனவும் அரசு கருதுகிறது.

தமிழ் மக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தியவாறு மக்கள் குடியிருப்புப் பகுதிகளிலிருந்து புலிகள் படையினர் மீது தாக்குதல் நடத்துவதாக அரசும் படைத்தரப்பும் கூறினாலும் அந்த மக்களை பகடைக்காய்களாக்கி அவர்களைப் பணயம் வைத்தே அரசு தற்போது பாரிய படை நகர்வுகளை மேற்கொள்கிறது.

புலிகளின் பிடியிலிருந்து மக்களைப் பாதுகாக்கும் நோக்கிலேயே புலிகள் வசமுள்ள பகுதிகளைத் தாங்கள் கைப்பற்றும் நிலையேற்பட்டுள்ளதாகக் கூறி மனிதப் பேரவலத்தை ஏற்படுத்தி பாரிய படைநகர்வுகளை மேற்கொள்வதால், அந்தப் பேரவலத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க வேண்டிய நிலையில், தம் வசமுள்ள பிரதேசங்களை புலிகள் கைவிடவேண்டிய நிலைமையேற்பட்டுள்ளது.

புலிகள் மக்கள் குடியிருப்புப் பகுதிகளிலிருந்து மக்களை கேடயமாக வைத்துக் கொண்டு தாக்குவதால் தாங்கள் அந்தப் பகுதிகளை நோக்கி பதில் தாக்குதல் நடத்த வேண்டிய கட்டாய நிலையுள்ளதாக படைத்தரப்பு கூறுகிறது. அதேநேரம், இவ்வாறான தாக்குதல்களைத் தொடுக்கும் படைமுகாம்கள் தமிழ் மக்களின் குடியிருப்புகளுக்கு மத்தியிலேயே உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

படை நடவடிக்கைக்காக புலிகளின் பகுதிகளிலுள்ள மக்கள் குடியிருப்புகளை நோக்கி தினமும் முப்படைகளும் கண்மூடித்தனமாக கடும் தாக்குதலை நடத்தி மக்களுக்கு பேரழிவுகளை ஏற்படுத்துவதுபோல், புலிகளால் படை முகாம் பகுதிகள் மீது கண்மூடித்தனமான தாக்குதல்களை மேற்கொள்ள முடியாது.

ஏனெனில், எந்த மக்களின் விடுதலைக்காக புலிகள் போராடுகிறார்களோ அந்த மக்களின் குடியிருப்புப் பகுதிகளினுள் முகாம்களை படையினர் அமைத்துள்ளதால், புலிகளின் தாக்குதலில் ஒரு தமிழ் மகன் கொல்லப்பட்டாலும், அது புலிகளுக்கே நெருக்கடியை ஏற்படுத்தும்.

ஆனால், படையினருக்கு அவ்வாறு எந்த நெருக்கடியுமில்லை. புலிகளின் பகுதிக்குள் இருப்பவர்களெல்லோரும் தமிழர்களென்பதால் கொல்லப்படுபவர்கள் குறித்து அரசும் படைத் தரப்பும் நியாயம் கற்பிப்பார்களே தவிர, அது குறித்து கவலை கொள்ளப் போவதில்லை.

இதனால்தான், புலிகளின் பகுதிக்குள் எவர் கொல்லப்பட்டாலும் அதனை மூடி மறைப்பதுடன் கொல்லப்பட்டவர்கள் அனைவரும் புலிகளென நியாயப்படுத்தும் அரசு, தெற்கில் ஒரு சிறு தாக்குதல் நடைபெற்றாலும் அதனை பூதாகரமாக்குவதுடன் அதனைப் பயங்கரவாதப் பிரச்சினையாக்கி உலகெங்கும் பெரும் பிரசாரத்திலும் இறங்கிவிடுகிறது.

கிழக்கில் தற்போது இடம்பெறும் பாரிய படைநகர்வுகளால் புலிகள் தங்கள் பிரதேசங்கள் சிலவற்றை இழந்தாலும் தங்கள் ஆளணியையோ ஆயுத பலத்தையோ இழக்கவில்லை. பாரிய படைநகர்வுகளின் போது தற்பாதுகாப்புச் சமர்கள் மூலம் பின் நகர்ந்து அவர்கள் தங்கள் ஆட்பலத்தையும் ஆயுத பலத்தையும் பேணி வருகின்றனர்.

கிழக்கில் தற்போது இடம்பெறும் பாரிய படைநகர்வுகள் மூலம் மூதூர் கிழக்கிலிருந்து வாகரை வரையான பெருமளவு நிலப்பிரதேசத்தைக் கைப்பற்றி திருகோணமலைக்கும் மட்டக்களப்புக்குமிடையிலான `ஏ-15' வீதியை அரசு கைப்பற்றியுள்ளது. எனினும், இந்தப் படைநகர்வுகளின் போது கொல்லப்பட்ட புலிகளின் எண்ணிக்கை நூறிலும் குறைவு. ஆயுத இழப்புகள் மிகச் சில. நிலப்பிரதேசங்களை மட்டுமே புலிகள் இழந்துள்ளனர்.

எனினும், இந்தப் பிரதேசங்களைக் கைப்பற்ற அரசு பல்லாயிரம் கோடி ரூபாவை போர்த்தளபாடங்களுக்கு செலவிட்டுள்ளது. 300 க்கும் மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டதுடன் 500 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இதைவிட புதிய பிரதேசங்களை தொடர்ந்தும் தக்க வைப்பதற்காக ஆயிரக் கணக்கான படையினரை நிறுத்துவதன் மூலம் பெரும் ஆட்பலம் இந்தப் பிரதேசங்களில் முடக்கப்பட்டுள்ளது.

மேலும் மேலும் படை நடவடிக்கைகளில் அரசு இறங்குவதால் ஆட்பல இழப்புடன் மேலும் மேலும் படையினரை புதிய புதிய பிரதேசங்களில் முடக்க வேண்டிய தேவையும் ஏற்படுவதால் படையினருக்கு ஆட்பற்றாக்குறையேற்பட்டு வருவதுடன் படையினர் புதிதாக நிலைகொண்டு வரும் பகுதிகளில் இனிமேல் கெரில்லா பாணியிலான புலிகளின் ஊடுருவல் தாக்குதல்களையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

மூதூர் கிழக்கிலும் வாகரைப் பகுதியிலும் மேற்கொண்டது போல் தற்போது மட்டக்களப்பில் புலிகளின் முக்கிய தளங்களுள்ள பகுதிகளை நோக்கி படையினர் பாரிய தாக்குதலுக்கு தயாராகி வருகின்றனர். கடந்த ஒருவாரமாக அப்பகுதிகளை நோக்கி கடும் தாக்குதலும் நடத்தப்பட்டு வருகிறது. இதனால், மக்கள் அப்பகுதிகளிலிருந்து இடம்பெயரத் தொடங்கியுள்ளனர்.

இதேநேரம், வடக்கு - கிழக்கில் புலிகளின் அனைத்து நிலைகளையும் முகாம்களையும் முற்றாக அழித்துவிடப் போவதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ கடுமையாக எச்சரித்துள்ளார். புலிகளின் நிலைகள் மற்றும் முகாம்களிலிருந்தே பயங்கரவாத நடவடிக்கைகள் கட்டவிழ்த்து விடப்படுவதால் அவற்றை அழிப்பதன் மூலமே பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டு வரமுடியுமெனவும் அவர் கூறியிருப்பதன் மூலம் வடக்கு - கிழக்கில் முழு அளவிலான போருக்கு அரசு தயாராகிவிட்டதை அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

ஆனாலும், புலிகள் தொடர்ந்தும் மௌனம் சாதித்தே வருகின்றனர். தற்போதைய இராணுவ நடவடிக்கைகளை சர்வதேச சமூகம் கண்டிக்கவேயில்லை. போர் நிறுத்த உடன்பாடு அமுலிலுள்ள போதும் பாரிய படை நடவடிக்கையால் ஏற்பட்டுள்ள மிகப் பெரும் மனிதப் பேரவலம் குறித்து சர்வதேச சமூகம் கண்டுகொள்ளவேயில்லை.

இடம்பெயர்ந்து பல்வேறு அவலங்களின் மத்தியில் வாழும் மக்கள் குறித்து அவர்கள் சற்றும் இரங்கவில்லை. ஒரு நேரமோ அல்லது இரு நேரமோ சமைத்த உணவை வழங்குவதுடன் அல்லது சமையல் பாத்திரங்களை வழங்குவதுடன் தங்கள் பணி முடிந்துவிட்டதாக அவர்கள் கருதுகின்றனர்.

மூதூர் கிழக்கில் சம்பூரிலும், மட்டக்களப்பு வாகரையிலும் தங்கள் கடற்படைத் தளங்களை இழந்ததன் மூலம் தற்போது கிழக்கில் புலிகளின் கடற்படைத் தளங்கள் இல்லையென்ற நிலை உருவாகிவிட்டது. இதனால் இதுவரை காலமும் வடக்கிலிருந்து கிழக்கிற்கு புலிகளால் மேற்கொள்ளப்பட்டு வந்த கடல்வழி விநியோகமும் நின்றுவிட்டது. இனிமேல் வடக்கிலிருந்து கிழக்கிற்கு புலிகளின் தரைவழி விநியோகத்திற்கும் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் கிழக்கில் இனிவரும் நாட்களில் இடம்பெறப் போகும் பாரிய படை நகர்வுகளின் போது புலிகள் நெருக்கடிகளை சந்திப்பரென அரசு கருதுகிறது.

மட்டக்களப்பில் குடும்பிமலை (தொப்பிகல) மற்றும் கொக்கட்டிச்சோலை தளங்களிலிருந்து புலிகளை அப்புறப்படுத்துவதன் மூலம் கிழக்கை முழுமையாக புலிகளின் பிடியிலிருந்து விடுவித்து விட முடியுமென படைத்தரப்பு கருதுகிறது. ஆனாலும் மட்டக்களப்பில் படுவான்கரை பகுதியில் தங்கள் வசமுள்ள மிகப்பெரும் பிரதேசத்தை புலிகள் கைவிடமாட்டார்கள்.

மூதூர் கிழக்கு, வாகரை போன்று மட்டக்களப்பின் ஏனைய பிரதேசங்கள் இருக்கமாட்டாதென்பது நிச்சயம். இதனால், மட்டக்களப்பில் புலிகளின் வலு நிலைகள் மீது படையினர் பாரிய தாக்குதலை ஆரம்பிக்கும் போது அது வடக்கு - கிழக்கில் இறுதிப் போராக வெடிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன், வடக்கில் ஒரே நேரத்தில் பல படைத்தளங்கள் தாக்குதலுக்குள்ளாகும் நிலைமை ஏற்படலாமெனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

வடக்கில் மிகப்பெரும் பலத்துடன் கடற்புலிகளிருப்பதால் அவர்களால் அங்கு பேராபத்து ஏற்பட்டு வருகிறது. கிழக்கில் பாரிய வெற்றிகளைப் பெற்றுவருவதாகக் கருதும் படைத்தரப்பு, வடக்கில் புலிகள் எவ்வாறானதொரு தாக்குதலைத் தொடுத்தாலும் அதனை எதிர்கொள்ளத் தயாராயிருப்பதாகவும் கூறி வருகின்றது.

வடக்கு - கிழக்கில் பாரிய யுத்தம் வெடிக்கும் போது அது தெற்கிலும் மிகப் பலமாக எதிரொலிக்கலாம். இந்தப் போருக்கான கட்டளைத் தலைமையகங்களும் விநியோக மையங்களும் தெற்கிலேயே உள்ளதால் வடக்கு - கிழக்கில் பெரும் போர் வெடிக்கும் போது தெற்கு அதிலிருந்து விடுபடுமென்பது சாத்தியமற்றது. இன்றைய நிலையில் கிழக்கில் பல்வேறு பகுதிகளையும் படையினர் கைப்பற்றி வருவதால் கிழக்கில் போர் நிறுத்த உடன்படிக்கை செல்லுபடியற்றதென அரசு தரப்பு கூறுகின்றது. இதனால், இந்தப் பெரும் போர் முடிவுக்கு வரும் வரை இனி சமாதான முயற்சிகள் எதுவுமே சாத்தியமற்றது. கிழக்கில் பல வெற்றிகளைப் பெற்றதாகக் கருதும் அரசு, புலிகள் உடனடியாகத் தாக்குதல்களை நிறுத்தினால் படையினரும் அதனை நிறுத்தி பேச்சுகள் நடத்த தயாராயுள்ளதாக கூறுகிறது.

எனினும், முதலில் பெரும் போரைத் தொடங்கியது அரசு தான் என்பது இன்று வெளிப்படை. ஆனால், அவர்கள் சில வெற்றிகளைப் பெற்ற பின்னர் தாக்குதல்களை நிறுத்தி புலிகளைப் பேச்சுக்கு அழைக்கலாமெனவும் சிலர் கூறுகின்றனர். ஆனால், அது சாத்தியமற்றதாகவேயிருக்கும். வடக்கு - கிழக்கை என்ன நோக்கத்திற்காகப் பிரித்து இன்று கிழக்கில் பெரும் போரை அரசு தொடுத்து வருகிறதோ அவற்றுக்கெல்லாம் இந்த அரசு பதில் சொல்லும் வரை இந்தப் போர் நிற்கப் போவதில்லை.


விதுரன்
Comments (1) >>

Karikalan said:

 
புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்
March 12, 2007
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2009 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..