பிரதான பக்கம் arrow கட்டுரைகள் arrow புலிகள்தடையை மீளாய்வுஐரோப்பிய ஒன்றியம் முன்வர வேண்டும்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English

புலிகள்தடையை மீளாய்வுஐரோப்பிய ஒன்றியம் முன்வர வேண்டும் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Saturday, 01 October 2005

தனி நாடு கேட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இறங்கி வந்து இணைப்பாட்சியின் இனிய வாழ்வு காண்போம் என கூறி பின்னர், மேலும் இறங்கி வந்து இடைக்கால அரசையாவது தாருங்கள் என வேண்டி நின்றனர். கடல்கோளினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் நலன் கருதி ஒரு பொதுக்கட்டமைப்பையாவது உருவாக்கித் தாருங்கள் என்று ஏறக்குறைய பத்து மாதங்களாக அரசுக்கு வேண்டுகோள் விடுத்த நிலையிலும் எதனையும் சிங்கள அரசு தர மறுத்தது.

அழிவின் விளிம்பிற்கு ஆளாக்கப்பட்ட ஈழத்தமிழினத்தின் ஏக்க நிலையை தமிழீழ விடுதலைப் புலிகள் உலகெங்கிலும் எடுத்துரைத்து வந்தனர். அனைத்துலக சமுதாயமும் எம் நிலையை நன்கு உணர்ந்த நிலையில் குறிப்பாக, சிங்கள அரசு எமக்கு செய்து வரும் தாங்க முடியாத அநியாயங்களை நாம் புட்டுக் காட்டிய போது அனைத்துலக சமுதாயமும் நாம் கூறிய கருத்திற்கு ஒப்புதல் வழங்கும் நிலையில் தான் இருந்தது. ஆனால், வெண்ணெய் திரண்டு வருகையில் தாழி உடைந்த நிலைக்கேற்ப ஐரோப்பிய ஒன்றியம் தேவையற்ற நிலையில் எரிச்சலூட்டும் முறையில் விடுதலைப் புலிகளை ஐரோப்பிய நாடுகளுக்கு செல்வதைத்தடுத்துள்ளதுடன் விரைவில் விடுதலைப் புலிகளைத் தடைசெய்யப் போவதாகவும் விடுத்துள்ள அறிக்கை `வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும்' நிகழ்ச்சியாகும்.

உலகம் முழுவதும் தமிழருக்கு ஏற்பட்டுள்ள பேரழிவை நாம் விளக்கி வருகையில், அதற்கு எதிராக தப்பாக பொய்ச் செய்திகளை மீளா உலகு சென்றுள்ள லக்ஷ்மன் கதிர்காமர் பரப்பி வந்தார். கதிர்காமருடைய மறைவுக்கு யார் காரணம் என்பது இன்னும் தெரிய வராத நிலையில் அவரின் மறைவுக்கு விடுதலைப் புலிகள் மீது ஐரோப்பிய ஒன்றியம் பழிசுமத்தியுள்ளது எம்மைப் பொறுத்தவரையில் யாரோ விரித்த வலையில் ஐரோப்பிய ஒன்றியம் சிக்கியுள்ளதோ என நாம் எண்ண இடந்தருகிறது. "அரசியல் பிழைத்தோருக்கு அறம் கூற்றாகும் என்பது சிலம்பு செப்பும் செய்தி. தவிர்க்க முடியாத இவ்வுண்மையை மறைக்கின்ற முறையில் விடுதலைப் புலிகள் மீது ஐரோப்பிய ஒன்றியம் சுமத்தும் குற்றச்சாட்டு தமிழ் மக்களுக்கு கவலை தரும் செயலாகும்.

கடந்த மூன்றரை ஆண்டுகளாக நம்ப முடியாத அளவிற்கு எல்லை மீறிப் பொறுமை காத்த தமிழீழ விடுதலைப் புலிகள் சிங்கள அரசுடன் போர் நிறுத்த அடிப்படையில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தனர். தமிழீழ விடுதலைப் புலிகளை ஈழத்தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகளாக ஏற்று சிங்கள அரசுடன் பேச்சுவார்த்தை நடத்திவந்ததை ஏற்றுள்ள ஐரோப்பிய ஒன்றியம், அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த சிங்கள அரசுகள் தமிழினத்தைப் பூண்டோடு அழிக்கச் செய்த கொடுமைகளைப் பற்றி வாய்திறந்து ஒன்றும் பேசாது மிக்க நெருக்கடிக்கிடையில் ஈழத்தமிழ் மக்களைக் காப்பாற்ற குரல் எழுப்பி தம்மை அர்ப்பணித்து வரும் விடுதலைப் புலிகளைப் பயங்கரவாதிகள் என்று தக்க காரணமற்ற நிலையில் பழிசுமத்துவது எம்மை ஆழ்ந்த துயரில் ஆழ்த்துகிறது.

விடுதலைப் புலிகளின் சில செயல்களை உருப்பெருப்பித்து அவர்கள் மீது பழிசுமத்துவதை நாம் ஏற்க முடியாது. சிறுவர்களை தம் இயக்கத்தில் விடுதலைப் புலிகள் சேர்க்கிறார்கள் என்பது பொருந்தாப் பொய்யுரையாகும். தப்பித்தவறி ஓரிரு நிகழ்ச்சிகள் நடைபெற்றிருக்கக் கூடும். ஆனால், மனிதாபிமான அடிப்படையில் இச்சிறார்களைப் பேணிக்காக்கிறார்கள் என்பதை அவர்கள் நடத்தும் சிறுவர் இல்லங்களில் வந்து பார்த்தால் புரியும்.

தொண்ணூறுகளின் நடுப்பகுதியில் இருந்து நவாலி தேவாலயம் உட்பட பல தேவாலயங்களிலும் கோவில்களிலும் பல வீடுகளிலும் நூற்றுக்கணக்கில் மாசுமறுவற்ற பச்சைக் குழந்தைகள் உட்பட விமானப்படை கொண்டு தமிழ் மக்களை சாகடித்த அரச பயங்கரவாதத்தைப் பற்றி ஐரோப்பிய ஒன்றியம் இதுவரை வாய்திறந்து ஒன்றும் பேசவில்லை. "முழுப்பூசணிக்காயைச் சோற்றில் மறைக்கின்ற" முறையில் மேற்குறித்த தேவாலயத் தாக்குதல் உட்பட நடந்த தாக்குதல்களை நடைபெறவில்லை என்று பொய்ப்பரப்புரை வழங்கிய லக்ஷ்மன் கதிர்காமர் மீளா உலகு சென்றுள்ளார்.

25 நாடுகளை உள்ளடக்கிய ஐரோப்பிய ஒன்றியம் தன் முடிவினை மறுபரிசீலனை செய்து திருத்தி நடுநிலையோடு தன் கருத்துகளை வழங்குவது அதன் நம்பத் தக்க தன்மையைப் பேணுவதற்கு துணை நிற்கும். 25 நாடுகள் உள்ளடக்கிய ஒரு பெரும் அமைப்பு பொறுப்பற்ற முறையில் செயற்படுவது எமக்கு ஆழ்ந்த கவலையைத் தருகிறது. ஈழத் தமிழ் மக்கள் சார்பில் விடுக்கப்படுகின்ற இந்த வேண்டுகோளை ஐரோப்பிய ஒன்றியம் சமன் செய்து சீர்தூக்கி நடுநிலையோடு செயற்பட வேண்டும் என நாம் வேண்டி நிற்கின்றோம்.


மா.க.ஈழவேந்தன்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2009 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..