|
தமிழ்- சிங்கள கணக்கின் படி ஞாயிறன்று அர்த்த சாமத்தில் கட்டுநாயக்க விமானப்படை தளத்தின் மீது விடுதலைப்புலிகளின் விமானங்கள் குண்டு போட்டமை அதிர்ச்சி மிகுந்த பாதிப்புகளை உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் ஏற்படுத்திற்று.
ஒரு நாட்டிற்குள் இருந்து கொண்டு விடுதலைப் போராட்டமொன்றை நடத்தும் ஓர்
இயக்கம் தனக்கென வான் விமான வலுவை பெற்றுள்ளமை இதுவே முதற்தடவை என்ற
குறிப்புரை மிக முக்கியமானதாக அமையும்.
அதேவேளை, இந்த சம்பவம் இலங்கையின்
தேசிய பிரச்சினை பற்றிய போராட்டம் எத்துணை ஆழமாகச் சென்றுள்ளது என்பதற்கான
ஓர் எடுத்துக்காட்டாகும்.
இந்த குறிப்பிற் இந்த சம்பவத்தை அரசாங்கமும் பொது நீரோட்ட சிங்கள
ஊடகங்களும் எவ்வாறு நோக்கின. இச் செய்தியினை சிங்கள மக்களுக்கு எவ்வாறு
எடுத்துக் கூறின என்பது பற்றிய ஓர் உசாவல் மேற்கொள்ளப்படுகின்றது.
நிஜ நிலையில் அரசாங்க, விடுதலைப் புலிகளின் படைநிலை நடவடிக்கைகள் எவ்வாறு
இருப்பினும், அதைப்பற்றிய தொடர்பாடல் சிரத்தையில்லாமல் கடந்த சில
மாதங்களாக விடுதலைப் புலிகள் பலவீனமுற்று பின் வாங்குகின்றனர் என்னும்
மனப்பதிவினை சிங்கள வாசகர்கள் கேட்போர்கள், பார்ப்போர்கள் இடத்தில்
ஏற்படுத்துவதற்கு அரசாங்கம் பெரிதும் முயல்கின்றது.
சம்பூர் யுத்தம் முதல் வாகரை குடிபெயர்வு வரை இந்த விடயம் அழுத்தியே
கூறப்படுகிறது. அத்துடன், கிழக்கிலிருந்து விடுதலைப் புலிகளை பின் வாங்கச்
செய்தாயிற்று என்ற கோஷமே மேலோங்கி நின்றது.
இந்த முறை வழியில் வெற்றி
ஈட்டுவதற்கு தளமாக கிழக்கு விடுதலைப் புலிகள் இயக்கத்தினுள் பிளவு
ஏற்படுத்தப்பட்டு விடுதலைப் புலிகளின் கிழக்குத் தளபதி முக்கிய இடம் பெறத்
தொடங்கினார்.
இயக்கப் பிளவை உணர்த்த பயன்படுத்தப்பட்ட இந்த உண்மை, அரச படையினர் ஈட்டிய
வெற்றிகளின் போது குறிப்பிடப்படவில்லை. உண்மையில் அதனைப் பற்றிய குறிப்பு
எதுவுமில்லாமல் சிங்கள மக்களுக்கு படையினரின் வெற்றி எடுத்துக்
கூறப்பட்டது.
அந்த அடிப்படையிலேயே கிழக்கு மூன்று அலகுகளாக
பிரிக்கப்பட்டது என்ற செய்தியும் வெளிவந்தது. இவற்றின் முக்கியத்துவம்
பற்றி ஏற்கனவே பார்த்தோம். இந்த எடுப்புரைப்பின் தாக்கத்தினை இரண்டு
சம்பவங்கள் முற்றிலும் மாற்றியுள்ளன.
1. வெபர் மைதானம் மீதான எறிகணைத் தாக்குதல் ( அங்கு வெளிநாட்டு தூதுவர்கள் பாதிக்கப்பட்டனர்).
2. இந்த வான் தாக்குதல் .
இந்த வான் தாக்குதலின் அசாதாரண தன்மையையும் முக்கியத்துவத்தையும் பற்றி
பிராந்திய, சர்வதேச அரசியல் விமர்சகர்கள் எடுத்துக் கூறினர். இவற்றிலும்
பார்க்க முக்கியமானது இத்தாக்குதலுக்கான தமது நிலைப்பட்ட காரணங்களை
விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் எடுத்துக் கூறியமையாகும்.
யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை மீறவில்லையென்று சொல்லிக் கொண்டு, வடக்கில்
விமானத் தாக்குதலை மேற்கொண்டு அவை காரணமாக பாரிய பாதிப்புகளுக்கான
எதிர்ப்பை காட்டும் முகமாகவே இது மேற்கொள்ளப்பட்டுள்ளது.
`பி.பி.சி.' சிங்கள சேவையைத் தவிர, சிங்கள ஊடகங்கள் இதனை
முதன்மைப்படுத்தவில்லை. மாறாக, அரசாங்கம் இதற்கு முகம் கொடுத்த முறைமையில்
முற்று முழுதான ஒரு கட்சி பிரச்சினையாகவே இதனைக்காட்டிற்று.
அமைச்சரவையிலிருந்து விலகி அரசாங்கத்துக்கும் ஜனாதிபதிக்கும் பலத்த
அசௌகரியங்களை ஏற்படுத்தும் மங்கள, ஷ்ரீபதி அணியினர் மானசீகமான முறையில் (
இந்த தாக்குதலுக்கு) உதவி பண்ணியுள்ளனர் என்ற குற்றச்சாட்டை முன்
வைத்துள்ளனர்.
சற்று உன்னிப்பாக நோக்கும் போது ராஜபக்ஷ சகோதரர்களின் தன்னிச்சையான
போக்கினை விமர்சித்தவர்களுக்கு இந்த சம்பவம் ஓர் வாய்ப்பான ஓர்
ஆயுதமாயிற்று. அதிலும் நியாயமில்லாமல் இல்லை.
ஏனெனில், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், படைகளை நடத்திய சிறப்புக்
காரணமாகவே இவ் வெற்றிகள் ஈட்டப்பட்டன என்றும் வடக்கில் மிக விரைவில்
ஈட்டப்படு மெனவும் கூறினர்.
இதனால், இது குறிப்பாக மங்கள குழுவினருக்கு வாய்ப்பாக அமைந்தது.
அரசாங்கமும் செயலாளரின் திறமை காரணமாகவே இந்த இராணுவ வெற்றிகள்
ஈட்டப்பெற்றன என்று கூறியது. சிங்கள ஊடகங்கள் சிலவற்றில் வடமராட்சி
ஒப்பரேசன் காலம் முதலே அவர் ஈட்ட விரும்பிய வெற்றி இது என்று புகழ்ந்தன.
தென் இலங்கை முழுவதிற்குமான ஓர் அச்சுறுத்தல் இது என்று அரசியல்
செய்திருக்க வேண்டிய ஜனாதிபதி அவர்கள் விமானத் தாக்குதல் நடந்த அடுத்த
நாள் அது பற்றி ஆராய்வதற்கு அரசியல் கட்சிகளை கூட்டியிருந்தார். (இது
தனியாக ஆராயப்பட வேண்டிய விடயம்) முப்பது வருடங்களுக்கு மேலாக நடந்து
வரும் போரில் தற்காப்பு நிலைக்கு அச்சுறுத்தலாக வந்த இதனை கட்சி அரசியல்
விவகாரமாக்கிய நடவடிக்கை இது. எல்லோரும் வாயார வசைபாடினர். ஆனால் இதற்கு
யு.என்.பி. அழைக்கப்படவில்லை. யு.என்.பி.யைப் பொறுத்தவரையில், ஒரு கல்லில்
பல மாங்காய்கள் இவை காய்கள் அல்லாமல் பழங்களாகவே விழத்தொடங்கின.
ஒரு புறத்தில் பாராளுமன்றத்தில் உட்படுத்த வேண்டுமென்ற கோரிக்கை
மறுபுறத்தில் படை நடவடிக்கைகளுக்கு பொறுப்பாக இருந்தவர்கள் ராஜினாமா செய்ய
வேண்டுமெனக் கோரினர்.
ஏற்கனவே 18 யு.என்.பி. காரர்களை அமைச்சர்கள் ஆக்கிக் கொண்ட ஜனாதிபதிக்கு
ரணில் விக்கிரமசிங்கவை அழைப்பதில் சிரமங்கள் இருக்கலாம். சென்ற 18 பேரும்
கூட ஜனாதிபதி இடத்தில் தங்கள் பலத்தைக் காட்டிக் கொள்ள தாங்கள் யு.என்.பி.
என்றே கோஷத்தை முன்வைத்துள்ளனர். இந்த இடர்பாடுகளின் ஊடே ரணில்
விக்கிரமசிங்க ஜனாதிபதியின் நிர்வாகத்தைச் சாடத்துவங்கினார்.
இதற்கிடையில் நிரந்தர தீர்வுக்கான ஆலோசனைகளை முன்வைப்பது குறைந்தது இரண்டு
மாதங்கள் பிற்போடப்பட்டது. பலருக்கு ஜே.வி.பி.யின் மௌனம் ஆச்சரியத்தை
தருவதாக அமைந்தது.
இப்போது தான் தெரிகின்றது ஜே.வி.பி.யின் தள நிலை தலைவர்களுள் ஒருவரான
குமார் என்ற தமிழரை வெளியேற்றுவதிலும் அவரும் வெளியேறுவதிலும் பல
சிரமங்கள் ஏற்பட்டன. குமாரும் அவரது குடும்பத்தினரும் நாட்டைவிட்டே
வெளியேறினர். ஜே.வி.பி.யின் அண்மைக்கால சிங்கள கோஷத்திற்கு ஜே.வி.பி.யே
பலியான கதை இது. ஒட்டுமொத்தமாக பார்த்தால் வான் படை தள நிலையத்தில்
நடைபெற்ற தாக்குதல் கொழும்பின் அரசியல் பிரச்சினைக்குள்ளே புதைந்து போய்க்
கிடக்கின்றது என்றே சொல்ல வேண்டும்.
இந்த பின்புலத்தில் நோக்கும் போது ஜனாதிபதிக்கு ஏற்பட்டுள்ள இந்த நிலை,
அவரினால் எவ்வாறு `முகாமைப்படுத்தப்படுகிறது' என்பது
பிரச்சினையாகியுள்ளது. உண்மையில் நிலைமைகள் அவருக்கு சாதகமாகவேயில்லை.
இந்த விடயத்தில் இந்தியா எடுத்துள்ள நிலைப்பாடு அரசாங்கத்தை மேலும்
இக்கட்டுக்குள் ஆக்குவதாக காணப்படுகின்றது.
பத்திரிகை நிருபர் மகாநாடொன்றில் பதிலளித்த இந்திய வெளிவிவகாரத்துறை
அமைச்சர் வான் தாக்குதலைப் பற்றி எதுவுமே குறிப்பிடாமல் இரு பகுதியினரும்
பேச்சுவார்த்தைக்கு தயாராக வேண்டுமெனக் கூறியுள்ளார்.
இதேநேரம், இந்திய பாதுகாப்பு துறையினர் தாம் மேற்கொள்ள வேண்டிய
நடவடிக்கைள் யாவற்றையும் விமானத் தாக்குதல் நடந்த இரண்டு, மூன்று
நாட்களுக்குள்ளேயே தமிழக கரையோரத்தில் செய்துவிட்டனர்.
இந்திய - இலங்கை கடற்படையினரின் கூட்டு ரோந்துக்கு புதுடில்லி அங்கீகாரம்
வழங்காது என்பது படிப்படியாக தெளிவாகின்றது. இந்திய அரசியல் விமர்சகர்கள்
இத்தாக்குதல் பற்றி பல அச்சங்களை கிளப்பியும் டில்லி அவை எதனையும்
வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.
இவையாவற்றுக்கும் மேலாக இப்பொழுது சிங்கள ஊடகங்களிலே இது பற்றி
பெரிதுபடுத்தப்படுகின்ற ஓர் அம்சத்தை குறிப்பிடவேண்டும். 9/11 தாக்குதலின்
பின்னர் அமெரிக்கா முழுவதும் ஒன்றுபட்டு குரல் எழுப்பியது போல, இலங்கையில்
ஏன் குரல் கிளம்பவில்லை என்று கேட்கப்படுகின்றது. இதற்கு ஊடகமொன்றிற்கு
யு.என்.பி.யின் செயலாளர் கூறியுள்ள பதில் முக்கியமானது.
அமெரிக்கா அதனைப் பொதுப் பிரச்சினையாக பார்த்தது. இதனை ஜனாதிபதியோ ஒரு
கட்சி பிரச்சினையாகவே பார்க்கின்றார். இதனாலே தான் யு.என்.பி. தனது
கோரிக்கைகளை முன்வைக்கின்றது என்று கூறினார்.
இவற்றின் ஊடாக தமிழ் நிலைப்படவும் ஒரு படிப்பினை உண்டு. அதாவது
தென்னிலங்கை தமிழர் பிரச்சினையை இன்னும் அதற்குரிய சிரத்தையுடன்
பார்க்கவில்லை என்பதே அது.
(பீஷ்மர்) - தினக்குரல்
|