பிரதான பக்கம் arrow ஆசிரியர் தலையங்கம் arrow இரட்டை வேடம் போடுகிறதா இந்தியா ....?
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English

இரட்டை வேடம் போடுகிறதா இந்தியா ....? அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Wednesday, 25 April 2007

பேரழிவு தரும் போராயுதங்களை இலங்கைக்கு, இந்தியா வழங்கியுள்ளது எனத் தெரிவித்து இணை யத்தளம் ஒன்றின் ஊடாகக் கசிந்த தகவல், இந்தியாவில் அரசியல் சலசலப்பை உருவாக்கியிருக்கின்றது. அயல்நாடு என்ற வகையில் இலங்கைக்குத் தற்காப்பு ஆயுதங்களை மட்டுமே வழங்குவோம், தாக்குதல் ஆயுதங்களையோ, பேரழிவு தரும் ஆயுதங்களையோ வழங்கமாட்டோம் என்றே புது டில்லி அரசு இதுவரை வெளிப்படையாகக் கூறிவந்தது.

இலங்கை அரசுக்கு வழங்கப்படும் ஆயுதங்கள் ஈழத் தமிழர்களைக் கொன்றொழிக்கவே பயன் படுத்தப்படுகின்றன என்ற எரிச்சல் இந்தியாவில் குறிப்பாக ஈழத்தமிழர் தாயகத்துடன் தொப்புள்கொடி உறவு கொண்டுள்ள தென்னிந்திய மாநிலமான தமிழகத்தில் பரவியுள்ள நிலையில், தமிழக மாநில அரசையும் மக்களையும் சமாளிக்கும் விதத்தில் இத்தகைய நிலைப்பாட்டை எடுத்து அறிவித்திருந்தது புதுடில்லி. இந்தக் கொள்கை நிலைப் பாட்டையே அது பின்பற்றி வருவதாகவும் கூறப்பட்டது.

ஆனால் சர்வதேச விவகாரங்களில் குறிப்பாக அயல் நாடுகளின் விடயங்களில் வழமையாகவே தெளிவற்ற, இரட்டை வேட அணுகுமுறை யைக்கையாளும் புதுடில்லி,இலங்கைக்கு ஆயுதம் வழங்கும் கைங்கரியத்திலும் இவ்வாறு "சொல் ஒன்று செயல் வேறாக' நடந்துகொள்கின்றதோ என்ற சந்தேகம் இப்போது வலுப்பட்டிருக்கின்றது.இலங்கை விவகாரத்தில் ஆரம்பத்திலிருந்தே புதுடில்லியின் கையாள்கை இப்படித்தான் இருந்து வந்திருக்கின்றது.

எண்பதுகளின் நடுப்பகுதியில் ஈழத் தமிழ்ப் போராளிகள் குழுக்களுக்கு பரவலாக ஆயுதப் பயிற்சி முகாம்களை அமைத்து அவற்றுக்கு இராணுவப் பயிற்சிகளை வழங்கிக்கொண்டு, இந்தியாவில் போராளிகளின் பயிற்சி முகாம்கள் இல்லை, அகதிகளின் நலன்புரி முகாம்கள் மட்டும் தான் உண்டு என்று பகிரங்கமாகக் கூறியதிலிருந்து புலிகளின் மூத்த தளபதி கிட்டு பயணித்த "அகத்'கப்பலை சர்வதேசக் கடற்பரப்பில் சுற்றி வளைத்து மடக்கி, இந்திய எல்லைக்குள் பலவந்தமாகக் கூட்டிவந்துவிட்டு, இந்தியக் கடல் எல்லைக்குள் வந்ததால் மடக்கிப்பிடித்தோம் எனஅறிவித்தமை வரை பல்வேறு விடயங்களிலும் புதுடில்லி போட்ட இரட்டை வேடம் மறக்கக்கூடியதல்ல.

இப்போதும் கூட, நாடாளுமன்றத்தில் தனித்து அறுதிப் பெரும்பான்மை பெறாத காங்கிரஸ் தலை மையிலான அரசு, தனது கூட்டணியில் உள்ள இடது சாரிகளின் தயவில் தங்கித்தான் ஆட்சியைக் கொண் டிழுக்கின்றது. அப்படிச் செயற்படுவதால் சர்வதேச விவகாரங்களில் இடதுசாரிகளின் கொள்கை நிலைப் பாடுகளுக்கு மசிந்து வளைந்து வகுத்துச் செயற் படவேண்டிய இக்கட்டு அதற்கு. அதேசமயம், மத்திய கிழக்குப் பிரச்சினை போன்ற சர்வதேச சர்ச்சைகளில் உலக ஏகாதிபத்தியமான அமெரிக்காவின் அழுத்தத்துக்கும் அடிபணியவேண்டிய கஷ்டம் மறுபுறம். அதனால், பேச்சளவில் கொள்கை விவ காரத்தில் ஒரு போக்கையும் செயலளவில் நடை முறையில் வேறு பாணியையும் கையாண்டு, தனது கூட்டணிக் கட்சிகளான இடதுசாரிகளோடு தினசரி அல்லாடிக் கொண்டிருக்கின்றது காங்கிரஸ் கட்சி தலைமையிலான புதுடில்லி அரசு.

இந்த நிலைமைதான் இலங்கை விவகாரத்திலும் போலும். ஈழத் தமிழர்கள் தொடர்பான தமிழகத்தின் உணர்ச்சிபூர்வ நிலைப்பாட்டைப் புறக்ணித்துச் செயற்பட்டால், தமிழகம் மத்திய அரசுக்கு எதிராகக் கிளர்ந்தெழ, தமிழக எம். பிக்களின் தயவில் ஆட்சியைக் கொண்டிழுக்கும் மத்திய அரசின்பாடு "கோவிந்தா!' ஆகிவிடும். தமிழகத்தைக் கணக்கில் எடுத்து தமிழக விருப்பப்படி இலங்கை அரசுக்கு சார்பற்ற நிலைப் பாட்டைப் பின்பற்றினாலோ, அயல்நாடான இலங்கை புதுடில்லிக் கட்டுப்பாட்டைத் துறந்து விலகிச் சென்றுவிடும்.
ஏற்கனவே, பாகிஸ்தான் மற்றும் சீனா என்ற இரு பூச்சாண்டிகளை புதுடில்லிக்குக் காட்டிக் கொண்டு நிற்கின்றது கொழும்பு அரசு. உரிய உதவிகளை புதுடில்லி தர மறுத்தால் பின்னடித் தால் பாகிஸ்தான் , சீனா ஆகிய இந்திய விரோத அயல் நாடுகளின் வலையில் போய் விழுந்துவிடு வோம் என மிரட்டுகின்றது கொழும்பு.தனது தென்கோடி மூலையில் உள்ள இலங் கைத் தீவு மீதான பிடியை விட்டுக்கொடுக்கவோ, அங்கு சீனா மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகள் எல்லை மீறி ஆதிக்கம் செலுத்துவதை அனுமதிக்கவோ புதுடில்லி விரும்பவில்லை. அதன் காரணமாக இலங்கை விவகாரத்தைக் கையாள்வதிலும்

தனது வழமையான இரட்டை வேடப்போக்கை பின்பற்றுகின்றது போலும்.
இலங்கைக்கு பேரழிவு தரும் போராயுதங்களை இந்தியா வழங்கியுள்ளது என்று கசிந்துள்ள செய்தி குறித்து புதுடில்லி இன்னும் உண்மையை உத்தி யோகபூர்வமாகத் தெளிவுபடுத்தவில்லை.அவ்வாறான தெளிவுபடுத்தல் வெறும் அதிகார மட்ட மறுப்பாக அல்லாமல், இதுவரை வழங்கிய ஆயுத தளபாட வகைகளின் விவரத்தோடும் விளக் கத்தோடும் அமைய வேண்டும்.வெறும் அறிக்கைகள், அறிவிப்புகள் போன்றவை இரட்டைவேடச் செயற்பாடு தொடர்பான சந்தேகங்களைப் போக்கப் போதுமானவை அல்ல என்பதையும் குறிப்பிட்டே ஆகவேண்டும்.
தமிழகத் தலைவர்கள் முக்கியமாகக் கவனத் தில் எடுக்கவேண்டிய அம்சம் இது.


உதயன்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..