|
சிறார் படைச்சேர்ப்பு தொடர்பாக கருணா குழு கவலை கொள்வதில்லை: ஐ.நா |
|
|
|
Saturday, 28 April 2007 |
|
சிறிலங்கா இராணுவத்தினருடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவான கருணா குழுவினர், சிறுவர்களை படையில் சேர்ப்பதில்லை எனக் கூறிய உறுதிமொழிகளை ஒரு பொருட்டாக மதிப்பதில்லை.
இந்த ஆயுதக்குழுவுக்கு அரசின் ஆதரவு முழுமையாக உண்டு என பரவலாக நம்பப்படுகின்றது.
ஐக்கிய நாடுகள் சபையின் சிறார் பாதுகாப்பு அமைப்பான யூனிசெஃப் நேற்று வெள்ளிக்கிழமை மேற்கண்டவாறு தெரிவித்திருக்கின்றது.
கிழக்கு மாகாணத்தில் கருணா குழுவினரின் நடமாட்டங்கள் உள்ள பகுதிகளில்
சிறார்கள் படைகளில் பயன்படுத்தப்படுகின்றனரா என சோதனைகளை நடத்துவதற்காக
கடந்த வாரம் யுனிசெஃப் தனது குழுவை அனுப்பியிருந்தது.
இது தொடர்பில் யுனிசெஃப்பின் பேச்சாளர் அன்றூ புறூக்ஸ் தெரிவித்துள்ளதாவது:
எமது குழுவின் இந்த நடவடிக்கை காட்டுப்புறப் பகுதியை நோக்கியதாக இருந்தது.
எனினும் அவர்களின் முகாமை பார்வையிடுவதற்கான அனுமதியை கருணா குழு
யுனிசெஃப் குழுவுக்கு வழங்கவில்லை. கால தாமதம், தடைகள், தவறான தகவல்கள்
மூலம் எமது பணிகளை கருணா குழு தடுத்து விட்டது.
எமது பெரும் முயற்சிகளின் மத்தியில் கருணா குழுவினர் சில சிறார்களை
விடுவித்திருந்தனர். எனினும் அவர்கள் சிறுவர்களை தொடர்ந்தும் படையில்
சேர்த்து வருவதாக எமக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
சிறிலங்காவில் தற்போது உருவாகியுள்ள போர் நிலைமைகள் சிறார்களை அதிகம்
பாதித்துள்ளது. கருணா குழு உண்மையுடன் நடந்து கொள்கிறதா என்பது தொடர்பாக
நாம் கேள்வியை எழுப்பியுள்ளோம் என தெரிவித்தார்.
|