|
|
|
சர்வதேச மன்னிப்புச் சபையின் அடுத்த நடவடிக்கை என்ன? |
|
|
|
Sunday, 29 April 2007 |
|
உலகக்
கிண்ண கிரிக்கெட்டில் இலங்கை அணிக்கு கிண்ணம் கைக்கெட்டும் தூரத்தில்
உள்ளது. இக்கட்டுரையை நீங்கள் படிக்கும்போது முடிவு தெரிந்திருக்கும்.
உண்மையிலேயே மெச்சப்படவும் பெருமைப்படவும் வேண்டிய விஷயமே.
ஆனால், இலங்கை
கிரிக்கட் அணிக்கு எதிராக சர்வதேச மன்னிப்புச் சபை செய்யும் பிரசாரம்
நியாயமா என்ற வாதப் பிரதிவாதங்கள் காரசாரமாக நடந்து வருகின்றன. இலங்கையின்
மனித உரிமை மீறல்கள் குறித்த மன்னிப்புச் சபையின் சீற்றம் கிரிக்கெட் அணி
மீது சரியான தருணத்தில் திசை திருப்பப்பட்டிருக்கிறது.
இலங்கை
அரசு மன்னிப்புச் சபை மீது தாளாத ஆத்திரத்தில் கொதிக்கிறது. உலக
சரித்திரம் தெரியாத பலரும் கிரிக்கெட்டும் அரசியலும் இருவேறு துருவங்கள்;
இரண்டையும் ஒன்றாகப் பார்ப்பது மொட்டந்தலைக்கும் முழங்காலுக்கும்
முடிச்சுப் போடுவதாகும் என்கின்றனர். இவர்களுக்கு நிறவெறி காலத்து
தென்னாபிரிக்கா மறந்துவிட்டது.
பெரும்பான்மை கறுப்பர்களை ஒடுக்கிய
தென்னாபிரிக்காவின் வெள்ளை நிறவெறி அரசுக்கு சர்வதேச நாடுகளும் ஐ.நா.வும்
எவ்வளவோ அழுத்தம் கொடுத்தும் வெள்ளையர் அரசு மசியவில்லை. கறுப்பர்
மீதானஅடக்குமுறை நீடித்தது. வேறுவழியின்றி சர்வதேச சமூகம் சில அசாதாரண
நடைமுறைகளையும் தடைகளையும் அமுல் செய்ய தீர்மானித்தது.
அதில்
ஒன்றுதான் தென்னாபிரிக்காவிற்கு சர்வதேச மட்டத்தில் விளையாட்டுகளில்
பங்குபற்ற தடை விதிக்கப்பட்டமை. 1950- 60 களில் இது நிகழ்ந்தது.
கிரிக்கெட் விளையாட்டில் மேற்கிந்திய தீவுகள், தென்னாபிரிக்கா,
அவுஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய நான்கு நாடுகளும் கொடிகட்டிப் பறந்த
காலம் அது. தென்னாபிரிக்காவின் இடதுகை துடுப்பாட்ட வீரர் கிறாயெம் பொலக்
உலகின் தலைசிறந்த துடுப்பாட்ட வீரராக திகழ்ந்து கொண்டிருந்தபோதே
தடைவிதிக்கப்பட்டது.
நிறவெறி அரசின் பிடிவாதத்தால் சிறந்த
மட்டையாளர் ஒருவரின் கிரிக்கெட்டை ரசிக்கும் வாய்ப்பை சர்வதேசம் இழந்தது.
ஆயினும், நியாயம் தேடும் போராட்டத்தில் விளையாட்டை பலியிடுவதை தவிர
சர்வதேசத்துக்கு வேறு வழி இருக்கவில்லை. பொலொக் போன்ற சிறந்த வீரர்களில்
விளையாட்டு வாழ்வு அஸ்தமித்தது. கிரிக்கெட் மட்டுமன்றி ரகர், மெய்வல்லுநர்
போட்டித்துறை என பல விளையாட்டு வீரர்கள் தென்னாபிரிக்கா மீதான தடையால்
தமது விளையாட்டை இழந்தனர். கடைசியில் 1990களில் நிறவெறி அரசு வீழ்ந்து
கறுப்பர்களின் நியாயமான உரிமைகள் நெல்சன் மண்டேலா தலைமையில்
வென்றெடுக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து சர்வதேச விளையாட்டுக்களுக்கு
மீண்டும் தென்னாபிரிக்க வீரர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
30 வருடகால
இடைவெளியில் சர்வதேச போட்டிகளில் விளையாடிய அனுபவம் இழந்த நிலையில்
மீண்டும் களம் திரும்பிய தென்னாபிரிக்க அணி உடனடியாகவே கிரிக்கெட்டில்
சக்கை போடு போடத் தொடங்கியது. உடனடியாக வந்த 1992 ஆம் ஆண்டு உலகக் கிண்ண
கிரிக்கெட்டில் அரை இறுதிவரை தென்னாபிரிக்கா முன்னேறியது. அந்தளவுக்கு
தென்னாபிரிக்கர்கள் கிரிக்கெட்டில் ஜாம்பவான்களாவர். இன்றும்
களத்தடுப்பில் தென்னாபிரிக்க முன்னாள் வீரர் ஜொன்ட்டி ரோட்ஸுக்கு இணையான
வீரர் உலகில் கிடையாது.
அத்தகைய சாமர்த்தியமும் திறமையும்
நிறவெறி அரசின் கொள்கையால் பலியெடுக்கப்பட்டு 30 ஆண்டுகள் முடக்கி
வைக்கப்பட்டன. காரணமென்ன? கறுப்பருக்கு நீதி வழங்காமையே.
அப்படியானால் இலங்கையில் சிறுபான்மையினருக்கு அநீதி செய்யும் இலங்கை அரசிற்காக இலங்கை கிரிக்கெட் அணியையும் தடை செய்வது நியாயமே.
உண்மையில்
மன்னிப்புச் சபை இலங்கை அணியை சர்வதேச விளையாட்டிலிருந்து தடை செய்யக்
கோரவில்லை. வெறுமனே இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களை கண்டிக்கும்
வகையில் இலங்கை அணி விளையாடும் இடத்தில் பிரசாரம் செய்கிறது, அவ்வளவே.
அதுமட்டுமன்றி, மன்னிப்புசபை புலிகளையும் அதே பிரசாரத்தில் அதேவிதமாகக்
கண்டித்திருக்கிறது. ஆக தனது பட்சபாதமற்ற தன்மையை தாராளமாக
வெளிப்படுத்தியிருக்கிறது. இலங்கை அரசு மட்டும் ஏன் துள்ளிக் குதிக்க
வேண்டும்? குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கிறது என்பதே உண்மை.
இன்னொரு
விடயத்தையும் இங்கு குறிப்பிட வேண்டும். தென்னாபிரிக்கா சர்வதேச அரங்கில்
தடை செய்யப்பட்ட காலத்தில் தத்தமது நாட்டு அரசுகளின் உத்தரவை மீறி
தென்னாபிரிக்கா சென்ற வீரர்களை அந்தந்த நாடுகள் விளையாட்டிலிருந்து தடை
செய்தன. இலங்கையும் இவ்வாறு செய்துள்ளது. இலங்கை அணியின் முன்னாள்
தலைவரும் புகழ் பெற்ற கிரிக்கெட் வீரருமான பந்துல வர்ணபுர, சிறந்த
விக்கெட் காப்பாளரும் துடுப்பாட்ட வீரருமான சனத் களுபெருமா போன்ற வீரர்கள்
தடையை மீறி தென்னாபிரிக்காவில் விளையாடியதற்காக கிரிக்கெட்டிலிருந்து தடை
செய்யப்பட்டது பலருக்கு இப்போது மறந்துவிட்டது. அரசியல்வாதிகளின்
தவறுக்காக தென்னாபிரிக்க கிரிக்கெட்டை கண்டித்த இலங்கை அரசும் கிரிக்கெட்
சபையும் இப்போது சொல்வதென்ன? இலங்கை அரசு செய்யும் தவறுக்காக கிரிக்கெட்டை
தண்டிப்பது முற்றிலும் சரியே.
மன்னிப்புச் சபை இந்தப் பெரும்
பயணத்தில் முதல் அடியைத்தான் எடுத்து வைத்துள்ளது. சென்ற ஆண்டு கொழும்பில்
பாகிஸ்தான் தூதர் மீதான குண்டு வெடிப்புத் தாக்குதலை அடுத்து இங்கு
வந்திருந்த தென்னாபிரிக்க அணி பயணத்தை ரத்துச் செய்து நாடு திரும்பியது.
அப்போது தென்னாபிரிக்கர்கள் "பெட்டையர்கள் பயந்தாங் கொள்ளிகள்" என்று
இலங்கையின் சிங்கள ஊடகங்கள் வசைமாரி பொழிந்தன. அன்று இலங்கை அரசு
தென்னாபிரிக்க நிறவெறி அரசுக்கெதிராக எடுத்ததை ஒத்ததே இன்று இலங்கையின்
இனவெறி அரசுக்கு எதிராக தென்னாபிரிக்க கிரிக்கெட் சபையும் மன்னிப்புச்
சபையும் எடுத்திருக்கும் நடவடிக்கை.
இப்போது சொல்லுங்கள், கிரிக்கெட்டும் அரசியலும் மொட்டந்தலையும் முழங்காலுமா? நிச்சயமாக இல்லவே இல்லை.
தினக்குரல்
|
|