|
தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு ஒருபுறம் இழுத்தடிக்கப்பட்டு வரும் நிலையில் பேரினவாதக் கட்சிகளின் குரல்களும் பலமாக ஒலிக்கத் தொடங்கியுள்ளன. இதேவேளை, சமாதான முயற்சிகள் இழுத்தடிக்கப்பட்டு வருவதற்கு எதிராக தமிழ் பேசும் மக்கள் ஒருமித்து குரல் எழுப்பி வருகின்றனர். ஒரு வகையில் இனப்பிரச்சினை விவகாரம் ஜனாதிபதித் தேர்தல் பிரசார நடவடிக்கைகளின் பின்னணியில் மெல்ல சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளதை அவதானிக்க முடிகின்றது.
இலங்கை அரசாங்கம் இனப்பிரச்சினைக்கான தீர்வை ஒருபோதும் முன் வைக்கப் போவதில்லை என்பதை நன்குணர்ந்துள்ள தமிழ் பேசும் மக்கள், இன்று சர்வதேச நாடுகளின் கதவைத் தட்ட ஆரம்பித்துள்ளனர். இலங்கையில் சமாதான முயற்சிகள் தொடர வேண்டும், அமைதி ஏற்பட வேண்டும் என அவை உண்மையாகக் கருதுமேயானால், தமிழ் பேசும் மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு செவி சாய்க்கவேண்டியது அவசியம் என்றும் வலியுறுத்தப்பட்டு வருகின்றது. இதேவேளை, யாழ்ப்பாணத்தில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற பொங்குதமிழ் நிகழ்வில் கலந்துகொண்ட லட்சக்கணக்கான மக்கள், பௌத்த பேரினவாதம் தலைவிரித்தாடுவதால் ஜனநாயக வழியில் தீர்வுக்கான கதவுகள் மூடப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளதுடன், சர்வதேச சமூகம் போராட்டத்தை அங்கீகரிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளன. ஒற்றையாட்சி முறையிலிருந்து விலகி தமிழ் மக்களின் சுய நிர்ணய உரிமையை சர்வதேச நாடுகள் அங்கீகரிக்க வேண்டிய இறுதிக் கால கட்டம் வந்து விட்டது என்பதை வலியுறுத்தி பொங்குதமிழ் நிகழ்வு யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீட மைதானத்தில் நடைபெற்றது. இங்கு கூடிய லட்சக்கணக்கான மக்களே, சிங்கள பேரினவாதிகள் தமிழ் மக்களுக்கு எதிரான அடக்கு முறைகளை வெகுவாகக் கண்டித்ததுடன், இலங்கை அரசாங்கத்தின் இரட்டை வேடத்துக்கும், அநீதிகளுக்கும் துணை போகாது நேர்மையாக நடந்து கொள்ள வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்தனர். அத்துடன், ஐரோப்பிய ஒன்றியத்தின் அறிக்கையையும் பலமாகக் கண்டித்த இவர்கள், ஐரோப்பிய யூனியனின் ஒரு பக்கச்சார்பான அறிக்கை, சமாதான முயற்சிகளில் முட்டுக்கட்டைகளை ஏற்படுத்தியுள்ளதுடன், தமிழர்களின் மீது மீண்டும் ஓர் போரைத் திணிக்க இலங்கை அரசாங்கம் மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு உந்துதலை அளிக்கும் வகையில் அமைந்திருப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர். அத்துடன், உலகை உலுக்கிய சுனாமி பேரலைக்குப் பின்னரும் சிங்கள மேலாதிக்கப் போக்கு மாறவில்லை என்பதை சுனாமி அனர்த்த நிவாரண பொதுக் கட்டமைப்புக்கு நேர்ந்த விபத்து நிரூபித்தது. மனிதப் பேரழிவு அவலங்களால் கூட சிங்கள பௌத்த பேரினவாத வெற்றிக்குள் இறுகிப் போயுள்ள நெஞ்சுகளை உலகம் கண்டுகொண்டுள்ளது என்றும் "பொங்கு தமிழ்' பிரகடனத்தில் கூறப்பட்டுள்ளது. நாட்டில் இன ஐக்கியம், புரிந்துணர்வு என்பன இன்று மலையேறிவிட்ட நிலையில், எங்கே மீண்டும் யுத்த சூழல் உருவாகி விடுமோ, அந்த நிலைக்கு சம்பந்தப்பட்ட தரப்பினர் தள்ளப்பட்டு விடுவார்களோ என்ற அச்சமே இன்று மேலோங்கியுள்ளதை அவதானிக்க முடிகின்றது. நோர்வேயின் காத்திரமான பங்களிப்பு காரணமாகவே இலங்கையில் அமைதி நீடித்து வருவதும், சகல இன மக்களும் நிம்மதியாக தங்கள் அன்றாட நடவடிக்கைகளில் ஈடுபடவும் வாய்ப்பாக இருக்கின்றது என்பதை எவரும் மறுக்க முடியாது. அந்த வகையில் சர்வதேச நாடுகளும் பக்கச் சார்பின்றி இந்த நாட்டில் வாழும் சிறுபான்மை மக்களின் அரசியல் அபிலாஷைகள் நிறைவேற தம்மாலான பங்களிப்பை செய்யுமேயானால் அது நிரந்தர சமாதானத்துக்கும் மக்களின் நிரந்தர அமைதிக்கும் வழிவகுப்பதாக இருக்கும் என்பதை வலியுறுத்திக் கூற விரும்புகின்றோம். virakesari
|